-வன்னியசிங்கம் வினோதன் -
கூத்துமீளுருவாக்கம் என்பதன் பொருள் புலப்படாது அரைகுறையாகப் புரிந்துகொண்டு கூத்துமீளுருவாக்கத்தினைத் தவறானபார்வையில் பார்க்கின்றவர்களாக எம்மில் சிலர் உள்ளனர்.
“மீளுருவாக்கம்”எனும் சொற்பதத்திற்கு தமிழில் பலஅர்த்தங்கள் காணப்படுகின்றன. மறைந்துபோன கூத்துக்களை மீளக்கொண்டு வருவது தான் கூத்துமீளுருவாக்கம் என எண்ணிக் கொண்டிருக்கின்றவர்களும் உள்ளனர்.
உண்மையில் கூத்துமீளுருவாக்கம் என்பதுஅதுவல்ல. கூத்தின் அடிப்படை அம்சங்கள் மாறாது கருத்தியல் ரீதியானமாற்றங்களைச் செய்துகொள்வதாகும். கருத்தியல் ரீதியாகஎனும் போது தற்காலத்துக்கு முரணாக அமைகின்ற விடயங்களை மாற்றியமைப்பதாகும். உதாரணமாக சாதியச் சிந்தனைகள், பெண்ணியம், சிறுவர் வன்முறைகள் போன்ற விடயங்களைக் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப தற்கால சமூகம் ஏற்றுக்கொள்ளும் வகையிலான ஓர் செயற்பாடே தவிர கூத்துக்கலையினைத் தவறானபாதைக்கு இட்டுச் செல்கின்ற செயற்பாடல்ல.
கூத்துமீளுருவாக்கம் என்பது சமகால பூகோளமயமாக்கல் எனும் ஆபத்துக்களிலிருந்து நமது சமூகங்களைப் பாதுகாக்கும் பொறிமுறைகளைக் கொண்ட ஒரு சமூதாய அரங்காக கூத்தினைஅடையாளங் காட்டி அதனை ஆய்வு அறிவியலூடாக முன்மொழிகின்றது.
கூத்துமீளுருவாக்கம் என்பது ஓர் ஆராய்ச்சி என்பதால் இதற்குகாத்திரமான சிந்தனைகள்,தேடல்கள், கூத்துக்கலைசார் அறிவு, அதுசார் செயற்பாட்டு அனுபவங்கள் என்பன இருத்தல் வேண்டும். இது எதுவுமே இல்லாது“குண்டுச் சட்டிக்குள் குதிரைஓட்டுகின்ற”சிலஅரைகுறைஅறிவுள்ளோருக்கு கூத்துமீளுருவாக்கம் என்பது பூச்சாண்டிகாட்டுவது போல்தான் இருக்கும்.
உண்மையிலே பூச்சாண்டிகாட்டுகின்ற செயற்பாடு எது வென்றால் 1960களில் கூத்தினைச் செம்மைப்படுத்துகின்றோம், மறைந்து சென்ற கூத்துக்களை மீளக் கொண்டு வருகின்றோம் எனப் பாரம்பரியமாகக் களரியில் ஆடப்பட்டு வந்த கூத்துக்களைச் சுருக்கி மேடையில் ஆடவிட்டு கூத்துக்கலையினைத் தம் ஜீவனாக நினைக்கின்ற சமூகத்தின் வயிற்றில் அடித்தார்களே, அதுவேபூச்சாண்டி காட்டுகின்ற செயற்பாடுகள்.

























