Saturday, May 25, 2013

டி.எம்.எஸ் .மக்களின் பாடகன்.

-ஷாஜி-
                            இசை பயிற்சியல்ல இசை உணர்ச்சி

''நான் டி.எம்.எஸ் பாடல்களை வெறுக்கிறேன்'' என்று இப்போதுள்ள ஒரு தமிழ் பின்னணிப்பாடகர் என்னிடம் சொன்னார். அந்த வெறுப்புக்கான காரணத்தைக் கேட்டபோது அவரால் சரியாகச் சொல்ல முடியவில்லை. ''அவருடைய பாடல்கள் தமிழ்நாட்டின் வெயிலையும் புழுதியையும்தான் ஞாபகத்துக்குக் கொண்டுவருகின்றன'' என்று சொன்னார். ''நீங்கள் கோடைவிடுமுறைக்கு மட்டும் தமிழ்நட்டுக்கு வந்திருப்பீர்கள். அப்போது மட்டுமே அந்தப்பாட்டுகளைக் கேட்டிருப்பீர்கள்'' என்று நான் சொன்னேன். தமிழ்நாடில் பிறந்து வேறு பகுதிகளில் வளர்ந்த ஒரு சிறுவனின் மனப்பதிவு மட்டும்தான் அது. சிலர் அந்த மனப்பிராயத்தை தாண்டுவதேயில்லை!

நானும் சிறுவயதில் டி.எம்.எஸ் பாட்டை அவ்வளவாக விரும்பவில்லை. ஜேசுதாசை உலகிலேயே பெரிய பாடகர் என்று நினைத்திருந்த காலகட்டம் அது. ஆனால் கொஞ்சவருடங்களுக்குள்ளேயே டி.எம்.எஸ் பாட்டை கவனிக்க ஆரம்பித்தேன். அவரது பாட்டு என் மனதில் தீவிரமான பதிவை உண்டுபண்ணியிருந்தது என்ற ஒரே காரணத்தால் ஒரு முறை அவரது பாடலொன்றை பள்ளிநிகழ்ச்சியில் பாடினேன். பாடலின் வரிகளோ அதன் மெட்டோ எதுவுமே சரியாக தெரியாமல் மேடையேறி மானத்தை வாங்கினேன். மேற்கொண்டு நான் பாட்டே பாடக்கூடாது என்று எச்சரித்தார் தலைமையாசிரியர்.

'அண்ணாச்சி' என்று நாங்கள் அழைத்த ஒருவரிடமிருந்து தான் டி.எம்.எஸ் பற்றிய என் நினைவுகள் ஆரம்பிக்கின்றன. 'அண்ணாச்சி' என்றுதான் எல்லா தமிழர்களையும் எங்களூரில் சொல்வார்கள். மற்றபடி அவர் பெயரே தெரியவில்லை. அவர் ஒரு தேநீர் கடையில் தினக்கூலித் தொழிலாளர். கரிய மெலிந்த மனிதர். முகத்தில் சின்னப்பையன்களைப்போல ஒரு இனிய சிரிப்பு உண்டு. 'சத்தியமே லட்சியமாய் கொள்ளடா' பாட்டை அவர்
அருமையாக பாடுவார். அதைக் கேட்டநாள் முதல் அந்த அண்ணாச்சியே என் கதாநாயகன் என உறுதிபூண்டேன்.

Monday, May 20, 2013

காற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா

-இரா.வினோத்-


இலங்கையின் மலையகத்தில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர் நலனுக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் துடி துடித்த மூத்த தொழிற்சங்கவாதி ஓ.ஏ.ராமையா நேற்றிரவு காற்றில் கலந்தார். கடந்த ஓராண்டாக உடல் நலிவுற்று இருந்த அவருக்கு அகவை 76!

''உலகத்தில் பசி... பட்டினி என்ற இருபெரும் பூதங்கள் தோன்றிய நாள் முதல் இன்று வரை உழைத்து உழைத்து ஓடாகி போன‌ பாட்டாளி வர்க்கத்தின் ரத்தம் கொடூரமாக உறிஞ்சப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. உலகமே கைக்குள் சுருங்கி விட்டதாக நாம் காலரை தூக்கி விட்டு கொண்டாலும், கால் வயிற்று கஞ்சிக்கு ஏங்கி தவிக்கும் வறண்ட நாவுகள் எத்தியோப்பியாவிலும், சோமாளியாவிலும், பாலைவனங்களிலும் மட்டுமின்றி பசும் போர்வைப் போர்த்தி செழுமையாக காட்சியளிக்கும் மலையகத்திலும் ஏராளமாக இருக்கின்றன.

இந்த அவல நிலை பொறுக்காமலே 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என சீறினான் பாரதி. மகாகவியும் மண்ணாகி போய் நூறாண்டு ஆகப்போகிறது. இன்னமும் மக்களின் வாழ்நிலை மாறலையே தம்பி!'' நான்கு மாதங்களுக்கு முன்பு ஓ.ஏ.ராமையாவை ஹட்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தபோது கடைசியாக உதிர்த்த உயிருள்ள வார்த்தைகள் இவை.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தென் தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது, இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கு பஞ்சம் பிழைக்க சென்ற பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் ஒன்று தான் ராமையாவின் குடும்பமும். இலங்கையின் கண்டி மலை தொடரில் இருக்கும் நாவலபிட்டி, பூண்டுலோயாவில் உள்ள தோட்டமொன்றில் 1938ஆம் ஆண்டில் பிறந்தார். 'என்னுடைய தாய் நாடு இலங்கை என்றாலும், தமிழ் நாட்டுக்குள் கால் வைத்தாலே உடம்பெல்லாம் சிலிர்த்து விடும். என்னுடைய வேரும் வேரடி மண்ணும் இங்கே தானே இருக்கிறது. மறுத்தாலும், வெறுத்தாலும் இந்தியா என் தந்தை நாடு' என அடிக்கடி நினைவுகளை அசைப்போடுவார்.

இளம் வயது முதலே சமூக பிரச்னைக‌ளில் அக்கறை கொண்டிருந்த ஓ.ஏ.ராமையா 1950களின் இறுதியில் தனது வாழ்க்கையைத் தொழிற்சங்கத்தோடு இணைத்து கொண்டார். இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளராக இருந்த போது, தேயிலைக் கூடையில் தேசத்தை சுமக்கும் மலையகத் தமிழர்களுக்காக போராடி பல்வேறு உரிமைகளை பெற்று கொடுத்திருக்கிறார்.

Sunday, May 12, 2013

இசைப்பார் இல்லை என்பதால் அந்த ராகம் இல்லாமலா போய்விடும்?

-சி.மெளனகுரு-

(70 களில் ஈழத்து நாடக அரங்கின் போக்குகள் பற்றியும் கந்தன்
கருணை நாடகப் பங்கேற்பு பற்றியுமான சிவ அனுபவப்
பதிவுகள்)


அரங்கு அரசியல் பேசியது

1969ஆம் ஆண்டு ஈழத்து தமிழ் அரங்க வரலாற்றில் மிக முக்கியமானதொரு ஆண்டாகும். அக்காலகட்டத்தில் அரங்கு அரசியல் பேசியது மாத்திரமன்றி சமூக விடுதலைக்கான காத்திரமிக்கதொரு கருவியாகவும் செயற்பட்டது.

இவ்வாண்டிலேதான் யாழ்ப்பாணத்து இந்துக் கோயில்களை தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கும் திறந்து விட வேண்டுமென்ற போராட்டம் தீவிரம் பெற்றது. சாதி அடக்கு முறைக்கு எதிரான இப்போரைத் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் முன்னின்று நடத்தியது. இப்போர் இந்து ஆகமக் கோயில்களின் கதவுகளைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக திறந்து விடுதல் என்ற நடவடிக்கையினை மையம் கொண்டபோது மட்டுவில் பன்றித் தலைச்சியம்மன் கோயிலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் போராட்டக் களங்களாயின. குறிப்பாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் நுழைவுப் போராட்டம் இலங்கை எங்ஙனும் பேசப்பட்டது.
தமிழருக்காகத் தனிநாடு கேட்டவரும், அடங்காத் தமிழர் என அழைக்கப்பட்டவருமான திரு. சி. சுந்தரலிங்கம் அவர்களே தமிழருள் ஒரு பிரிவினரான தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் கோயிலினுள் நுழைவதை மூர்க்கமாக எதிர்த்தமையையும் அன்றைய பிரபல தமிழ்த் தலைவர்கள் எனக் கருதப்பட்டோர் பலர் இப்போராட்டம் பற்றி மௌனம் சாதித்தமையையும் தமிழ் கூறும் நல்லுலகம் வியப்போடு பார்த்த காலம் அது.

போராட்டமும் போராளிகளும்

அப்போராட்டம் ஈழம் எங்ஙணும் பரந்து வாழ்ந்த முற்போக்குச் சிந்தனகள் கொண்ட மனிதாபிமான அறிஞர்களதும், கலைஞர்களதும், எழுத்தாளர்களதும் மனச்சாட்சியை உலுப்பி விட்டிருந்தது. இவர்கள் தம் எழுத்தாலும், செயலாலும் சத்தியம் மிகுந்த அப்போராட்டத்திற்கு ஆதரவு நல்கினர்.அப்போராட்டத்தில் இளம் போராளிகள் பலர் உருவாகினர். அவ்வுரிமைப் போரில் பங்கு கொண்ட பலருக்கு அன்று பிரபலியமாகியிருந்த மாசே - துங் சிந்தனைகளும் மாபெரும் சீனக் கலாச்சாரப் புரட்சியும் ஆதர்சங்களாயிருந்தன.
தமிழர் மத்தியிலே காணப்பட்ட தீண்டாமைக்கும் சாதிக் கொடுமைக்கும் எதிராக கலைஞர்களும் எழுத்தாளர்களும் அன்று ஒன்று திரண்டனர் தம் பேனாக்களைத் தூக்கினர்..
போராடிய மக்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் இரத்தக் கடன் என்ற தலைப்பில் சாதி எதிர்ப்பு போராட்டக் கவிதைத் தொகுதி ஒன்றினை மட்டக்களப்பிலிருந்து கவிஞர் சுபத்திரன் வெளியிட்டார்.

கலைச்சங்மம்


Thursday, May 02, 2013

பு.ஜ.மா.லெ.கட்சியின் புரட்சிகர மேதின ஊர்வலம் யாழ்ப்பாணம் 2013

கொட்டும் மழையில் சுன்னாகம் சந்தை வளாகத்தில் பிற்பகல் 2 மணிக்கு சைக்கிள் பேரணியுடன் ஆரம்பித்து யாழ் ஸ்ரான்லி வீதியில் உள்ள பட்டப்படிப்புகள் வளாகத்தில் பிற்பகல் 4 மணிக்கு கூட்டமும் இடம்பெற்றது.

Wednesday, May 01, 2013

சபாலிங்கம்

-
-ந.சுசீந்திரன்-
[1994 ஆம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி ச. சபாலிங்கம் அவர்கள் பிரான்ஸ் தேசத்தின் தலைநகர் பாரிசில் அவரது இல்லத்தில் வைத்து புலிகளின் கொலைப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 12.05.1994 இல் சபாலிங்கத்தின் உடல் எரியூட்டப்பட்டது. அன்றைய தினத்தில் இறுதி அஞ்சலிக்காக மயானதில் சுமார் 500க்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். அங்கு நடந்த மயான இறுதி அஞ்சலிக் கூட்டத்தில் ந.சுசீந்திரன் ஆற்றிய உரை.] 

காலத்தின் சாட்சிகளை அழித்துக் கொண்டே இருங்கள். நீங்கள் எழுதப்போகும் எங்கள் வரலாற்றை வாசிக்க இறுதியில் யார் இருக்கப் போகின்றார்கள்? தொடர்ந்தும் துப்பாக்கிகளின் கீழ்ப்படிவின் முன்னினையில் வரலாற்றைப் படிக்கவும் பாடமாக்கவும் சாம்பல் மேடுகளும் எலும்புத்தோட்டங்களும்…! இன்னும் போதாதா உங்களுக்கு? 

தின்ற மண்ணில் அவன் செத்து, அவன் அழைந்த புழுதியில் அவனது குருதியோடி, அவன் அலம்பியதண்ணீரில் அவன் அஸ்தி கரைந்து போவதை தடுத்துவிட மட்டும் உங்களால் இன்று முடிந்திருக்கின்றது. இவன் பதித்த தடயங்களை உங்கள் துப்பாக்கிகள், துர்ப் பாக்கிகள் ஒன்றும் செய்துவிடமுடியாது. மாற்றுக் கருத்தின் சிறு பொறிகளைக்கூட கண்டு குலை நடுக்கங் கொள்ளும் கோழை எப்போதுமே கொடூரமானவனாகத்தான் இருப்பான்.