இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் இடம் இருக்கிறது. நம்முடைய நல்ல பூமி வளம் மிக்கது, எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றக் கூடியது.

தொலைத்துவிட்ட பாதை
வாழ்க்கைப் பாதை என்பது சுதந்திரமானதாகவும் அழகானதாகவும் இருக்க முடியும். ஆனால், அந்தப் பாதையை நாம் தொலைத்துவிட்டோம். மனிதர்களின் ஆன்மாக்களில் பேராசை விஷத்தைக் கலந்துவிட்டது. அந்தப் பேராசை, வெறுப்பால் இந்த உலகத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது, துன்பத்திலும் துயரத்திலும் நம்மைத் தள்ளிவிட்டது. வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறோம்.
ஆனால், நாம் நமக்குள்ளே முடங்கிப்போயிருக்கிறோம். ஏராளமாக உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும் என்ன பயன், நாம் வறுமையில்தான் உழன்றுகொண்டிருக்கிறோம். நமது அறிவு யார் மீதும் நம்பிக்கையற்றவர்களாக நம்மை ஆக்கிவிட்டது. நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை ஆக்கிவிட்டது. மிதமிஞ்சி சிந்திக்கிறோம், மிகமிகக் குறைவாக அக்கறைகொள்கிறோம். இயந்திரங்களை விட நமக்கு அதிகம் தேவை மனிதமே.
புத்திசாலித்தனத்தைவிட நமக்கு அதிகம் தேவை இரக்கவுணர்வும் கண்ணியமுமே. இந்தப் பண்புகள் இல்லையென்றால், வாழ்க்கை கொடூரமானதாக ஆகிவிடும். அப்புறம் நமது கதை அவ்வளவுதான்.