Wednesday, April 22, 2015

தீண்டாமை ஒழிப்பு செயலர் சி.புலேந்திரன் அவர்கள் நினைவு

சி.புலேந்திரன் அவர்கள் அண்ணன் அல்ல தோழர்
-கரவைதாசன்-
தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு அமரர் கம்பர்மலை தங்கவடிவேல் மாஸ்ரருடன் இணைச்செயலாளர் நாயகம் பொறுப்பேற்று மக்களைத் தீண்டாமைக்கெதிராக பாசறை அமைத்துச் செயற்பட்டு வந்தார்.

கருப்பாகிக் கிடந்த ஈழ மண்ணில் எழுந்து பழுத்து விழுந்த மற்றொரு விதை தோழர் சி.புலேந்திரன் அவர்கள். தொடர்ச்சியான போராட்ட குணமும் சமத்துவத்துக்கான முன் ஏற்பாடுகளையும் கொண்ட கன்பொல்லைக் கிராமத்தில் ஒரு தலை முறையின்  பழுதற்ற விதையாக வந்தவர். 

இனத்துவப் புனைவுகளின்  தொடர் முரண்பாடுகளுக்கிடையேயும் சரியான அரசியல் திசை நோக்கிய பயணம் அவரிடம் இருந்தது. 

மதம் ஒன்று, மொழி ஒன்று, கடவுள் ஒன்று என்ற பம்மாத்துக்கிடையே பலம் தின்று கொட்டை போட்ட மூத்தசந்ததி பட்ட அவலங்கள். சிறை வதைக் கொடுமைகள் இவர் போன்ற தோழர்கள் சரியான அரசியல் தெரிவினைக் கொள்ளும் வாய்ப்பினை இவர்களுக்கு வழங்கிற்று. இடதுசாரிய பாரம்பரியம் மிக்க குடும்பப் பின்புலம் இவருக்கு ஏற்பாக அமைந்திருந்தது. இவரது தந்தையாரும் சிறிய தகப்பனார் ஆ.சிவகுருவும் மூத்த தோழர்களின் வரிசையில் இன்றும் நினைவுகொள்ளத்தக்கவர்கள்.

பழைய உலகம் மறைத்து புது  உலகின் இக்காலத்தின் குறியீடாக இவர் வந்தார்.

தனது இடை நிலைக் கல்வியினை கரவெட்டி திரு இருதயக் கல்லூரியல் பெற்ற இவர் இலங்கை அரச கட்டடத்தினைகளத்தில் ஊழியராக கடமை புரிந்தார். பொருளாதார மேம்பாட்டுக்காக ஈராக் சென்று பொருளீட்டி நாடு திரும்பியவர். தனது வழி நடத்தலில் தனது பிள்ளைகளையும் சகோதரியின் பிள்ளை களையும் எமது கிராமத்தில் பட்டதாரிகளின் வரிசையில் நிரல்ப்படுத்தியவர்.

Tuesday, April 21, 2015

சாதியமைப்பு ஒடுக்குமுறைக்கு எதிராக கம்யுனிஸ்டுகள்

-பி.சம்பத்-
இதுவரை உள்ள மனிதகுல வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே (ஆதிகாலப் பொதுவுடைமைச் சமுதாயம் தவிர) என பிரகடனப்படுத்துகிறது மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை. இது இந்தியாவின் வரலாறு மற்றும் சமூக அமைப்புக்கும் பொருந்தும். உலகின் பல்வேறு நாடுகளின் சமூக அமைப்பும், வர்க்கப் போராட்டங்களும் ஒரே மாதிரியானதாக இல்லை. இந்த அம்சங்களில் ஒவ்வொரு நாட்டிற்கும் பிரத்யேகத்தன்மைகளும் பின்னணியும் உண்டு.
இந்தியாவின் பிரத்யேகத் தன்மை:
ஒவ்வொரு நாட்டின் பிரத்யேகத்தன்மையை சரிவர ஆய்வு செய்து புரிந்து கொண்டுதான் அந்நாடுகளின் நடைபெற வேண்டிய வர்க்கப் புரட்சியையும், அதற்கான பாதையையும் அந்நாட்டின் புரட்சிகர இயக்கம் தீர்மானிக்க வேண்டுமேயொழிய மார்க்சிய கோட்பாடுகளை இயந்திர பாணியில் அமல்படுத்துவதன் மூலம் அல்ல.திட்டவட்டமான நிலைமைகளை திட்டவட்டமாக ஆய்வு செய்து திட்டவட்டமான முடிவுகளுக்கு வர வேண்டும்” என்றே மார்க்சியம் நமக்கு போதிக்கிறது.
இந்த அடிப்படையில் இந்தியச் சமுதாயத்தை ஆய்வு செய்தால் அதன் பிரத்யேகத் தன்மைகளில் ஒன்றுதான் இங்கு நிலவும் சாதியமைப்பு. இச்சாதியமைப்பையும் இதோடு இங்கு நிலவும் மூடப்பழக்க வழக்கங்கள் மற்றும் பத்தாம்பசலித் தனமான சம்பிரதாயங்களையும் எதிர்த்துப் போராடாமல் – அவ்வாறு போராடி முறியடிக்காமல் இங்கே புரட்சிகரமான சிந்தனைகள் மற்றும் இயக்கம் வளர்வதோ அல்லது சமுதாய மாற்றத்திற்கான புரட்சி வெற்றிகரமாக நடைபெறுவதோ சாத்தியமல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Sunday, April 19, 2015

சமூக உற்பத்தியின் ஒரு வடிவமே கலை

-ந. இரவீந்திரன்-

மனித சமூகம் பெற்று வந்த வளர்ச்சிச் செல்நெறியின் வெளிப்பாடாக உற்பத்தியானது கலை. அதன் எழுத்து வடிவமாய்ப் பரிணமித்த இலக்கியம் குறித்து பல்வேறு கோட்பாடுகள் உண்டு. மனிதப்படைப்பு என்பதைக் கடந்து உள்ளொளி வாயிலாகக் கடவுள் வெளிப்படுத்தும் கொடையெனக் கொள்வோரும் உளர். மனுக்குலம் எதிர்நோக்கிய பிரச்சனைகளை மக்கள் போராட்டங்கள் வாயிலாக தீர்க்கும் மார்க்கம் கண்டறியப்பட்டபோது, அத்தகைய இயங் காற்றல்களின் செயல்திறன் கலை - இலக்கியத்தின் பேசு பொருளான போது, இவை அருள் கொடைகளல்ல சமூகம் உற்பத்திசெய்கின்ற இன்னொரு வடிவமே எனக்கண்டறிய இயலுமாயிற்று.
சமூக மாற்றத்துக்கான அந்த இயங்காற்றலில் பங்கேற்று அதனைக் கோட்பாட்டுருவாக்கம் செய்த மார்க்ஸியத்தின் மூலவர்களான மார்க்சும் ஏங்கெல்சும் இலக்கியம் குறித்தோ அதனைத் திறனாய்வு செய்யும் முறையியல்கள் பற்றியோ தனியாக எழுதி வைக்கவில்லை. எரியும் பிரச்சனையாகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிகள் எழுச்சிகொண்டு இயங்கிய அனுபவங்கள் சார்ந்த எழுத்தாக்கங்களே அவர்களது முழுமைப்பணியாக இருந்தன. அத்தகைய எழுத்துகளில் வெளிப்பட்ட கருத்துகள் பின்னால் தொடர்ந்த மார்க்சியச் சிந்தனையாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்டிருந்தன. கலை - இலக்கிய - சமூக விஞ்ஞான நூல்களைக் கற்றுத்தேறி மார்க்சிய இலக்கியத் திறனாய்வை அறிவதென்பதை விட, மார்க்சையும் ஏங்கெல்சையும் போன்றே சமூக மாற்றப் போராட்டங்களில் இணைந்து இயங்கியவாறே ஏனைய மார்க்சியச் சிந்தனையாளர்களும் மார்க்சியத்தையும் அதன் இலக்கியக்கோட்பாடுகளையும் செழுமைப்படுத்தினர்.
அந்த வகையில் பிளெக்கனோவ், லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின், மார்க்சிம்கோர்க்கி, பெஞ்சமின், ப்ரெக்ட், லூகாக்ஸ், அல்தூசர், ஜோர்ஜ் தாம்சன், ரேமன்ட் வில்லியம்ஸ், பியோமா ஷே, கிறிஸ்டோபர் காட்வெல், லூசியன் கோல்ட்மான் ஆகியோரின் பங்களிப்புகள் கவனிப்புக்குரியன. இன்னும் லூசூன், மாஒசேதுங், கோசிமின், பிடெல் காஸ்ட்ரோ என இந்தப்பட்டியல் மிக நீளமானது என்ற போதிலும் மேற்குறித்த செயற்பாட்டாளர்களும் சிந்தனையாளர்களும் முன்வைத்த இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகளை அடியொற்றியுங்கூட அடிப்படைத் தெளிவை எட்ட இயலும் என்பது மெய். அத்தகைய ஒரு முயற்சி டெரி ஈகிள்டன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 'மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்' என்ற டெரி ஈகிள்டனின் நூல் இலக்கியத் திறனாய்வு குறித்த மார்க்சியர்களின் கருத்தாடல்களை அலசும் போக்கில் மார்க்சியத்தில் மேலும் தெளிவுபெற இயலும் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது.

இஸ்தம்பூல் பயணக்குறிப்பு


-ந.சுசீந்திரன்-
கி.பி. மூன்றாம் நூற்றாண்டளவில் கொன்ஸ்ராண்டின் என்ற ரோமச் சக்கரவர்த்தி இன்றைய இஸ்தம்பூல் என்ற இந் நகரத்தைப் புனரமைத்து அதற்குப் ”புதிய ரோமாபுரி” என்று பெயரும் வைத்து அதனை ரோம சாம்ராச்சியத்தின் கிழக்குப் பகுதியின் தலை நகராகவும் ஆக்கியுள்ளான். அவனது மரணத்தின் பின்னர் அது ’கொன்ஸ்டாண்டினோபிள்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவே இன்றைய இஸ்தம்பூல் ஆகும்.
இஸ்தம்பூல் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த நிலக்கீழ் நீர்த்தேக்க மாளிகை ஜுஸ்டினியான் என்ற ரோமச் சக்கரவர்த்த்தி காலத்தில் கி.பி. நான்காம் நூற்றாண்டளவில் ஏழாயிரம் அடிமைகளை வேலையாட்களாக வைத்துக் கட்டப்பட்டிருகின்றது. இவ்வாறான ரோமர் காலத்தில் அமைக்கப்பட்ட நிலக்கீழ் நீர்த்தேக்க மாளிகைகள் அதிக அளவில் இத்தாலியிலும், மற்றும் தூனேசியாவிலும் காணப்படுகின்றன. இந்த ரோமர் காலத்து நீர்த்தேக்கங்களுக்கு சுமார் 100 கிலோமீட்டர் வரையான தூரத்தில் இருந்து கூட நிலக்கீழ் வடிகாலமைப்பின் மூலம் தண்ணீர் பெறப்பட்டிருப்பதை அறியமுடிகின்றது. ஆனால் சுமார் 80,000 கனமீட்டர் நீரைத் தேக்கி வைக்கக்கூடிய, பன்னிரு வரிசைகளில் ஒவ்வொரு வரிசையும் 8 மீட்டர் உயர 28 தூண்களைக் கொண்ட பிரமாண்டமான, 138 மீட்டர் நீளமும் 65 மீட்டர் அகலமுங் கொண்ட உலகின் பெரிய நிலக்கீழ் நீர்த்தேக்க மாளிகை இங்கே இஸ்தம்பூலில் உள்ள ”பாசிலிக்கா சிஸ்டேன்” என்ற இந்த நிலக்கீழ் நீர்த்தேக்க மாளிகையாகும்.

Tuesday, April 14, 2015

குன்ரர் கிறாஸ்-Günter Grass- காலமானார்

நோபல் பரிசு பெற்ற ஜெர்மன்மொழி எழுத்தாளர் குன்ரர் கிறாஸ்-Günter Grass- (1927-2015) அவர்கள் இன்று லூபெக் நகர மருத்துவ மனையொன்றில் அவரது 87ஆவது வயதில் காலமானார்.இவரின் முதல் நாவலான The tin drum ஐரோப்பிய வட்டாரத்தில் பரவலான கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு Cat and Mouse, Dog years போன்ற நாவல்கள் அவரிடமிருந்து வெளிவந்தன. சில காலம் ஜெர்மன் சோசலிச ஜனநாயக கட்சியில் செயற்பாட்டாளராக இருந்தார். கவிஞர் மற்றும் நாடகாசிரியர் போன்ற பன்முக ஆளுமைத்திறன் கொண்டவர்

Saturday, April 11, 2015

வாழ்த்தப்பட வேண்டிய வெற்றி.....


-கோவை நந்தன்-
பிரான்சில் கடந்த வாரம் இடம் பெற்ற பிராந்திய நிர்வாக அமைப்புகளுக்கான தேர்தலில் (Élection Départementale en France) வலது சாரிக்கட்சிகள் பெற்ற பெரு வெற்றியானது, ஜனாதிபதி பிரான்சுவா கொலண்ட் (François Hollande) தலைமையிலான ஆளும் சோசலிச அரசுக்கு பெரு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் வேலையற்றோர் எண்ணிக்கையே இந்தத்தோல்விக்கு காரணம் எனவும் இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியா விட்டால் வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என ஜனாதிபதி அறிவிக்கும் அளவிற்கு இடதுசாரிகளின் நிலைமை மோசமடைந்து வருகிறது.
குறிப்பாக அதிதீவிர வலதுசாரிய கட்சியும் இனவாதத்தை தமது அடிப்டை கொள்கையாகவே கொண்டுள்ளதுமான தேசிய முன்னணி (Front National)நாட்டின் இரண்டாம் நிலைக்கு வளர்ந்து வருவதை, இந்தத் தோதல் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

மரின் லுப்பன் (Marine Le Pen)தலைமையிலான இந்த தேசிய முன்னணியின் வளர்ச்சியை தடுக்கவேண்டுமானால், இன்றைய நிலையில் முன்னாள் ஜனாதிபதி நிக்கொல சாக்கொசி மீண்டும் ஜனாதிபதியாக முன்னிலைப் படுத்தப்படுவார் என எதிhபார்க்கப்படும் UMP (Union Pour Un Mouvement Populaire) கட்சியை ஆதரிப்பதுதான் இங்கு வாழும் வெளிநாட்டவர்க்கும், ஜனநாயக வாதிகளுக்கு மான ஒரே தெரிவாக இருக்க முடியும்.

இவர்களும் வலதுசாரிய சிந்தனா கட்சியாக இருந்தாலும் கூட , இனவாதிகளாக இல்லாமல் இருப்பதும், ஜக்சிராக் (Jacques Chirac) மற்றும் நிக்கொல சாக்கொசி(Nicolas Sarkozy) ஆகியோரது கடந்தகால ஆட்சிகள், நடுநிலையாளர் களாக இவர்களை இனம்காட்டியதும் குறிப்பிடத் தக்கது.
இந்த வகையில் இடம்பெற்ற பிராந்திய தேர்தலில் 95வது நிர்வாக அலகின்,கார்ஜ் லெ கொணேஸ் (Garges les gonesse ), மற்றும் அர்னோவில் (Arnouville ) ஆகிய பகுதிகள் இணைந்த கன்ரோனில், UMP சார்பில் போட்டியிட்ட சேர்ஜியா மகேந்திரன் பெற்ற பெரு வெற்றியை பாராட்டியே ஆகவேண்டும்.
பொதுச் சேவையில் கடின உழைப்புடனும், நடுநிலையுடனும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள, தமிழ் சமூகத்தின் இளம் தலைமுறைப் பெண் சேர்ஜியா மகேந்திரன் பெற்ற இரண்டாவது வெற்றி இது.
2014ம் ஆண்டு இடம்பெற்ற கார்ஜ் லெ கொணேஸ் (Garges les gonesse ),பகுதி நகரசபைத் தேர்தலில் வெற்றிபெற்று அங்கு துணை மேயராக (Maire Adjoint), தெரிவு செய்யப்பட்ட சேர்ஜியா தற்போது பிராந்திய சபைக்கும் (Conseil Départemental )தெரிவு செய்யப்பட்தனை அவரது பொதுப்பணியின் அடுத்தபடியாகவே நோக்க வேண்டும்.
இளமையின் துடிப்புடன் புதிய பொறுப்பினை ஏற்றுள்ள சோஜியா தனது கடமைகளில் சுறசுறுப்பாக ஈடுபட்டுள்ளார்.

கார்ஜ் லெ கொணேஸ் (Garges les Gonesse ) பகுதியிலிருந்து, டுனி (Dugny) ஊடாக லி புர்ஜே (le bourget) வரை Tram சேவை, இந்தப் பகுதியின் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் சீரமைப்பு உட்பட்ட பல வாக்குறுதிகளுடன் தெரிவாகியுள்ள UMP இன் பிராந்நிய நிர்வாக குழுவினதும் குறிப்பாக சேர்ஜியா மகேந்திரனிதும் பணிகள் சிறக்க வாழ்த்துவோம்.