கடந்த 19-20 ஆம் திகதிகளில் பாரிசில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பானது வழமையான குறை, நிறைகளுடன் இனிதே நடைபெற்றது.  ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை என்பதே குறைகள் என்பதாகும். அதுவும் தோழி வித்தியா அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது போனதே  மிகப் பெரிய குறையாக இருந்தது. வித்தியா அவர்களை அழைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதும் அனைத்துமே பலனளிக்காது போயின. இருந்தபோதும் வித்தியாவின் உரையாடல்  40 நிமிடங்கள் வீடியோ கான்பரன்ஸ் ஊடாக  நிகழ்த்தப்பட்டது.

முதல்நாள் காலை நிகழ்ச்சியாக ஜேர்மனியிலிருந்து வருகைதந்த சிவராசா அவர்கள் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். மறைந்த இலக்கியச் சிந்திப்பின் முன்னோடிகளான கலைச்செல்வன், புஸ்பராசா, பரா, சபாலிங்கம் போன்றவர்களின் முக்கியத்துவம் குறித்தும் ஊரையாற்றினார்.
அடுத்ததாக வரவேற்புரையை உமா (ஜேர்மனி) அவர்கள் மேற்கொண்டார். அவர் தனது வரவேற்புரையில் இலக்கியச் சந்திப்பின் ஆரம்பகால நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். குறிப்பாக பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக இலக்கியச் சந்திப்பு ஆற்றிய பங்களிப்புகள் குறித்தும் விரிவாக உரையாற்றினார்.
அடுத்ததாக தெணியான் அவர்களின் ‘ஒடுக்கப்பட்டோர்’ எனும் சிறுகதைத் தொகுப்பு நூலை ராகவன்(லண்டன்) அவர்கள் திறனாய்வு செய்தார். கடந்த தேசியப் போராட்ட காலத்தில் வட-கிழக்கில் சாதியம் ஒழிக்கப்பட்டுவிட்டது, அல்லது வெகுவாக குறைந்துவிட்டது என்பதை ஒட்டு மொத்தமாக மறுக்கிறது தெணியானின் ‘ஓடுக்கப்பட்டோர்’ எனும் சிறுகதைத் தொகுப்பு. என்பதோடு அந்நூல் தொடர்பான தனது பல்வேறு வாசிப்பு அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
நூல் அறிமுகங்களாக தோழர் யோகரட்ணம் அவர்களின் ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்ட நாட்களும்’ எனும் நூலும், எம்.ஆர்.ஸ்டாலின் அவர்களின் ‘தமிழீழப் புரட்டு’ எனும் நூலும் அறிமுகப்படுத்தப்பட்டது. தோழர் யோகரட்ணம் அவர்களின் நூலை முரளி (ஜேர்மனி) அவர்களும், எம்.ஆர்.ஸ்டாலினின் நூலை கீரன் (லண்டன்) அவர்களும் அறிமுகம் செய்து வைத்தனர்.
சமகால சிங்கள இலக்கியம் எனும் தலைப்பில் மேகவண்ண குருகே (ஜேர்மனி) உரையாற்றினார்.  அவரது உரையை சரவணன் தமிழில் மொழி பெயர்த்தார்.
யுத்தத்தின் பின் பெண்கள் எனும் தலைப்பில் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (லண்டன்) அவர்கள் உரையாற்றினார். யுத்தத்தில் ஈடுபட்ட பெண்களின் நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாகவே இருப்பதாகவும் தனதுரையில் குறிப்பிட்டார்.
தமிழ் கவிதைகளின் வாசிப்பனுவங்கள் குறித்த ஓர் உரையால் பௌசரின் (லண்டன்) நெறிப்படுத்தலில் நிகழ்ந்தது. பார்வையாளர்களாக இருந்த பலர் இந்நிகழ்ச்சியில் பங்கு பற்றினார்கள்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக கற்சுறா (கனடா)  ‘நாங்களல்ல நீங்கள்’ எனும் தலைப்பிலான தனது கட்டுரையை வாசித்தார். தமிழ் பொதுப் பண்பாட்டுக் கலாச்சார புனிதங்களை கேள்விக்குள்ளாக்கும் தன்மையை அவரது கட்டுரையில் காணக் கூடியதாக இருந்தது.
அடுத்ததாக லிவிங் ஸ்மைல் வித்தியாவின் உரையாடல் வீடியோ கான்பெரன்ஸ் ஆக ஒழுங்கு செய்யப்பட்டது. நேரம் போதாமையால் அவருடனான  கலந்துரையாடல் முழுமையாக நடைபெறவில்லை.
அருந்ததியின் நெறியாள்கையில் ’பேய்’ எனும் நாடகம் அரங்கேற்றப்பட்டது. அந்நாடகத்தில் அருந்ததி, தேவதாசன், சுந்தரலிங்கம், அசுரா, விஜி, மோகன் (சோலையூரான்) போன்றோர் நடித்தனர். நாடகத்திற்கான பின் இசைஒலியை  றஞ்சனும், முரளியும் வழங்கினர்.
மண்டபத்தில் வாசுகனின் (பிரான்ஸ்) ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்படிருந்தது. அவ் ஓவியங்கள் குறித்த உரையடலும் நிகழ்ந்தது. அந்நிகழ்வை கே.கே. ராஜா (லண்டன்) அவர்கள் நெறிப்படுத்தினார். ஓவியர் வாசுகனிடம் இருந்து பல்வே அனுபவங்களை பெறக்கூடியதாக இருந்தது.
இறுதி நிகழ்ச்சியாக மே 18 பின்னரான இலங்கை-புகலிட அரசியல் எனும் தலைப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வை உதயன் நெறிப்படுத்தினார். இலங்கையிலிருந்து தோழர் சுகு, லண்டனிலிருந்து எஸ்.எம்.எம். பசீர் ஜேர்மனியிலிருந்து மேகவண்ண குருகே போன்றோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நன்றி:தூ