Tuesday, September 16, 2014

ஆசிரியர், புத்தக ஆசிரியர் -ஆயிஷா இரா நடராசன்

-கவின் மலர்- 
கண்ணீரில்லாமல் யாராலும் ஆயிஷாவை வாசிக்க முடியுமா? நம் குழந்தைகளை கூட்டுக்குள் அடைக்கும் கல்வி முறையின் மீதான சாட்டையடி கேள்வியாக வெளிவந்த ஆயிஷா என்கிற அந்த குறுநூல் தமிழ் வாசர்களிடையே ஏற்படுத்திய அதிர்வு இன்னமும் மறைந்துவிடவில்லை. எங்கோ ஒரு மூலையில் அந்நூலை வாசித்து தினமும் ஒருவருடைய விழிகளில் நீர் கசியவே செய்கிறது. ஆயிஷா ஒரு லட்சத்துக்கும் அதிமான பிரதிகள் விற்று எப்போதும் சந்தையில் கிடைக்கும் நூலாக உள்ளது. அதன் ஆசிரியர் இரா. நடராசன் அந்த நூலுக்குப் பின் ஆயிஷா நடராசன் என்றே அறியப்படுகிறார்.  இந்த ஆண்டு குழந்தைகள் இலக்கியத்துக்கு வழங்கப்படும் பால சாகித்ய அகாடமி விருது அவருடைய ‘விஞ்ஞான விக்ரமாதித்யன்’ கதைகள்’ நூலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கென ஏராளமான நூல்களை எழுதியுள்ள இரா. நடராசன் தமிழ்நாடெங்கும் உள்ள குழந்தைகள் சிறுவர் நூல்களை வாங்கிப் படிக்கிறார்க்ள் என்கிற உண்மைக்குக் கிடைத்த அங்கீகாரமே தனக்குக் கிடைத்துள்ள விருது என்கிறார்.

நடராசன் கடலூரில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். ஆசிரியப் பணி, எழுத்துப்பணி இரண்டிலுமே மிகச் சிறப்பான முறையில் செயல்படும் நடராசனின் சொந்த ஊர் கரூர். கல்லூரியில் பயிலும்போது இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பணியாற்றியவர் மார்க்சியத்தின்பால் ஈர்க்கப்பட்டு, தொடர்ந்த தீவிர இலக்கிய ஈடுபாடு என்றிருந்தவரை 20 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் நடந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கக் கூட்டம் ஒன்றில் நடந்த சம்பவத்தால் குழந்தைகளுக்காக எழுதத் துவங்கியதாகக் கூறுகிறார். “சிறுவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளச் சொல்லிக் கொண்டிருந்தோம். அப்போது எழுந்த ஒரு சிறுவன் என்ன புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்று கேட்டான். அப்போது பதில் சொல்ல திண்டாடிப்போனோம். இதுவே என்னை குழந்தைகளுக்காக எழுதத் தூண்டியது” என்கிறார்.

இவருடைய முதல் நூல் நாகா. அன்று தொடங்கி இன்று வரை இவர் எழுதிக்குவித்தவைகளில் சிறுகதைகள், நாவல்கள், அறிவியல் புனை கதைகள், அறிவியல் நூல்கள் என்று அனைத்தும் அடக்கம். “குழந்தைகளுக்காக எழுதுவதில் சிரமங்கள் பல உண்டு. மொழி முதலில் கைவரவேண்டும். ஒரு ஊர்ல ஒரு மகாராஜா என்று தொடங்கினால் அடுத்து அவருக்கு இத்தனை மனைவிகள் என்று எழுதினால் அது பெரியவர்களுக்கான எழுத்து. இதையே குழந்தைகளுக்கு எழுதினால் மகாராஜா குண்டானவரா ஒல்லியானவரா என்று எழுதவேண்டும்.” என்கிறார்.

திண்டிவனத்திற்கு அருகில் ஒரு கல்லூரி மாணவன் பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே பரிசோதனைச் சாலையாக மாற்றிக்கொண்டு மரணத்தைத் தழுவினான். இதுவே ஆயிஷா கதைகான அடிப்படை. “1985-ம் ஆண்டே 'ஆயிஷா’ எழுதப்பட்டுவிட்டது என்றால் நம்புவீர்களா? அனுப்பிய இடங்களில் எல்லாம் கதை திரும்பி வந்தது. 'ஆயிஷா’ சொல்லும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப்போது நம் சமூகத்தில் இல்லை. குழந்தைகளுக்கு நம் கல்விமுறையில் அளிக்கப்படும் தண்டனைகளில் ஒரு தவறும் இல்லை என்றேதான் நினைத்துஇருந்தது சமூகம். 10 ஆண்டுகள் விடாமல் முயன்றேன். பின்னர், 1995-ல் 'கணையாழி’ குறுநாவல் போட்டியில் இரா.முருகன், சுஜாதா இருவரும் நடுவராக இருந்து 'ஆயிஷா’வைத் தேர்ந்தெடுத்தார்கள்.'' என்கிறார். கல்விக்கூட சிந்தனைகள், கல்வி முறையில் மாற்றங்கள் இதுகுறித்தெல்லாம் சமூகம் இப்போதுதான் பேசத்தொடங்கியிருக்கும் நிலையில் 1985ல் ஆயிஷா எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

விஞ்ஞான விகரமாதித்யன் கதைகள் ஒரு வித்தியாசமான முயற்சி. வேதாளம் ஒருவனுடைய நோய்க்கும் பில்லி சூன்யம்தான் காரணமென்று விக்ரமாதித்யனிடம் சொல்ல அவனோ அது சர்க்கரை நோய் என்று கூறி, இன்சுலில் எப்போது எப்படி கண்டுபிடிக்கப்பட்டது, தீர்வுகள் என்று சொல்கிறான். இப்படி ஒவ்வொரு நோய் குறித்தும் வேதாளம் ஒரு கதை சொல்ல அதை அறிவியல்பூர்வமாக விக்ரமாதித்யன் மறுப்பதான கதைகளே இந்நூலில் இடம்பெற்றுள்ளன. “நாம் எப்போதும் தொன்மக் கதைகளை பிள்ளைகளுக்குச் சொல்கிறோம். வெறுமனே அப்படியே சொல்லாமல் அந்த வடிவத்தை எடுத்துக்கொண்டு புதுமையான அறிவியல் கருத்துக்களைச் சொன்னால் மிக எளிதாக குழந்தைகளை அவை சென்றடையும்” என்கிறார்.

எல்லா வயது சிறுவர்களுக்கும் ஒரேபோல் எழுதமுடியாது; 5 ஆம் வகுப்பு வரை ஒரு மாதிரியும் எட்டாம் வகுப்பு வரை ஒரு மாதிரியாகவும், ஒன்பது பத்து வகுப்புகளுக்கு ஒரு மாதிரியாகவும் எழுதவேண்டும். இதை உணர்ந்துகொள்ளவே தனக்கு ஐந்து ஆண்டுகள் பிடித்தன என்கிறார் நடராசன். அத்துடன் கோவை, சென்னை, மதுரை போன்ற வட்டார வழக்கில் எழுதக்கூடாதெனவும் நுட்பங்களைச் சொல்கிறார். ”பாடப் புத்தகத்தின் தொடர்ச்சியாக மகிழ்ச்சியளிப்பதாகத்தான் சிறுவர் நூல்கள் இருக்கவேண்டும்.” என்கிறார்.

டார்வின். பாரடே. மேரிகியூரி.கலீலியோ ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை சிறுவர்கள் மேடையேற்றும் ஓரங்க நாடகங்களாக படைத்துள்ள நடராசனின்  ஆயிஷா, ஒரு தோழனும் மூன்று நண்பர்களும் எனும் நாவல், உலகப்பெண் விஞ்ஞானிகள், வரலாறு மறந்த விஞ்ஞானிகள் ஆகிய அறிவியல் நூல்கள் உட்பட இவரது பல படைப்புகள் மலையாளம், தெலுங்கு, கொங்கனி, ஆங்கிலம்  பிரெஞ்சு ஆகியவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.  தமிழின் முதல் முயற்சியாக பார்வையற்ற குழந்தைகளும் வாசிக்கும் வண்ணம் 'பூஜ்ஜியமாம் ஆண்டு' நாவல் பிரைல் மொழியிலும் வெளிவந்துள்ளது, ’கணிதத்தின் கதை’ நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருது பெற்றிருக்கிறார்.

”கூகிவாதியாங்கோ போன்ற  உலகின் மிகப்பெரும் எழுத்தாளர்களும் குழந்தைகளுக்காக எழுதுகிறார்கள். சத்யஜித்ரே ஒரு படம் எடுத்தால் குழந்தைகளுக்கான இரண்டு நூல்கள் எழுதிவிட்டுத்தான் அடுத்த படம் எடுப்பார். ஆனால் தமிழில் சிறுவர் இலக்கியம் மிகவும் பின் தங்கியே உள்ளது. அழ. வள்ளியப்பா குழந்தைகளுக்கா எழுதுபவர்களுக்கான சங்கத்தை நடத்தினார். திரு.வி.க., மு.வ., பூவண்ணன், வாண்டுமாமா போன்ற பலர் இயங்கினார்கள். தற்போது யூமா வாசுகி பல்வேறு மொழிபெயர்ப்புகளை குழந்தைகளுக்கு அள்ளி வழங்குகிறார். விழியன், விஷ்ணுபுரம் சரவணன் போன்றோரின் பங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. இப்போதுதான் பால. சரவணன் எழுத வந்திருக்கிறார். இப்படி வெகுச்சிலரே இயங்கும் இத்துறையில் இன்னும் புதிது புதிதாக பலர் வரவேண்டிய அவசியம் இருக்கிறது” என்று ஆதங்கப்படுகிறார்.

தமிழில் குழந்தைகளுக்காக வெளிவரும் பத்திரிகைளில் ஆங்கிலக் கலப்பு அதிகம் உள்ளதை சுட்டிக்காட்டும் நடராசன் “புத்தகக் கண்காட்சிக்கு பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துவந்தாலும் ஒரு குளிர்பானம் வாங்கித்தந்து அவர்களுக்கு மீண்டும் பழைய புராண கதைப் புத்தகங்களை வாங்கித் தருகின்றனர். குழந்தைகளை சுதந்திரமாக விட்டால் அவர்களே அவர்களுக்கு வேண்டியதை தேர்ந்தெடுப்பார்கள். பெரியவர்களைவிட குழந்தைகள் மிகவும் பொறுப்பாகவே நூல்களை தேர்வு செய்கின்றனர். பெற்றோரோ ஐ.ஏ.எஸ். ஆவது எப்படி போன்ற நூல்களை வாங்கித்தந்து தங்கள் கனவுகளை அவர்கள் மீது திணிக்கிறார்கள்” என்கிறார்.

தொடக்கத்தில் தீவிர இலக்கியத்தில் கொண்ட ஈடுபாட்டை விட்டுவிடாமல் தீவிர இடதுசாரி இலக்கியம் வாசிக்கும் வாசகர்களுக்கான ‘புத்தகம் பேசுது’ இதழின் முதன்மை ஆசிரியராக உள்ளார். கல்வியாளர், பேச்சாளர், நாடக ஆசிரியர், குழந்தைகளுக்கான புனைகதைகளும் கட்டுரைகளூம் எழுதுபவர், தலைமை ஆசிரியர் என்று எல்லாமும் இருந்தாலும அவருக்கு திருப்தி என்னவோ குழந்தைகளுடன் குழந்தையாகப் பழகுவதில்தான். தன் வீட்டில் எப்போதும் இருக்கும் டெலஸ்கோப் ஒன்றைப் பார்க்க எப்போது வேண்டுமானாலும் குழந்தைகள் வந்து மொட்டைமாடியில் நட்சத்திரங்களையும் கோள்களையும் விண்வெளிக் காட்சிகளையும் கண்டுகளிக்கலாம் என்கிறார்.

( நன்றி :இந்தியா டுடே)

No comments: