Thursday, February 01, 2018

அ. சிவானந்தன் எனும் ஒரு ஆளுமையின் மறைவு (1923-2018)

-சமுத்திரன்-

அ. சிவானந்தன் (1923-2018) அரசியலும் தனிப்பட்ட வாழ்வும் ஒன்றே எனும் தனது வாக்கிற்கமைய முடிந்தவரை வாழ்ந்த ஒரு ஆளுமையின் மறைவு

சிவானந்தனின் மரணம் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான போராட்டங்களுடன் தன்னை அடையாளப்படுத்திய ஒரு பேரறிஞரின் மறைவென அவரை நன்கறிந்தோர் சர்வதேச ஊடகங்களில் பதிவு செய்துள்ளனர். ‘நாம் எந்த மக்களுக்காகப் போராடுகிறோமோ அந்த மக்களுக்காகவே எழுதுகிறோம்’ எனும் கொள்கையைக் கடைப்பிடித்த சிவா ஜனவரி மூன்றாம் திகதி தொண்ணூற்றுநாலு வயதில் அவர் ஏறக்குறைய ஆறு தசாப்தங்களாக வாழ்ந்து வந்த லண்டனில் மறைந்தபோது விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்புவது சுலபமல்ல. அந்த ஆளுமைக்குள் ஆற்றல்மிக்க ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்கள் இருந்தன      என அவரைப் பற்றி நண்பர்கள் வியந்துரைப்பதில் ஆச்சர்யமில்லை.

Wednesday, January 17, 2018

தமிழை ஆண்டாள்- கவிஞர் வைரமுத்து -

- கவிஞர் வைரமுத்து -

அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தின் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக்கொண்டு வெளியிட்ட “Indian movement - some aspects of dissent, protest and reform” என்ற ஆய்வு நூலில் ஆண்டாள் பற்றி இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது :

“Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple” – பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப்பார்ப்பார்கள்.

பீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமியில் புகவிடாவண்ணம் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் ஆக்கப்பட்ட ஓசோன்(O3) கூரையைத் திண்மை செய்வதும் இந்த மார்கழிதான்.

மார்கழியின் அதிகாலை மனோகரமானது. தாயைத் தொட்டுக்கொண்டு குழந்தை உறங்குகிறது; தாய்ப் பறவையைத் தழுவிக்கொண்டு குஞ்சு உறங்குகிறது; இலைகளைப் போர்த்துக்கொண்டு மரம் உறங்குகிறது; கரைகளை முட்டிக்கொண்டு குளம் உறங்குகிறது. தன்னைத்தானே கட்டிக்கொண்டு முதுமை உறங்குகிறது. “இன்னுமா உறக்கம்! எல்லே இளங்கிளியே! எழுந்து வா வெளியே” என்று ஆண்டாளின் ஆசைக்குரல் அப்போது ஆணையிடுகிறது. ‘மார்கழி நீராட வாரீரோ மங்கையரே’ என்று அது எல்லாக் கதவுகளையும் எட்டித் தட்டுகிறது. அதிகாலை எழுவதே வாழ்வியல் ஒழுக்கம். இந்த நெடுங்குளிரில் நீராடுவது உடல் வெப்பத்துக்கும் மனத் திட்பத்துக்கும் ஆண்டாள் நிகழ்த்தும் அமிலச் சோதனை. இந்த அதிகாலை ஒழுக்கத்திற்குப் பாவை நோன்பு என்பது சடங்கு; கண்ணன் என்பதொரு காரணம்.

பாகவதத்தில் சொல்லப்படும் கார்த்தியாயினி நோன்புக்கும், ஆண்டாளின் திருப்பாவை நோன்புக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. கண்ணனே கணவனாய் அமைய நோற்பது கார்த்தியாயினி நோன்பு. நல்லதோர் கணவனை அடைய நோற்பது மட்டுமே திருப்பாவை நோன்பு. ‘எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க’ என்பதே நோன்பு. ஆனால் நாங்கள் நலம்காண வேண்டும் என்ற தன்னலம் தாண்டி, நாடு நலம்காண வேண்டும் என்ற பொதுப்பண்பில் இயங்குவதுதான் நோன்பின் மாண்பு.

Thursday, September 07, 2017

Tuesday, July 11, 2017

மண்வாசனைக்கு மகுடம் வைத்த நிலக்கிளி

-ஜீவகுமாரன் -


1973ல் வன்னி மண்ணின் வாசனையை இலக்கிய உலகத்திற்கு அறிமுகம் செய்த ’நிலக்கிளி’ நாவலின் ஆசிரியர். எழுத்தாளர் திரு. பாலமனோகரனின் 75வது பிறந்தநாள் தினக் கொண்டாட்டம் சென்ற சனிக்கிழமை மிக அமைதியான முறையில் குடும்ப உறவினர்கள் - நண்பர்கள் - இலக்கிய உலகுடன் தொடர்புடையவர்களுடன் நடந்தேறியது. டென்மார்க்கிற்கு வந்த காலம் தொடக்கம் அங்கிள் - அன்ரி என்ற உறவுமுறையே இப்போதும் தொடர்கிறது. மூத்த எழுத்தாளர் என்ற இடைவெளியுடன் ஏன் பழகவில்லை என்பதனை எனதுரையில் குறிபிட்டு இருந்தேன். எழுத்தாளர் பாலமனேகரனுக்கு ஒவியர் பாலமனோரன் என்று இன்னோர் பக்கம் உண்டு.
அவருக்கு எனது பரிசாக அவரின் சில ஓவியங்களையும் நிலக்கிளி நாவலின் அட்டைப்படத்தையும் தொகுத்து மிகச்சிறிய வாழ்த்தொன்றை எழுதியிருந்தேன்.இயற்கையும்  எழுத்தையும்  தன் சுட்டுவிரலுக்கும் பெருவிரலுக்கும்   இடையில் சிறைப்படுத்திய அங்கிளுக்கு  எமது 75வது பிறந்த தின வாழ்த்துகள்   ஜீவகுமரன் - கலாநிதி இந்த மிகச்சிறிய வாழ்த்தின் பொழிப்புரையே எனது 10 நிமிட பேச்சாக அமைந்திருந்தது. எனது பேச்சை எனது மனைவியார் டெனிஷ் நண்பர்களுக்காகவும் எம் இளம் தலைமுறையினருக்காகவும் டெனிஷ் மொழியில் மொழிபெயர்த்தார்.
இந்த அனைத்து ஓவியங்களிலும் உள்ள எளிமையும் கிராமியமணத்தின் தொகுப்புத்தான் நிலக்கிளி நாவல் என்றால் மிகையாகாது.

Sunday, March 05, 2017

மக்கள் கலைஞர் கே.எஸ். இரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு


மக்கள் கலைஞர் கே.எஸ். இரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவில் நாம் நிற்கிறோம்.  இவ்வேளையில் அரசியல்  கலை இலக்கியத் தளங்களில் இவரோடு சேர்ந்து இயங்கிய இவரது சகா எஸ். தர்மன் (ஜெர்மனி)அவர்கள், கே.எஸ். இரத்தினம் அவர்கள் இறப்பெய்தியபோது அனுப்பி வைத்த பிரிவுச் செய்தியினை பதிவேற்றுகின்றேன். 

அம்மான் என நாம் அன்பாக அழைக்கும் கே.எஸ். இரத்தினம் அவர்கள் யாழ் கொக்குவிலைச் சேர்ந்தவர். பெரியோர்களின் ஆசிர்வாதத்துடன் கன்பொல்லைக் கிராமத்தில் எனது கற்கண்டு சித்தப்பாவின் மகள் எனது சகோதரி முறையான இராசு அவர்களை திருமண பந்தத்தில் சேர்த்துக்கொண்டு பலரும் புகழ்ந்து போற்றும் வகையில் வாழ்ந்து வந்தார். திருமண பந்த வழியில் வந்தவர் நண்பனுக்கு நண்பன் போலும் மைத்துனருக்கு மைத்துனர் போலும் அன்பாக பண்பாக பழகினார். நாம் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து எல்லாக் காரியங்களையும் ஒன்று சேர்ந்து செய்வோம். அச்சூழல் காரணமாக கே.எஸ். இரத்தினம் அவர்களின் மூலம் சீனசார்பு கம்யுனிஸ்ட் கட்சியில் இணைந்து வெகுஜன இயக்க மூலம் பல சாதியப் போராட்டங்களில் பங்காற்றினோம்.  இதில் முக்கியமாக கன்பொல்லையில் சாதிவெறியர்களுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். மேலும் நானும் கே.எஸ். இரத்தினம் அவர்களும் வேறு தோழர்களோடு இணைந்தும் பல முற்போக்கான வேலைகளை செய்தோம். மக்கள் சீனத்துக்கு எதிராக அமெரிக்க எடுத்த Shoes of the Fisher men  ஆங்கிலப் படத்தினை யாழ் றீகல்  தியேட்டரில் ஓடவிடாமல் தடுத்து ஓர் தாக்குதலை நடத்தினோம். படம் திரையிடப்பட்டபோது வெளியில் கைக்குண்டு வெடிக்கவைத்து கலகம் விளைவிக்கப்பட்டபோது நாம் தியேட்டரின் திரைக்கு உள்ளேயிருந்து  கோழிமுட்டைக் கோதுக்குள் கொண்டு சென்ற பெயின்ரினை அடிக்க வேண்டும் அத்தாக்குதலை வெற்றிகரமாகச் செய்தோம். இத்தாக்குதலுக்கு தோழர் இக்பால், சலீம்,   சி.கா.செந்திவேலும் , ஆத்திசூடி நவரத்தினம்  கிளிநொச்சியினை  சேர்ந்த  தோழரும் வெளியில் நின்று செயற்பட்டனர்.  மேலும் பல முற்போக்கான வேலைகளை செய்ததோடு பல நாடகங்களையும் நடித்து மேடைகள் பல ஏற்றினோம். இப்படியாக நண்பனுக்கு நண்பன் போலும் தோழனுக்கு தோழன் போலும் இணைந்து பல காரியங்களை செய்து வந்ததினை நினைக்கும்போது  அவர் ஞாபகம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றது . அவரைப்போல் அன்பு காட்ட தோளோடு தோள்  கொடுக்க வேறு யாருமில்லை. இன்று என் கையை நழுவிப் போய்விட்டார். அவரின் சிரிப்பு, நகைச்சுவையான கதைகள், பண்பான பழக்க வழக்கங்கள். என் கண்முன் நிற்கின்றது . இனி அவரை எப்போது காண்பேன் என மனம் ஊசலாடும். தோழன் ச.தர்மன் (ஜெர்மனி).

Wednesday, February 01, 2017

தொட்டுணர்ந்த ஏழு தேவதைகள் பற்றிய கதை.

-கரவைதாசன்- 
தமயந்தியின் ஏழு  கடல் கன்னிகள்  வாசிப்பு மனநிலை!

அலை ஒதுங்கிய கரையில் விசாரணை செய்! எனும் அரசியல் கோரிக்கையுடன் விரிகிறது பக்கங்கள்.
ஓலசுண்டின் அலை ஒதுங்கிய கரையொன்றில் தானை வைத்து கடல் நுகப்பினை கணக்கிட்டு தூண்டில் எறிந்த களைப்பு தீர முன்னே வங்கு நிறைந்த மீன் அளைந்த கைகளை உப்புநீரிலேயே அலம்பிவிட்டு ஈரமான கைகளை தன் சாரத்திலே துடைத்து விட்டு உழைப்பேறி மரத்துப்போன விரல் நீட்டி அழைக்கின்றார் .  கதை சொல்ல...

மொழிகளில் யார் தேவதைகளை பிரசவித்தவர்களோ அவர்களே அறிவர், தேவதைகளை காண முடியாது, பேசமுடியாது, நுகர முடியாது,  சுவைக்க முடியாது, தொட்டுணரவும் முடியாது.

எனினும்  மாந்திரீக எதார்த்தம் செய்த காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் கதைகளிலே வருகின்ற ஒரு இருளுடனோ அல்லது இருண்ட வீட்டுடனோ அல்லது  எச்.சி. அனசனின் கதைகளில் வருகின்ற ஏதாவது ஒரு அஃறினை பொருளுடனோ உறவாடுவதுபோல் இக்கதைகளினிலே வருகின்ற தேவதைகளுடன் சிரித்துப் பேசி கும்மாளமிட்டு குதூகலிக்க  முடிகிறது, கண்டு வரத்துகள் வாங்க முடிகிறது, சேர்ந்து நுகர்ந்து சல்லாபிக்க முடிகிறது, கிள்ளி எறிந்து வாயினிலே விட்டு மென்றும் மீதியினை கொப்பளிக்கவும் முடிகின்றது. என்றால் பிள்ளைவாளும் பறையனாரும் சபையினில் விவாதம் செய்கின்றனர் என்பது போல் சமன் செய்யப்படுகின்றது . மையத்தினை உடைத்து உதைத்து உதைத்து விளிம்பினில்  வைத்து அழகு செய்யப்படுகின்றது . இது தமயந்தி என்ற கதை சொல்லியால் முடிந்திருக்கின்றது.  தமிழ் மொழியினிலே தேவதை என்ற சொல் உசத்தியானது என்ற ஆதிக்க மனோபாவத்துக்கே பட்டா ஆகிப்போயிருக்கும் மனோநிலையில் முட்டியை உசத்தி "எங்களதும்  தேவதைகள் தான்! வயல்  உனக்கு சாமி என்றால் கடல்  எனக்கு தேவதை!" இதுவும் கர்வமான ஒரு இலக்கியச் செல்நெறிதான். அவர் உருவகித்த அந்த தேவதைகள் ராட்சத இரும்பு  இயந்திரங்கள் கொண்டு உழுது கிழிக்கப்படுகின்றபோது வீசும் இரத்தவாடை, கந்தகம் விழுந்து வெடிக்கின்றபோது எழும் கரும் புகை போன்ற  சொற் கூட்டங்கள் அவரின் எழுதுகோலினால்   வரிகளில் குந்தி  இருக்கச் செய்கின்றபோது வாசிப்போரின்   கண்களை  சிவக்க வைக்கின்றார்.

Tuesday, January 31, 2017

“இரண்டாம் இடம்” (மொழியெர்ப்பு நாவல்)

-ரவீந்திரன்.பா-
வரலாறு முக்கியம் அமைச்சரே !
* * ******************************
குறிப்பு: 29.01.2017 அன்று சூரிச் "வாசிப்பும் உரையாடலும்" நிகழ்ச்சியில் உரையாடலுக்காக "இரண்டாம் இடம்" நூல் எடுக்கப்பட்டது. தோழர் யோகராஜா வினால் இந் நூல் இன்னொரு கோணத்தில் விரிவாக அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து எல்லோரினதும் உற்சாகமான உரையாடலாக விரிந்தது. அதில் நான் வைத்த கருத்துகளை கொஞ்சம் விரிவாக செழுமைப்படுத்தி இங்கு பதிவிடுகிறேன்.

மலையாள எழுத்தாளர் வாசுதேசன் நாயர் அவர்களால் எழுதப்பட்டது. குறிஞ்சிவேலன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்
மகாபாரதக் கதையின் மீதான ஓர் மறுவாசிப்பாக உருவாகிய நாவல் “இரண்டாம் இடம்”. மகாபாரதத்தில் அதன் கதைமாந்தர்கள் மீது சூட்டப்பட்ட ஒளிவட்டங்கள், புனிதங்கள் மனிதஜீவியிடமிருந்து மிதப்பாக அவர்களை நிலைநிறுத்துகிறது. இந்தப் புனிதங்களையும் ஒளிவட்டங்களையும் சிதைத்து அவர்களின் மனிதப் பாத்திரத்தை வெளிக்கொணருகிற வேலையை “இரண்டாம் இடம்” நாவல் செய்கிறது. எல்லோரும் தவறுகளோடும் சரிகளோடும் இயங்குகிற மனிதத் தளத்தில் அவர்கள் காண்பிக்கப்படுகிறார்கள்.
கிருஸ்ணன், கர்ணன், தர்மன், குந்தி... என எல்லோரினது பிம்பங்களும் மனிதக் கட்டமைப்புக்குள் இறக்கிவைக்கப்படுகிறது.
திரௌபதையின் துகிலை துச்சாதனன் உரிகிறபோது ஈஸ்ட்மென் கலரில் சீலைகள் படையெடுத்துவந்து அவன் களைத்து விழுந்ததாய், கிருஸ்ணனின் சீலைவிடலை கண்டு நிம்மதிகொண்ட வாசக மனதுக்கு மாதவிடாயுடன் இரத்தம் ஒழுக அவளது ஒற்றைச் சீலையை துச்சாதனன் இழுத்துக்கொண்டபோது ஏமாற்றமாய் இருத்தல் கூடும். சரி..ஒரு விஜய் ஒரு ரஜனி புயலாய் வருவதுபோல் வீமன் களத்தில் இறங்கமாட்டானா என நாசமாய்ப்போன இன்னொரு மனசு எதிர்பார்க்கவும்கூடும். எதுஎப்படியோ கிருஸ்ணனின் புனித பிம்பம் காணாமலே போய்விடுகிறது.