Monday, January 30, 2023

அன்று துரைராசா

அநுபவபகிர்வு....... அன்று துரைராசா சூட்டுக்கு இலக்காகி மறைந்திருந்தால் இன்று அவரின் நினைவுச் சிலையினையும் திசைமாறிய கிராமத்தின் ஒரு கிடுகுவேலி இடுக்கிநூடேதான் பார்க்க நேர்ந்திருக்கும்." என் தந்தைவழி உறவுக்காரத் தம்பி, துரை என நாமும் தான் வாழ்ந்த கொழும்புப் பகுதியில் குமார் என நன்கறியப்பட்ட அமரர் லிங்கம் துரைராசா அவர்களின் அமரத்துவச் செய்தியறிந்து என்னில் ஒரு துண்டம் இழந்ததாய் உணர்கிறேன். நானும் அவரும் எமது பகுதியில் அருகருகே வாழ்ந்து வந்தோம் என்பதை கடந்து வாழ்வின் அர்த்தங்களை புரிந்து கொண்டு எம்மை பொறுப்புடன் உருவாக்கி அசல் மனிதர்களாய் வாழ்வதற்கான முன்னெடுப்புகளை முன்செய்தோம் பாதியிலே படிப்பினை நிறுத்திய பல எமது கிராமத்து இளைஞர்களுக்கு மாலை நேர வகுப்புக்களை நடத்தினோம். திருக்கோணமலையிலிருந்து வந்திருந்த பொலிஸ் மார்க்கண்டு ராஜாஅண்ணாவிடம் மாலை நேரத்தில் ஆங்கில மொழியினை கற்றோம். இதன் தொடர்ச்சிதான் தனது பிள்ளைகளை ஆங்கில மொழிவழிக் கல்வியில் அவர் கற்பிக்கும் வழிக்கு அவரை இட்டுச் சென்றிருக்கலாம். மொத்தத்தில் கல்வியின் அவசியத்தினை உணர்ந்தவராக அவர் இருந்தார். எமது கிராமத்தின் மூத்த தலைமுறையினைச் சார்ந்த வ. தங்கமணி , க.இராசரத்தினம் , மு.தவராசா, வீ.எஸ். சிவபாதம், ஆ.சிவகுரு , ஆ.தங்கராசா இன்னும் சிலர் கிராமத்தின் கட்டுமானப் பணிகளான பாடசாலை , சனசமூகநிலையம் , கோவில்கள், சுடலை, தெருக்கள், சங்கக்கடை போன்றவற்றில் களப்பணியாற்றி அவற்றில் அபிவிருத்தியினையும் கண்டனர். இடதுசாரிகளான இவர்களிடையே ரசிய சார்பு ,சீன சார்பு எனத் துருவப்பட்ட நிலையும் இருந்து வந்தது . 1978ஆம் ஆண்டளவில் இத்துருவப்பாட்டு நிலையிலிருந்து விலகி அன்று இளைஞர்களாக இருந்த நாம் ஒரு நிலையில் நின்று உருவாக்கியதே கரவை செஞ்சுடர் விளையாட்டுக்கழகம். என்னிலும் மூன்று வயதுகள் குறைந்த துரைராசா என்னோடு வயதுகள் ஒத்த இளைஞர்களுடன் சேர்ந்து கழகத்தின் களப் பணியாற்றிய ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர் . விளையாட்டுத் துறை , மலை நேர வகுப்பு , கரவை சகாதேவன் குடியிருப்பு ஞான வைரவர் ஆலயத்துக்கு மின் இணைப்பு என பல்வேறு ஆக்கப்பணிகளில் தன்னையும் ஒருவராக இணைத்துக் கொண்டு செயற்பட்டார். வந்துபோன நாட்களில் 1982 ல் பாரதி நூற்றாண்டு விழாவினை மிகவும் சிறப்பாக செய்து முடித்தோம். குற்றப் புலனற்ற கிராமமாக அந் நாட்களில் நாம் கிராமத்தினை வழி நடத்தினோம். கிராமத்தின் வளர்ச்சி வலதுசாரிய அரசியல்காரர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அதன் உச்ச செயற்பாடாக ஆயுதாரி இயக்கங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் இரவோடு இரவாக வந்து கன்பொல்லைதியாகிகளின் சிலைகளை உடைக்க முற்பட்டனர். சத்தம் கேட்டு ஊரவர்கள் திருப்பத் தாக்கவே அவர்கள் மறைந்தோடினர். தீ.ஒ.வெகுசன அமைப்பின் ஆயுதத்துக்கு அப்போது பொறுப்பாக சி. புலேந்திரன் இருந்தார். அவர் அந்த கைத்துப்பாக்கியினை வெளிக்கொணர்ந்து சத்தவெடி வைத்தது அப்போது ஆயுதாரி இயக்கப் பொடியளை அந்நாளில் கிலிகொள்ள வைத்தது. மறு நாள் ஊரில் எதிர்ப்புக் கூட்டம் ஒன்று கூட்டப் பட்டது இதற்கு பகிரங்க எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் முடிவானது. ஆனால் எந்த நடவடிக்கையுமற்று நாட்கள் சென்றன. நானும் உலகனும் துரைராசவும் தோழர் சி.கா.செந்திவேலிடம் சென்று போராட ஆயுதம் கேட்டோம். செந்தில் தோழர் நாம் வந்த விடயம் எனது தந்தையார் தவத்துக்குத் தெரியுமா என என்னிடம் கேட்டார். தெரியாது எனச் சொல்லவே ,நீ போய் படியும் என அறிவு சொல்லி அனுப்பி வைத்தார். நல்லவேளை ஐயாவிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஆயுதத்தினை எப்படி கையாள்வதென எங்களுக்கு மூன்றுநாள் வகுப்புகள் எடுத்தார். இத்தனைக்கும் கட்சியில் நாம் அங்கத்தவர்கள் இல்லை. அவரின் பொறுப்பினை இன்றும் நினைத்து மெச்சுகிறேன். ஆனால் நாம் ஓயவில்லை எங்கள் கடைக்குள் யாருக்கும் தெரியாமல் நான், நேசன்,ரங்கன்,உலகன்,துரைராசா,ரவி, எனது மச்சான் செல்வா இவ்வளவு பேருமாக சேர்ந்து கண்டன சுவரொட்டிகளை தயார் செய்தோம். பருத்தித்துறை ,மந்திகை, வல்வெட்டித்துறை, நெல்லியடி நகரங்களில் ஒட்டிவைத்தோம். நெல்லியடி மத்தியசந்தை சுவரின் மேற்பகுதியில் நேசனும் துரைராசவும் பெரும் கண்டனப் பதாகையை ஒட்டிக்கொண்டு இருக்கும்போது நான் கீழிருந்து டோச் வெளிச்சத்தினை சுவருக்கு பாய்ச்சிக்கொண்டு இருந்தேன். நல்லவேளை ரங்கன் சந்தியிலிருந்து சமிக்கை தந்தான் ஆமியின் டிராக் வண்டி வருவதாக நான் திருமகள் ஸ்டோர்ஸ் முன் ஒழுங்கைக்குள் இறங்கினேன் செல்வா என்னை பின் தொடர்ந்தான் ஆளுக்கு ஒரு திசையாக ஓடி மறைந்தோம். வந்த டிராக் வண்டி துரைராசவையும் நேசனையும் நோக்கிச் சுடத் தொடங்கியது அவர்கள் இருவரும் கூரைக்கு தாவி பின்பக்கமாக மறைந்துவிட்டார்கள். அன்று துரைராசா சூட்டுக்கு இலக்காகி மறைந்திருந்தால் இன்று அவரின் நினைவுச் சிலையினையும் திசைமாறிய கிராமத்தின் ஒரு கிடுகுவேலி இடுக்கிநூடேதான் பார்க்க நேர்ந்திருக்கும். எங்களது கண்ணீர்ப் பூக்களை மலர்க் காணிக்கையாக சாத்தியப்படுத்திய நண்பர் திலகராஜ் உள்ளிட்ட தோழர்களுக்கு நன்றிகள்...