-சுகுணா திவாகர்-
பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் மாதமொன்றில்தான். 1949, டிசம்பர் 22 அன்று முதன்முதலாக பாபர் மசூதியில் சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக ராமர் சிலை வைக்கப்பட்டது. அந்த சம்பவத்தின் பின்னுள்ள பின்னணிகள் குறித்து விரிவாக விவரிக்கும் நூல் கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே. ஜா எழுதிய ‘அயோத்தி : இருண்ட இரவு - பாபர் மசூதிக்குள் ராமன் தோன்றிய ரகசிய வரலாறு’.
இந்தியாவின் சமூக அரசியல் வரலாற்றை பாபர் மசூதி இடிப்புக்கு முன்பு, பின்பு என்று வகைப்படுத்திக் கொள்ளலாம். 1992 டிசம்பர் 6க்குப் பிறகு இந்தியாவின் முகம் நிறையவே மாறியிருக்கிறது. இந்திய மக்களின் மனநிலையிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியில் அமர்வதற்கு பாபர் மசூதி இடிப்பும் அதனையொட்டி எழுந்த இந்துத்துவ எழுச்சியும் உதவியிருக்கிறது. இதன் எதிர்வினையாக இஸ்லாமிய இளைஞர்களில் சிலர் ஆயுதக்குழுக்களோடு இணைந்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்தியாவில் எங்கெல்லாம் இந்துத்துவ இயக்கங்கள் வலுவாக இருக்கின்றனவோ அங்குதான் இத்தகைய பயங்கரவாதக் குழுக்களின் குண்டுவெடிப்புகள் அதிகளவில் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறத்தில் இதற்குமாறாக முஸ்லீம்கள் அதிகமும் அரசியல்மயப்படுத்தப்படுவதும் நடைபெறுவது. குறிப்பாக, தமிழகத்தில் வெறுமனே மார்க்கவிஷயங்களில் மட்டும் அதிகம் கவனம் செலுத்திவந்த முஸ்லீம்களும் அவர்களது பத்திரிகைகளும் சாதி, தீண்டாமை, ஈழப்பிரச்னை போன்றவற்றிலும் கவனம் குவிப்பதும் ஒருசில புள்ளிகளில் பெரியாரிய இயக்கங்கள், தலித் அமைப்புகள், தமிழ்த்தேசிய அமைப்புகளோடு இணைந்து சில அரசியல் செயற்பாடுகளை நிகழ்த்துவதும் அதிகரித்துவருகிறது. ஊடகங்களிலும் திரைப்படங்களிலும் முஸ்லீம்கள் குறித்த எதிர்மறைப் பிம்பங்கள் கட்டமைக்கப்படுவதும் பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பொய்வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கிற அவலமும் நடைபெறுகிறது. இதன் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் மேலும் தங்களுக்குள் இறுக்கமடைவதும் தங்களுக்கான தனித்த அடையாளங்களை இறுக்கமாகக் கடைப்பிடிக்கிற சூழலும் நிலவுகிறது. இப்படிப் பல்வேறுவிதமான சமூக மாற்றங்களுக்குக் காரணமான பாபர் மசூதி பிரச்னையின் வேர் தொடங்கிய நாள், அதே பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் மாதமொன்றில்தான். 1949, டிசம்பர் 22 அன்று முதன்முதலாக பாபர் மசூதியில் சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக ராமர் சிலை வைக்கப்பட்டது. அந்த சம்பவத்தின் பின்னுள்ள பின்னணிகள் குறித்து விரிவாக விவரிக்கும் நூல் கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே. ஜா எழுதிய ‘அயோத்தி : இருண்ட இரவு - பாபர் மசூதிக்குள் ராமன் தோன்றிய ரகசிய வரலாறு’.
