Showing posts with label ஷாஜி. Show all posts
Showing posts with label ஷாஜி. Show all posts

Thursday, July 24, 2014

மதன் மோகன் மற்றும் நெளஷாத்- வெகுஜன இசையை மதிப்பிடுதல் பற்றி

-ஷாஜி-

இசையை உள்வாங்கும் கலை என்பது இசையை உருவாக்கும் கலை போலவே மேலானது. நாம் இசையைப் பயிலுவதில்லை. அதை உணர்கிறோம்.
தன்னுடைய வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின்போது லதா மங்கேஷ்கர் அவர்கள் அதுவரை பாடிய பாடல்களிலிருந்து மிகச்சிறந்த பத்து பாடல்களை தேர்வுசெய்து வெளியிட்டார். அதில் நௌஷாத்எஸ் டி பர்மன்அனில் பிஸ்வாஸ் ஆகியவர்களின் எந்தப்பாடலும் இடம் பெறவில்லை! ஆனால் அதில் சலில் சௌதுரிரோஷன், வசந்த் தேசாய் போன்றோர் இருந்தனர். அத்தொகுப்பில் இரண்டுமுறை தெரிவுசெய்யப்பட்ட ஒரே இசையமைப்பாளர் மதன் மோகன்.

இந்தி திரையுலகின் சிறந்த இசையமைப்பாளர் யார் என்று கேட்டால் மதன் மோகனின் பெயரை எத்தனைபேர் சொல்லக்கூடும்வெகுஜன மத்தியில் மிக மிக அபூர்வமாகவே அவர் குறிப்பிடப்படுகிறார். ரோஷன் பெயர் இன்னும் அபூர்வம். சூப்பர் ஹீரோ ரிதிக் ரோஷனின் தாத்தா என்றால் சிலர் நினைவுகூரக்கூடும். அதேசமயம் நௌஷாத் போன்றவர்கள் அடைந்த புகழ் மிகமிக பெரிது. அவர் மறைந்தபோது எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் அவரைப்பற்றிய பலமடங்கு பெரிதுபடுத்தப்பட்ட பிம்பம் முன்வைக்கப் பட்டதைத்தான் கண்டேன்.

திரை இசை என்பது மிகநுட்பமானது. அதே சமயம் மிகமிக பிரபலமானதும் வேகமாக மாறுவதும்கூட. ஆகவே தெளிவான திறனாய்வுகளோ கச்சிதமான மதிப்பீடுகளோ இங்கு உருவாவதில்லை. வெற்றியும் புகழும் பல்வேறு காரணங்களை ஒட்டி உருவாகி வருகின்றவை. அவ்வெற்றியின் பக்கவிளைவாக நாளிதழ்களில் மேலோட்டமாக எழுதிக்குவிக்கப்படும் கட்டுரைகள் மூலம் சில பிம்பங்கள் உருவாகி அவை விவாதிக்கப்படாமல் அப்படியே நினைவில் நிலைபெறுகின்றன. இதனால் மதிப்பீடுகளை விட பிரமைகள்தான் அதிகமும் நம்மிடம் வாழ்கின்றன.