Thursday, August 27, 2015

"எம் சமூகத்திற்குச் சாபமா? தரித்திரமா? அத்தனை விரைவில் ஓர் பெண் ஆளுமையின் இழப்பு!

-ந.சுசீந்திரன் -
சாந்தி சச்சிதானந்தம் அவர்களின் மரணச் செய்தி அதிர்ச்சியளிக்கின்றது. முதன் முதலில் நான் அவரைச் சந்தித்ததை இன்று எண்ணிப்பார்க்கிறேன். சில காலங்களுக்கு முன்னர் காலமாகிவிட்ட இன்னொரு ஆளுமைமிக்க பெண் சுனிலா அபயசேகர அவர்களது தந்தை சார்ள்ஸ் அபயசேகர, நான் கொழும்பில் நின்றிருந்த வேளை விபத்தொன்றில் காலமானார். அவரது மரணச் சடங்கில் தான் நாங்கள் பரஸ்பரம் அறிந்து கொண்டோம். அவரது கணவர் காலஞ்சென்ற மனோ ராஜசிங்கம் மற்றும் அமரர் நீலன் திருச்செல்வம் ஆகியோருடனும் அன்று தான் அறிமுகமானேன். சர்வதேசப் பரிசொன்றினைக் கையேற்க அருந்ததி ராய் அவர்கள் பெர்லின் வந்திருந்தபோது நீலன் திருச்செல்வம் அவர்களோடு தனக்கிருக்கும் நட்பினை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். அன்பும் கவர்ச்சியும் ஆளுமையுங்கொண்ட சாந்தி அவர்களுடனான நட்பில் நான் எப்பொழுதும் பெருமை கொண்டிருந்தேன்.
வாழ்க்கை பற்றிய தீவிரமான விசாரணகள் கொண்டவர். பங்கேற்பு ஜனநாயகம், பெண்விடுதலை, பெண்களின் முன்னேற்றம், மனித உரிமைகள் போன்ற விடயங்களில் முற்போக்கான கருத்துக் கொண்டிருந்ததோடில்லாமல் சிவில் சமூகச் செயற்பட்டாளராகவுமிருந்தார். சமகால அரசியல் சமூக வாழ்க்கையில் தன் அனுபங்களினூடு தனக்குச் சரியெனப் பட்டதை துணிவாக முன்வைத்துச் செயற்பட்டு வந்தவர்.
விழுது என்ற அமைப்பின் மூலம் சாந்தி அவர்கள் முன்னெடுத்த பல்வேறு திட்டங்களில் எமது மக்கள் பலனடைந்தனர். இலங்கையின் பலவேறு சமுகப்பிரச்சினைகள் தொடக்கம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஏற்படும் சவால்கள் என்பது வரை விழுது வெளியிட்ட பல பிரசுரங்கள் மிகவும் பயன்பாடானவை. நண்பர் மதுசூதனன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ”அகவிழி” என்ற ஆசிரியத்துவத்துக்கான தரமான சஞ்சிகை பலகாலம் விழுது நிறுவனத்தினராலேயே வெளிக்கொணரப்பட்டது. “இருக்கிறம்” என்ற வெகுஜன சஞ்சிகை ஒன்றினையும் ஜனரஞ்சகமாகக் கொண்டுவர முயற்சித்தனர்.

Sunday, August 16, 2015

என் மனதில் இன்றும் நிறைந்து நிற்கும் துணிச்சல் மிக்க மாணவி

-சி.மௌனகுரு-

பறை பற்றி இப்போது பலர் பேசுகிறார்கள்
இங்கு.பெண்கள் சேர்ந்து செய்த பறை முழக்கம்
ஒன்றையும் நான் இணையத் தளத்திலும் பார்த்தேன்

மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
இப் பறை வத்தியத்தை நாம் கிழக்குப் பல்கலைக் கழகத்தில்
1996இல் அறிமுகம் செய்தோம்

.இற்றைக்கு 19 வருடங்களுக்கு முன்னர்.
எமது உலக நாடக தின விழாவினை பறை முழக்கத்தோடு ஆரம்பித்தோம்.
அது முதல் படி
.களுதாவளையிலிருந்து ஆனைக்குட்டி தலைமையில் ஒரு குழு வந்து இதனச் செய்தது
இணையத் தளங்கள் சிலவற்றில் வரும் படம் அதுதான்
இவரை இங்கு கூட்டிவந்தவர் களுதவளையச் சேர்ந்தவரும்
இன்று விரிவுரையாளராயிருப்பவருமான 
அன்றைய எமது மாணவன் சிவரத்தினம்

அவரோடு சேர்ந்து எனக்கு மிகுந்தவலதுகரமாக நின்றவர்.பாலசுகுமார்
உதவியாக இருந்தவர் ஜெயசங்கர்
முதன் முதலில் பறை தூக்கி அடித்த பல்கலைக் கழக விரிவுரையாளர் பாலசுமாரே
.அதனால் அவர் பெருமை பெற்றார்
.மாணாக்கருக்கு ஒரு வ்ழிகாட்டியுமானார்.
ஒவ்வொரு ஆண்டும் பறைமேளக் கூத்துடந்தான் வட்டக் களரியில் நாடக விழா ஆரம்பமாகும்.
பின்னால் இந்தப் பறையை அவர்களைக்கொண்டு மாணாக்கருக்குப் பழக்கினோம்.
ஆரம்பத்தில் பறை பழக மாணவர்கள் தயக்கம் காட்டிய வேளைகளில் நாங்கள் அவர்களுக்கு
தமிழ் மரபிலும் தமிழ் இசை மரபிலும்
பறையின் இடம் பற்றி வரலாற்று
விளக்கமளித்ததோடு.

Thursday, August 13, 2015

'சக்தி' என்பது வெறுஞ் சொல்லா என்ன?

-சுமதி தங்கபாண்டியன்-
பிரசன்னா ராமசாமியின் "சக்திக் கூத்து" அரங்க நிகழ்வை முன்வைத்து ஒரு பகிரல்
"திரெளபதியின்துகில் போல நீண்டு
கிடக்கின்றது இந்தப் பாதை..." நிகழ்வு முடிந்தபின் அது நடந்த இரவும் கூட!
"பாலுறவின் வேட்கையும், அது முடிந்தபின் மரணத்தின் பீதியுமே மனிதனை இயக்கும் மனவிசை" எனும் ஃபிராய்டின் கூற்றை முற்றும் நம்புபவளாகவே இருந்தேன் பிரசன்னா ராமசாமியின் "சக்திக் கூத்து" அரங்க நிகழ்வை மிகச் சமீபத்தில் அனுபவிக்கும் வரை. அந் நிகழ்வின் ஊடறுத்தலுக்குப் பின் கலையே மனிதனை இயக்கும் மனவிசை என உணர்ந்து உறுதியுடையவளாயிருக்கிறேன். எவ்வளவு இழந்தாலும் வாழ்வு முழுமை கொள்வது கலையில் தான் என்பதைத் தனது 'சக்திக் கூத்தினால்' எனக்குப் பொட்டில் அடித்தாற்போலும், முலைப் பாலமுதம் போலும் சொல்லியிருக்கிறார் பிரசன்னா ராமசாமி.
கண்களும், காதுகளும் மட்டும் உள்வாங்குவதல்ல ஒரு அரங்க நிகழ்வென்பது - புலன்களின் வழி ஊடுறுவி அது ஆன்மாவைக் கத்தி முனையில் ருசிப்பது எனப் புரிய வைத்தார் பிரசன்னா அந்த 90 நிமிடங்களில். "கலை ஒரு உலக மொழி" என்பதை மெய்ப்பித்துக் கொண்டே இருந்தார்கள், இருந்தன - நடிகர்களும், உத்திகளும், ஒலி அமைப்பும், பறை இசையும்.
இந் நாடகம் பேசும் ஒரே மொழி - காலந்தோறும், திசைகள்தோறும், நிலமெங்கினும் பாதிக்கப்பட்ட, அழுத்தப்பட்ட, அடையாளமழிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெண் மொழி. நிலத்தின் வலி - குறிப்பாக நமது ஈழத்தின் மறக்கமுடியா இன அழிப்பும், தொடர் வன்முறையும், புலம்பெயர் அலைந்துழல்வு அவலத்தின் துயர்மிகு வதைகளும் ஒலிக்கும் குரல்!