Sunday, August 10, 2014

சம்ஸ்கிருத (வார)த்தை நாம் ஏன் எதிர்க்கிறோம்

- க.திருநாவுக்கரசு-
மத்திய அரசு சமீபத்தில் இந்தியைத் திணித்தார்கள். தமிழக மெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. தலையை உள்ளே இழுத்துக் கொண்டு ஏதோ சமாதானம் சொன்னார்கள். இப்போது சமஸ்கிருத வாரம் கொண்டாடும் படி மத்திய அரசுப் பள்ளிக்கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அந்தக் கொண்டாட் டத்தை ஆகஸ்ட் 7 முதல் 13-ஆம் தேதி வரை கொண்டாட வேண்டுமாம்! அந்த சுற்றறிக்கையின் தொடக்கமே எல்லா மொழிகளுக்கும் தாய் சமஸ்கிருதம் என்று எழுதப்பட்டு இருக்கிறது.
சுஷ்மா சுவராஜூம், உமா பாரதியும் சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளட்டும். அதன் மூலம் அவர்கள் கட்சிக்காரர்களும், அவர்களும் இறும்பூது எய்தட்டும். நமக்கு கவலையில்லை.
கடந்த ஜூலை 19-ஆம் தேதி இந்து ஆங்கில நாளேட்டில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதாவது பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் போலோ என்பவர் நாடாளுமன்ற சபாநாயகரான சுமித்திரா மகாஜனை சமஸ்கிருத மயமான இந்தியில், நீங்கள் உங்கள் இருக்கையில் அமர்ந்து இருக்கிறபோது கடவுளைப் போல இருக்கிறீர்கள் என்று கூறினார்.
இப்படிப் பாராட்டியபோது எல்லா உறுப்பினர்களும் நிலை குத்தி நின்று விட்டனர். அவர் பாராட்டிய அந்த மூன்று வரிகளில் சமஸ்கிருதம், இந்தி, உருது அடங்கி இருந்தது என்று இந்து தெரிவிக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட்கட்சியில் பொது வாழ்க்கையைத் தொடங்கிய போலே காங்கிரசுக்குச் சென்றார். அதன் பிறகு ராஷ்டிரிய ஜனதா தளத்தில் சேர்ந்தார். பீகார் சட்டமன்றத்தில் எட்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இப்போது பா.ஜ.க.வில் இருக்கிறார். சமஸ்கிருதத்தில் பேச முயல்கிறார். முழு பா.ஜ.க. வாக பயிற்சி எடுக்கிறார். இதிலும் நமக்குக் கவலையில்லை. சமஸ் கிருதத்தில் பேசுகிறார்கள்;

பாராட்டுகிறார்கள் என்று சொல்கிறபோதெல்லாம் எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. லியோ டால்ஸ்டாய் தம்முடைய போரும், அமைதியும் நாவலில் ஓர் இடத்தில் இரஷிய நாட்டுச் சீமான்கள் தன்னுடைய தாய்மொழியில் பேசிக்கொள்ளாமல் பிரெஞ்சு மொழியில் பேசிக்கொள்கிறார்கள் என்று குறிப்பிடுவார். பிரெஞ்சு மொழி உயிருள்ள மொழி; ஐரோப்பாவின் காதல் மொழி என்று சொல்லப்படுவது;
ஆனால், இங்கே இருக்கிற மதவாத சீமான்கள் சமஸ்கிருதத்தில் முயற்சி செய்கிறார்களே இது ஏன்? சமஸ்கிருத அறிவிப்புக்கு நாம் எதிர்க்குரல் கொடுத்தவுடன் இந்துவில் நாள்தோறும் துடிதுடிக்கும் கடிதங்கள் வெளிவருகின்றனவே, அது ஏன்?
அதற்கு முன்பாக அந்த மத்திய அரசின் சுற்றறிக்கை சமஸ்கிருதம் எல்லா மொழிகளுக்கும் தாய் என்கிறதே இது சரியா? என்பதை முதலில் பார்ப்போம்.
1) தென்னிந்தியாவில் அப்போது வாழ்ந்த திராவிடர்கள் உயர்ந்த நாகரிகத்திற்கு உரியவர்கள். அக்காலங்களில் ஒரு வேளை அவர்கள் வடக்கிலும் இருந்திருக்கலாம். அவர்களின் மொழிகள் ஆரிய சமஸ் கிருதத்தின் குழந்தைகள் அல்ல, (வழி வந்தவை அல்ல) அவை மிகப் பழம் பெரும் இலக்கியங்களை உடையவை.
.. It is clear that the Dravidans had a rich civilization then in Southern India, and perhaps also in Northern India/ Their languages which are not the daughters of the Aryan Sanskrit, are very old and have fine literatures.
- நேருவின் உலகச் சரித்திரம்.
2) நாம் நினைவிற்கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் திராவிடர் என்னும் சொல் ஒரு மூலச்சொல் அல்ல என்பதாகும். தமிழ் எனும் சொல்லின் சமஸ்கிருத வடிவமே இந்தச் சொல், தமிழ் என்னும் மூலச்சொல் முதன் முதலில் சமஸ்கிருதத்தில் இடம்பெற்றபோது தமிதா என்று உச்சரிக்கப்பட்டது. பின்னர் தமில்லா ஆகி முடிவில் திராவிடா என்று உருத்திரிந்தது. திராவிடா என்னும் சொல் ஓரின மக்களது மொழியின் பெயரே அன்றி அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை.
நாம் ஞாபகத்திற் கொள்ள வேண்டிய மூன்றாவது விஷயம், தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை. மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதன் மொழியாகவும் இருந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப் பட்டு வந்தது என்பதே ஆகும்.
உண்மையில் இந்தியாவெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டு வந்த மொழி யாகவும் திகழ்ந்தது. ஆரியர்களுக்கும், நாகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பையும், அது நாகர்களிடமும் அவர்களது மொழியிடமும் ஏற்படுத் திய தாக்கத்தையும் அடுத்தபடியாக நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
இதில் விந்தை என்னவென்றால் இந்தத் தொடர்பு வடஇந்திய நாகர்களிடம் தோற்றுவித்த விளைவிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதாகும். வட இந்தியாவிலிருந்த நாகர்கள் தங்களது தாய்மொழியான தமிழைக் கைவிட்டு விட்டு அதற்குப் பதில் சமஸ்கிருதத்தை வரித்துக் கொண்டனர். ஆனால், தென் இந்தியாவிலிருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை.
தமிழையே தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து பேணிக்காத்து வந்தனர். ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்தை அவர்கள் தங்களுடைய மொழியாக ஆக்கிக்கொள்ளவில்லை. இந்த வேறுபாட்டை மனதிற் கொண்டால் திராவிடர் என்ற பெயர் தென் இந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன்படுத்தும் படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம். திராவிடர் என்ற சொல்லை வட இந்திய நாகர்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
ஏனென்றால் திராவிடமொழியைப் பேசுவதை அவர்கள் விட்டுவிட்டனர். ஆனால் தென்இந்தியாவின் நாகர்களைப் பொறுத்த வரையில் திராவிட மொழியை தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருந்ததால் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக்கொள்வதற்கு முழுத்தகுதி பெற்றிருந்தனர்;
அது மட்டுமன்றி, வட இந்திய நாகர்கள் திராவிட மொழியைப் பயன்படுத்து வதைக் கை விட்டுவிட்டதன் காரண மாக திராவிட மொழி பேசும் ஒரே மக்கள் என்ற முறையில் தங்களைத் திராவிடர்கள் என்று அவர்கள் அழைத்துக் கொள்வது மிகமிக அவசியமாயிற்று. தென் இந்தியர்கள் திராவிடர்கள் என ஏன் அழைக்கப் படலாயினர் என்பதற்கு இதுதான் உண்மையான காரணமாகும்.
- அம்பேத்கர் தொகுப்பு - 14 (பக்கம் 94-95)
பண்டித நேரு அவர்களும் மேதை அம்பேத்கர் அவர்களும் கூறியவை களிலிருந்து தமிழும் அவற்றிலிருந்து திரிந்தவையான மொழிகளும் சமஸ் கிருதத்தின் வழிவந்தவை அல்ல. இம்மொழிகளுக்குச் சமஸ்கிருதம் தாய் இல்லை. எனவே மத்திய அரசின் பள்ளிக்கல்வி வாரிய சுற்றறிக்கை வரலாற்றுப் பதிவுகளுக்கு எதிராக இருக்கிறது என்பதை மேலே காட்டிய இருபெரு மக்களின் கூற்றுகளிலிருந்து உறுதியாகிறது.
மேற்குறிப்பிட்ட அம்பேத்கரின ஆய்விலிருந்து பல செய்திகள் கிடைக்கின்றன. சமஸ்கிருதவீச்சு மக்கள் பேசும் மொழியை அழித்து விட்டு இருக்கிறது. எனவே நாகர்கள் தம் தாய் மொழியான தமிழை இழந்து விட்டனர். இந்தியா முழுமையும் இருந்த தமிழ் காணாமல் போய் விட்டது. தமிழர்களுக்கு ஆரியர்கள் சூட்டிய பெயர் திராவிடர். அப்போது தமிழ் பேசப்பட்டதாலேயே திராவிடர் பெற்ற பெயர் நிலைத்து விட்டது. திராவிடர்கள் அந்நாட்களிலேயே சமஸ்கிருதத்தை அனுமதித்து இருந்தால் தென்இந்தியாவில் - தமிழகத்தில் தமிழ் காணாமல் போயிருக்கும் என்பவற்றை அம்பேத்கர் நமக்குச் சொல்கிறார்.
ஆகவே நாம் இந்தியை எதிர்க்கிறோம். சமஸ்கிருதத்தை எதிர்க்கிறோம். திராவிடர் இயக்கத் தந்தை டாக்டர் சி.நடேசனார் சென்னை இராஜதானியின் சட்டமன்றத்தில் சமஸ்திருதத்தை கடுமையாக விமர்சனம்செய்து பேசினார்.
பனகல் அரசர் சென்னை இராஜதானியின் முதல் அமைச்சராக இருந்தபோது மருத்துவப் படிப்புக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் எனும் தகுதியை ரத்துச் செய்தார். பெரியார் 1923 ஆம் ஆண்டு காங்கிரசில் இருக்கிற போதே திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் இந்தியை எதிர்த்தார். இவை எல்லாம் ஏன் நிகழ்ந்தன? எதற்காக நமது தலைவர்கள் அப்போதும் எதிர்த்தார்கள், இப்போதும் எதிர்க்கிறார்கள்? அதற்குக் காரணம் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா?
அறிஞர் டி.டி.கோசாம்பி கூறுவார், சமஸ்கிருத மொழி உயர்ந்த மொழி தான்! அதன் பலவீனமே வேதங்கள் சமஸ்கிருதத் தில் இருப்பதுதான் என்று! இதன் பொருள் என்ன? வேதம் என்று வந்தவுடன் இந்து மத வாழ்வியல் நெறி - வர்ணாசிரமம் வந்து விடுகிறது.
ஆகவே அதன் ஆதிக்கத்தை அனுமதிக்க மறுக்கிறோம். அன்னிபெசன்ட், காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில் காங்கிரஸ் மாநாடு சமஸ்கிருதப் பாடலோடு - வேத முழக்கத்தோடு தொடங்கப்பட் டது. அன்று முதலே இந்திய அரசியலில் சமஸ்கிருத எதிர்ப்பு தொடங்கிவிட்டது. அதனால்தான் நமது தலைவர்களில் ஒருவரான டி.எம்.நாயர் அன்னிபெசன்டை அய்ரிஷ் பிராமணி என்று கூறினார்.
தமிழ்நாட்டில் சமஸ்கிருத எதிர்ப்பு என்பது சங்க காலத்திலிருந்து இருக்கிறது. இது ஆரிய - திராவிடப் போராட்டமே! 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத - தமிழ்ப் போராட்டம் நடந்து இருக்கிறது. நீதிக்கட்சி தோன்றிய பிறகு அங்கே மாறுதல் ஏற்பட்டது.
இன்னும் சொல்வதானால் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சிவகாமி அய்யர் துணை வேந்தராக (1916 - 1918) இருந்தபோதும், 1940-களில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியும், சர்.சி.பி.இராமசாமி அய்யரும் இருந்தபோதும்  சமஸ்கிருதத்திற்கு ஆக்கந் தேடினர்.
முதலாம் இந்தி எதிர்ப்புப் போர் (1937 - 1940) மும்முரமாக இருந்த நேரத்தில் எஸ்.சத்தியமூர்த்தி சமஸ்கிருதத்தின் பெருமையைப் பேசியதோடு கொஞ்சம் முயற்சி செய்தால், சமஸ்கிருதத்தை நமக்கு அனுகூலமான வகையில் இந்தியாவினுடைய பொது மொழியாக்கிவிட முடியும் என்றார். அப்போது நாவலர் சோமசுந்தரபாரதியார், இந்திமொழியைப் பேசும் சமஸ்கிருதம் என்று சொன்னார். அதில் எல்லாச் செய்திகளும் உள்ளடக்கமாக இருக்கின்றன.
இப்படிப்பட்ட நிலைகள் எல்லாம் உருவாகும் எனக்கருதி காந்தியும் நேருவும் இந்துஸ்தானியை பொதுமொழியாக்க வேண்டும் என்று விரும்பினர். காந்தி இறுதிவரையில் அம்முடிவில் இருந்தார். ஆனால் வெற்றிபெறவில்லை. இடைக்காலஅரசின் (1946 - 52) போதே சமஸ்கிருதத்திற்கும் இந்திக்கும் மத்திய அரசு துணையாய் இருந்தது அப்போதும் நாம் எதிர்த்தோம். இப்போதும் நாம் எதிர்க்கிறோம்.
சமஸ்கிருதசொற்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு அதை தேவ நாகரியில் - அதாவது சமஸ்கிரத எழுத்துக்களில் - வரி வடிவத்தில் எழுதினால் அது இந்தி மொழியாகும். ஆகவே தான் நாவலர் சோமசுந்தரபாரதியார் இந்தியைப் பேசும் சமஸ்கிருதம் என்கிறார்.
இந்துஸ்தானியில் பாரசீக அராபிய சொற்கள் அதிகம் இருக்கும். அதனை பாரசீக வரிவத்தில் - எழுத்துகளில் எழுதினால் அது உருது. அதில் இந்தி சொற்கள் அதிகம் இருப்பதால் அது இஸ்லாமியர்களின் மொழியாகிவிடும் என்பதற்காகவே இந்துஸ்தானியை புறக்கணித்தார்கள். ஆக இந்தியும் இந்துஸ்தானியும் நமக்கு அந்நிய மொழிகளே.
நாம் மதச்சார்பின்மையாளர்கள். இந்தி ஆட்சி மொழி அந்தஸ்தில் இருக்கிறது. மக்கள் விரும்புகிற காலம்வரை இணை ஆட்சிமொழியாக ஆங்கிலம் தொடர்ந்து நீடிப்பதற்காக சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு பள்ளிகளின் வழி சமஸ்கிருதத்தைக் கொண்டாடும்படி செய்வானேன்? இப்படித் தான் 1937-இல் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாய இந்தியைத் திணித்தனர், எதிர்த்தோம். இப்போது சமஸ்கிருதத்தை அறிமுகப்படுத்தி, விழாக் கொண்டாடித் திணிக்க முயலுகிறார்கள். இந்தியைக் கற்பதற்கு சமஸ்கிருதம் துணை இருப்பதோடு அது இந்து மதத்தின் மொழியாகவும் விளங்கி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு மொழி பல மத, மொழி உள்ள நாட்டில் எப்படி அனைத்து மக்களாலும் கொண்டாடப்பட முடியும்
சமஸ்கிருதம் என்பது பார்ப்பனீயத்தின் அடையாளமாகும். அதனால் தான் சமஸ்கிருதத்தை மறைமுகமாகத் திணித்து - மத்திய அரசு பார்ப்பனீயத்தை வளர்க்கப் பார்க்கிறது. சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்து இருந்து வருகிற இந்தத் திட்டம் தொடர்ந்து படமெடுப்பதும் அடங்கிவிடுவதுமாக இருக்கிறது. பார்ப்பனீயம் என்பது குறித்து அறிஞர் தாமஸ் மாத்யூவினுடைய மேற் கோளை அம்பேத்கர் பயன்படுத்தி இருப்பதை கீழே தருகிறோம்.
பார்ப்பனீயம் என்பதற்கு நான் கொள்ளும் பொருள் பார்ப்பனர்கள் ஒரு சமூகம் என்ற வகையில் கொண்டு இருக்கும் அதிகாரம், சிறப்பு சலுகைகள், நலன்கள் என்பன அல்ல. நான் அந்தப் பொருளில் இச் சொல்லைப் பயன்படுத்துவது இல்லை. பார்ப்பனீயம் என்பதற்கு நான் கொள்ளும் பொருள் சுதந்திரம், சமத் துவம், சகோதரத்துவம் என்ற உணர் வின் மறுப்பு என்பதாகும்.
இந்தப் பொருளில் நாம் பார்த் தோமானால் பார்ப்பனீயம் என்பது எல்லா வகுப்புகளிலும் கட்டுக் கடங்காமல் இருக்கிறது. பார்ப்பனர்கள் தான் அதன் மூலகர்த்தாக்கள் என்ற போதிலும் அவர்களோடு மட்டும் அது இருப்பதில்லை. பார்ப்பனீயத்தின் விளைவுகள் என்பது கலந்துண்ணல், கலப்புத் திருமணம் போன்ற சமூக உரி மைகளை மறுப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அது குடியுரிமை களையும் மக்களுக்கு மறுத்தது. பொருளாதார வாழ்க்கையையும்கூட பாதிக்கும் அளவுக்குப் பார்ப்பனீயம் அனைத்து வல்லமை பொருந்தியதாக இருக்கிறது
இத்தகைய வல்லமை பொருந்திய பார்ப்பனீயத்தின் பின்னே இருப்பதுதான் சமஸ்கிருதம். இதனை எப்படி பொதுமக்கள் ஏற்பர்? இதனை ஏன் சமஸ்கிருத வாரம் என்று கொண்டாட வேண்டும்? அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழி களுள் சமஸ்கிருதம், உருது, இந்தி ஆகியவற்றிற்குத் தாயகங்கள் இல்லை. இருபது இலட்சம் மக்களே பேசி வந்த சிந்தி மொழியை அரசியல் சட்டம் அங்கீகாரம் செய்யவில்லை. 1967இல் தான் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்திய பெரு முதலாளிகள் பெரும் பகுதியினர் சிந்திகள் என்பதால் இது சாத்தியமா யிற்று. சமஸ்கிருதம் தேசிய மொழி என்ற அந்தஸ்தை அடைந்ததற்கு ஒரே காரணம்- அது இந்து மத மொழி என்பதுதான்! மதச் சார்பின்மை பேணும் நாட்டில் மத அடையாளமுள்ள ஒரு மொழிக்கு சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது எப்படிச் சரியாகும்?
தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன், சீனம், அரபி, பாரசீகம், ஈப்ரு ஆகிய எட்டு மொழிகளை உயர் தனிச் செம்மொழி என்று மொழி இயல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். தமிழ், சமஸ்கிருதத்திற்கு இடையே நடைபெற்றுவரும் போராட்டம் மற்ற உயர் தனிச் செம்மொழிகளுக்கிடையே இல்லையே, அது ஏன்? - என்பதை மிக ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
தமிழ் - சமஸ்கிருதப் போராட்டம் என்பது வெறும் மொழிப் போராட்டம் மட்டும் அன்று. தமிழ் சமஸ்கிருதப் போராட்டம் என்பது இன, சமய, பண்பாடு, கலாச்சாரம் பற்றிய போராட்டமாகும். மற்ற உயர் தனிச் செம்மொழிகளுக்குச் சமயம் சார்ந்த சிக்கல்கள் இருந்தன. ஆனாலும் தொடர் போராட்டம் என்று அவற்றிற்கு இடையே இல்லை. அவை ஒன்றோடு ஒன்று கலந்து விட்டன. இணைந்து உருமாறியும் விட்டன. ஆனாலும் தமிழும் அதன் பண்பாடும், கலாச்சாரமும் தனித்தன்மை உடையனவாக இருக்கின்றன.
ஆகவே தொடர் போராட்டம் நீண்ட காலமாக இங்கே நடந்து வருகிறது. நம் தாய்மொழியின் தனித் தன்மையைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். ஆகவே சமஸ்கிருதத்தையும், இந்தியையும் என்றும் எதிர்ப்போம். இல்லையென்றால் அம்பேத்கர் கூறிய நிலைதான் நமக்கும் ஏற்படும்.
ஆனாலும் மத்திய அரசு இப்போது ஒரு சுற்றறிக்கையை விட்டு சச்சரவை வேண்டு மென்றே உண்டாக்குவது சரியில்லை. இது சூத்திர மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று மேட்டுக்குடியினர் உரசிப் பார்க்கிறார்களோ என்று எண்ணும்படியாக இருக்கிறது. சூத்திரர்கள் எப்போதும் போர்க் குணத்தோடு இருப்பார்கள். மத்திய மேட்டுக்குடி ஆட்சி தேவையில்லாத சிக்கல்களை, பொருத்தம் இல்லாதவற்றை அறிவிப்பதன் மூலம் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவது நாட்டுக்கு எந்தப் பலனையும் தந்துவிடாது.
இந்தியாவில் 1500 மொழிகளுக்கு மேல் மக்களால் பேசப்பட்டு வருகிறது. அவற்றில் 22 மொழிகள் தேசிய மொழி களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் மக்களால் பேசப்படாத மொழியான சமஸ்கிருதமும் ஒன்று. தேசிய மொழிகள் அனைத்தையும் பரந்துபட்ட இந்த நாட்டில் சம நிலை யில் வைத்து எண்ண வேண்டும்.
மக்களால் பேசப்படாத மொழியான சமஸ்கிருதத்திற்கு ஒரு வார நிகழ்வாக மத்திய அரசு கொண்டாட்டத்தை அறி விக்கிறது. அதற்கு இணையான மொழி யாக இருக்கிற தமிழ் மொழிக்கும் தமிழ் வாரம் என்று மத்திய அரசு கொண்டாட முன்வருமா? வராது.
சமஸ்கிருதம் வேதமொழி; இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கிற இந்தியில் உள்ள சொற்கள் எல்லாம் சமஸ்கிருதச் சொற்கள். சமஸ்கிருத வாரக் கொண்டாட்டத்தின் மூலம் ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேசியம் என்கிற கலாச்சாரத்தை பா.ஜ.க.  அரசு உருவாக்கப் பார்க்கிறது.
காங்கிரஸ், பா.ஜ.க. இவ்விரு கட்சிகளும் மொழிக்கொள்கையில் ஒரே குரல்தான் ஓங்கி முழங்கு வார்கள். நாமோ ஆட்சிக்கோ, மதத் திற்கோ, மொழி ஆதிக்கத்தின் அடிப் படையில் அடிமைகளாக மாட்டோம். ஆகவே சமஸ்கிருதத்தையும், இந்தி யையும் என்றும் எதிர்ப்போம்; எங்களின் தனித் தன்மையை இழக்க மாட்டோம்.
நன்றி :விடுதலை

No comments: