Saturday, July 26, 2014

மனநிலை என்னவாக இருந்தாலும் அதை மாற்றக் கூடிய வல்லமை கவிதைக்கு உண்டு.

நெல்லை புத்தக விழாவில் கவிதை வாசிப்புக்கு அறிமுகமாக ஒரு சிறு கட்டுரைவாசிப்பு... 

அன்பான நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
சீரும் சிறப்புமாக நடை பெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், இந்தக் கவிதை வாசிப்பரங்கத்தில் பங்குபெறும் வாய்ப்பினைத் தந்தமைக்காக மாவட்ட நிர்வாகத்திற்கு என் வாழ்த்துகளும் அன்பும். குறிப்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கருணாகரன் அவர்களுக்கும் அவருக்கு துணையாகச் செயல் படுகிற என் அருமைச் சகோதரர் தேவேந்திரபூபதி அவர்களுக்கும் என் மனம் கனிந்த அன்பும் நன்றியும்.
நண்பர்களே, ”நினைவின் விருந்தாளியாக ஒரு கவிதை பிரவேசிக்கும்போது நம்முடைய உலகமே மாறிப்போகிறது”- என்று ஒரு மேல்நாட்டுப் பொன் மொழி ஒன்று உண்டு’. “இசைக்கு இளகாதவன் கொலையும் செய்வான்”என்று ஷேக்ஸ்பியர் சொல்லுவார். இசை எப்படி ஒருவனை மென்மையாக்குகிறதோ அதே போல் நம்முடைய மனநிலை என்னவாக இருந்தாலும் அதை மாற்றக் கூடிய வல்லமை கவிதைக்கும் உண்டு. ஒரு சம்பவம் சொல்வார்கள், வாழ்வில் விரக்தி மேலிட்டுத் தற்கொலை எண்ணம் மேலோங்கியிருந்த ஒரு பொழுதில் நண்பர் ஒருவர் தன் கையில் கிடைத்த நான்கு வரிக் கவிதை ஒன்றை வாசிக்கிறார்,

“இருந்து என்ன ஆகப்போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன ஆகப் போகிறது
இருந்து தொலையலாம்..”


என்கிற நாலு வரிக் கவிதை. இதைப் படித்ததும் அவருடைய விரக்தியான உலகமே மாறி.. அவர் தன் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டாரென்று கேள்விப்பட்டேன். இந்தக் கவிதையை எழுதியது வேறு யாருமல்ல நம்முடைய கல்யாண்ஜி அவர்கள்தான். இது கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன் என்றால், கண்ணதாசனின் ”மயக்கமா கலக்கமா , மனதிலே குழப்பமா” பாடலைக் கேட்டு தங்கள் வாழ்வை நம்பிக்கைக்குரியதாக்கிக் கொண்ட பலரைப் பற்றி நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம்.

ஆக ஒரு கவிதை அது புதுக் கவிதையோ பாடலோ சமூகம் சார்ந்து இயங்கக் கூடிய ஒன்றுதான். சமூகக் காரணிகளால் விளைந்து, சமூக விளைவுகளுக்கு காரணியாக இருப்பதே கவிதை. இங்கே பெரும்பாலும் புதுக் கவிதைகள் சார்ந்தவர்கள் இன்று கவிதை வாசிப்பிற்கு வந்திருக்கிறார்கள். இது ஒரு புது அனுபவமாயிருக்கக் கூடும். பொதுவாக புதுக்கவிதைகள் புரிவதில்லை என்று ஒரு அபிப்ராயம் இருக்கிறது.
உங்களில் என் தலைமுறையையோ எனக்கு முந்திய தலை முறையையோ சேர்ந்த பலருக்கும், நான் பயின்ற, நம்ம ஊர் சாஃப்டர் ஹைஸ்கூலில் பணிபுரிந்த தமிழாசியரான திரு ஆறுமுகம் பிள்ளை சார்வாள் பத்தி தெரிஞ்சிருக்கும். அவர் ஒருவிஷயம் சொல்லுவார், ” கவிதையில் மூனு வகை உண்டுப்பா, ”நாழிகேர பாகம்,( தேங்காய்) திராக்ஷாபாகம்,(திராட்சை) க்ஷீர பாகம்( பால்) என்று.தேங்காயை கூந்தல நீக்கி,உடைத்து, துருவிச் சாப்பிட வேண்டும். சில கவிதைகளை அணுகுவதற்கு கொஞ்சம் கடின முயற்சி எடுக்க வேண்டும்.அடுத்து திராக்ஷா பாகம் என்றால்,திராட்சைப் பழத்தை வாயில் போட்டு லேசாக கடித்து உண்பது போல் சில கவிதைகளை அணுக வேண்டும். க்ஷீர பாகம் என்றால் பால் பாலை அப்படியே சாப்பிடலாம் ,( ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிடலாம் மாதிரி.....). இதே மாதிரியான பகுப்பு சீன இலக்கியத்திலும் இருக்கிறது.அங்கே தேங்காய்க்குப் பதிலாக கரும்பு- இதைப் பிற்காலத்தில் படித்த போது எனக்கு ஆறுமுகம்பிள்ளை சார்வா நினைவு வந்தது. இப்ப அவர் நினைவு வர்றதுக்குக் கூட கவிதை சார்ந்து கவிதை போன்று அவர் சொன்ன விஷயம்தான் காரணம் என்றும் சொல்லலாம்.

ஒரு கவிதைப் பயிலரங்கத்தில் மாணவியருக்கு “இடதுகை” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி வருமாறு முதலிலேயே சொன்னேன்.நானும் எழுதி எடுத்துக்கொண்டு போனேன்.
நான் எழுதிய கவிதை
இடது கை
___________
கைகளிரண்டில் 
இடது கையை எனக்குப் பிடிக்கிறது
ஏனெனில்
இதற்கே உடலின் அந்தரங்கங்கள்
நன்கு அறிமுகம்

விளையாட்டு மும்முரத்தில்
சாக்கடையில் விழும் பம்பரங்கள்
கோலிக்காய், குச்சிக் கம்பு
எதுவானாலும் யோசியாமல்
துழாவி எடுத்து தரும்

சாமி படக் காலண்டர் மாட்ட
சுவரில் ஆணி அடிக்கையில்
அதைப் பிடித்துக் கொள்ளும்
வலது கை தப்புச் செய்தால் 
வலுவாய் சுத்தியலடி
வாங்கிக் கொள்ளும்

எனவே இரண்டு கைகளில் 
இடது புறக் கையை 
எனக்கு அதிகம் பிடிக்கும்”
( இன்னும் கொஞ்சம் வரிகளுண்டு)
இந்தக் கவிதையை நான் ஒரு பெருமிதத்தோடு எடுத்துப் போயிருந்தேன். ஆனால் அங்கே ஒரு மாணவி

“ வயலில் ஏர் உழும்போது
இடது கைதான் கலப்பையைப்
பிடிக்கிறது
வலது கை
சாட்டையையே பிடிக்கிறது”

என்று எழுதியிருந்தார். இந்த அற்புதமான வரிகளைப் படித்ததும் நான் என் கவிதையை வாசிக்கவேயில்லை. எனக்கு அந்தமாணவியின் பார்வை வர வாய்ப்பே இல்லை. ஏனெனில் நான் என்றைக்கு ஏர் பிடித்தேன், வயலில் இறங்கி வேலை பார்த்தேன். இதுதான், வாழ்க்கைதான் ஒரு படைப்பை நிர்ணயம் செய்கிறது. வாழ்க்கையிலிருந்து தான் நாம் கற்றுக் கொள்கிறோம். 

வாழ்க்கையோ பலதரப்பட்டது. அதனாலேயே கவிதைகளும் பலதரப்பட்ட வகையில் இப்போது எழுதப் பெறுகின்றன. நாம் நம் அத்தனை அனுபவங்களுடனும் ஊன்றிக் கவனித்தால் அது எளிதில் புரியும். ஒரு புதுக் கவிதையைப் பொறுத்து ஒரு பன்முக வாசிப்பு, பன்முக அணுகுமுறை (லேட்டரல் திங்கிங்) வேண்டியதிருக்கிறது..

எழுத்தாளர் நண்பர் சுஜாதாவுடன்,லேட்டரல் திங்கிங் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது ஒரு புதிர் போட்டார். ஒரு கணவனும் மனைவியும் நெடும் பயணத்தின் இடையே, இரவு ஆரம்பித்ததும், களைப்புடன் வழியிலுள்ள ஒரு மோட்டலில் தங்குகிறார்கள். 
பத்து அறைகளுள்ள ஒரு சிறிய மோட்டல். நடு இரவில் கணவனுக்கு காரில் எதையோ எடுக்க வேண்டியதிருக்கிறது. மனைவியிடம் அறையைப் பூட்டிக் கொள்ளச் சொல்லிவிட்டு வெளியே போய் எடுத்து வந்தால், அறை எண் மறந்துவிட்டது. ஒவ்வொரு அறையாகத் தட்டலாம் என்றால் மனைவிக்கு சுத்தமாகக் காது கேட்காது. மோட்டல் காவலாளியோ ரிசப்ஷனிஸ்டோ இல்லை, என்ன செய்வது புரியவில்லை. திடீரென்று ஒரு யோசனை வந்தது. கார்க்ஹோனைப் பலமாக அமுக்குகிறான். மனைவி காதுத்திறன் குறைந்தவர் என்றால் மற்றவர்களும் அப்படியா. மற்ற 9 அறைகளிலும் ஒவ்வொன்றாக விளக்கு எரிய ஆரம்பிக்கிறது. இவன் அறையில் வெளிச்சமே இல்லை. அறையக் கண்டு பிடிக்கிறான். இது ஒரு சிறிய புதிர்க்கதை. இந்த மாதிரிப் புதிர்க்கதைகள் நம்முடைய பன்முக சிந்திக்கும்திறனை வளர்க்கக் கூடியவை. 

இப்போதெல்லாம் பொதுத் தேர்வுகளில் இப்படிப்பட்ட கேள்விகளும் கேட்கிறார்கள். இதை விடக் கடினமான தர்க்கம் –லாஜிக்ஸ்- தேவைப்படக் கூடிய கேள்விகளும் கேட்கிறார்கள். இவற்றுக்கு சரியான பதில்களைக் கூறி அழகாக பணியினைப் பெற்றுவிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி யிருக்கையில் கவிதைதானா புரியாமல்ப் போய்விடும்.  என்னுடைய ஒரு சிறிய கவிதை

“ என்னை ஏற்றிக் கொண்டது
அந்தக் காகிதக் கப்பல்”

இது முதலிரு வரி... கொஞ்சம் புதிர் இருக்கிறது.
 இதில் அடுத்த இரண்டு வரிகள்,
குழந்தைகள் கிழித்திருந்தது
என் கவிதைகள் எழுதிய தாளை
*

”கஷ்டப்பட்டு
ஏறும் போது காணாமல்ப் 
போகிறது மலை.... ”

*
பூ வாடும் வரை
நாரைச் சூடிக்
கொண்டிருப்பதாய்
யாரும் நினைப்பதில்லை
*

மானின் ரத்தம்
புலி மடுவில்ப்
பாலாய்
*
யாரிடமாவது இருந்தால்
தாருங்கள்
அவசரமாய்க் கேட்டார்கள்
துழாவி எடுத்துக்
கொடுத்தேன்
பிணத்தின்
நெற்றியில் 
என் காசு’

சொல்லிக் கொண்டே போகலாம்.
”ஆரம்பித்து
முடிந்தால் அது கதை
ஆரம்பிக்காமலே
முடிந்தால் அது வாழ்க்கை”

இன்னும் கவிதைகள் வாசிக்க நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கேட்க நீங்களும் ஆர்வமாய் இருப்பீர்கள். அவர்களுக்கு வழி விட்டு வாய்ப்பிற்கு நன்றி சொல்லி நிகழ்வைத் தொடங்கலாம்.

No comments: