Showing posts with label ரச்சேல் ஹோரி. Show all posts
Showing posts with label ரச்சேல் ஹோரி. Show all posts

Wednesday, August 20, 2014

பாலஸ்தீனத்திலிருந்து அமெரிக்க பெண் ஊடகவியலாளரின் நெஞ்சையுருக்கும் இறுதிப்பதிவு

இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப் படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், ரச்சேல் ஹோரி தன் பெற்றோர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து… சில பகுதிகள்!
நான் பாலஸ்தீனத்துக்கு வந்து சரியாக இரண்டு வாரங்களும் ஒரு மணி நேரமும் ஆகி விட்டது. ஆனால் இங்கே நான் காண்பதை உங்களுக்கு விவரிக்க, அதாவது அமெரிக்காவுக்குப் புரிய  வைக்க வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன்.
குண்டுகளால் துளைக்கப்பட்ட வீட்டுச் சுவர்கள், கழுகுப் பார்வையால் கண்காணிக்கும் இராணுவம் – இவையிரண்டும் இல்லாத ஒரு வாழ்க்கையை இங்குள்ள குழந்தைகள் வாழ்ந்ததேயில்லை. இருப்பினும் “வாழ்க்கை என்பது எல்லா இடங்களிலும் இந்த மாதிரி இல்லை” என்பதை இங்குள்ள சின்னஞ்சிறு பிள்ளைகள் கூடப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
நான் இங்கே வந்து இறங்குவதற்கு இரண்டு நாட்கள் முன் ஒரு 8 வயதுச் சிறுவனை இசுரேலிய இராணுவம் சுட்டுக் கொன்று விட்டது. “அவன் பெயர் அலி” என்று என்னிடம் கிசுகிசுக்கிறார்கள் இங்குள்ள குழந்தைகள். “ஷரோன் யாரு – புஷ் யாரு” என்று அரபியில் அவர்கள் கேட்க, “ஷரோன் கிறுக்கன் – புஷ் கிறுக்கன்” என்று நானும் எனக்குத் தெரிந்த அரபு மொழியில் பதில் சொல்கிறேன். அரபு மொழியை இப்படித்தான் எனக்குக் கற்றுத் தருகிறார்கள் இந்தச் சிறுவர்கள். உலக அரசியலின் அதிகாரம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நான் முன்னர் புரிந்து வைத்திருந்ததைக் காட்டிலும் இங்கே இருக்கும் 8 வயது வாண்டுகள் தெளிவாக அறிந்திருக்கிறார்கள்.