Sunday, October 26, 2014

குண்டுச் சட்டிக்குள் குதிரையோடுவோருக்கு எல்லாமே பூச்சண்டியாகத்தான் தெரியும்

-வன்னியசிங்கம் வினோதன் -

கூத்துமீளுருவாக்கம் என்பதன் பொருள் புலப்படாது அரைகுறையாகப் புரிந்துகொண்டு கூத்துமீளுருவாக்கத்தினைத் தவறானபார்வையில் பார்க்கின்றவர்களாக எம்மில் சிலர் உள்ளனர்.

“மீளுருவாக்கம்”எனும் சொற்பதத்திற்கு தமிழில் பலஅர்த்தங்கள் காணப்படுகின்றன. மறைந்துபோன கூத்துக்களை மீளக்கொண்டு வருவது தான் கூத்துமீளுருவாக்கம் என எண்ணிக் கொண்டிருக்கின்றவர்களும் உள்ளனர்.

உண்மையில் கூத்துமீளுருவாக்கம் என்பதுஅதுவல்ல. கூத்தின் அடிப்படை அம்சங்கள் மாறாது கருத்தியல் ரீதியானமாற்றங்களைச் செய்துகொள்வதாகும். கருத்தியல் ரீதியாகஎனும் போது தற்காலத்துக்கு முரணாக அமைகின்ற விடயங்களை மாற்றியமைப்பதாகும். உதாரணமாக சாதியச் சிந்தனைகள், பெண்ணியம், சிறுவர் வன்முறைகள் போன்ற விடயங்களைக் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப தற்கால சமூகம் ஏற்றுக்கொள்ளும் வகையிலான ஓர் செயற்பாடே தவிர கூத்துக்கலையினைத் தவறானபாதைக்கு இட்டுச் செல்கின்ற செயற்பாடல்ல.

கூத்துமீளுருவாக்கம் என்பது சமகால பூகோளமயமாக்கல் எனும் ஆபத்துக்களிலிருந்து நமது சமூகங்களைப் பாதுகாக்கும் பொறிமுறைகளைக் கொண்ட ஒரு சமூதாய அரங்காக கூத்தினைஅடையாளங் காட்டி அதனை ஆய்வு அறிவியலூடாக முன்மொழிகின்றது.

கூத்துமீளுருவாக்கம் என்பது ஓர் ஆராய்ச்சி என்பதால் இதற்குகாத்திரமான சிந்தனைகள்,தேடல்கள், கூத்துக்கலைசார் அறிவு, அதுசார் செயற்பாட்டு அனுபவங்கள் என்பன இருத்தல் வேண்டும். இது எதுவுமே இல்லாது“குண்டுச் சட்டிக்குள் குதிரைஓட்டுகின்ற”சிலஅரைகுறைஅறிவுள்ளோருக்கு கூத்துமீளுருவாக்கம் என்பது பூச்சாண்டிகாட்டுவது போல்தான் இருக்கும்.

உண்மையிலே பூச்சாண்டிகாட்டுகின்ற செயற்பாடு எது வென்றால் 1960களில் கூத்தினைச் செம்மைப்படுத்துகின்றோம், மறைந்து சென்ற கூத்துக்களை மீளக் கொண்டு வருகின்றோம் எனப் பாரம்பரியமாகக் களரியில் ஆடப்பட்டு வந்த கூத்துக்களைச் சுருக்கி மேடையில் ஆடவிட்டு கூத்துக்கலையினைத் தம் ஜீவனாக நினைக்கின்ற சமூகத்தின் வயிற்றில் அடித்தார்களே, அதுவேபூச்சாண்டி காட்டுகின்ற செயற்பாடுகள்.

இன்றும் அதனை பின்பற்றி வருகின்றவர்களும்,அதுதான் தமிழர்கூத்து என நகரவாழ் மத்தியதரவர்க்கங்களுக்குப் பிரச்சாரம் செய்கின்றசிலரும்உள்ளனர். இதற்குப் பக்கப்பாட்டு பாடுகின்ற நுளம்புக் கூட்டங்கள் சிலர்நோய் பரப்புகின்ற காவிகள் போன்று செயற்படுகின்றனர். ஆனால் இவ்வாறான கவலைக்கிடமான செயற்பாடுகளை மீளுருவாக்க கூத்துக்கள் ஒருபோதும் முன்வைக்கவுமில்லை முன்வைக்கவும் மாட்டாது.
கூத்துக்கலை மறைந்தால் ,மருவிச் சென்றால்தான் அதனை மீளக்கொண்டு வரவேண்டும். மட்டக்களப்பில் கூத்துக்கலைஒருபோதும் மருவிச்செல்லவில்லை படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் ஆற்றுகை செய்யப்பட்டே வந்தன. ஏன் யுத்தகாலத்தில் அகதிகளாக இடம்பெயர்ந்து சென்றபோது கூட  அகதிமுகாம்களில் கூத்துக்கள் ஆற்றுகை செய்யப்பட்ட சரித்திரங்களும் உள்ளன.

கிராமங்களில் அன்றுதொடக்கம் இன்றுவரைக்கும் பெருவாரியான கூத்துக்கள் ஆற்றுகைசெய்யப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. சென்றவருடம் மட்டக்களப்பில் 30கூத்துக்கள் ஆற்றுகை செய்யப்பட்டன. இந்தவருடம் அதனையும் விட அதிகமாகஅரங்கேற்றம் செய்யப்பட்டன. அதிலும் நகரப்பகுதிகளிலேபெருவாரியான ஆற்றுகைகள் இடம் பெற்றன.

இதில் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர், மூன்றாவதுகண் நண்பர்கள் போன்றோரது முன்னெடுப்புக்கள் கூத்தின் வளர்ச்சிக்கு இன்னுமொரு படியாக அமைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நான்காம் வருட மாணவர்களினால் பரீட்சைக்காக மாணவர்கள்,அண்ணாவிமார்களின் பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டின் அடிப்படையில் புதிதாக மீளுருவாக்கப் பிரதிகளை உருவாக்கி முதன் முறையாக வட்டக்களரியில் மூன்றுமிகக் காத்திரமான கூத்துக்களை ஆற்றுகைச் செய்தனர். இவ்வாறெல்லாம் கூத்து ஆற்றுகைகள் சிகரம் தொடும்போது. மட்டக்களப்பில் கூத்து மறைந்து செல்கின்றது, மருவிச் செல்கின்றது என்பது முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் புதைப்பது போன்றதாகும்.

இன்று நாம் இவ்வளவுவிழிப்பாக இருக்கும்போது இவ்வாறான அப்பட்டமான பொய்யை கூறுகின்றார்கள் என்றால் 1960களில் என்னநடந்திருக்கும் என்பது சிந்திக்க வேண்டியதொரு விடயம். அன்றுதாம் கற்றகல்வியைஅதிகாரமாகக் கொண்டு கூத்தில் தன்னிச்சையான செயற்பாடுகள் மூலம் கூத்திற்கு போலியான உருவம் கொடுத்துசமூகத்தினுள் இதுதான் கூத்து எனதிணித்துள்ளனர். அன்று இதனைத் தட்டிக் கேட்கயாராவது இருந்திருந்தால் கூத்திற்கு இவ்வாறானதொருஅவலநிலைஏற்பட்டிருக்காது. இருந்தும் தற்காலத்தில் இவ்வாறான ஒரு தன்னிச்சையான செயற்பாட்டினை முன்வைக்க கூத்துச் சமூகம் ஒருபோதும் இடமளிக்காது எனஉறுதியிட்டுக் கூறுகின்றேன்.

“எல்லாக்கன்றுக்குட்டியும் ஓடுகின்றது என்றுவயிற்றுக் கண்டுக்குட்டியும் ஓடித்தாம்” இது போல எல்லோரும் கூத்துகலை சார்ந்து பேசுகின்றார்கள், எழுதுகின்றார்கள் என்று நாமும் எழுதிப் பார்ப்போம் என்றும்,தாங்கள் கலைஞர்கள்,கலை ஆர்வலர்கள்,கலைவிமர்சகர்கள், கூத்துகலை சார்ந்து கட்டுரைகள் எழுதுகின்றவர்கள் எனதங்களைசமூகத்தில் பிரபல்யம் செய்வதற்காகவே இவ்வாறான சில வயிற்றுக்கன்றுக்குட்டிகளும் ஓடுகின்றன. சமூகத்தில் தாங்கள் பிரபல்யமாகவேண்டுமானால் அதற்குஆயிரம் வழிகள் உள்ளன. அதற்காக கூத்துகலையின் வளர்ச்சிக்கும், கூத்துக் கலையை வளர்த்துச் செல்லுகின்றவர்களையும் மழுங்கடிக்கும் வகையில் குறைகண்டு தடைபோடும் வகையில் விதண்டாவாதத்திற்கு எழுதுவதும் ,பேசுவதும் மிகவும் ஈனத்தனமான செயற்பாடாகவே தென்படுகின்றது.

தோமஸ்கூன் என்கின்ற சிந்தனையாளரது கருத்தின்படி விஞ்ஞானக்கண்டுபிடிப்புக்கள்  என்பது ஆறு படிமுறைகளை கொண்டமைந்துள்ளது.  இவற்றின் அடிப்படையிலேயே விஞ்ஞானக்கண்டுபிடிப்புக்கள்  இடம்பெறுகின்றன. அவையாவன கட்டளைப்படிமம், சாதாரணகாலம், அசாதாரணதோற்றப்பாடு, நெருக்கடி,புரட்சி, புதியகட்டளைபடிமம் என்கின்ற ஆறு தடைகளையும் தாண்டி வந்தால்தான் உறுதிபெறும் என்றார்.இது விஞ்ஞானத்துறைக்கு மாத்திரமல்ல சகலதுறைகளுக்கும் ஏற்புடையதாகும். இன்றுமீளுருவாக்க கூத்துக்கள் என்கின்ற விடயம் முதல்நான்குபடிகளையும் தாண்டி புரட்சி என்கின்ற ஐந்தாவது நிலையில் உள்ளது. வெகுவிரைவில் ஒட்டு மொத்த மட்டக்களப்பு சமூகமும் ஏற்றுக்கொண்ட “புதியகட்டளைப்படிமமாக” நிருபிக்கப்படும். என்பதில் எவ்விதமாற்றங்களும் இல்லை.

நன்றி :battinews

                 

No comments: