-அபிலாஷ் சந்திரன்-
சாகித்ய அகாதமியின் சார்பில் இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் யுவ புரஸ்கார் விருதுக்கு, 21 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், கால்கள் என்ற படைப்புக்காக, எழுத்தாளர் .அபிலாஷும் இடம்பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளிப் பெண்ணின் வாழ்க்கையைச் சொல்கிறது கால்கள் நாவல். உயிர்மை பதிப்பகம் இந்நாவலை 2012ல் வெளியிட்டது. விருது பற்றி அபிலாஷ் பேசும்போது, ‘இளம்படைப்பாளிகள் வெகுஜென கவனம் பெற இதுபோன்ற விருதுகள் உதவும்’ என்று தெரிவித்தார். அபிலாஷ் ஆங்கில இலக்கியத்தில் ஆய்வு பட்ட மாணவர். நாவலோடு கவிதை, கட்டுரைகள் என பல தளங்களில் எழுதிவருகிறார்.
இவ்வருடத்திற்கான சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது தமிழில் எனக்கு “கால்கள்” நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது.
நான் பெறும் முதல் விருது இது. ஒருவேளை கனவோ என அரைநாள் யோசித்துக் கொண்டிருந்தேன். யாராவது என்னை வைத்து வேடிக்கை பண்ணுகிறார்களோ என சஞ்சலம் தோன்றியது. பிறகு மெல்ல மெல்ல என்னையே நான் நம்ப வைத்தேன்..
இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் சில முக்கிய சம்பவங்களை, நபர்களை நினைத்துப் பார்க்க விரும்புகிறேன்.
ஒன்று தக்கலை கலை இலக்கிய பெருமன்றம். அது தான் என் இலக்கியப் பள்ளி. பதினான்கு வயதில் கணக்கு டியூசனுக்காக ஹமீம் முஸ்தபாவின் புத்தகக்கடையின் ஒரு பகுதியாக இருந்த வகுப்புக்கு போய்க் கொண்டிருந்தேன். முஸ்தபா அப்படித் தான் நண்பரானார். ஒருநாள் மாலையில் அங்கு மாலையில் நடக்கும் கலை இலக்கிய பெருமன்ற கூட்டத்தில் எதேச்சையாக பங்கேற்றேன். எந்த இலக்குமின்றி வாழ்வில் பிடிப்பின்றி இருந்த காலகட்டம் அது. இந்த கூட்டங்கள் வழி நிறைய நல்ல நண்பர்கள் வாய்த்தார்கள். அந்த வயதில் பொன்னீலன், என்.டி ராஜ்குமார், நட.சிவகுமார், ரசூல் போன்ற எழுத்தாளர்கள், அனந்தசுப்பிரமணியம், சொக்கலிங்கம் போன்ற கோட்பாட்டாளர்கள் வழி இலக்கியம், கோட்பாடுகளை அறியக் கிடைத்தது ஒரு பெரும் அதிர்ஷ்டம்.
