Thursday, August 22, 2013

வெகுசனப்போரளி நரேந்திர தபோல்கர் அவர்களுக்கு அஞ்சலி

 -கரவைதாசன் -
பொருள் முதல், கருத்து முதல் என்று எதையோ வைப்பைவர்களுக்கிடையே சீரான முறையில் மக்களை சிந்திக்க வைத்து வாழ்ந்து மறைந்த ஒரு சமகால அற்புதம்

 நரேந்திர தபோல்கர் கடந்த செவ்வாய் கிழமை 20.8.13  காலை புனே ஓம்கரேஷ்வர் பாலம் அருகில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள், அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் தலையிலும் நெஞ்சிலும் குண்டு பாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

நரேந்திர தபோல்கர் அவர்கள் பகுத்தறிவாளர், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான முற்போக்கு சிந்தனையாளர், சமூக ஆர்வலர் , முன்னாள் தேசிய விளையாட்டு வீரர் (கபடி), மருத்துவர், எழுத்தாளர் வெகுசனப்போரளி அறுபத்தி ஏழு வயதில் வாழும் காலத்திலேயே  அவர் வாழ்வு பறிக்கப்பட்டுள்ளது.

தபோல்கர் கொலை செய்யப்பட்டதையடுத்து அவரது சொந்த ஊரான சடாராவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் அவரது வீட்டில் திரண்டனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர். இதையொட்டி அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.


மகாராஸ்டியின் சிந்துதாத் மாவட்டத்தில் தாப்கோலி என்னும் குக்கிராமத்தில் அஜ்யுட் தாராபாய் தம்பதிகளின் பத்தாவது கடைசி மகனாக நரேந்திர தபோல்கர் அவர்கள்   கார்த்திகை மாதம் முதலாந்திகதி ஆயிரத்திதொளாயிரத்தி நாற்பத்தி ஐந்தாம் ஆண்டு  பிறந்தவர். 

இவரது தந்தையாரும் பகுத்தறிவாளர் ஆவர். மூத்த தமையனார் சிறந்த கல்வியாளர்.  தொழில்ரீதியாக  மருத்துவரான  நரேந்திர தபோல்கர் அவர்கள். பகுத்தறிவுப் போராளியான சைலா அவர்களை  மணம் புரிந்தார். இவர்களுக்கு கமித்,முக்தா என இரு பிள்ளைகள். 

1980 லிருந்து வெகுசன முற்போக்குச் செயற்பாட்டில்     தீவிரமாக செயல்பட்டு வந்த     நரேந்திர தபோல்கர் அவர்கள் முதலில்  1989களில் மராட்டிய அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி என்ற மூட நம்பிக்கை எதிர்ப்பு இயக்க நிறுவனத்தினை நிறுவினார். முதலாளித்து அமைப்பில் அதன் அசைவின்  இயங்குதலுக்காக சங்கிலிப் பின்னலாக கொழுவி வைக்கப்பட்டிருக்கும் மதம்,சாதி,பால்,நிறம் தொடரின் அடிப்படை மூடத்தினை தகர்க்க வலுவான பலவீனத்தினை கண்டறிந்து மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அவரை ஒத்த தோழர்களுடன் சேர்ந்து தீவிரமாக இயங்கினார். இதுவரையில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக இவரால் சுமார் மூவாயிரம் கருத்தரங்குகள். நடத்தப்பட்டிருக்கின்றன.

Tuesday, August 13, 2013

இலங்கை: வடமாகாணத்தேர்தலும் 13வது சட்டத்திருத்தமும்

-அ.மார்க்ஸ்- 

(இலங்கையின் அரசியல் சட்ட வரலாற்றில் முதன் முதலாக Unitary State என்பதற்கு மாற்றாக unitary வடிவத்திற்குள் மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குதல் என்கிற கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்ட அரசியல் சட்ட வடிவம் 13வது திருத்தம். ஆனால் இத் திருத்ததின் மூலம் வழங்கப்படும் மாகாண அதிகாரங்கள் எத்தனை அபத்தமானவை என்பதை இக்கட்டுரை விரிவாக அலசுகிறது. இந்த 13வது திருத்தத்தையும் நீர்க்கச் செய்ய இலங்கை அரசு முயற்சித்து வரும் சூழலில், இத் திருத்தத்தின் அடிப்படையில் வட மாகாணத்தில் நடத்தப்படும் தேர்தல் தமிழர்களுக்கு எந்த அரசியல் அதிகாரத்தையும் உண்மையில் அளிக்கப் போவதில்லை என்றாலும், இன்றைய சூழலில் இந்தத் தேர்தலில் தமிழர் கட்சிகள் பங்கேற்பது அரசியலதிகாரத்தை நோக்கிய போராட்டத்திகான ஒரு வலுவான தளத்தை ஏற்படுத்தித் தரும், அந்த வகையில் தேர்தலில் பங்கேற்பது என தமிழர் அரசியல் கட்சிகள் எடுத்துள்ள முடிவு சரியானதே என வாதிடுகிறது இக் கட்டுரை)
த.தே.கூ தலைவர்கள்
த.தே.கூ தலைவர்கள்



இலங்கையில் வடமாகாணத்திற்கான தேர்தல் வரும் செப்டம்பரில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளைத் துவங்கிவிட்டன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளது. அவரும் தொடக்க மறுப்புகளுக்குப் பின் அதை ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஜூலை 27,1987 அன்று இயற்றப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடியாக நவம்பர் 14,1987 அன்று இலங்கைப் பாராளுமன்றம் இயற்றிய 13வது சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் 26 ஆண்டுகளுக்குப் பின் இப்போது ஈழத் தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசமான வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடக்கப் போகிறது. இடையில் என்னென்னவோ நடந்துவிட்டன. ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ராஜிவ் காந்தி, ஜெயவர்த்தனா இருவரும் இப்போது இல்லை. விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு நான்காண்டுகள் ஓடிவிட்டன.

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போதுகூட வட மாகாணத் தேர்தல் குறித்த முறையான அறிவிப்பு எதையும் ராஜபக்‌ஷே அரசு வெளியிடவில்லை. ஏதாவது ஒரு காரணம் சொல்லித் தேர்தலை ரத்து செய்வதுதான் இலங்கை அரசின் நோக்கமாக இருக்கிறது. தேர்தல் நடந்தால் நிச்சயமாக இங்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (த.தே.கூ) வெற்றி பெறும். இலங்கையின் ஒரு  மூலையில் கூட ராஜபக்‌ஷே குடும்பத்திற்கு விசுவாசமாக இல்லாத ஒரு அரசு வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர் சகோதர்கள். பாதுகாப்புச் செயலர் கோத்தபயா, ”இன்னும் தனி நாட்டுக் கோரிக்கையை வைத்துக் கொண்டுள்ள ஒரு கட்சியிடம் (அதாவது த.தே.கூ) காவல் அதிகாரத்துடன் கூடிய அரசைக் கையளிக்க இயலாது” என வெளிப்படையாகக் கூறியுள்ளார் (மே23, 2013).