Sunday, August 24, 2014

யுவபுரஸ்கார் விருதினை ஒட்டி சில எண்ணங்கள்

-அபிலாஷ் சந்திரன்-
சாகித்ய அகாதமியின் சார்பில் இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் யுவ புரஸ்கார் விருதுக்கு, 21 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், கால்கள் என்ற படைப்புக்காக, எழுத்தாளர் .அபிலாஷும் இடம்பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளிப் பெண்ணின் வாழ்க்கையைச் சொல்கிறது கால்கள் நாவல். உயிர்மை பதிப்பகம் இந்நாவலை 2012ல் வெளியிட்டது. விருது பற்றி அபிலாஷ் பேசும்போது, ‘இளம்படைப்பாளிகள் வெகுஜென கவனம் பெற இதுபோன்ற விருதுகள் உதவும்’ என்று தெரிவித்தார். அபிலாஷ் ஆங்கில இலக்கியத்தில் ஆய்வு பட்ட மாணவர். நாவலோடு கவிதை, கட்டுரைகள் என பல தளங்களில் எழுதிவருகிறார்.
இவ்வருடத்திற்கான சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது தமிழில் எனக்கு “கால்கள்” நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது.
நான் பெறும் முதல் விருது இது. ஒருவேளை கனவோ என அரைநாள் யோசித்துக் கொண்டிருந்தேன். யாராவது என்னை வைத்து வேடிக்கை பண்ணுகிறார்களோ என சஞ்சலம் தோன்றியது. பிறகு மெல்ல மெல்ல என்னையே நான் நம்ப வைத்தேன்..
இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் சில முக்கிய சம்பவங்களை, நபர்களை நினைத்துப் பார்க்க விரும்புகிறேன்.

ஒன்று தக்கலை கலை இலக்கிய பெருமன்றம். அது தான் என் இலக்கியப் பள்ளி. பதினான்கு வயதில் கணக்கு டியூசனுக்காக ஹமீம் முஸ்தபாவின் புத்தகக்கடையின் ஒரு பகுதியாக இருந்த வகுப்புக்கு போய்க் கொண்டிருந்தேன். முஸ்தபா அப்படித் தான் நண்பரானார். ஒருநாள் மாலையில் அங்கு மாலையில் நடக்கும் கலை இலக்கிய பெருமன்ற கூட்டத்தில் எதேச்சையாக பங்கேற்றேன். எந்த இலக்குமின்றி வாழ்வில் பிடிப்பின்றி இருந்த காலகட்டம் அது. இந்த கூட்டங்கள் வழி நிறைய நல்ல நண்பர்கள் வாய்த்தார்கள். அந்த வயதில் பொன்னீலன், என்.டி ராஜ்குமார், நட.சிவகுமார், ரசூல் போன்ற எழுத்தாளர்கள், அனந்தசுப்பிரமணியம், சொக்கலிங்கம் போன்ற கோட்பாட்டாளர்கள் வழி இலக்கியம், கோட்பாடுகளை அறியக் கிடைத்தது ஒரு பெரும் அதிர்ஷ்டம்.
இது இன்றுள்ள பல நகர்ப்புற இளைஞர்களுக்கு வாய்த்திராத ஒன்று. மன்றத்து தோழர்கள் என்னுடைய ஒரு குடும்பமாக மாறினார்கள். இந்த தொடர்பு எனக்கு ஒரு புதுப்பாதையை திறந்து விட்டது. தீவிர இலக்கிய நூல்கள், சிறுபத்திரிகைகள், கோட்பாடுகள் என பதினேழு வயதுக்குள் நான் அறிந்து கொண்டவை என்னை முற்றிலும் மாற்றின. அங்கு தான் தமிழ் நவீன இலக்கியம் அறிமுகமானது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூட்டம் நடக்கும். ஜனநாயகபூர்வமான கூட்டங்கள் அவை. யாரும் பேசலாம். எதையும் விவாதிக்கலாம். தமிழில் வெளியாகும் முக்கிய நூல்களை அறிமுகப்படுத்தி பேசுவார்கள். கவிதை கட்டுரை வாசிப்பார்கள். அங்கு பேசுவதற்காக ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு நூலை படித்து விடுவேன். என் முதல் கவிதை நூல் அங்கு ஒரு சின்ன அறையில் வெளியிடப்பட்டது, அனந்து அண்ணன் அதன் குறைகளைப் பற்றி மிக கராறாய் விமர்சனம் செய்தது, பிறகு மன்றத்தினர் ஒவ்வொருவரும் பணம் தந்து நூல் பிரதிகளை வாங்கி என்னை பாராட்டியது நினைவுள்ளது. என்னைப் பொறுத்தவரை அது தான் கச்சிதமான இலக்கிய கூட்டம். இன்று இந்த இரு குணங்களும் நம் தளுக்கான சென்னைக் கூட்டங்களில் இல்லை: கராறான விமர்சனம், புத்தகத்தை வாங்குவது. நல்லதோ கெட்டதோ எந்த புத்தகத்தை பற்றியும் டேபிள் மேட் விளம்பரம் போல் மேடையில் புகழ்ந்து விட்டு அடுத்த நொடி எல்லாரும் அதை மறந்து விட்டு போய் விடுகிறோம்.
கலை இலக்கிய பெருமன்ற நண்பர்களிடையே ஒரு லட்சியவாதம் இருந்தது. தாம் படிப்பதும் எழுதுவதும் ஒரு முக்கிய சமூக பங்களிப்பு என நம்பினார்கள். வழக்கமான எழுத்தாள கூட்டங்களில் உள்ள ஈகோ புழுக்கம் அவர்களிடத்து இல்லை. இன்று தமிழ் எழுத்துலகில் லட்சியவாதம் நீர்த்து சுயமையவாதம் நம்மை பீடித்திருக்கும் நிலையில் நான் அந்த நாட்களை தான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். எழுத்தாளன் எழுதி எதையும் அடைய வேண்டியவனல்ல, சமூகத்துக்கு பங்களிக்க வேண்டியவன் என நம்புகிறேன். மன்றத்தில் விவாதிக்கப்பட்ட பல அரசியல் சமூக கருத்துக்கள் என்னுள் ஆழமாய் பதிந்துள்ளதை பதினைந்து வருடங்களுக்கு பின் என்னுடைய சிந்தனைகளை கவனிக்கையில் உணர்கிறேன்.

அந்த பத்து வருடங்கள் நான் எழுத துணியவில்லை. வாசித்து அறிவதும் விவாதிப்பதும் போதும் என நம்பினேன். அன்று கவனித்தவை தான் இன்று எனக்குள் மதிப்பீடுகளாய் உருவாகி உள்ளன. எழுத துவங்கும் போது உண்மையில் நம் வாசிப்பும் கவனிப்பும் குறைகிறது. ஏனென்றால் எழுத்தே ஒரு தனி வேலை. சும்மா இலக்கியத்தையும் கூட்டங்களையும் கவனித்த அந்த காலகட்டம் முக்கியமான ஒன்றாக இன்று தோன்றுகிறது. அன்று அந்த கணக்கு டியூசனுக்காக முஸ்தபாவின் கடைக்கு செல்லாவிட்டால் நான் வேறு ஏதேனும் வகையில் இலக்கியம் அறிந்து கொண்டிருப்பேன். ஆனால் இப்படியாக இருக்க மாட்டேன்.

எனக்கு பதினாலு வயதிருக்கும் போது எஸ்.ராவின்தாவரங்களின் உரையாடல்” மற்றும் கோணங்கியின்பட்டாம்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்” சிறுகதைத் தொகுப்புகள் படித்தேன். அதிலுள்ள மிகுபுனைவு உலகும் மாந்திரிக எதார்த்தமும் மயங்க செய்தன. அந்த மொழி தான் என்னை முதன்முதலாக புனைவு எழுத தூண்டியது. எஸ்.ராவும் கோணங்கியும் ஒரு புது மொழியை நுண்ணுணர்வை தமிழுக்கு கொண்டு வரா விட்டால் நான் எழுத்தாளன் ஆகியிருக்க மாட்டேன். இன்று காலை எஸ்.ரா போனில் அழைத்து வாழ்த்து சொன்ன போது இதை சொன்னேன். உண்மையில் எஸ்.ராவின் வாழ்த்து யுவ புரஸ்காரை விட பெரிய விருது.

அதே பதினான்கு வயதில் தான் நான் எதேச்சையாக முஸ்தபாவின் கடையில் வைத்து ஜெயமோகனை சந்தித்தேன். அதைத் தொடர்ந்து அக்காலத்தில் அவரிடம் நிறைய பேசி இருக்கிறேன். அவருடைய ரசனை கொஞ்சம் இன்றும் என் வாசிப்பு தேர்வில், மதிப்பீடுகளில் உள்ளது. அதை விட முக்கியமாக அவரது தீவிரத்தன்மை, வாசிப்பிலும் எழுத்திலும் கொண்டுள்ள சிரத்தை, அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. எழுத்தாளன் பலதரப்பட்ட விசயங்களில் ஆர்வம் கொண்டவனாய் இருக்க வேண்டும் என அவரைப் பார்த்து நினைத்தேன். அவரது அரசியலை தவிர்த்து பார்த்தால் ஜெ.மோ ஒரு இளம் எழுத்தாளனுக்கு சிறந்த முன்னோடி தான். அவரைப் போல் மற்றொரு நல்ல முன்னோடி என எஸ்.ராவையும் சொல்லலாம். ஜெ.மோவிடம் முரண்பட்டிருக்கிறேன். அவரும் என்னை திட்டியிருக்கிறார். என்னுடனான உறவை துண்டித்தார். பின்னர் நான் உடல் நலமற்று மீண்டு வந்த போது தன் அன்பைத் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பினார். அவர் குறித்த விமர்சனங்கள் எனக்கு உண்டு. ஆனாலும் அவரும் பிற ஆளுமைகளும் உருவாக்கின மொழியில் தான் இயங்குகிறேன் என்பதை என்றும் உணர்கிறேன்.
2006இல் என நினைக்கிறேன். ஜெயமோகனை சென்னை புத்தகக் கண்காட்சியின் போது பார்த்தேன். என்ன எழுதுகிறாய் எனக் கேட்டார். “அவ்வப்போது சில கவிதைகள்” என்றேன். கவிஞனாய் இருப்பது சோம்பல் மிக்கவர்களுக்கு ஏற்றது என்பது போல் பதில் கூறினார். அது போல் தமிழினி வசந்தகுமாரை சந்தித்த கசப்பான அனுபவமும் எனக்குள் எதையோ தூண்டி விட்டது. நான் அன்று வீட்டுக்கு போன பின் ரொம்ப நேரம் யோசித்தேன். அடுத்த கண்காட்சிக்குள் என் அடையாளத்தை பதிக்கும் படியாய் ஒரு புத்தகமாவது கோண்டு வர வேண்டும் என உறுதி கொண்டேன். ஆனால் அப்படி ஒன்றும் செய்ய வில்லை. எழுத்து வாசகனுடனான உரையாடல். அது நிகழ்கிறது, நாம் நிகழ்த்த முடியாது. பிறகு ஒன்றிரண்டு வருடங்களில் மனுஷ்யபுத்திரன் “உயிரோசை” கொண்டு வந்த போது தான் இதை புரிந்து கொண்டேன். வாசகனுடனான என் உரையாடல் துவங்கியது. எழுத்துக்கு ஒரு மன ஒழுங்கு தேவையுள்ளது. காலக்கெடுவிற்கு எதையும் எழுதுகிற ஒரு தன்னம்பிக்கையும் ஒழுங்கும் “உயிரோசையில்” எழுதினதால் தான் ஏற்பட்டது. அந்த நிகழ்வு என் எழுத்தில் செலுத்திய தாக்கத்தை பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். நிறையவும் தொடர்ந்தும் எழுதத் தூண்டினார் மனுஷ்யபுத்திரன். வாரம் ஒரு கட்டுரை, அதுவும் ஏதாவது ஒரு புது தலைப்பில் தேடி ஆய்வு செய்து. இது பின்னர் நாவல் எழுத மிகவும் பயன்பட்டது. அவர் “உயிரோசை” ஆரம்பித்திருக்காவிட்டால், நான் அவரை அக்காலத்தில் சந்தித்திராவிட்டால் இப்போது அவ்வப்போது வெறும் கவிதைகள் மட்டும் எழுதிக் கொண்டிருப்பேன். அது ஒன்றும் மோசமானதல்ல இது ஒன்று மேலானதல்ல. இப்படி இருந்திருக்க மாட்டேன் என சொல்கிறேன். 


எனக்குள் ஒரு எழுத்து எந்திரம் 28 வயது வரை தூங்கிக் கொண்டிருந்தது. மனுஷ்யபுத்திரன் இருட்டில் அதன் ஸ்விட்சை எப்படியோ தப்பி அடைந்து ஆன் செய்து விட்டார். இன்றும் முழுவேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. “உயிரோசை” ஆரம்பித்த புதிதில் நான் எழுதும் ஒவ்வொரு கட்டுரைக்கும் தனியாக போன் செய்து நிறைய நேரம் பாராட்டுவார். வேறெந்த பத்திரிகை ஆசிரியராவது இப்படி செய்வாரா என தெரியாது. பின்னர் எப்போதோ “உயிர்மையிலும்” எழுத தொடங்கினேன். அவர் என்னை வற்புறுத்தி எழுத செய்த பல கட்டுரைகள் வாசகர்களிடம் பாராட்டு பெற்றிருக்கின்றன. மனுஷ்யபுத்திரனுக்கு என் எழுத்து மீது ஒரு தனி அக்கறை இருந்திருக்கிறது. தன்னிலைக் கட்டுரைகளை அதிகம் எழுதாதீர்கள் என ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு முக்கிய அறிவுரை சொன்னார். அது எனக்கு பின்னர் ரொம்பவும் பயன்பட்டது. எழுதுவது ஒரு வேலை, அதில் மாயாஜாலம் ஒன்றும் இல்லை. நிறைய உழைக்க வேண்டும். உழைக்க உழைக்க தான் எழுத்தாளன் உருவாகிறான் என புரிய வைத்தார். தான் ஒரு “தொழில்முறை” எழுத்தாளன் என ஒரு குறிப்பில் முன்னர் பிரகடனம் செய்தார். அதை ஒட்டி ஆடிக்கு அமாவாசைக்கு ஒருமுறை எழுதுவது எழுத்தல்ல என வலியுறுத்துவார். அவரைப் சந்தித்து பேசி வரும் ஒவ்வொரு முறையும் உற்சாகத்தில் உத்வேகத்தில் எழுத்தாளனாய் கால் அங்குலம் வளர்வேன். எழுத்து மட்டுமல்ல வாழ்க்கையும் கலை தான். அவ்விசயத்தில் அவரை உற்று கவனித்து நிறைய கற்றிருக்கிறேன். 2008இல் நான் அனுப்பின கட்டுரை ஒன்றை படித்து விட்டு “எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளராய் வருவீர்கள்” என ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். அவர் லேசில் பாராட்ட மாட்டார் என்பதால் அந்த குறுஞ்செய்தியை இன்னும் சேமித்து வைத்திருக்கிறேன்.

நண்பர் முஸ்தபா என் மீது ஏதோ ஒரு விநோத நம்பிக்கை வைத்திருந்தார். அவர் “புதிய காற்று” என ஒரு பத்திரிகை ஆரம்பித்தார். என்னை வீட்டுக்கு வந்து அதில் எழுத கேட்டார். அப்போது நான் சில கவிதைகள் தவிர உருப்படியாய் ஒரு வரி எழுதினதில்லை. அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் தூண்டுதலில் தான் ஆலன் ஸ்பென்ஸின் Seasons of the Heartநூலில் இருந்து சில கவிதைகளை மொழியாக்கி கொடுத்தேன். பிறகு நான் சென்னை வந்தேன். அவர் எப்போது சென்னை வந்தாலும் என்னை வந்து சந்திப்பார். எழுதத் தூண்டுவார். அவருடைய நம்பிக்கைக்கும் அன்புக்கும் என்றும் கடன்பட்டிருக்கிறேன்.
2011இல் நான் உயிருக்கு போராடி கோமாவில் இருந்தேன். அப்போது என்னை பரிசோதித்து சிகிச்சை அளித்த பல டாக்டர்களில் பரணிதரனும் ஒருவர். என் பிரச்சனையை அவர் தான் சரியாக கண்டறிந்தார். பிறகு இது வரை என் உடல்நிலை சீராகவே உள்ளதில் அவருக்கு முக்கிய பங்குள்ளது. ஒரு விதத்தில் கடந்த மூன்று வருடங்கள் மரணத்திடம் இருந்து கடன் வாங்கி அவர் எனக்கு அளித்த அவகாசம் தான். அன்று அந்த மருத்துவமனையில் அவர் இல்லா விட்டால் இன்று இதைக் கூற நானும் இல்லை.
எழுத்தாளனை சமூகம் உதாசீனிக்கிறது என்றால் ஒத்துக் கொள்ள மாட்டேன். வெகுஜன பத்திரிகை எடிட்டர்களை தவிர அத்தனை பேரும் எழுத்தாளனை மதிக்கிறார்கள். மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த போது மருத்துவர்கள், செவிலிகள் நான் எழுத்தாளன் என என் அக்கா சொன்னதை ஒட்டி என்னிடம் வந்து ஆர்வமாய் விசாரிப்பார்கள். பொதுவாக நான் பார்த்ததில் மருத்துவர்களுக்கு எழுத்தாளன் மீது பெரும் மரியாதை உள்ளது. நான் வேலை பார்த்த கல்லூரிகளில் கூட வேலை பார்த்தவர்களும் சரி முதல்வர்களும் சரி எழுத்தாளன் என்பதற்காக எனக்கு தேவைக்கதிகமான அன்பையும் மரியாதையும் அளித்தார்கள். என் புத்தகங்களை வாங்கி நூலகத்தில் வைத்தார்கள். இதையெல்லாம் நான் கேட்காமலே செய்தார்கள். இவர்களுக்கு என் அன்பை தெரிவிக்கிறேன்.
என் முனைவர் பட்ட ஆய்வின் நெறியாளர் அழகரசன் கீழ் ஆய்வு செய்ய ஏற்கனவே ஒரு நீண்ட கியூ இருந்தது. அவருக்கு என்னை முன்பின் தெரியாது. ஆனால் நான் எழுத்தாளன் எனும் காரணத்தினால் கியூவை உடைத்து தான் எனக்கு சீட் கொடுத்தார். பல்கலையில் கடந்த இரு வருடங்களும் கால எந்திரத்தில் ஏறி பதினாலு வருடங்களுக்கு முன்னால் இருந்த கலை இலக்கிய பெருமன்ற சூழலுக்கு போன உணர்வை தந்தன. ஒரு புத்தகங்கள் மீதான காதலும், ஒரு உயர்ந்த பண்பாடும் பரஸ்பர மரியாதையும் அங்குள்ளவர்களிடம் உள்ளது. அது ஒரு கல்விப்புலமாக அல்ல ஒரு சிறுபத்திரிகை முகாமாகவே எனக்கு தோன்றுகிறது. 

பேராசிரியர் அழகரசன் “நிறப்பிரிகை”, “ஊடகம்” பத்திரிகைகளில் தீவிரமாய் பங்கெடுத்தவர். நம் உலகை சேர்ந்தவர். அவர் ஒரு நெறியாளராக மட்டும் அல்ல ஒரு இலக்கிய சீனியராகவும் தான் தோன்றுகிறார். சிறுபத்திரிகைகள், கோட்பாடுகள், வெவ்வேறு ஜாலியான விசயங்கள் என உரையாடல்கள் போகும். என் ஆய்வுப்புலமும் தமிழ் நவீன இலக்கியம் என்பதால் அங்கு விடுகிற சுவாசிக்கிற ஒவ்வொரு மூச்சும் என்னை புத்துணர்வூட்டும். இலக்கிய, கலை செயல்பாடுகளின் உன்னதத்தை உணர்ந்த என் சக ஆய்வாளர்களான அருள், டேவிட் போன்றோரின் அன்பையும், இது வரை வேறு கல்லூரிகளில் கூட வேலை பார்த்த அத்தனை சக ஆசிரியர்களையும், என் மாணவர்களையும் இத்தருணத்தில் நினைத்துக் கொள்கிறேன்.
எழுத்தாளனாய் எனக்கு இந்த சமூகம் தேவைக்கதிகமான மரியாதை அளித்துள்ளது. கொஞ்சம் சந்தோசப்பட்டாலும் எழுத்தாளனாய் பார்க்கப்படுவதில் எனக்கு அதிகமும் கூச்சம் தான். என்னிடம் மரியாதை காட்டுகிறவர்களை விட பல மடங்கு தகுதி குறைந்தவன் நான்.

கடந்த மூன்று வருடங்களில் நான் அமிர்தா பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வருகிறேன். இதற்கு நான் தளவாய் சுந்தரத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். அவரை நான் கவிஞர் சங்கர ராமசுப்பிரமணியனுடன் சந்தித்தேன். சங்கர் தான் என் எழுத்தை அவருக்கு அறிமுகப்படுத்தினேன். அடுத்து தொடர்ந்து தளவாய் என்னை எழுத வைத்துக் கொண்டே இருக்கிறார். என்னுடைய சில சிறந்த கட்டுரைகள், “வெளிச்சம்”, “சந்தர்ப்பம்” போன்ற சிறுகதைகளும் அமிர்தாவில் வந்துள்ளன. அமிர்தாவுக்கும் தளவாய்க்கும் நன்றிகள்.

என்னுடைய படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிற தாமரை பத்திரிகைக்கும் நன்றிகள். அப்பத்திரிகையில் எழுதுவதை பெருமையாக நினைக்கிறேன். நண்பர் ஹமீம் முஸ்தபா நடத்திய “புதிய காற்று” பத்திரிகையும் என் எழுத்து வாழ்வில் முக்கியமானது.

இந்தியா டுடேயிலும், தற்போது தமிழ் பெமினாவிலும் பணி புரியும் நண்பர் செந்தில் நுட்பமான எடிட்டுங் திறன் கொண்டவர். “மாடிப்படிகள்” சிறுகதை அவருடைய எடிட்டிங்கால் மேம்பட்டது. அவருக்கும் என் அன்பு.
அன்புத் தோழிகள் இந்திரா மற்றும் தமிழ்நதியை இந்த கணத்தில் அன்புடன் நினைத்துக் கொள்கிறேன். 

"கால்கள்" விமர்சனக் கூட்டத்தில் உரையாற்றிய அதிஷா, யுவ கிருஷ்ணா, உமா சக்தி, கவிஞர் யுவன், “நீயா நானா” ஆண்டனி, செல்வ புவியரசன் ஆகியோருக்கும் என் அன்பு. ”கால்களுக்கு” இமையமும் நண்பர் சர்வோத்தமனும் எழுதின விமர்சனங்கள் முக்கியமானவை. கடந்த ஓராண்டில் நான் மிக அதிகமாக இலக்கியம், புத்தகம் பற்றி விவாதிக்கும் நண்பர் சர்வோத்தமன். அவருடனான உரையாடல்கள் என் மனதை உயிர்ப்பாக வைக்கின்றன. “இன்மை” இதழும் நாங்கள் இருவருமாக தான் நடத்துகிறோம். அவருக்கும் என நன்றிகள். 

எனக்கு எழுத்து குறித்தும் படைப்புகள் குறித்தும் எந்த கற்பனையும் இல்லை. எந்த புத்தகத்தையும் நான் ஒரு சாதனையாக நினைக்கவில்லை. அது வாசகனுடனான உரையாடல் ஒன்றின் ஒரு பகுதி. அதனால் இவ்விருதை என் நாவலுக்கான அங்கீகாரமாகவும் நான் நினைக்கவில்லை. ஏனென்றால் எந்த படைப்புக்கும் அங்கீகாரம் அவசியமில்லை. இவ்விருது ஒரு கவன ஈர்ப்பு. எப்படி ஒரு உரையாடல் கேட்கப்பட வேண்டுமோ அது போல் படைப்பு வாசிக்கப்பட வேண்டும். இந்த விருது என் நாவல் “கால்களை” நோக்கி இன்னும் சில வாசகர்களை ஈர்க்கும் என்றால் மகிழ்வேன். அது போதும்.

எனக்கும் தவசிக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. நாங்கள் இருவரும் ஐந்து நூல்கள் எழுதினோம். ஆனால் யுவ புரஸ்கார் தான் நாங்கள் வாழ்க்கையில் பெறும் முதல் விருது. இருவரும் நாவலுக்காக தான் விருது பெற்றோம். யுவ புரஸ்கார் பெற்ற சில மாதங்களில் கடவுள் அவரை திரும்ப அழைத்துக் கொண்டார். நான் இன்னும் இருபது வருடங்களாவது வாழ விரும்புகிறேன்.
எழுத்தாளனாய் வாழ்வது குடும்பத்துக்கு செய்யும் துரோகம் தான். கணிசமான நேரம் நான் எழுத்தில் மூழ்கி தொலைந்து போகிறேன். அது குறித்த வருத்தங்கள் இருந்தாலும் மனைவி காயத்ரி என் ஆன்மாவின் சிறகுகளாக இருந்து வருகிறாள். இந்த விருது குறித்து அறிந்ததும் அவள் “எனக்கு ஒரே சமயம் பொறாமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்றாள். காயத்ரி, எனக்கும் நீ பொறாமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது குறித்து பொறாமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

No comments: