Monday, April 30, 2012

நெஞ்சில் தைத்த முள் "கசகறணம்"

-இளைய அப்துல்லாஹ்-

விமல் குழந்தைவேலின் ‘வெள்ளாவி’ நாவலை வாசித்து முடித்தபோது அவருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து கேட்டேன். ‘நீங்கள் என்ன சலவைத் தொழிலாளியா?’ என்று. அவர் சிரித்தபடி ‘இல்லை’யென்றார்.

அப்படி மட்டக்களப்பு, இலங்கையின் கிழக்கு
மாகாண சலவைத் தொழிலாளர் சமூகத்தை
வெள்ளாவி நாவலில் துல்லியமாகக் கொண்டு
வந்தவர் அவர்.

கசகறணம் நாவலில். தேவதூதர்கள் போல் வந்தார்கள்,ராஜகுமாரர்கள் போல் உபசரிக்கப்பட்டார்கள், மாய மந்திரம் செய்தது
போல் மறைந்தே போனார்கள். விடுதலைப்புலிகளின் தோற்றம், வாழ்வு, மறைவை மூன்றே மூன்று வாக்கியங்களில் முழு மன உணர்வுகளையும் இப்படி இதற்கு முதலும் யாரும் சொல்லவில்லை. இனி மேலும் யாரும் சொல்ல முடியாதபடிக்கு விமல் குழந்தைவேல் சொன்னது எனது நெற்றிப்பொட்டில் ஆணி அடித்தது போல் இருந்தது.

Thursday, April 05, 2012

ஈழத்து சிறுகதைகளின் செல்நெறி

தம்பு  சிவாவின் சிறுகதைகளை முன்னிறுத்தி 
-லெனின்  மதிவானம்-

நவீன காலத்தே எழுந்த இலக்கியத்தின் உட்பிரிவுகள் யாவற்றிலும் சிறுகதை பொதுமக்கள் பெரிதும் விரும்பபடுகின்ற இலக்கிய வடிவமாகத் திகழ்கின்றது. இன்றைய சமுதாயச் சூழல் தோற்றுவிக்க கூடிய தனிமனித முரண்பாடுகளும் நெரிசல்களும் சிறுகதைக்கான நுகர்வோர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அதுமட்டுமன்று, சிறுகதைக்கான உள்ளடக்கம், உருவம் சமகால வாழ்க்கைப் போராட்டத்தில் அதன் இடம் என்பன குறித்து விமர்சகர்கள் எவ்வளவுதான் அரிய கருத்துக்களையும் கோட்பாடுகளையும் வகுத்துக் கூறினாலும் அதன் இறுதி வெற்றி என்பது பொதுமக்கள் விரும்பும் நிலையிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. அதுவும் தரமான சிறுகதைகளுக்கு புறத் தூண்டுதல் அவசியமில்லையென்றே தோன்றுகின்றது.
சிறுகதை சமூகவுறவுகளில் வெளிப்படும் மனித நிலைகளை பின்புல உறைப்புடன் எடுத்துக் காட்டுகின்றது. இன்றைய உலகில் சிறுகதைப் பற்றிய சிந்தனைகளும் போக்குகளும் பல புதிய பரிமாணங்களையும் தோற்றுவித்திருக்கின்றது. தமிழ் சிறுகதை வரலாற்றிலும் இதன் பாதிப்பு நிகழாமல் இல்லை. வ.வே.சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரத்தில் ஆரம்பித்து நமது யுகத்து ஆற்றல் மிக்க சிறுகதையாசிரியரான ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதைகள் வரை பலரும் பலவகைகளில் சோதனைகள் செய்து பார்த்து தான் இந்த புதிய திசை வழியை கண்டடைந்துள்ளனர்.
புதி திசை வழி என்பதன் அர்த்தம் மக்களால் மக்களுக்கான இலக்கியம் என்ற அம்சத்தை சுட்டி நிற்கின்றது. பல ஆண்டுகளாக வளர்ந்த இயக்கம், போராட்டம் செயல் என்பனவற்றின் ஊடாக வளர்ந்து வந்ததொரு இக்கிய செல்நெறியாகும். இந்த பின்னணியில் சிறுகதை பற்றி நோக்ககின்ற போது அது வாழ்க்கையின் அவலங்களை துன்பங்களை எடுத்துக் காட்டுகின்றது. தனி மனித வாழ்வில் ஏற்படும் அவலங்கள் துன்பங்கள் வெளிக்கொணரப்படாவிட்டால் அவற்றினை அழித்து விடவும் முடியாது. எனவே சிறுகதை மக்களின் வாழ்க்கை அவலங்களை துன்பங்களை மட்டும் சித்திரிப்பதாக அன்று அதனை தீர்ப்பதற்காக உந்துதலையும் வழங்குகின்றது என்பதை சிறுகதை வரலாற்றினை ஊன்றிக் கவணிப்பவர்களால் உணர முடியும்.