- எம்.சி .சுப்பிரமணியம் -
சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் தலையங்கம் எழுதிய ஒரு ஆற்றல் மிக்க படைப்பாளி எனது கட்டுரைக்கே தலைப்பாகிவிட்டதினை நினைக்கும்போது நெஞ்சுதுடிக்கின்றது. கரையோரத்துப் பாறையாக உறைந்துவிட்ட எனது உள்ளம் ஓங்கியடிக்கும் நினைவலைகளினால் உருகுகின்றது. நான் நினைகின்றேன் அது ஆயிரத்தித் தொள்ளயிரத்து நாற்ப்பத்திஏழு என்று . அப்பொழுது நான் மிக முனைப்புடன் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்த காலம் எங்கள் கட்சியில் அப்பொழுது தான் துடிப்புமிக்க அம் மூன்று இளஞர்களும் சேர்ந்து கொள்ள வந்தனர் அவர்கள் தான் கே.டானியல், டொமினிக்ஜீவா, சண்முகம் இராசையா ஆகியோர் ஆவர். இவர்களை இணைத்துக்கொள்வதில் என்னுடன் சேர்ந்து அமரர்கள் மூ.கார்த்திகேசன் ,ஆர்.ஆர். பூபாலசிங்கம் ஆகியோரும் உதவினர். இவ்மூவரும் வீறுகொண்ட வேங்கைகள். தமது நாட்டை, மொழியை, பண்பாட்டை நேசித்தவர்கள். அதேவேளையில் உலகளாவிய மானிட நேயம் கொண்டு மற்றவர் திறைமைக்கு மதிப்பளித்தனர். அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தனர். சாதி ஒடுக்குமுறைக்கும், நசுக்குதல்களுக்கும் எதிராக போர்க்கொடி ஏந்தினார். சாதி அநீதி ஒழியட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும் என்றும், இல்லாமை இல்லாமல் போகட்டும், எல்லோரும் எல்லாமே பெறுதல் வேண்டும் எனக்குரல் கொடுத்தனர். அப்படி குரல் கொடுத்த ஒலி ஒன்று இன்று ஓய்ந்துவிட்டது அமைதி கொண்டு உறங்கிவிட்டது. அதுதான் கே.டானியலின் குரல்.
அண்மையில் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் என் நெஞ்சிற்கினிய நண்பன் கே.டானியல் அமரரானார் என்னும் செய்தி எனக்கு மிகுந்த கவலையைத் தந்தது. என்னைவிட வயதில் இளையவனும் இன்னும் எத்தனையோ சமூகப் பணியும் இலக்கியப்பணியும் ஆற்றவேண்டியவன் அமரனாகிவிட்டானே என எண்ணும் போது நெஞ்சம் குமுறுகின்றது.
சாதாரண குடும்பத்தில் ஒரு தொழிலாளியாக தன வாழ்வினை ஆரம்பித்த கே.டானியல் பாமரர் முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வரை தனது எழுத்தால் பேச்சால் செயலால் கவர்ந்தான். இலங்கை, இந்தியப் பத்திரிகைகளில் இவன் கதைகள் கட்டுரைகள் வெளிவந்தன.
இலங்கையின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றுக்கொண்டான். கல்லூரியிலே பயிலாதபோதும் தனது சொந்த முயற்சியினாலும் தன கொண்ட இலட்சியப் பற்றினாலும் மக்களை நன்கு புரிந்துகொண்டு மக்களிடம் தான் கற்றுக்கொண்டவற்றை மக்களுக்காகவே எழுதினான், பேசினான், செயல்பட்டான்.
கே.டானியல் என்னுடன் எமது கட்சியில் மட்டும் இணைந்ததோடு நில்லாமல் எமது சமூகத்தாபனமான அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையுடன் அமரர் ஜோவேல் போல் தலைவராக இருந்த காலத்தில் இணைந்து அச்சமூகத்தாபனம் நடத்திய சாதி ஒழிப்புப் போராட்டங்களில் எல்லாம் முன்னின்று கலந்து சொல்லடியும், கல்லடியும், கம்படியும் பட்டபோதிலும்
"அடிமை விலங்கொடிப்போம் - அதில்
ஆயுதங்கள் செய்திடுவோம்
கொடுமை மிகு மலிந்த - இக்
குவலயத்தை மாற்றிடுவோம் "
என்று அஞ்சாது பணியாற்றினான் சமஆசனம், சமபோசனம் போராட்டத்திலும், தேனீர்க்கடைப் பிரவேசம், ஆலயப்பிரவேசம் போன்ற போராட்டங்களிலும் சரி எந்த எந்தப் பகுதியில் சாதியின் பெயரால் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டபோது அவர்களின் உறைவிடங்கள் எரிக்கப்பட்டபோது சாதி வெறியர்கள் துப்பாக்கிகொண்டு விலங்கு வேட்டையாடியது போன்று அப்பாவி மக்களை சுட்டுப் போசிக்கியபோதெல்லாம் எங்களுடன் தோளோடு தோள்கொடுத்துப் போராடிய ஒரு வீரம் செறிந்த போராளி கே.டானியல்.
"யார் யாருக்கு விடுதலை வேண்டுமோ அவர்களுக்கிடையே இருந்துதான் போராட்டங்கள் வெடிக்க வேண்டும் அப் போராட்டங்களுக்கு அவர்களே தலைமை தங்க வேண்டும்" என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு செயற்பட்டார். எமது சமூகத்தாபனமான அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தொண்டனாக மட்டுமல்லாது சில ஆண்டுகள் உப தலைவராகவும் கடமைபுரிந்தார். இது போன்றே எமது கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிப சங்கத்திலும் முக்கிய பொறுப்புக்களை வகித்தார்.
1963இன் பின்னர் எமது கட்சியை விட்டும், சமூகத்தாபனத்தைவிட்டும் வெளியேறிய போதிலும் அவரது இலட்சிய வேட்கையில் எதுவித மாற்றமுமின்றித் தீவிர அரசியல் போக்குடைய அரசியல் தாபனத்துடனும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்துடனும் இணைந்து தனது பணியினைத் தொடர்ந்தார்.
எமது பக்கத்தினை விட்டு வெளியேறிய போதிலும் சமூகரீதியான பொதுப் பிரச்சினைகளின் போதெல்லாம் அவ்வப்போது என்னச் சந்தித்து ஆலோசனைகள் கலந்துரையாடல்கள் செய்யப் பின்னின்றதில்லை. ஆற்றல் மிக்க படைப்பாளியாக, விடாமுயற்சி உடைய உழைப்பாளியாக, பற்றுமிக்க போராளியாக,அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவன் கே.டானியல். சாதாரண ஆசிரியர்களிடம் கூட முறையாகக் கல்வியினை முழுமையாகப் பெறமுடியாத கே.டானியல் இன்று பல்கலைக்கழகப் பேராசிரியர்களால் போற்றிப் புகழப்படுகிறார் என்பதனை நினைக்கும் பொழுது, "மக்களுக்காக வாழ்பவர்கள் என்றும் மக்களால் மதிக்கப்படுவார்கள்" என்ற உண்மை புலனாகிறது.
எனது நினைவலைகளில் கே.டானியலின் நினைவுகள் என்றும் பசுமையானவை
நன்றி: ஈழநாடு வாரமலர் 20.6.1986
தகவல்: கன்பொல்லைதவம் கோப்பிலிருந்து
