Monday, October 14, 2019

புத்தகங்கள் பறப்பைத் தருகின்றன...

-கரவைதாசன்-

நான் தனியாகவில்லை, புத்தகங்கள் என் தோழன். அவை எனக்கு பறப்பைத் தருகின்றன. புத்தகங்களை கொண்டாடினால் நீ என் தோழன் என் உறவு எல்லாம். 

" ஒரு வயோதிபன் மறையும்போது ஒரு நூலகம் மறைகிறது" என்கின்ற பிரக்ஞை ஆபிரிக்க மக்களிடம் இருக்கின்றது, எனில் அவர்களிடம் அந்த வழக்காற்றுமொழி  இன்றும் வாழ்கின்றது என எழுத்தாளர் சினுவா அச்சுவா பறைகிறார்.

"லத்தீன் அமெரிக்க எழுத்தாளன் ஒவ்வொருவனும் தன் மக்கள் கடந்தகாலம் மற்றும் தேசியம் தேசிய வரலாறு என்றாகப்பட்ட கனத்த உடலை இழுத்துக்கொண்டு வருபவன்" என கவிஞர் பாபிலே நெருடே பறைகிறார். 

தொல்காப்பியம் குறைந்தது மூவாயிரம் வருடங்கள் பழமையானது என்கின்ற பறைதல் தமிழர்களிடம் இருக்கின்றது. சிங்கத்திடம் இருந்து வந்தவர்கள் நாம்  என கூச்சத்துடன்  உரைக்கிடினும்  மகாவம்சம் எனும் நூலினை இலங்கையின் வரலாற்று நூல் என  பறைகின்ற போக்கு சிங்கள மக்களிடம் இருக்கின்றது. 

டன் எனும் ஒரு கிழவன் மலைக்குகை ஒன்றிலிருந்து டெனிஸ் மொழியின் இலக்கணத்தினை வகுத்தான் என்று பறைதல் டெனிஸ் மக்களிடம் இருக்கின்றது. 

இப்படியாக மனித சமூகம் நூலினை நேசிப்பதால் பல விடயதானங்களை தெரிந்துகொள்ளவும் சில விடயதானங்களை அறிந்துகொள்ளவும் வழியாகின்றன

நூல்கள் தங்களின் சிறந்த தோழன் என நான் வாழுகின்ற வயன் நகரத்து மக்கள் கடந்த 01.10.19 அன்று  டென்மார்க்கினிலே வாழ்கின்ற சகல இன மக்களுக்கும்  பிரசங்கித்துள்ளார்கள். நூல்களின் நேசர்களுக்கு அன்று பொன்னான நாள். சுமார் பதின்நான்கு வருடங்களுக்கு முன்பாக றீப (Ribe) மற்றும் தெற்குஜூலன்ட் (Sønderjylland ) மாவட்டங்கள் கலாசார மண்டபம் ஒன்று கட்டுவத்துக்கு ஒதுக்கிய 32.6 மில்லியன் குறோணர்களை மூலதனமாக வைத்து 29 மீற்றர் உயரம் 7500 சதுர அடி பரப்பளவினையும் கொண்ட டென்மார்க்கின் புதியதும் நவீனத்துவதுமான நூலகம் மக்கள் பாவனைக்காக அன்றைய தினம் பி.ப.4.00 மணிக்கு வயன் நகர மேயர் ஈகோன் வ்பிராயர் (Egon Fræhr) அவர்களின் பிரதமஉரையுடன் திறந்து வைக்கப்பட்டது. அவரைத்தொடர்ந்து. கட்டடத் தொகுதியின் பகுதி உரிமையாளர் Morten Oxlund, பிரதம நூலகர்Kasper Østergaar Grønkjær, சிறப்புவிருந்தினர் Jacob Steglmann உரையாற்றினார்கள். மாலை 7.00 மணி கடந்தும் நிகழ்சிகள் நடந்தன. 

ஒரு வாசகன் என்ற முறையில் எனக்கு அழைப்பு மின்னஞ்சல்  ஊடாக கிடைத்தது. உண்மையில் நிகழ்ச்சி மதியம் 12.30 மணிக்கே தொடங்கியிருந்தது. அங்கே நூலகர் மேற்றவும் நூலகர் ஹன்னேயும்  பத்து நூல்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். அவை 

Tysklandsarbejderen Frederiks valg.
Katte øje
Høstkarl i himlen
Dansk,Dænsk,Darnsk
Hungerhjerte
Vinter
Mit navn er Lucy Barton
Lone star 
Insekternes Planet
Hjertebank 
 நூல்கள் பற்றிய அவர்களது அறிமுக உரைகள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன. அஸ்கோ  உயர் நிலைக்கல்லூரியின் முதல்வர், முன்னாள் நகரசபை மேயர் எனது முன்னாள் வரலாற்று விவுரையாளர் ஹான்ஸ் ஜோர்ன், அரசியலாளர்கள் நண்பர்கள்  என பலரை சந்தித்து உரையாடும் வாய்ப்பும் கிட்டியது அன்றைய நாள் எங்கள் எல்லோர்க்கும் கொண்டாட்டமான நாளாக கழிந்தது . 

Thursday, October 10, 2019

அசுரன் திரைப்படம்

கிளர்த்திய நினைவுகள்...... 

-கரவைதாசன்-



சென்ற சனிக்கிழமை 05.10.19 வம்றுப் தியேட்டரில் "அசுரன்" திரைப்படம் பார்க்க கிடைத்தது. பூமணியின் வெக்கை நாவலின் கதைக்கருவினை இயக்குனர் வெற்றிமாறனும் அவரது குழுவினரும் திரையில் பேசுபொருள்
ஆக்கியிருந்தனர்.

நடிகர் தனுஷ் தொடக்கம் பசுபதிவரை நடிகர்கள் அப்பாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தார்கள். 

திரைக்கு வெளிச்சம் பாச்சியபோது பூமணியின் கதா பாத்திரங்கள் விம்பமாக  துலாம்பரமாக தெரிந்தன, இல்லை வாழ்ந்தன. ஆரவாரமில்லாமல் எரிச்சலுட்டாத இசை. கிராமங்களை அச்சொட்டாக உருவகப்படுத்தியிருந்த கலை,  பார்த்துப் பார்த்து செதுக்கியிருந்தார் வெற்றிமாறன். தொகுப்பு சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. சண்டைக்காட்சியில் சில சினிமாத்தனங்கள் இருந்தன வர்த்தக நோக்கில் அவை தவிர்க்க முடியாதவை. அதனிடையும் தனுஷ் தன் நடிப்பாற்றலை தெறிக்கவிட்டுள்ளார். 

தனுசும் அவரது சின்ன மகனும் போலீசிடம் அகப்பாடாமல் காட்டையண்டிய நீர்நிலைக்கூடாக பதுங்கிப் பதுங்கி செல்வதுடன் படம் தொடங்குகிறது. நீரில் நனையாமல்  கையில் வைத்திருக்கும் பைகளை அவர்கள் பத்திரப்படுத்துகிறார்கள். உருண்டை கவனம் எனும் கதையாடல் அவர்களுக்கிடையில் நடக்கின்றது. பார்வையாளர்களுக்கு பின்பு தான் தெரிய வரும் உருண்டை என்பது தனுஷின் மகனால் தயாரிக்கப்பட்ட  கைக்குண்டுகள் என . 

விரியும் கதையும் கதை காட்சிப்படுத்தப்பட்ட இடங்களும் என் நினைவுகளை கிளர்த்தி என்னை நிலைகுலைய வைத்துவிட்டன. ஆனையிறவு உப்பளம் , குறிஞ்சாத்தீவு  அதையொட்டிய சிறு பத்தைக் காடுகள் அதே மணல்தரை அதை தெரிந்தவர்களுக்கு படம் காட்சிப் படுத்தப்பட்ட இடங்களை ஒத்துப் போவதை அவதானிப்பர்.  மட்டுமன்றி ஓலைகளால் வேயப்பட்ட வீடுகள் திரைப்படத்தில் காட்டப்பட்ட கிராம மக்களிடையே காணப்பட்ட ஒற்றுமை, சொந்தமாக  தயாரிக்கப்பட்ட குண்டு  என்பன நான் வாழ்ந்த கன்பொல்லைக் கிராமத்தினையும் அறுபதுகளில் அவர்கள் நடத்திய சாதியத்துக்கு எதிரான போராட்டங்களையும் நினைவுக்கு கொண்டுவந்தன. இன்று கன்பொல்லையில் ஒரு ஓலைவீடுகூட இல்லை என்பது வேறு கதை. 

தனுஷின் பாத்திரம் கன்பொல்லைக்கிராமத்தின் சமத்துவத்துக்கான முன்னணிப் போராளிகள் மு.தவராசா, ஆ.சிவகுரு, இ .மார்கண்டன், ப.செல்வராசா, ந.இளையதம்பி, ச.வல்லி, வே.கிருஸ்ணபிள்ளை சி.காசியன் யாவரையும் ஒத்துப் போவதை நான் உணர்ந்தேன்.  

ஆயினும் திரைப்படத்தின் இயங்கு நிலை எனது ஒரு பத்து வயது காலத்துக்கு என்னை   பின்னோக்கி சரித்தது. தனுஷ் எனது தகப்பனார் தவத்தாராகவே (மு.தவராசா ) எனக்குத் தெரிந்தார். 1966 தொடக்கம் 1971 வரை சவாகச்சேரி, கொடிகாமம், பலாலி, தையிட்டி, ஆனையிறவு, எழுதுமட்டுவாள், சங்கானை, வன்னி  என அவர் தலைமறைவாக வாழ்ந்த  இடங்களையும் அந்த வாழ்வையும்  எனக்கு நினைவு மீட்டின. 

அப்போது அவருக்கு அக்கா, நான், தங்கை என மூன்று பிள்ளைகள் இருந்தோம். தலைமறைவான இடங்களுக்கு  ஆண் பிள்ளையான என்னை மட்டும் அழைத்துப் பார்ப்பார்.  அவரது மூத்த சகோதரர் அபிமன்யு அவரிடம் என்னை அழைத்துச் செல்வார். 

ஆனையிறவு குறிஞ்சாத்தீவு உப்பளம் அவர் அதிக காலம் தலைமறைவாக இருந்தவிடம் அங்கு அவரது உறவினர்கள் நிறையப்பேர் இருந்தார்கள். நான் ஐயாவை பார்க்கப் போகும்போது இயக்கச்சியிலேயே  பஸ்சிலிருந்து  இறங்கிவிடுவோம் . அங்கு  எங்களை அழைத்துச் செல்ல நடராசா மாமா, லக்குணம் மாமா அல்லது செல்வநாயகம் அத்தான், அல்லது சின்னராசா அத்தான்  அநேகமாக வந்து நிற்பார்கள். காட்டு வழியால் எங்களை அழைத்துச் செல்வார்கள்.  அந்த நிலச்சாயல் அப்படியே திரைப்படத்தில் ஒட்டியிருந்தது. செய்தியறிந்த போலிஸ் ஒரு தடவை நடராசா மாமாவை பிடித்து நையப்புடைத்தார்கள் அப்போதும் அவர் மறைவிடத்தினை காட்டிக்கொடுக்கவில்லை. திரைப்படத்தில்  இந்த ஒத்துப் போன பாங்குகள் தொண்டையை  அடைத்து கண்ணீரை வரவழைத்தன.

தமிழ்திரையுலக இயக்குநர்கள் கற்பனைகளை புனைந்து சினிமா ரசிகர்களை உணர்வு  தொற்றுதலுக்குள்  ஆட்படுத்தி வைத்திருக்கின்றனர். அந்த வாலாயத்துள்ளும்  சில செய்திகளை வைத்திருக்கும் வெற்றிமாறனை பாராட்டாமல்  இருக்கமுடியவில்லை. கல்வியும் ஒரு சிறந்த ஆயுதம் தான். (இதனை அடைய நாம் பெளத்தத்தில் சேர வேண்டியிருந்தது. என்பது எங்கள் கதை.) என் நினைவுகளைக்   கிளர்த்திய படம். நன்றி வெற்றிமாறன்.....