Sunday, October 18, 2020


 இன்றைய தினம் 14.10.20 நெல்லியடி பிரதேசசபை பகுதியில்J/363 கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள இராஜகிராம முன்பள்ளிக்கு பாண்ட் வாத்தியகருவிகள் தவம் அறக்கட்டளைச் செயற்பாட்டாளர் இராசையா சாள்ஸ் அவர்களால் முன்பள்ளி ஆசிரிகைகள் திருமதி நவசீலன் கிருஜா, திருமதி சிவர்தன் விஜிதா ஆகியோரிடம் வழங்கப்பட்டது. அவ்வேளை கிராம அலுவலர்- சிறந்த பண்பாளர் கணேஷ் ரதீசன் அவர்களும் பல்வேறு பொதுநல அமைப்புகளில் தன்னை இணைத்துக் கொண்டு செயற்படும் செல்வி அருமைத்துரை சாளினி அவர்களும் கலந்து சிறப்புச் செய்தார்கள்.அனுசரணை தவம் அறக்கட்டளை.

Sunday, August 30, 2020

 நாமும் எங்களால் ஆனது செய்வோம்...

இன்றையதினம் 30.8.20 யா/கரவெட்டி ஸ்ரீ நாரதவித்தியாலய சுற்றுச்சூழலிலுள்ள காலம் சென்ற சமூகத்தொண்டன் சீ.செல்லக்கிளி அவர்களின் வேலி செப்பனிடப்பட்டது. செப்பனிடும் பணியில் சி.புஸ்பாக்கா, தவம் அறக்கட்டளைச் செயற்பாட்டாளர் இ.சாள்ஸ். மற்றும் சாத்தியப்படுத்திய உறவுகளுக்கு நன்றி. அனுசரணை தவம் அறக்கட்டளை.

Tuesday, August 11, 2020

'நீண்ட காத்திருப்பு" எனும் நூல் வாசிப்பு கிளர்த்திய நினைவும் சோர்வும்.

-கரவைதாசன்-

கொமடோர் அஜித் போயகொட எனும் சிறீ லங்கா கடற்படைத் தளபதி எட்டு வருடங்கள் தன் "நீண்ட காத்திருப்பு" புலிகளின் சிறையில் வாடிய அனுபவத்தை அவர் அது ஒரு சிநேக அனுபவம் என சொல்ல எத்தணிக்கின்றார். அப்படி அவர் எத்தணிக்கின்றபோதும் புலிகளின் சிறையின் நிலவறையிலிருந்து கேட்கும் அலறல் சத்தங்கள் எனும் ஒற்றைச் சொல்லால் அனைத்தையும் போட்டுடைத்து விடுகிறார். நாய்க்கூடு, கால்விலங்கு, சித்திரைவதைக் கதிரை என கொமடோர் சொல்லக் கேட்டு பிரதியை கட்டமைத்திருக்கும் அரங்கியலாளார் சுனிலா கலப்பதி அவர்களின் எழுத்துக்களுடனான அநுபவம். இவ்வகை எழுத்தை உற்பத்தி எனும் பிரிவிலிருந்து விலத்தி படைப்பிலக்கியமாக்கியிருக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்பும் தமிழ் வாசகர்களை தேவா,சத்தியதேவன், கெளரிபாலன் இவர்களின் கூட்டு மொழிபெயர்ப்பு சிரமப்படுத்தவில்லை. பொருத்தமான இலகுவான இலக்கியசொற்களை வரிகளில் குந்தியிருக்க செய்துள்ளார்கள். இஷ்டப்பட்டபடி எழுதி எங்களை கஷ்டப்படுத்தவில்லை. நான் எழுதுவது இப்புத்தகம் பற்றிய அறிமுகமோ அல்லது விமர்சனமோ அல்ல . அப்படியாயின் புத்தகத்தினை மூடி வைத்ததும். என்னை முழுவதுமாக கொமடோர் வியாபித்திருக்க வேண்டும். அல்லது புலிகளின் நேர்வும் எதிர்மறைவும் என்னை ஆக்கிரமித்திருக்க வேண்டும். இரண்டும் இல்லையெனில் புலிகளின் நீண்டகால சிறையிலிருந்து மீண்ட ஒருவர் எதிர் கொள்ளும் நேரடியான அரசநிர்வாகச் சிக்கல் அல்லது அவர் குடும்பத்தில் உறவுகளுக்குள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கலாகக் கூட இருந்திருக்க வேண்டும் .எதுவுமல்லாமல் மாறாக அப்புத்தகத்தில் வரும் புலிகளின் ஜெயிலர் நியூட்டன் என்னை முழுவதுமாக வியாபித்திருந்தார். அவரை மிருதுவான இதயம் படைத்த ஜெயிலர் என கொமடோர் விளிக்கின்றபோதெல்லாம் எனது பாடசாலைத் தோழனாக பாடசாலை உதைபந்தாட்டக்குழுவின் சக அணித்தோழனாக என் அறை முழுவதும் நியூட்டன் (சிவகுமார்) ஐக்குண்டனாக வியாபித்து நின்றான். ஒரு தடவை டென்மார்க்கிலிருந்து தனது பிழைப்புக்காக வன்னிக்குப் போன ஒருவர் டென்மார்க்கில் நான் ஒரு கம்மனாட்டி கம்யூனிஸ்ட் புலிகளுக்கு வெளியே பத்திரிகை நடத்துகிறேனென இல்லாததும் பொல்லாததும் சொல்லிவைத்திருக்கிறார். ஆனால் அதனை மறுதலித்து எனது அறம் சார்ந்து நியூட்டன் கதைத்ததாக அறிந்தேன். பின் என்னோடு தொடர்பு கொண்டு இலங்கைத்தீவுக்கு என்னை வர வேண்டாமென நியூட்டன் எச்சரித்தான். அது கொமெண்டோர் கூறவதுபோல் நியூட்டனின் மிருதுவான பக்கமாக இருக்கலாம். இப்படி எங்களோடு படித்து எங்களோடு கூட விளையாடியத் திரிந்த எத்தனையோ பேரை கொன்று தின்றதும் கொடியவயவர்களாக்கியதும் இப்புத்தக வரிகளுக்குள் இட்டு நிரப்பதாக பக்கங்களாக இப்புத்தகம் வந்திருப்பதாக அங்கலாய்த்தேன். ஐயகோ ஒரு சிறைக் கைதியின் சொந்த அநுபவத்தினை வாசிக்கிறேன் எனும் நிசத்தை, என்ற சிற்றறிவை ஏதோ சிறை செய்திருக்கின்றது. எங்களோடு ஒன்றாக படித்த யாராயினும் இப்புத்தகத்தினை வாசிக்கக் கிடைப்பின் எனக்கு ஏற்பட்ட இவ்வுணர்வுத் தொற்று ஏற்படாவண்ணம் உங்களை சுதாகரித்துக் கொண்டு வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Sunday, July 05, 2020

கலீல் ஜிப்ரானும் எனது பேரக்குழந்தைகளும்

-கரவைதாசன்-
இந்தக் கிழமை நேற்றும் இன்றும் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுது கழிகிறது. எங்களது பிள்ளைகள் மூவரையும் நல்ல மனிதர்களாய் வளர்த்தெடுத்துவிட்டோம் என்ற மதர்ப்பு எங்களிடமிருந்தது.
"பிள்ளைகள் எங்களிடமிருந்து வந்தவர்கள் ஆனாலும் அவர்கள் எங்களவர்கள் அல்ல " என்ற கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளுக்கு எங்களிடம் பொருள் இருந்ததில்லை.
எங்களது பேரக்குழந்தைகளுடன் கழிக்கின்ற அநேக பொழுதுகளை நான் நிழலாகவோ அல்லது காணொளியாகவோ பதிவு செய்து நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்து வந்திருக்கின்றேன். ஆனாலும் இதனை எங்களது பிள்ளைகள் கூடுமானவரை தவிர்த்து வருகிறார்கள் என்பது எனது மகன் ஸ்ரெலினுடன் உரையாடும்போது தெரிய வந்தது. அவரிடம் கேட்டபோது அவர் சொன்னார் "நாங்கள் அங்கரின்(எனது பெயரன்) படங்களை பகிர்ந்து மகிழலாம் ஆனால் அதனை அனுசரிக்கின்ற எந்த அறிவும் அவருக்கு இப்போது இல்லை. அவர் வளர்ந்த பின் ஏன் இப்படி செய்தீர்கள்? எனக் கேட்டால் எங்களிடம் பதில் இல்லாமல்ப் போகலாம் அப்பா. எனவே தான் தவிர்த்து வருகிறோம்" எனப் பதிலிறுத்தார். எனது மகனிடம் கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளுக்கு பொருள் இருந்தது கண்டு மகனை நினைத்து எனக்குள் இன்னும் மதர்ப்பு.
இந்த நிழல் எனது பெயரன் அகரன் (மகளின் மகன்) நேற்றைய தினம் எனது அலைபேசியிலிருந்து கிளிக் செய்தது.
இந்தக் கிழமை நேற்றும் இன்றும் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுது கழிகிறது. எங்களது பிள்ளைகள் மூவரையும் நல்ல மனிதர்களாய் வளர்த்தெடுத்துவிட்டோம் என்ற மதர்ப்பு எங்களிடமிருந்தது.
"பிள்ளைகள் எங்களிடமிருந்து வந்தவர்கள் ஆனாலும் அவர்கள் எங்களவர்கள் அல்ல " என்ற கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளுக்கு எங்களிடம் பொருள் இருந்ததில்லை.
எங்களது பேரக்குழந்தைகளுடன் கழிக்கின்ற அநேக பொழுதுகளை நான் நிழலாகவோ அல்லது காணொளியாகவோ பதிவு செய்து நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்து வந்திருக்கின்றேன். ஆனாலும் இதனை எங்களது பிள்ளைகள் கூடுமானவரை தவிர்த்து வருகிறார்கள் என்பது எனது மகன் ஸ்ரெலினுடன் உரையாடும்போது தெரிய வந்தது. அவரிடம் கேட்டபோது அவர் சொன்னார் "நாங்கள் அங்கரின்(எனது பெயரன்) படங்களை பகிர்ந்து மகிழலாம் ஆனால் அதனை அனுசரிக்கின்ற எந்த அறிவும் அவருக்கு இப்போது இல்லை. அவர் வளர்ந்த பின் ஏன் இப்படி செய்தீர்கள்? எனக் கேட்டால் எங்களிடம் பதில் இல்லாமல்ப் போகலாம் அப்பா. எனவே தான் தவிர்த்து வருகிறோம்" எனப் பதிலிறுத்தார். எனது மகனிடம் கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளுக்கு பொருள் இருந்தது கண்டு மகனை நினைத்து எனக்குள் இன்னும் மதர்ப்பு.
இந்த நிழல் எனது பெயரன் அகரன் (மகளின் மகன்) நேற்றைய தினம் எனது அலைபேசியிலிருந்து கிளிக் செய்தது.

இரண்டு தலையணையும் ஒரு படுக்கையும்....

-கரவைதாசன்-
எனது அப்பாவும் சகோதரனும் மொட்டைமாடியிலே பாயை போட்டுவிட்டு மல்லாந்து படுத்துக் கொண்டு கனவு காண்பார்கள் கூடவே என்னையும் அழைத்து நடுவில் படுக்கவைப்பார்கள் நான் என்ன காண்கிறீர்களெனக் கேட்டால் ஒவ்வொன்றாக சொல்வார்கள். அவர்களின் கனவுகளை வேறு எவர்தனும் காண முடியாது அப்படி வித்தியாசமாக இருக்கும்.என்னையும் சேர்ந்து கனவு காணச்சொல்வார்கள் நான் தான் கேள்விச் செவியனாச்சே கேட்பேன் "என்னத்தைக் காண? "யார் சொன்னதாக ஞாபகமில்லை என் காதில் விழுந்தது "எங்கள் ஊர்க் குளத்தில் எத்தனை பேர் அடிக்கழுவினால் குளத்து நீர் வற்றும்?" ம்.. வித்தியாசம் கட்டுடைப்பான கனவு தான். ஒருவர் சொன்னது கேட்டது " மல்லாந்து படுத்துக் கொண்டு குனிந்து செய்கின்ற வேலைக்கு கனவென்று பெயரோ இதுக்க வேற கட்டுடைப்பாம்." மற்றவர். நான் சொன்னேன் "வானத்தைப் பார்த்துக் கொண்டு காணூங்கள்." இருவரும் "ஆதோ அந்த நட்சந்திரங்களைப் பாருங்கள் அவை விளக்கானால் எரிவதுக்கு எவ்வளவு எண்ணை தேவைப்படும்?. அவை தொழிலாளவர்க்கத்தின் நம்பிக்கையின் குறியீடு அல்லவா இப்பவும்கூட பிரகாசமாக எரிந்து கொண்டுதான் இருக்கின்றன. நான் மகிழ்ந்திருந்தேன். ஆகா நட்சத்திரம் பற்றி கனவு காண்கிறார்கள் நானும் சேர்ந்து கனவு கண்டு கொண்டிருந்தேன். திடீரென வானத்தை நோக்கி துப்பத் தொடங்கினார்கள். நான் கேட்டேன் "என்ன ஆச்சு?ஏன் இப்படி? " இருவரும் முந்திக் கொண்டு சொன்னார்கள். நட்சத்திரங்களை துப்பி அணைத்துவிட்டு எண்ணையின் தேவையை கணக்கிடப்போகிறோம். யார் அதிகம் அணைக்கிறாரோ அவரே விபரமானவர். எஃகி, எஃகி துப்பத் தொடங்கினார்கள். முகம் தலையணையென தெப்பமாக அவர்களின் முகங்கள்மட்டுமல்ல எனது முகமும் எச்சில் நெடில் எங்கு சென்று கழுவுவது? ஏற்கெனவே அடிக்கழுவி குளத்தைக் கலக்கி......

22.6.20

Sunday, June 14, 2020

யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த அதிபரும் காணாமல் ஆக்கப்பட்டவரும்

-கரவைதாசன்-
இலங்கைக் கொடியின் கீழ் "யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த அதிபரும் காணாமல் ஆக்கப்பட்டவரும்" எனும் தலைப்பில் சர்வதேச மன்னிப்புச் சபை டென்மார்க் காலாண்டிதலில் இந்த மாதம் வந்த அனே லீ லண்ட்ஸ்ரெத் Anne lea Landsted அவர்களின் கட்டுரை படிக்க கிடைத்தது. நடந்து முடிந்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் வடபகுதியில் 90.000க்கு மேற்பட்ட விதவைகள் ஆக்கப்பட்ட பெண்கள், 100.000 அதிகமாக காணமல்ஆக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட மனிதர்கள், மஞ்சள் தபால் உறைகளில் பிள்ளைகளின் புகைப்படங்களுடன் பிள்ளைகளைத் தேடும் அன்னையர்கள் அல்லது மனைவிமார் உட்பட Inform அமைப்பினைச் சேர்ந்த நண்பர் றூக்கி பெர்ணான்டோவின் விபரம், கருத்துக்கள், ஊடகவியலாளர்களின் களவிபரம் போன்ற விசயதானங்கள் கட்டுரை எங்கும் பரவிக்கிடந்தன. கட்டுரையின் மையப் புள்ளியாக கூறப்படுவது. இலங்கை நாட்டின் அதிபர் கோதபாய ராஜபக்ச சொல்கிறார் காணமல் போனவர் யாவரும் இறந்துவிட்டார்கள். அவர்களின் பெயரில் அவர்களின் குடுபங்களுக்கு இலங்கை ரூபா.6000 ஜீவனாம்சப் பணமாக மாதமாதம் தருகிறோம். பெற்றுக்கொள்ளுங்கள் என்பதே. ஆனால் அன்னையர்களில் கேள்வி கேட்போரின் கோரிக்கை எங்களுக்கு பணம் வேண்டாம் காணமல் ஆக்கப்பட்டவர்கள் நிலவரத்தினை உறுதிப்படுத்துங்கள் என்பதே. உறுதிப்படுத்துங்கள் எனக் கேட்பது கருத்துச் சுதந்திரம். நடந்தது நடந்து முடிந்துவிட்டது. வாருங்கள் அபிவிருத்தியினை நோக்கிப் போவோம் என்பது மறுபக்க நியாயம். கட்டுரையை படித்து முடித்ததும் எனக்குள் சிந்தனைச் சிதறல் யாழ்ப்பாணம் நூலகத்தை எரிச்சுப்போட்டு எரிச்சதுக்கான எந்த தடயமும் இல்லாமல் புதிதாக ஒரு கட்டடத்தினைக் கட்டித்தந்ததும் அதனை யார் திறப்பது என சண்டை பிடியுங்கள் எனவிட்டதுக்கும் இந்த பொறிமுறைக்கும் சம்மந்தம் ஏதாவது இருக்குமோ?
-கரவைதாசன்-

Saturday, June 13, 2020

பன்னிரண்டு இளநீல ரோஜாக்கள்

-தமயந்தி-

காலை பத்து மணி. படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லை. அடித்துப் போட்டாற்போல் அசதியாக இருந்தது. கடந்த பல வருடங்களாக இந்த தினத்தில் காலை ஏழுமணியிலிருந்து இரவு ஏழுமணிவரை தெருத்தெருவாக அலைவேன் கமெராவோடு. முந்நூறுக்கும் குறையாத படங்களைப் பிடித்துக் கமெராக் கூட்டுக்குள் அடைத்து வைத்திருப்பேன். பத்துப் பதினைந்து படங்களாவது மறுநாள் தினப்பத்திரிகையிலும் வெளியாகியிருக்கும். வழமையாகப் பிரசுரிக்கப்படும் எனது படங்கள் போலல்லாது, இந்தப் படங்கள் மட்டும் ஒருகணம் கன்னங்களை வருடிக் கொடுக்கும், மறுகணமே நகங்களால் நெஞ்சைக் கிழிக்கும். ஆனாலும் சற்றுநேரமாவது படங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்பேன்.
தேசத்தின் வான்பரப்பெங்கும் வியாபித்து ஒலிக்கும் எக்காளத்தொனிகளை அள்ளி முகங்களில் அப்பியபடி, வண்ணத்துப் பூச்சிகள்போல் சிறகடிக்கும் சிறுவர் பட்டாளங்கள் கைகளில் தேசியக்கொடிகளை ஏந்தியபடி பாடசாலை ஊர்வலங்கள், அமைப்புக்கள், அரசியற்கட்சிகள், படையணிகளின் அணிவகுப்புக்கள், இயல், இசை, நாடகப் பள்ளிகளின் வீதிநிகழ்வுகள்..... இப்படி குடிகள்பூராவும் தெருவில் இறங்கிக் கொண்டாடி மகிழ்வர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வர். ஆண்கள் பெண்கள் சிறுவர் முதியோர்களென தமது தேசிய உடைகளில் தெருக்களை நிறைத்து வலம்வருவதைப் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். நோர்வேயின் தேசியதினம் இன்று. எங்களுக்கென்றொரு நாட்டின் விடுதலைக்காகவும் யுத்தம் செய்தோம். மிக நீளமான யுத்தம். சுதந்திரமான எங்கள் தெருக்களிலும் இப்படி எமது சிறுவர்கள் கைகளில் தாங்கிய கொடிகளை அசைத்தபடியும், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் சொல்லியபடியும் கொண்டாடித் திரிவர் என்ற கனவும் இருந்தது. தோற்றுப் போனவர்கள் ஆனோம். கைகள் வைத்துத் தைத்த சட்டைகளை, கைகளை இழந்த சிறுவர்களுக்கு அணிவித்து அழுபவரானோம்.
ஆனால், இன்று தூக்கம் கலையாதவோர் பட்சியைப்போல நள்ளிரவுச் சூரியதேசம் அடங்கிக் கிடக்கிறது.
-------------------
கொரோனா உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கி, நிலவறையில் சுயமுடக்கமாகி இன்றோடு எனக்கு எழுபத்தைந்தாவது நாள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் பூக்கடைக்காரக் கிழவி மார்கிரத்தா என்ற எனது பூவாத்தாவின் தோட்டத்துக்குப் போகவேண்டும். பல வாரங்களாகப் பூக்கடை திறக்கவில்லை. இனியும் எப்போ திறக்கப்படும் என்பது கிழவிக்கும் தெளிவில்லை. நேற்றுத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, நேராகவே தோட்டத்துக்கு இன்று பன்னிரண்டு மணிக்கு வரும்படி சொல்லியிருந்தாள் பூவாத்தா. இரண்டு கிலோமீற்றர் நடந்துதான் போக வேண்டும். ஒருவாறகப் படுக்கையை விட்டு எழுந்தாயிற்று.

Monday, April 27, 2020

தமிழ்த் தாத்தா கந்த முருகேசனார்


ஈழத்துத் தமிழறிஞர். 'உபாத்தியாயர்' என்றும் 'தமிழ்த் தாத்தா' என்றும் அழைக்கப்பட்டவர். தமிழ் அறிஞராக, சமூக சீர்திருத்தவாதியாக, தர்க்கவாதியாக, பல்துறை விற்பன்னராக வாழ்ந்தவர் கந்த முருகேசனார்
இலங்கையின் வட மாகாணத்தில் தென்புலோலியில் #கந்தப்பர்_தெய்வானைப்_பிள்ளை இணையருக்கு இரண்டாவது மகனாக 27.04.1902 ஆம் ஆண்டு பிறந்தவர் முருகேசனார்.
அறிஞர் கந்த முருகேசனார் ஒரு வறிய விவசாய குடும்பத்தில் பிறந்து தமது ஆரம்பக் கல்வியை தரம் 1 முதல் 4 வரை தட்டாதெரு மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் அதன் பின்னர் புலோலி ஆண்கள் ஆங்கிலப் பாடசாலையென அழைக்கப்பட்ட வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் கற்றதுடன் கல்வியை வறுமையின் காரணமாக இடையில் நிறுத்தினார்.
இதன் பின்னர் ஈழமணி ஆசிரியர், புலவர் என்று அன்றைய காலத்தில் அழைக்கப்பட்ட க. முருகேசபிள்ளை என்ற பெரியாரிடம் சிறிது காலம் கந்தபுராணமும் நன்னூல் காண்டிகையுரையும் கற்றார்.
பின்பு நன்னூல் யாப்பிலக்கண காரிகை போன்ற சிற்றிலக்கணங்களையும், தொல்காப்பியம் போன்ற பேரிலக்கண நூல்களையும் தானாகவே எவரினதும் உதவியுமின்றிப் படித்து ஒரு தலைசிறந்த அறிஞரானார்.
கந்த முருகேசனாருக்கு ஏறத்தாழ 25 ஆவது வயதில் கால்கள் வலுவிழந்தன. அதற்கு முன்பு புராணங்களுக்கு விரிவுரை சொன்னவர், பின்பு அதைத் தொடர முடியவில்லை.
இளமைக்காலத்தில் கோயில்களில் புராணங்களுக்குப் விரிவுரைசொன்ன இப்பெரியார் கால்கள் வலுவிழந்து, முடமான பின்னர் ஒரு #நாத்திகவாதியாக மாறி விட்டார். நாத்திகவாதியாக மாறினாலும் இரவு, பகல் என்று பாராது சகலவற்றையும் கற்றுப் பாண்டித்தியம் அடைந்தார்.
சிறந்த சிந்தனையாளராக மாறி #பொதுவுடைமைத் தத்துவங்கள் வாழ்க்கைத் தத்துவங்கள் யாவற்றையும் நன்கு கற்றார்.
உபாத்தியாயர்கந்த முருகேசனார் ஆரம்பத்தில் புற்றளை சாரதா வித்தியாசாலையில் (தற்போதைய புற்றளை மகா வித்தியாலயம்) ஆசிரியராகப் பணியாற்றினார்.
பின்னர் அவரது உறைவிடமான 'தமிழகம்' ஒரு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியது.
இயற்கைச் சூழலில், வெண் மணற்பரப்பில், இப்பள்ளிக் கூடம் பாலர் வகுப்பு முதல் பண்டிதர், வித்துவான் வகுப்பு வரை எப்போதும் மாணாக்கர்களால் நிறைந்திருக்கும்.
இங்கு தமிழ் மட்டுமின்றி சமயம், தர்க்கம், புவியியல், கணிதம் யாவும் இவரால் இத்திண்ணைப் பள்ளியில் கற்பிக்கப்பட்டன.
கந்தமுருகேசனாருக்கு #பேரறிஞர்_அண்ணா . #நாவலர் #இரா#நெடுஞ்செழியன்#நாஞ்சில்_மனோகரன் ஆகிய தமிழக அரசியல் தலைவர்களோடும்,
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பொன் கந்தையா, பீற்றர் கெனமன் போன்றவர்களோடு நேரடித் தொடர்பும் தபால் மூலத் தொடர்பும் கொண்டிருந்தார்.
 #தமிழகத்_தந்தை_பெரியாருடன் நேரடித் தொடர்பு இல்லை என்றாலும் அவரின் நகத்திகக் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டவர். எனவே இவர் #ஈழத்துப்_பெரியார் எனவும் அழைக்கப்பெற்றார்.
கந்த முருகேசனார் பல நூல்களை எழுதி வெளியிட்டிருந்தார். அவரின் 'நல்லை நாவலன் கோவை' 1930 ஆம் ஆண்டு எழுதப்பட்டாலும் 69 ஆண்டுகளுக்குப் பின்பே புத்தக உருவாக வெளிவந்தது.
ஈழத்துப் பெரியார் கந்த முருகேசனார் தமது 63 ஆம் அகவையில் 14.6.1965 இல் புகழுடம் பெய்தினார்

கந்த முருகேசனாரின் நினைவாக புற்றளை மகா வித்தியாலயம், புற்றளை சனசமூக நிலையம், மந்திகை சந்தி ஆகியவற்றில் முருகேசனாரின் உருவச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
வாழ்க வளர்க அன்னாரின் புகழ்

Sunday, March 29, 2020

உலர் உணவும் முதல் உதவிப்பொருட்களும் தவம்அறக்கட்டளை

நாமும் நம்மால் ஆனது செய்வோம்!
‐----‐-‐---------‐--------------------------------------------


தவம் அறக்கட்டளையினரால் உலர் உணவும் முதல் உதவிப்பொருட்களும் வழங்கப்பட்டன. ஒழுங்கு கவனிப்புக்கு நெல்லியடி பொலிசும் இராணுவமும் கிராம அலுவலரும் பணியில் இருந்தார்கள். பலவகையில் உதவிய யாழ்.நண்பர்கள் வட்டத்தினைச்சேர்ந்த நண்பர் Dr.சி.மோகன் அவர்களுக்கும் கிராம அலுவலர் க.ரதீசன் அவர்களுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் கிராமத்து இளைஞர்களுக்கும் தவம் அறக்கட்டளைச் செயற்பாட்டாளர் இ. சாள்ஸ் மற்றும் வை.திலக், அ.சாளினி அவர்களுக்கும் நன்றிகள். கூட்டமாக கூடாமல் எமது உறவுகள் ஒத்துழைத்தார்கள்.

Saturday, January 18, 2020

புத்தாடையும் பொங்கலுமென..
14.01.2020 அன்றைய தினம் எமது கரவெட்டி மேற்கு j363 கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட எழுபது குடும்பங்களுடன் புத்தாடையும் பொங்கலுமென மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டோம் . இதனை சாத்தியப்படுத்திய கிராம அலுவலர் கணேசராசன் ரதீசன் அவர்களுக்கும் பல்வேறு கிராம நல அமைப்பைச் சேர்ந்த அ.சாளினி, வை.திலக், ந.நகுலேஸ்,ல.பமிலன், சி.குரு, யோ.பிரசீலன், கா.ஜெயரஞ்சி, இ.சாள்ஸ் இன்னும் உறுப்பினர்களுக்கும் மான்புடை நன்றி. நிகழ்வில் யாழ் நண்பர்கள் வட்டத்தின் தலைவர் . Dr.சிதம்பரம் மோகன் அவர்களும் அதிபர் க.இராசரத்தினம் தம்பதிகளும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஒருங்கமைப்பு அனுசரணை தவம் அறக்கட்டளையினர்.