-கவின் மலர்-
கண்ணீரில்லாமல் யாராலும் ஆயிஷாவை வாசிக்க முடியுமா? நம் குழந்தைகளை கூட்டுக்குள் அடைக்கும் கல்வி முறையின் மீதான சாட்டையடி கேள்வியாக வெளிவந்த ஆயிஷா என்கிற அந்த குறுநூல் தமிழ் வாசர்களிடையே ஏற்படுத்திய அதிர்வு இன்னமும் மறைந்துவிடவில்லை. எங்கோ ஒரு மூலையில் அந்நூலை வாசித்து தினமும் ஒருவருடைய விழிகளில் நீர் கசியவே செய்கிறது. ஆயிஷா ஒரு லட்சத்துக்கும் அதிமான பிரதிகள் விற்று எப்போதும் சந்தையில் கிடைக்கும் நூலாக உள்ளது. அதன் ஆசிரியர் இரா. நடராசன் அந்த நூலுக்குப் பின் ஆயிஷா நடராசன் என்றே அறியப்படுகிறார். இந்த ஆண்டு குழந்தைகள் இலக்கியத்துக்கு வழங்கப்படும் பால சாகித்ய அகாடமி விருது அவருடைய ‘விஞ்ஞான விக்ரமாதித்யன்’ கதைகள்’ நூலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கென ஏராளமான நூல்களை எழுதியுள்ள இரா. நடராசன் தமிழ்நாடெங்கும் உள்ள குழந்தைகள் சிறுவர் நூல்களை வாங்கிப் படிக்கிறார்க்ள் என்கிற உண்மைக்குக் கிடைத்த அங்கீகாரமே தனக்குக் கிடைத்துள்ள விருது என்கிறார்.
நடராசன் கடலூரில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். ஆசிரியப் பணி, எழுத்துப்பணி இரண்டிலுமே மிகச் சிறப்பான முறையில் செயல்படும் நடராசனின் சொந்த ஊர் கரூர். கல்லூரியில் பயிலும்போது இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பணியாற்றியவர் மார்க்சியத்தின்பால் ஈர்க்கப்பட்டு, தொடர்ந்த தீவிர இலக்கிய ஈடுபாடு என்றிருந்தவரை 20 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் நடந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கக் கூட்டம் ஒன்றில் நடந்த சம்பவத்தால் குழந்தைகளுக்காக எழுதத் துவங்கியதாகக் கூறுகிறார். “சிறுவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளச் சொல்லிக் கொண்டிருந்தோம். அப்போது எழுந்த ஒரு சிறுவன் என்ன புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்று கேட்டான். அப்போது பதில் சொல்ல திண்டாடிப்போனோம். இதுவே என்னை குழந்தைகளுக்காக எழுதத் தூண்டியது” என்கிறார்.
இவருடைய முதல் நூல் நாகா. அன்று தொடங்கி இன்று வரை இவர் எழுதிக்குவித்தவைகளில் சிறுகதைகள், நாவல்கள், அறிவியல் புனை கதைகள், அறிவியல் நூல்கள் என்று அனைத்தும் அடக்கம். “குழந்தைகளுக்காக எழுதுவதில் சிரமங்கள் பல உண்டு. மொழி முதலில் கைவரவேண்டும். ஒரு ஊர்ல ஒரு மகாராஜா என்று தொடங்கினால் அடுத்து அவருக்கு இத்தனை மனைவிகள் என்று எழுதினால் அது பெரியவர்களுக்கான எழுத்து. இதையே குழந்தைகளுக்கு எழுதினால் மகாராஜா குண்டானவரா ஒல்லியானவரா என்று எழுதவேண்டும்.” என்கிறார்.
