Thursday, April 14, 2022

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலித்த மக்கள் கலைஞன் பாலசிங்கம்

 -பானு பாரதி-

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலித்த மக்கள் கலைஞனுக்கு கண்ணீருடன் சிரம் தாழ்ந்த அஞ்சலிகள்

பாலசிங்கண்ணனை நான் முதல் முதலில் பார்த்தது ஒரு நாடக மேடையில்தான். 75 காலப்பகுதி என நினைக்கின்றேன். எங்களது ஊர்க்கோவிலின் முன்றலில் அவரது நாடகக் குழுவினருடன் "சமுதாய மாற்றத்திலே" என்ற நாடகத்தை மேடையேற்றியிருந்தார். நாடகம் சாதி ஒடுக்குமுறையைக் கருப்பொருளாகக் கொண்டிருந்தது. முழு நாடகமும் நினைவில் இல்லை என்றாலும், கிராமத்தில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்கின்ற இளைஞனாக மேடையில் தோன்றி, "சாதித்திமிருடன் வாழும் தமிழன் ஓர் பாதித் தமிழனடா" என கணீரென்ற குரலில் அவர் பாடியது இன்னமும் பசுமையாக நினைவில் உள்ளது.
பின்னர் தொழில் காரணமாக எங்களது ஊரில் அவர் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். இந்தக் காலப்பகுதிகளில்தான் கிராமிய உழைப்பாளர் சங்கத்தில் தோழர்கள் கௌரி காந்தன், சின்னராசா, ராஜரட்ணம், ஜெகநாதன், சிறீதரன், மகாலிங்கம், தங்கராசா இவர்களுடன் இணைந்து யாழ் செம்மண் பிரதேசத்துக் கிராமங்கள் தோறும் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும், சமூக மாற்றத்தை முன்னிறுத்தியும் மக்களை ஒன்று திரட்டி களப்பணிகளில் ஈடுபட்டார்.
பாலசிங்கண்ணன், சின்னராசா, ஜெகநாதன், ராஜரட்ணம் இவர்களுக்குள் நடக்கும் விவாதங்களை மிக அருகிருந்து பார்த்திருக்கிறேன். . உரத்த குரலில் மிகவும் காட்டமாக அந்த விவாதங்கள் நடந்தன. அந்தக் கோபமும், தீவிரமும், கருத்து மோதல்களும் விவாதங்களின் முடிவில் காணாமல் போய்விடும். இவர்களுக்கிடையேயான விவாதங்களின் தீவிரத்தைப் பார்த்துப் பயந்த அதேவேளைகளில் விவாதங்களின் முடிவில் அவர்களிடையேயான தோழமையையும், நேசிப்பையும் கண்டு வியந்தும் போயிருக்கிறேன்.
பின்னாளில், அவரோடு இணைந்து பணியாற்றும் போது கிடைத்த அநுபவங்கள் என்றும் மறக்க முடியாதவை. அவரிடமிருந்து கற்றுக் கொண்டவைகள் ஏராளம். கிராமியக் கலைக்குழுவோடு இணைந்து "சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்" நாடகத்தை கிராமங்கள் தோறும் மேடையேற்றினோம். அந்தப் பணிகளின்போது நீண்ட தூரங்கள் கிராமங்கள் தோறும் அவரோடு பயணித்திருக்கின்றேன். அந்தப் பயணங்களின்போது வேறு வேறு நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டங்களினது வரலாறுகள் பற்றியும், எங்களது விடுதலைப் போராட்டம் பற்றியும் விபரித்துக் கொண்டே வருவார். அவரிடமிருந்து கற்றுக் கொண்டவை ஏராளம்.
அவ்வப்போது எனக்கு குழப்பங்கள், சிக்கல்கள் ஏற்படும்போது, சிறு குழந்தையைப் போல அடிக்கடி அவர் முன்பு ஓடிப்போய் நின்றிருக்கின்றேன். அவரும் ஒரு தந்தைக்குரிய அன்போடும் அக்கறையோடும் எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டு எனது குழப்பங்களுக்கு பதிலளிப்பார். அவரது பாசறையில் வளர்ந்தவள் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் எனக்கு எப்போதும் உண்டு.
சிறந்த நாடகாசிரியர், சிறந்த நெறியாளர். பல நாடகப் பிரதிகளை எழுதி மேடையேற்றி இருக்கின்றார். ஒவ்வொரு தடவையும் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள் நாடகம் மேடையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது, ஒவ்வொரு பாத்திரங்களும் அவரது முகத்தில் மாறி மாறி பிரதிபலித்தபடியே இருக்கும். இந்த அதிசயத்தை ஒவ்வொரு முறையும் நான் அநுபவித்திருக்கின்றேன். அந்நாடகத்தில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் அவரது முகத்தில் இடம் பெறுவார்கள். அவரே சின்னப்பண்னையாகவும், நாகலிங்கமாகவும், கந்தையாவாகவும், சின்னம்மாவாகவும், குமாராகவும் கணப்பொழுதில் மாறிக்கொண்டே இருப்பார்.
ஒரு சிறந்த நெறியாளனுக்குரிய பண்பு அது.

மிகவும் துயரமான விடயமென்னவெனில், சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள் ஆவணப்பிரதியாக்க நாங்கள் எடுத்த முயற்சிகள் அப்போதிருந்த நாட்டு நிலமைகளால் செயற்படுத்த முடியாமல் போய் விட்டது. அவரைப் புறந்தள்ளி ஈழத்துத் தமிழ் நாடக வரலாறு என்பது முழுமை பெற முடியாது.
2018ல் ஊருக்கச் சென்றிருந்த போது அவரைச் சந்தித்திருந்தேன். யுத்தகால நெருக்கடியான வாழ்வனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அத்தனை அவலங்களுக்கும் இழப்புக்களுக்கும் நேரடியாக முகம் கொடுத்திருந்தபோதும், அதே உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் தொடர்ந்து சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடுவதில் அவர் காட்டிய அக்கறை என்னை ஆச்சரியப்பட வைத்தது.
மீண்டும் 2019ல் அவரைச் சந்தித்தபோது அவர் தளர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. வழமையாக அவரிடம் இருக்கும் உற்சாகம் குன்றி மிகவும் தளர்ந்து போயிருந்தார். எதுவும் செய்ய முடியாத கையறு நிலமையில் இருப்பதாக மிகவும் வருத்தப்பட்டார்.
தங்கா அக்காவிற்கு எத்தகைய ஆறுதலைச் சொல்வதென திகைக்கிறேன். அவரது பயணத்தில் எல்லாக் காலமும், எல்லாத் துன்பங்களிலும்,எப்போதும் உடனிருந்தும், இணைந்து பயணித்தவர். எனது கண்ணீரையும் அன்பையும் அவரோடு பகிர்ந்து கொள்கின்றேன்.