Sunday, August 31, 2014

மாதொருபாகன் - பாலியலின் ஒரு ரகசியக் கதவு

-சுரேஷ் கண்ணன்- 

பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்' புதினத்தை வாசித்தேன்.

இதன் உள்ளடக்கம் காரணமாகவே இந்தப் புதினம் தமிழ் சமூகத்தில் மிக அதிகமான சர்ச்சைகளையும் அதன் மீதான உரையாடல்களையும் அதன் மீதான கலாசார தெளிவுகளையும் பெற்றிருக்க வேண்டும். அதுவே இந்த நூலின் வெற்றியாக அமைந்திருக்க முடியும். ஆனால் அப்படியேதும் நடைபெறாதது நம்முடைய வாசிப்பின் போதாமையையும் ரசனை வறட்சியையுமே சுட்டுகிறது. ஒரு சமூகக் குழுவின் கலாசார பின்புலத்தையும் அதன் தொன்மத்தையும் வரலாற்றுக் குறிப்புகளையும் ஒரு புனைவின் பாவனையில் கடந்து செல்வது மிக சிக்கலானதொரு பணி. பெருமாள் முருகனின் பல படைப்புகள் இந்தக் கடினமான பணியை இலகுவான மொழியில் சாத்தியமாக்குகின்றன. திருமணமாகாமல் தட்டிக் கொண்டே போகும் ஒரு கவுண்டர் சமூகத்து இளைஞனின் உளச்சிக்கல்களை இதற்கு முந்தைய 'கங்கணம்' என்கிற நாவல் விளக்கிச் செல்கிறது என்றால் 'மாதொருபாகன்" குழந்தைப் பேறில்லா ஒரு தம்பதியினர் எதிர்கொள்ளும் சமூக மற்றும் உளச்சிக்கல்களை விவரித்துச் செல்கிறது.

Tuesday, August 26, 2014

சட்டங்களும் சம்பிரதாயங்களும்

-தேவா (ஜெர்மனி )-
சட்டங்கள் பாராளுமன்றங்களில் விவாதிக்கப்பட்டு, பெரும்பான்மை வாக்குகள் பெற்று அமுல்ப் படுத்தப்படுகின்றன. லஞ்சம் புரளும் நாடுகளில் சட்டம்  அமுல்படுத்தப்படுகின்றனவா  என்ற கேள்வி ஒரு கேள்விக்குறியாகவே  இருக்கிறது. ஐனநாயகநாடுகளில் சட்டங்கள் முறைப்படி செயல்படுத்த முடிகின்றது. மதக்கொள்கைகளை அடிப்படையாக கொண்ட அரசுகள், சமயநூல்களின் எழுதப்பட்டுள்ள முடிபுகளை சட்டங்களாக மாற்றி தீவிரமாக செயல்படுத்துகின்றன.
எப்படியோ சட்டங்கள் மக்களுக்கு மேலே ஏற்றப்படுகின்றன. ஐனநாயக நாடாய் இருந்தாலும், சர்வாதிகாரமான நாடாய் இருந்தாலும், சட்டங்கள் நடைமுறைப்படுத்த படுகின்றன. ஒரு அரசு வாழ்வதற்கு அதனுடைய முதுகெலும்பாய் சட்டங்கள் தேவைப்படுகின்றன. மக்களுக்கு மேல் நிர்வாகம்  திணிக்கப்பட்டிருப்பினும், மக்கள் தம்மை வழிநடத்திசெல்ல ஒரு தலைமையை ஏற்றுக்கொள்கின்றனர். தலைமை, அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டது. மக்கள் குழுக்களாக வாழத் தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த நடைமுறை பல்வேறு வடிவங்களாகி மாறி இருப்பினும் அடிப்படைத்தோற்றம் அங்கேயே நிற்கிறது

Sunday, August 24, 2014

யுவபுரஸ்கார் விருதினை ஒட்டி சில எண்ணங்கள்

-அபிலாஷ் சந்திரன்-
சாகித்ய அகாதமியின் சார்பில் இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் யுவ புரஸ்கார் விருதுக்கு, 21 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், கால்கள் என்ற படைப்புக்காக, எழுத்தாளர் .அபிலாஷும் இடம்பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளிப் பெண்ணின் வாழ்க்கையைச் சொல்கிறது கால்கள் நாவல். உயிர்மை பதிப்பகம் இந்நாவலை 2012ல் வெளியிட்டது. விருது பற்றி அபிலாஷ் பேசும்போது, ‘இளம்படைப்பாளிகள் வெகுஜென கவனம் பெற இதுபோன்ற விருதுகள் உதவும்’ என்று தெரிவித்தார். அபிலாஷ் ஆங்கில இலக்கியத்தில் ஆய்வு பட்ட மாணவர். நாவலோடு கவிதை, கட்டுரைகள் என பல தளங்களில் எழுதிவருகிறார்.
இவ்வருடத்திற்கான சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது தமிழில் எனக்கு “கால்கள்” நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது.
நான் பெறும் முதல் விருது இது. ஒருவேளை கனவோ என அரைநாள் யோசித்துக் கொண்டிருந்தேன். யாராவது என்னை வைத்து வேடிக்கை பண்ணுகிறார்களோ என சஞ்சலம் தோன்றியது. பிறகு மெல்ல மெல்ல என்னையே நான் நம்ப வைத்தேன்..
இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் சில முக்கிய சம்பவங்களை, நபர்களை நினைத்துப் பார்க்க விரும்புகிறேன்.

ஒன்று தக்கலை கலை இலக்கிய பெருமன்றம். அது தான் என் இலக்கியப் பள்ளி. பதினான்கு வயதில் கணக்கு டியூசனுக்காக ஹமீம் முஸ்தபாவின் புத்தகக்கடையின் ஒரு பகுதியாக இருந்த வகுப்புக்கு போய்க் கொண்டிருந்தேன். முஸ்தபா அப்படித் தான் நண்பரானார். ஒருநாள் மாலையில் அங்கு மாலையில் நடக்கும் கலை இலக்கிய பெருமன்ற கூட்டத்தில் எதேச்சையாக பங்கேற்றேன். எந்த இலக்குமின்றி வாழ்வில் பிடிப்பின்றி இருந்த காலகட்டம் அது. இந்த கூட்டங்கள் வழி நிறைய நல்ல நண்பர்கள் வாய்த்தார்கள். அந்த வயதில் பொன்னீலன், என்.டி ராஜ்குமார், நட.சிவகுமார், ரசூல் போன்ற எழுத்தாளர்கள், அனந்தசுப்பிரமணியம், சொக்கலிங்கம் போன்ற கோட்பாட்டாளர்கள் வழி இலக்கியம், கோட்பாடுகளை அறியக் கிடைத்தது ஒரு பெரும் அதிர்ஷ்டம்.

Wednesday, August 20, 2014

பாலஸ்தீனத்திலிருந்து அமெரிக்க பெண் ஊடகவியலாளரின் நெஞ்சையுருக்கும் இறுதிப்பதிவு

இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப் படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், ரச்சேல் ஹோரி தன் பெற்றோர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து… சில பகுதிகள்!
நான் பாலஸ்தீனத்துக்கு வந்து சரியாக இரண்டு வாரங்களும் ஒரு மணி நேரமும் ஆகி விட்டது. ஆனால் இங்கே நான் காண்பதை உங்களுக்கு விவரிக்க, அதாவது அமெரிக்காவுக்குப் புரிய  வைக்க வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன்.
குண்டுகளால் துளைக்கப்பட்ட வீட்டுச் சுவர்கள், கழுகுப் பார்வையால் கண்காணிக்கும் இராணுவம் – இவையிரண்டும் இல்லாத ஒரு வாழ்க்கையை இங்குள்ள குழந்தைகள் வாழ்ந்ததேயில்லை. இருப்பினும் “வாழ்க்கை என்பது எல்லா இடங்களிலும் இந்த மாதிரி இல்லை” என்பதை இங்குள்ள சின்னஞ்சிறு பிள்ளைகள் கூடப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
நான் இங்கே வந்து இறங்குவதற்கு இரண்டு நாட்கள் முன் ஒரு 8 வயதுச் சிறுவனை இசுரேலிய இராணுவம் சுட்டுக் கொன்று விட்டது. “அவன் பெயர் அலி” என்று என்னிடம் கிசுகிசுக்கிறார்கள் இங்குள்ள குழந்தைகள். “ஷரோன் யாரு – புஷ் யாரு” என்று அரபியில் அவர்கள் கேட்க, “ஷரோன் கிறுக்கன் – புஷ் கிறுக்கன்” என்று நானும் எனக்குத் தெரிந்த அரபு மொழியில் பதில் சொல்கிறேன். அரபு மொழியை இப்படித்தான் எனக்குக் கற்றுத் தருகிறார்கள் இந்தச் சிறுவர்கள். உலக அரசியலின் அதிகாரம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நான் முன்னர் புரிந்து வைத்திருந்ததைக் காட்டிலும் இங்கே இருக்கும் 8 வயது வாண்டுகள் தெளிவாக அறிந்திருக்கிறார்கள்.

Sunday, August 10, 2014

சம்ஸ்கிருத (வார)த்தை நாம் ஏன் எதிர்க்கிறோம்

- க.திருநாவுக்கரசு-
மத்திய அரசு சமீபத்தில் இந்தியைத் திணித்தார்கள். தமிழக மெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. தலையை உள்ளே இழுத்துக் கொண்டு ஏதோ சமாதானம் சொன்னார்கள். இப்போது சமஸ்கிருத வாரம் கொண்டாடும் படி மத்திய அரசுப் பள்ளிக்கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அந்தக் கொண்டாட் டத்தை ஆகஸ்ட் 7 முதல் 13-ஆம் தேதி வரை கொண்டாட வேண்டுமாம்! அந்த சுற்றறிக்கையின் தொடக்கமே எல்லா மொழிகளுக்கும் தாய் சமஸ்கிருதம் என்று எழுதப்பட்டு இருக்கிறது.
சுஷ்மா சுவராஜூம், உமா பாரதியும் சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளட்டும். அதன் மூலம் அவர்கள் கட்சிக்காரர்களும், அவர்களும் இறும்பூது எய்தட்டும். நமக்கு கவலையில்லை.
கடந்த ஜூலை 19-ஆம் தேதி இந்து ஆங்கில நாளேட்டில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதாவது பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் போலோ என்பவர் நாடாளுமன்ற சபாநாயகரான சுமித்திரா மகாஜனை சமஸ்கிருத மயமான இந்தியில், நீங்கள் உங்கள் இருக்கையில் அமர்ந்து இருக்கிறபோது கடவுளைப் போல இருக்கிறீர்கள் என்று கூறினார்.
இப்படிப் பாராட்டியபோது எல்லா உறுப்பினர்களும் நிலை குத்தி நின்று விட்டனர். அவர் பாராட்டிய அந்த மூன்று வரிகளில் சமஸ்கிருதம், இந்தி, உருது அடங்கி இருந்தது என்று இந்து தெரிவிக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட்கட்சியில் பொது வாழ்க்கையைத் தொடங்கிய போலே காங்கிரசுக்குச் சென்றார். அதன் பிறகு ராஷ்டிரிய ஜனதா தளத்தில் சேர்ந்தார். பீகார் சட்டமன்றத்தில் எட்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இப்போது பா.ஜ.க.வில் இருக்கிறார். சமஸ்கிருதத்தில் பேச முயல்கிறார். முழு பா.ஜ.க. வாக பயிற்சி எடுக்கிறார். இதிலும் நமக்குக் கவலையில்லை. சமஸ் கிருதத்தில் பேசுகிறார்கள்;

Friday, August 01, 2014

விடுதலைக் குரல் வழிந்தோடும் சிம்பொனி.

-நாவுக் அரசன்-

அண்மையில் பின்லாந்து சும்மா சுற்றிப் பார்க்கப் போன போது,கொஞ்சம் சீரியஸ் ஆக பார்க்க நினைத்த ஒரு இடம் " பின்லான்டியா " என்ற ஒரு சிம்பொனி இசை வடிவத்தை இசை அமைத்த ஜோன் சிபிலிஸ் என்ற பின்லாந்து நாட்டவரின் நினைவிடம்.  அந்த நாட்டின் தலை நகரம் ஹில்சின்கியில் உள்ள அவரின் வீட்டை. வார இறுதி விடுமுறை நாளில் போனதால் தற்சமயம் முயூசியம் ஆக்கப்பட்டுள்ள  அவரின் அந்த வீடு மூடி இருந்தது. 
" பின்லான்டியா " சிம்பொனி எவளவு அதிசயமோ, அவளவு அதிசயம் அதை இசை அமைத்த ஜோன் சிபிலிஸ் இன் வாழ்க்கை, அதைவிட அதிசயம் அதை இசை அமைக்க அவர் பட்ட கஷ்டம். அதன்  பின்னால் உள்ள அடக்குமுறை சர்வாதிகார  பழிவாங்கல்கள். பிராந்திய வல்லரசுகளின் அட்டகாசம்.


பொதுவாக நாடுகள் சுற்றிப் பார்க்கப் போனால் அந்த நாடுகளின் பெண்டுகளை வேடிக்கை பார்பது தான் எப்பவும் முக்கியமா இருக்கும். கொஞ்சம் அங்கே இங்கே  படித்த உலக விசியங்களை நேரம் இருந்தால் ஆர்வக்கோளாரில நோண்டிப் பார்ப்பது." பின்லான்டியா "  என்ற பெயரில் ஒரு மயக்கும் வோட்கா குடிவகை உலகப் பிரசித்தம் என்று என்னைப் போன்ற கவுரவமான பெருங் குடிமக்களுக்கு நல்லாத் தெரியும்,ஆனால் அந்த " பின்லான்டியா " என்ற பெயரில் வோட்காவை விட மயக்கும்  ஒரு  உலகப் புகழ்  சிம்பொனி இருக்கு எண்டு பலருக்கு தெரியாது. அதுக்கு முக்கிய காரணம் அதை உருவாக்கியவர் வாழ்ந்த பின்லாந்து வடக்கு ஐரோப்பாவின் தொங்கலில் ,பால்டிக் கடல் விளிம்பில் உள்ள பின்லாந்து அதிகம் சென்ற நுற்றாண்டில்  மத்திய ஐரோப்பா கவனிக்கப்பட்ட அளவு கலை இலக்கிய வெளிச்சம் அதன் மீது விழாமல் இருந்தது எண்டு நினைக்கிறன். வெறும் எட்டு நிமிடம் மட்டும் இசைக்கப்படும் " பின்லான்டியா " மூலம் அந்த வெளிச்சத்தை இன்று உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள் மீது தாராளமாகவே வீச வைத்தார் ஜோன் சிபிலிஸ்.