- கரவைதாசன் -
யாழ் புங்கங்குளம்வீதி பாண்டியந்தாழ்வை
பிறப்பிடமாக கொண்டு நெதர்லாந்தில் வாழ்ந்து வந்த "நகைச்சுவை சிங்கம்"
தம்பிமுத்து தவரத்தினம் அவர்கள் பிரான்சில் 24.06.2012 இறப்பெய்தினார்.
சிறந்த நாடகநடிகர், நாடக கதாசிரியர் வசனகர்த்தா, நாடக இயக்குநர்,
சிலைவடிக்கும் சிற்பி, பயிற்றப்பட்ட கடச்சல் தொழில் நிபுணர், முகாமைத்துவப்
பொறுப்பாளர் எனப் பல்வேறு பரிமாணங்களையும் ஆளுமைகளையும் தன்னகத்தே கொண்ட
ஒரு உன்னத கலைஞன் அந்நிய தேசமொன்றில் யாருமறியாச் சக மனிதனாய் மரிணித்து
போவது போலோரு கொடுமை, வேறெந்த மொழிச் சூழலிலுமில்லை.
காட்டுவிளைச்சலாய் வியாபித்துப் போயிருக்கும் தமிழ்பேசும் பெரும்
ஊடகங்களுக்கு இச்செய்திகள் எட்டுவதில்லைதான். பல்வேறுபட்ட அரசியல்
காரணிகளினால் இவரைப்போன்ற பலரின் சுவடுகள் புகலிடச் சூழலில் அறியாப்
பொருளாய் அற்ப மனிதர்களாய் மறைந்து போதல் உண்மையில் கொடுமை! வரலாற்றின்
சில பக்கங்களைத்தன்னும் நம்மால் முயன்று பதிதல் வேண்டும். இல்லையேல்
அஃது இவர்களது சாவின் கொடுமையிலும் கொடுமையாய் அமைந்துவிடும்.
ஈழத்தில் அளவெட்டியில் தம்பிமுத்து கனகம்மா தம்பதிகளின் தலை மகனாக
நண்பர் தவரத்தினம் அவர்கள் 05.10.1950ம் ஆண்டு பிறந்தார். அவரது ஆரம்பக்
கல்வியை பாசையூர் சென்யோசாப் கல்லூரியில் ஆரம்பித்த அவர், தொடர்ந்து
கொழும்புத்துறை இந்துமகா வித்தியாலயத்தில் தனது இடைநிலை கல்வியினை
கற்றார். முத்திரைச் சந்தி புரோ மோட்டார் கொம்பனியில் தொழில் கல்வியை
கற்றுக் கொண்டு அங்கேயே முகாமைத்துவப் பொறுப்பாளராக கடமையாற்றினார்.
இடையே யாழ் அத்தியடியில் இயங்கி வந்த ஸ்கைலாக் என்ஜினியரிங் கொம்பனியிலும்
அதே தொழிலில் இருந்தார். யாழ் பாண்டியந்தாழ்வை சேர்ந்த லில்லி மலர் என்ற
பெண்ணை காதல்மணம் புரிந்து இனிய காதலின் பேறாக சேர்ஜன், ஷர்மிலி, தமிழினி, மதீபன் என நான்கு பிள்ளைகளை பெற்றார்கள்.
சிறுவயதினிலேயே யாழ் கொழும்புத்துறையைச் சேர்ந்த நாடக இயக்குநர் தலைவர்
அருளானந்தம் அவர்களின் "இறுதிவார்த்தை" எனும் சமூகநாடகத்தில் நடித்து,
தனது கலைப் பயணத்தினை தொடர்ந்த இவர். முடிவில் ஓர் ஆரம்பம், பரந்தர்
பத்தாயிரம், அன்பின் பெருமை,பரிவும் பிரிவும், சிட்டுக்குருவி, நான் ஒரு
பெக்கோ, மாலிக்கபூர், பிஞ்சகடகம் என பல்வேறுபட்ட நாடகங்களில் சிறுவன்,
பெரியவன், அரசன், ஆண்டி ,கோமாளி என வேறுபட்ட பாத்திரங்களில் தோன்றி
நடித்துள்ளார்.