Saturday, February 27, 2016

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 3 - 4 - 5 )

-விஜய பாஸ்கரன்-

இரத்தினம் மீது கொண்ட அபிமானம் காரணமாகவே டானியல் பஞ்சமர் நாவலை மந்துவிலை வைத்து இரத்தினம் என்ற பாத்திரத்தை கொண்டுவந்தார்.அவர் பற்றிய சில தகவல்கள்.
இரத்தினம் மிக உயரமான திடகாத்திரமான மனிதர்.அவருடன் யாரும் சண்டை போட்டு வென்றதில்லை.எப்போதும் எதிரிகளுடன் சமாதானமாகவே பேசுவார்.யாருடனும் கும்பலாக தாக்குவதில்லை.அவருக்கும் பல சகாக்கள் இருந்தனர்.அவரகளை சண்டை போட அனுமதிப்பதில்லை .
இவர் இல்லாவிட்டால் தமிழரசுக்கட்சி சாவகச்சேரியில் கால்பதித்திருக்க முடியாது.காங்கிரஸ் கட்சியின் அடாவடித்தனங்களை தன் நண்பர் அய்யாவின் நட்புக்காக முறியடிக்க உதவியவர்.இவரின் உடல் பலத்துக்கும் துணிவுக்கும் எல்லோரும் அஞ்சி நடந்தனர்.பல எதிரிகள் இவரை பொலிஸ்காரன் போல கண்டு ஓடினர்.
எமது ஊரில் வெள்ளாள சாதியைச் சேர்ந்த விதானை ஒருவர் மகன் கோவியரகளோடு ஏற்பட்ட தகராறில் ஒரு கோவியரை அடித்துக் கொலை செய்து விட்டார்.அங்கே கோவியரை யாரும் பகைத்து வாழ முடியாது.கொலை செய்தவர் தலை மறைவாகிவிட்டார்.அங்கே வெள்ளாளர் ஒருவர் இறந்துவிட அவரின் சடலத்தை சுடலைக்கு எடுத்துச்செல்ல கோவியர்கள் தடுத்தனர்.வெள்ளாளரால் அவர்களை மிஞ்ச முடியவில்லை .அவரகளில் வரதர், என்பவர் இரத்தினத்திடம் கள் அருந்துபவர்.அவர் மூலமாக இரத்தினத்தின் உதவியை வெள்ளாளர் நாடினர்.
இரத்தினம் தனியாக அங்கு சென்று பிணத்தை அவர்கள் காவிவர அவர் முன்னே சுடலைவரை சென்று ஈமக்கிரியைகளை முடிக்க உதவினார்.எவரும் ஒரு எதிர்பைக் கூட காட்ட துணியவில்லை.
இப்படி இன்னும்பல கதைகள் அவரைப் பற்றி ஊரில் உண்டு.அன்றைய பல போராளிகள் மந்துவில் என்றாலேயே இரத்தினத்தை விசாரிப்பார்கள்
இந்தப் போராட்டமானது பொது இடங்களில் சம உரிமைகோரி நடத்தப்பட்டது.தனிப்பட்ட ரீதியில் யாருடனும் பகை தீர்க்க இல்லை.சாதிவெறியர்கள் பகை தீர்பதிலேயே குறியாக நின்றனர்.எமது கிராமங்களைச் சுற்றி பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட சாதியினர் இருந்தனர்.ஆனாலும் பங்குபெற முன்வரவில்லை.தார்மீக ரீதியாக பல பொருளாதார ஒத்துழைப்புகளை மானாவளை பகுதியினர் வழங்கினர்,.கொடிகாம்ம்,மிருசுவில்,வரணி, அல்லாரை, வேம்பிராய் போன்ற இடங்களில் அதிகமாக சிறுபான்மை தமிழர்கள் இருந்தும் ஆதரவளிக்க தயங்கினர்.இதேபோலவே சங்கானையிலும் நடந்தது.அங்கேயும் சங்கானை ஒரு பகுதியினர்,சண்டிலிப்பாய் போன்ற இடங்களின் ஒத்துழைப்பு குறைவாக இருந்தது.நிச்சாம்ம் மட்டும் தனியே களமாடியது.
இப்போராட்ட காலத்தில் இரத்தினத்தை கொலை செய்ய எடுத்த முயற்சிகள் யாவும் தோற்றன.ஒரு தடவை அவர் தென்னைமரத்தில் இருந்தபோது கொல்ல முயற்சித்தனர்.அது ஓரளவ உயரமான மரம்.குதிக்க முடியாது.யாரையும் அழைக்கவும் முடியாத தூரம்.வேறு வழி இல்லை.அவர் கவனிகாத்துபோல் நின்று தென்னை ஓலையின் வழியாக கொலையாளிகள் நடுவே உருவி வீழ்ந்தார்.எல்லோரும் பயந்து அலறி ஓடிவிட்டனர்.
அதன்பின் மிகுந்த எச்சரிக்கையுடன் கைத்துப்பாக்கி சகிதமாக திரிந்தார்.அவரிடம் துணிவு இருந்தபோதும் தன்னை எப்படியும் கொல்வாரகள் என திடகாத்திரமாக நம்பினார்.ஆனால் பயம் அவரை நெருங்கவில்லை.அவரின் வீடு ஊர் எல்லையில் இருந்தபோதும் அங்கேயே உறங்குவார்.சாதிவெறியர் பகுதிக்குள்ளால் தனியாக போய் வருவார்.
இரத்தினம் கொலை முயற்சிகள் யாவும் தோல்வி கண்டதை அடுத்து ஊரையே பழிவாங்க திட்டம் போட்டார்கள்.இவரகளுக்கு முன் எச்சரிக்கையாக எமது ஊரவர்கள் இரவு வேளைகளில் தெருக்கள்,பற்றைகள் எல்லாம் இரவுகளில் வலம் வந்தனர்.இதனால் இலகுவாக திட்டம் தீட்ட முடியவில்லை.இதை அறிந்த அவர்கள் பொலிசார் உதவியை நாடி நமது ஊரவர்களை சோதனைகள் போட வைத்தனர்.எமது ஊரில் எல்லைகளில் தமிழ் பொலிசார் நடமாடி அவர்களைக் பாதுகாக்க உதவினர்.
ஒரு தடவை திட்டம் தீட்டி எல்லையில் நின்றபோது எமது இளைஞர் ஒருவரின் காதலி கோவியர் சமூகத்தை சேர்ந்தவர்.அவர் மூலமாக தகவல் கிடைக்க எமது ஊரவர்கள் அணி அணியாக செல்ல அவரகள் ஓட்டம் பிடித்தனர்.
இரண்டாவது தடவை அவரகள் இருட்டோடு இருட்டாக ஓரிடத்தில் எமது ஊரை தாக்க தயாராக நின்றனர்.இதை அறிந்த கொடிகாம்ம் அய்யாவின் தம்பி தபால் சாமி என்பவர் தகவலை பரிமாற்றங்கள் செய்ய வசதியற்ற காரணத்தால் தன் வீட்டில் உள்ள துப்பாக்கியால் வெடி வைத்து எம்மவரகளை உசாராக்கினார்.எம்மவரகள் ஆயதங்கள் எதுவுமின்றி அவ்விடம் செல்ல அவர்கள் வேலி ஒன்றைக் கொழுத்தி விட்டு தன் பின நின்று துப்பாக்கி பிரயோகம் நடாத்தினர்.எம்மவரகள் படுத்துக் கிடந்தனர் .ஓடவும் முடியாது போராடவும் முடியாத நிலை.
இந்நிலையில் ஏனையவர்கள் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு அவ்விடம் வந்தார்கள்.எதிரிகளின் சரியான திசையை பார்க்க நெருப்பு பகை தடையானது.அவரகளின் குறி இவர்களை நோக்கி சரியாகவே வந்தன.இதைக் கேட்ட ஒரு 18 வயது இளைஞரும் புறப்பட்டு வந்தார்.அவருக்கு ஊர் எல்லையிலுள்ள வீட்டில் வைக்கப்பட்ட துப்பாக்கி தெரியும். அதை எடுத்து வரும்போது ஒரு மரத்தில் இருந்து டோரச் லைற் ஒளி எமது ஊரவர்கள் மீது விழுவதை அவதானித்தார்.அந்த இருட்டிலும் அவர் குறி தவறவில்லை.அங்கிருந்து ஒருவர் அலறி வீழ்ந்தான்.அத்துடன் எதிரிகள் நிலை குலைய வேலையைத் தாண்டி எமது ஊரவர்கள் அவர்கள் பகுதிக்குள் நுழைந்தனர்.பலர் வெடிகாயங்களுடன் தப்பி ஓடினர்.எம்மவரும் எந்த காயமும் இன்றி தப்பி வந்தனர்.
மறுநாள் இறந்த இளைஞன் யாரென்று அடையாளம் கண்டனர்.அவரதான் இரத்தினத்தால் எச்சரித்து அனுப்பப்பட்ட நவரத்தினம்.வெள்ளாள சமூகத்தவர்.நம்மை எச்சரித்து துப்பாக்கி வெடி வைத்தவர் தபால் சாமி.இவர் கோவியர் கொடிகாம்ம் அய்யாவின் தம்பி. பின்னர் சாமியின் வீட்டைக் கொழுத்தி அவரை ஊரை விட்டு காலிபண்ண வைத்தனர்

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்( பகுதி 2)

-விஜய பாஸ்கரன்-

இந்தப் போராட்டத்தை அச்சுவேலியிலும் தொடங்க சிலர் முன் வந்தனர்.அங்கே பெரிய சமூகமாக பொருளாதார பலத்துடன் இருந்தாலும் போராட யாரும் முன் வரவில்லை .அங்கேயும் கோவியர் சமூகத்தைச் சேர்ந்த தவராசன் என்பவன் தலைமையில் சாதி வெறியர்கள் அணி திரண்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவான சக்திகள் எமக்கு 5 துப்பாக்கிகளை அன்பளிப்பாக வழங்கினர்.இதில் மூன்றை எமது ஊரவரகளும் இரண்டை அச்சுவேலிக்கும் கொடுக்கப்பட்டது.அச்சுவேலி புத்திசாலி வீர்ர்கள் அதை கிணற்றில் போட்டு மறைத்து வைத்திருந்தனர் .சில நாட்களின் பின் எடுத்தபோது அவை கறள்பட்டு செயலிழந்து விட்டன.
எம்மிடம் தரப்பட்டவை மிக அப்பாவிகள் சந்தேகத்துக்கு இடமில்லாத ஊர் எல்லையை அண்டிய வீடுகளில் ஒழித்து வைக்கப்பட்டன.

இக் காலகட்டத்தில் சங்கானை அச்சுவேலி மற்றும் பல பகுதிகளைச் சேர்ந்த போராட்ட ஆர்வலர்கள் எமது ஊருக்கு வந்து போவார்கள்.இவரகளை இணத்துச் செயற்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சியினரும் வந்து போவார்கள்.இது சம்பந்தமான கலந்துரையாடல்கள் எமது ஊர் பாடசாலைகளில் நடக்கும்.இது எமது ஊரின் மையப் பகுதிதான்.

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி1)

-விஜய பாஸ்கரன்-

1966ம் ஆண்டு சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவோடு தொடங்கப் பட்ட போராட்டத்தில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது .இதை எமது பகுதியில் முன்னெடுக்க மீசாலை வடக்கு வேம்பிராய் பாரதி வாசிகசாலையில் ஒரு கருத்தரங்கை அப்பகுதி மக்கள் நடத்தினர்.இதற்கு எமது ஊருக்கும் அழைப்பு விடுத்தனர்.இதில் முன்னாள் பனம்பொருள் அபிவிருத்திச் சபைத் தலைவர் நடராசா இரத்தினம் என்பவரையும் அழைத்துச் சென்று கலந்துகொண்டார் .இந்தப் போராட்டத்தை இரத்தினத்தை தலைமை தாங்குமாறு வேண்டிக் கொண்டனர்.மிகுந்த தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டார்

மீசாலை பள்ளர் சமூகத்தையும் மந்துவில் நளவர் சமூகத்தையும் கொண்டது.மீசாலையைச் சேர்ந்தவர்கள் இது ஒரு சாதாரண போராட்டம் என நினைத்தே இதை தொடங்க நினைத்தனர்.சாவகச்சேரியைப் பொறுத்தவரை சாதியமைப்பு மிகவும் தளர்வு நிலையில் இருந்தது.ஒரு சில சலூன் உரிமையாளர்கள் மட்டும் உயர்சாதியினருக்கு சேவகம் பண்ணினார்கள்.கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை அடுத்து எல்லா உணவகங்களும் திறந்துவிட்டனர்.உண்மையில் அங்கே பாகுபாடு பொது இடங்களில் இல்லை.
கொடிகாமத்தில் சிலர் மறுப்புத் தெரிவித்தனர்.எமது ஊரில் இரண்டு கோவில்கள் இருந்தன.கேலத்து அம்மன் கோவில்.இது அய்யருக்கே சொந்தமானது.அவர் பூரண சம்மதம் தெரிவித்தார்.இன்னொன்று தெருவாரம் பிள்ளையார் கோவில்.இவரகளும் சம்மதித்தனர்.ஆனால் கோவில் பூசைகள் நிறுத்திவிட்டார்கள்.இந்த கடும் எதிர்ப்பாளர்கள் வெள்ளாளர் அல்ல.கோவியர்களே.அதில, முக்கியமானவரகள்அந்த சமூகமே மரியாதை தராதவரகள்.வழிப்பறி திருட்டு சம்பந்தப்பட்டவர்கள்.மீசாலை தெருவாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இந்தப் போராட்டத்துக்கு எமது ஊரிலும் அதிக ஆதரவு இருக்கவில்லை .எமது ஊரிலும் இரு பிரிவுகள் இருந்தன.ஒரு பிரிவு விலகிவிட்டது.கொடிகாமத்தில் போராட முடிவு எடுக்கப்பட்டது.இதை தொடங்கிய மீசாலையைச் சேர்ந்தவர்கள் தலைமறைவாகி விட்டனர்.எனினும் இரத்தினமும் அவரது சகாக்களும் திட்டமிட்டபடி தேனீர்கடை பிரவேசம் செய்தனர்,.இரத்தினம் ஏற்கனவே பிரபலமானவர்.அவரை எதிர்க்க எவரும் முன்வரவில்லை .ஆதரவும் தரவில்லை.கொடிகாம்ம் அய்யா இரத்தினத்தின் நண்பர்.அவரும் மதில்மேல் பூனையாக நின்றார்.

Saturday, February 20, 2016

"நாம்தாம் இந்த நாடு. இந்த மண்ணை நாம் நேசிக்கிறோம்." ஜே.என்.யூ. மாணவர் சங்கத்தலைவர் கன்னையாகுமாரின் உரை

(டெல்லியின் புகழ் பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர்  கன்னைய குமார்  2016 பிப்ரவர் 12இல் இந்த உரையை நிகழ்த்தியதற்காக தேசதுரோகக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார். இப்போது அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்)
COUNTERCURRENTS.ORG, 18 FEBRUARY, 2016 இதழில் வெளியாகியுள்ள இவ்வுரையை தோழர். எஸ்.வி.ராஜதுரை தமிழாக்கம் செய்துள்ளார்.
  மூவண்ணக் கொடிய எரிக்கின்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கேட்ட சாவர்க்கரின் கைக்கூலிகள். அவர்கள்தாம் இப்போது ஹரியானாவில் ஒரு விமான நிலையத்திற்குச் சூட்டப்பட்டிருந்த தியாகி பகத்சிங்கின் பெயரை அகற்றிவிட்டு  சங் பரிவாரத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரைச் சூட்டியுள்ள கட்டார் அரசாங்கத்தை நடத்துகிறார்கள். இதில் நாம் முடிவுக்கு வரவேண்டியது என்னவென்றால், நாம் தேசிய வாதிகள் என்னும் சான்றிதழை வழங்க நமக்கு ஆர்.எஸ்.எஸ். தேவையில்லை என்பதுதான்.

நாம்தாம் இந்த நாடு. இந்த மண்ணை நாம் நேசிக்கிறோம். இந்த நாட்டில் ஏழைகளாக உள்ள 80 விழுக்காடு மக்களுக்காக நாம் போராடுகிறோம். நம்மைப் பொறுத்தவரை இதுதான் தேசபக்தி. பாபாசாகெப் மீது நமக்கு முழு நம்பிக்கை உள்ளது. நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மீது நமக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. சங் பரிவாரத்தினரோ,வேறு யாரொ இந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மீது கை வைப்பார்களேயானால் நாம் அதை சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதை உறுதியாக அறுதியிடுகிறோம். ஆனால் ஜண்டேன்வாலாவிலும் நாக்பூரிலும் கற்பிக்கப்படும் அரசமைப்புச் சட்டத்தின் மீது நாங்கள் நம்பிக்கை வைக்கமாட்டோம். மனுஸ்மிரிதி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த நாட்டில் ஆழமாக வேறூன்றியுள்ள சாதி அமைப்பின் மீது எங்களுக்குப் பற்றுறுதியோ, நம்பிக்கையோ இல்லை. அதே இந்திய அரசமைப்புச் சட்டமும், அதே பாபாசாகெப் டாக்டர் அம்பேத்கரும் அரசமைப்புச்சட்டரீதியான நிவாரணிகளைப் பற்றிப் பேசுகின்றனர். அதே பாபாசாகெப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் மரண தண்டனையை ஒழித்துக்கட்டுவது பற்றிப் பேசினார். அதே பாபாசாகெப் டாக்டர் அம்பேத்கர், கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசினார். நாங்கள் அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிக்க விரும்புகிறோம்; நாங்கள் எங்களது அடிப்படை உரிமையை, அரசமைப்புச்சட்டரீதியான  எங்களது உரிமையை உயர்த்துப் பிடிக்கிறோம்.

Sunday, February 14, 2016

பல்துறையாளன் நாடகக் கலைஞன் அரசையா

சி .மௌனகுரு 
அன்புமிக்க நாடக ஆர்வலர்களே!
விசேடமாக யாழ்ப்பாணத்தில் நாடகம் செய்யும் இளம் நாடகக் கலைஞர்களே!,

உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். அரசையா என நாடக உலகில் அழைக்கப்பட்ட  திருநாவுக்கரசு அவர்கள் தமக்கு எண்பத்திரண்டு வயதாகிய நிலையில்
உடற் சுகயீனமுற்று  மிக மிகத் தளர்ந்து போய் இருப்பதாக அறிந்தேன். இன்று என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் தன் மன ஆதங்கங்களை மள மளவென ஒரு மணி நேரம் என்னிடம் கொட்டினார் தளதளத்த குரலில் கொட்டினார். அக்கொட்டலுக்குள் மிகுதியான அவர் மனத் துயரங்களும்அதிகமான பல உண்மைகளும் இருந்தன. இவற்றையெல்லாம் சுமந்து கொண்டு அந்த முதியவர் தனிமையில் வாடுகிறார்  என்பதை எண்ணி என் மனமும் வாடுகிறது. 1950 1960,1970 களில் யாழ்ப்பாண நாடக உலகில் புகழ் மிக்க இப்பெரியவர் கலையரசு சொர்ணலிங்கம் 90 வயதாகி நவாலியில் வாழ்ந்த காலத்தில் அடிக்கடி அவர் வீடு சென்று பார்த்துப் பராமரித்து வந்தவர். அவருடன் நானும் ஓரிரு தடவைகள் கலையரசின் முதுமைக் காலத்தில் அவர் வீடு சென்று வந்துள்ளேன். நாடக டிப்புளோமா எடுக்கக் கொழும்புப் பல்கலைக் கழகம் செல்லும்படி குழந்தை சண்முகலிங்கம் அவர்களை 1970 களில் வற்புறுத்தி அனுப்பி வைத்தவர்களுள் முக்கியமானவர். அரசையா 1970 களின் பிற்பகுதியில் நாடக அரங்கக் கல்லூரியை வளர்த்த முதன்மையருள் ஒருவர். அன்று யாழ்ப்பாணப் பாடசாலைகள் பலவற்றில் நாடகங்கள் பழக்கி மாணவர் மத்தியில் நாடக ஆர்வத்தை வளர்த்தவர் பிற்காலத்தில் மிகச் சிறந்ததோர்  ஒப்பனைக் கலைஞனராகப் பரிணமித்தவர். குத்து விளக்குத் திரைப்படத்தில் நடித்தவர் சின்னமணி அவர்களின் வில்லுப்பாட்டுக் குழுவில் இருந்தவர். சிறந்த புகைப்படப் பிடிப்பாளர், பல் திறன் மிகுந்த ஓர் கலைஞர். இன்று மாணவர்கள் இவர் பற்றி அறியார். யாழ்ப்பாணத்தில் இன்று பல நாடக மன்றங்கள் காத்திரமான நாடகச் செயற்பாடுகளில் ஈடுபடுவது மகிழ்ச்சி தருகிறது.

Sunday, February 07, 2016

ஓர் புரட்சியாளரின் வாழ்க்கை பற்றிய குறிப்புரை

''நாங்கள் பட்டினியால் சாக மாட்டோம்... துப்பாக்கிக் குண்டுகளால் சாவோம்''

-சாரு மஜூம்தார்

(Tamil version of an article from ''Charu Mazumdar- The Man and His Legacy''- Liberation Publication)

தமிழில் :சி. மதிவாணன் 



(ஆகஸ்ட் 8, 2015ல் இதே பக்கத்தில் வெளியான கட்டுரையின் மறு பிரசுரம்- புதிய வாசகர்களுக்கா)


சாரு மஜூம்தார் 1919ஆம் ஆண்டு வாரனாசியில் பிறந்தார். தேதி சரியாகத் தெரியவில்லை. அது ஜெய்த்திசியா என்ற வங்காள மாதம். ஆங்கிலக் கணக்குப்படி மே-ஜூன் மாதம். அவருக்கு 7 வயது இருக்கும்போது சிலிகுரியில் உள்ள அவரின் பெற்றோர் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.



சிலிகுரி என்ற ஊர் தற்போதைய மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் இருக்கிறது. சிலிகுரி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் அவரை ஆறாம் வகுப்பில் சேர்த்தார்கள். அவர் அங்கு மெட்ரிகுலேஷன் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் (தற்போது வங்கதேசத்தில் இருக்கும்) பாப்னாவில் உள்ள எட்வர்டு கல்லூரியில் 1937ஆம் ஆண்டு சேர்ந்தார். அவர் மிகச் சிறந்த மாணவர். இருந்தபோதும் படிப்பை முடிக்காமலேயே சிலிகுரிக்கு வந்து சேர்ந்தார்.



அவர் பள்ளியில் படிக்கும்போதே தேசிய விடுதலை இயக்கத்தில் ஆர்வமுள்ளவராக இருந்தார். 1938ல் காங்கிரஸ் சோசலிசக் கட்சியில் சேர்ந்தார். அவரது தந்தை பிரேஷவர் மஜூம்தார் டார்ஜிலிங் மாவட்டக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். அவருடைய தாய் உமா சங்கரி தேவி மிகவும் முற்போக்கான பெண்மணி. அவர் மக்கள் இயக்கங்களையும் பல்வேறு நல்ல பணிகளையும் ஆதரித்து வந்தார். சாருவின் வாழ்க்கையை வடிவமைப்பதில் அவர் தாயின் பங்கு மிகவும் முக்கியமானது.

Saturday, December 12, 2015

பழையகடுதாசி

-கரவைதாசன் -  
பேரூந்தின் பின்னே அலைந்து திரிதல் சருகுகளிற்கின்பம் எனின் காற்றிடையே பறந்து திரிந்து கம்பியிற் சிக்குண்டல் எனக்கின்பம். அதனிடையே என்பழைய செய்தி இன்னும் இருக்கிறது ஆதலால்.
-கரவைதாசன் -

இக்குறுகிய  கவி வரிகள் பல வருடங்களின் முன்னால் என்னால் எழுதப்பட்டு கிடப்பில் தூங்கிக்கொண்டிருக்கின்றன. அது  என் உணர்வு எனின், பல நினைவுகளும் அப்படித்தான். ஆண்டு சரியாக ஞாபகத்துக்கு  வருகுதில்லை அதை கண்டடைவதில் அப்படியொன்றும் கடினமில்லை ஞாபகத்துக்கு வரும்போது குறித்துக்கொள்கின்றேன். இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான சமாதானத்துக்கான கலந்துரையாடல் ஜேர்மன் சுட்காட் நகரின் புறநகர் பகுதியான பாட்போலில் நடைபெறுவதாகவிருந்து பின் இடம் மாற்றலாகி  ஜேர்மன் பேர்லின் நகரில் நடைபெற்றது.  நிகழ்வினை அவதானிப்பதற்காகவும் நிகழ்வில் கலந்துரையாடவும் அழைக்கப்பட்டிருந்தேன். பகல் முழுவதும் அரசியல் கலந்துரையாடல் மாலை உணவுவேளையின் பின் கலாசார நிகழ்வுகளின்போது இலங்கைத்தீவின் மக்கள் கலைஞர்  தோழர் ஜயதிலக பண்டாரவும் நானும் இன்னும் சில தோழர்களும் சில பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தோம் கிற்றார் வாத்தியத்துடன் ஒரு சிங்களத்தோழன், ரஞ்சித்தின் கையில் டோல்க்கி, முரளியிடம் பொங்கஸ், கரோக்கி இசையுடன் இணைந்து சில பாடல்களென இசையிலும்  நட்பிலும் தோழமையிலும் மிதந்து கொண்டிருந்தோம். தமிழ்ப் போராளிகளின் நியாயப்பாடுகளை வலியுறுத்தி தானே எழுதி  தானே இசையமைத்து  சிங்களக் கிராமம் கிராமமாக நடைப்பயணத்திலும்  கொண்டு சென்ற  பாடல்களில் சிலவற்றையும் ஜெயதிலக பாடினார் .  அப்போது இலங்கை சீனசார்பு  கம்யூனிசக் கட்சியின் தேசிய கலை இலக்கியப் பேரவைக்காக கவிஞர் முருகு இரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட இரண்டு பாடல்களை நான் பாடினேன். அதிலொன்று நெல்லியடிப்பகுதியில் தேனீர்க்கடைகளில் இரட்டைக்குவளை (இரட்டைப்பேணி) முறையினை ஒழிப்பதுக்காக போராடிய தோழன் நல்லதம்பி இளையதம்பி (கிளி ) (கன்பொல்லை) அவர்களின் மறைவுக்காகப் பாடப்பட்ட பாடல் அது. இப்பாடல் எழுபதுகளில் வெளிவந்த பாடல், துலாபாரம் திரைப்படத்தில் வரும் "காற்றினிலே பெரும் காற்றினிலே" என்ற பாடலின் மெட்டில் அமைந்துள்ளது அப்பாடல்.  

கடையினிலே நெல்லியடிக் கடையினிலே 
கறள்ப்பேணி யாவுமே கிடைக்கவில்லையே, 
உடைத்தெறிந்தான் போத்தலை 
உள்ளமர்ந்தான்  கிளியனே 
கடையினிலே நெல்லியடிக் கடையினிலே. 
சாதி வெறி தகரவே 
சஞ்சலங்கள் தீரவே 
சாட்சி வைத்தான்  சமூகம் தன்னிலே 
பாதியிலே போட்டியால் பழுது தூக்கி மாண்டானே
பாரில் அவன் வீரன் அல்லவா 
கிளியனும்  பகலவனாய்  ஒளி தருவானே. 
கடையினிலே நெல்லியடிக் கடையினிலே...

Sunday, December 06, 2015

அம்பேத்கரின் இறுதி நாட்கள் குறித்து சில வரலாற்று பகிர்வுகள்

இன்று தோழர் அம்பேத்கரின் நினைவு தினம்!
அம்பேத்கரின் இறுதி நாட்கள் குறித்து சில வரலாற்று பகிர்வுகள்:
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
பத்து ஆண்டுகளாகவே பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் உடல் நல்ல நிலையில் இல்லை. சிறிது காலம் குடல் அழற்சியினாலும், இரத்தக் கொதிப்பினாலும் வேதனைப் பட்டார். ஆண்டுகள் செல்லச் செல்ல, அவர் உடல் நிலையை மிகவும் பாதிக்கும் வகையில் நீரிழிவு நோயும் உருவாகியது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவரின் நீண்ட நாள் போராட்டங்களும் படிப்பும், எழுத்தும் அவரின் உடல் நிலையை வெகுவாகப் பாதித்தன.
டாக்டர் அம்பேத்கர் நடத்திய இயக்கத்தை அவருக்குப் பிறகு வழிநடத்திச் செல்லுவார்கள் என்று அவர் நம்பியிருந்த துணை நிலைத் தலைவர்களின் நம்பிக்கையற்ற செயல்களினாலும், அவர்களுக்குள் தலைமைப் பதவிக்கு நடந்த போட்டிகளாலும், அவரது போராட்டங்களினால் கிடைத்த அரசு உயர் பதவிகளில் அமர்ந்தவர்களின் வெட்கக்கேடான நடத்தைகளினாலும் அவர் மனம் உடைந்து போனார். ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிச் சிறிதும் அக்கறையின்றி, அவரது அமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களின் நடத்தைகளினால் அவருடைய உடல்நலக் குறைவு இன்னும் தீவிர மடைந்தது.
அவருடைய மருத்துவர் பரிந்துரைத்த மருந்து மாத்திரைகள், எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. சனவரி 1955 முதல் அவர் உடல்நிலை மேலும் கவலையை உருவாக்கியது. அவர் எடை குறைந்து தளர்ச்சியுற்று, சுருங்கிக் காணப்பட்டார். அவரது கோடை மற்றும் பனிக்கால உடைகள், இப்போது அவருக்குப் பெரிதாக இருந்ததால் சுருக்கித் தைக்கப்பட்டன. அவரது கம்பீரமான உடம்பை அவரது மெல்லிய கால்கள் தாங்க முடியாமல் போனதால் உடம்பின் எடை குறைந்தது.
அவரது மிகப் பெரிய நூலகத்தில் நடமாடும் போதும், தோட்டத்தில் உலவும் போதும், காரில் ஏறி அமரவும் - இறங்கவும், நாடாளுமன்றத்திற்குச் செல்லவும், வேறு எங்கேயும் செல்வதற்கும், குளிப்பதற்கும், படுக்கைக்குச் செல்வதற்கும், எழுவதற்கும், உடையணிந்து கொள்வதற்கும் அவருக்கு மற்றவரின் உதவி தேவைப்பட்டது. சில சமயங்களில் சாப்பிட மனமில்லாமல் அவர் படுக்கையில் படுத்திருப்பார். அப்போது அவருக்கு நான் உதவ வேண்டியிருந்தது.
டாக்டர் அம்பேத்கரின் மகிழ்ச்சியற்ற வாழ்நிலை, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தது. அவ்வப்போது அவர் அழுவது, எனக்கு மிகப் பெரும் வேதனையாக இருந்தது. அவரது அழுகைக்கானக் காரணத்தை அறிய நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். எதிர் கொள்ள முடியாத எரிமலையின் சீற்றம் போன்ற அவரது கோபத்திற்குப் பயந்து நான் அதுபற்றி கேட்கத் தயங்கினேன்.

Wednesday, November 25, 2015

எஸ்.பொவின் "வரலாற்றில் வாழ்தல்" நூலை முன் வைத்து.....

-நோயேல்  நடேசன்  -
மறைந்த இலங்கை தலைமை இலக்கியவாதி எஸ்போவின் மறைவை நினைவு கூர்ந்து அவரது வரலாற்றில் வாழ்தல் என்ற சுயசரிதை நூலை முன்வைத்து 27-11-2015 ல் வெளிவரும் கட்டுரை
இரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட எஸ் பொன்னுத்துரையின் வரலாற்றில் வாழ்தல் என்ற சுயசரிதை நூலின்  இரண்டு பாகங்களையும் நான் ஏன் படிக்கவேண்டும்? படித்தால் என்னிடத்தே வைத்திராமல் அதைப் பற்றி உங்களுக்கு ஏன் சொல்லவேணடுமென்பது என்ற முக்கியமான கேள்விக்கு நான் பதில் தரவேண்டும்.
பதிலை எனது கூற்றாகச் சொன்னால் அது மதிப்பிழக்கலாம். எனவே எனது கருத்தைச் சொல்லாமல் பண்டிதமணி கணபதிப்பிள்ளையின் வார்த்தையில் சொல்வது நலமானது.
‘எமக்கு முந்திய தலைமுறையில் தமிழுக்கு தொண்டு செய்தவர்களை நாம் நினைத்துப் பார்க்காவிடில் அடுத்த சந்ததியில் நம்மை மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்ற தார்மீகமான நினைவை நாங்கள் வைத்திருக்க முடியாது.’
இதை மிகவும் அழுத்தமாக சொல்வதானால் எனது பெற்றோரையோ எனது மனைவியின் பெற்றோரையோ பராமரிக்க தவறினால் எனது மகனிடம் அல்லது மகளிடம் எனது வயோதிபகாலத்தில் எதையும் எதிர்பார்க்க தகுதியில்லாதவனாகிறேன். அதை யாழ்ப்பாணத்து வழக்கத்தில் சொன்னால் எனது தந்தைக்கு சிரட்டையில் தேநீர் பரிமாறினால் எனது மகனும் அதிலே எனக்குத் தருவான்.
எமது மத்தியில் சுயசரிதை எழுதுவது வழக்கமில்லை ஆனால் இறந்தவர்களுக்கு கல்வெட்டு எழுதுவோம் ஆனால் கல்வெட்டு எழுதினால் எல்லோருக்கும் பெயரைத் தவிர மற்றவை எல்லாம் ஒரே மாதிரி தேவார திருவாசகத்துடன் இருக்கும். அந்தியேட்டி செலவோடு கல்வெட்டும் பழைய கடதாசியாகிவிடும்.
தனது வாழ்கையில் நடந்த விடயங்களை காய்தல் உவத்தல் அற்று எழுதுவதோ மற்றவரை எழுதுவதற்கு அனுமதிப்பதோ இல்லாதது தமிழ் சமுகம். தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் பிற்காலத்து போரட்டத்; தலைமுறையில் வந்தவர்களைப் பற்றிய குறிப்புகள் எம்மிடமில்லை. அதை எழுதுவதற்கு எந்த ஏற்பாடுகளும் எம்மிடமில்லை. இது ஈழத்தமிழர்மத்தியில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் நிலையும் அதுவே. கருணாநிதி எம்.ஜி. இராமச்சந்திரன் போன்றவர்கள் தங்கள் அரசியல் தேவைக்காக எழுதியவை உள்ளன. இக்காலத்திலும் பூரணமாக எம்ஜிஆர் சம்பந்தமப்பட்ட ஒரு புத்தகத்தை யாராவது எழுதினால் அவர்களுக்கு உயிராபத்து ஏற்படும்.
இப்படியான தமிழ்ச்சூழலில் எஸ்.பொ. தனது ஐம்பது வருட எழுத்து வாழ்வை எந்த ஒளிவு மறைவுமின்றி எழுதியது ஒரு இமாலய துணிவு. அதைப் படைப்பாக்கியது மகத்தான சாதனை. இதை குறைந்தபட்சம் இன்னமும் ஐம்பது வருடங்களுக்கு தமிழில் எவராலும் செய்யமுடியுமா என்பது கேள்விக்குறி. எழுதுவது முடிந்தாலும் பாவனை காட்டாது தனது பலங்களையும் பலவீனங்களையும் மதியத்தில் சூரிய குளியல் நடத்தும்; மேற்குநாட்டுப் பெண்கள்போல் துணிவுள்ளவர்கள் எவருமில்லை அந்தவகையில் தமிழில் இது ஒரு முன்னுதாரணம்.

Wednesday, October 14, 2015

மடக்களப்பு அரங்க ஆய்வு கூடத்தில் கந்தன் கருணை இளைய பத்மனாதன்.

-பேராசிரியர்.சி.மௌனகுரு-
பத்தண்ணா எனப் பலராலும் அழைக்கப் படும் இளைய பத்மனாதன் இன்றும் நாடகம் கற்றுக்கொண்டிருக்கும் ஒருவர்.
78 வயதினர்.
நாடக நடிகர்,
நெறியாளர்,
நாடக எழுத்தாளர்,
நாடக ஆய்வாளர்
1970 களில் காத்தான் கூத்துப் பாணியில் கந்தன் கருணை என்ற சமூகப் பிரச்சனை சார்ந்த நாடகம் போட்டதன் மூலம் ஈழத்து நாடக உலகில் அறியப்பட்டவர். தொடர்ந்த அவர் யாழ்ப்பாணத்தில் நெல்லியடி மகா வித்தியாலய மாணவிகளைக் கொண்டு தயாரித்த மரபு வழி நாடகமான ஏகலைவன் அவரை மேலும் நாடக உலகுக்கு அறிமுகம் செய்தது. அதில் அவர் யாழ்ப்பாண,மன்னார் மரபுவழி நாடகக் கூறுகளை இணைத்திருந்தார்.  அதற்கு அவர் புது மோடி நாடகம் என்று பெயர் இட்டிருந்தார்


1970 களில் நடிகர் ஒன்றியம் தயாரித்து தாஸீசியஸ் நெற்யாள்கை செய்தகந்தன் கருணையில் நான் கந்தனாக நடித்தேன் அவர் பக்தராக வந்தார். காத்தான் கூத்துப் பாணியை அங்கு அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். எனக்குத் தெரிந்த வடமோடிப் பாணியை அங்கு அவர் பெற்றுக் கொண்டார்.

அவரோடுநா.சுந்தரலிங்கம் நெற்யாள்கை செய்த அபசுரம்,தாஸீசியஸ் நெறியாள்கை செய்த புதியதொரு வீடு முதலான நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பும்1970 களில் கொழும்பில் கிட்டியது

Saturday, October 10, 2015

என்ன மண்ணால் அடித்தார்களா?

-கரவைதாசன்- 


இலங்கையின் வட புலத்தில் கிராமம் என்பது சாதியக் குறியீடாகவே இருக்கின்றது என்பது நாகரிகமற்ற உண்மை. நீ உன் கிராமத்தினை சொல்லு உனது சாதியினை நான் கண்டறிவேன் என்பது ஆதிக்கசாதி மனோபாவமாக இருக்கின்றது. இதனாலேயே  ஒழுங்கை ,குறிச்சி விசாரிப்புக்கள் இரண்டு ஈழத்தமிழர்களின் முதல்ச்சந்திப்பினிலே  மிக இயல்பாக அரங்கேறும்  முடிந்தால் கண்டுபிடி  என்ற வகையில் ஒருவர் உச்சுவதும் இந்தாபார் உன்னையறிகின்றேன் என்றவகையில் மற்றவரின் தொடுப்புமாக இருக்கும். இறுதியில் அவரைத் தெரியுமோ அவர் எனக்கு உறவுக்காரன் என ஒரு பிரபலத்தினை இழுத்துச்  சாதி அறிந்து கொள்வார்கள். எனக்கோ இவர் விடுகிறார் என்ற ஆதிக்கச் செருக்கோடு ஒருவரும். விடுகிறான் இல்லை என்ற நளுவலுடன் மற்றவர் நளுவுவதுமாக பல சம்பவங்களை  கண்டு நாகரிகமுள்ள மனிதர்கள்  அருவருத்திருக்கின்றார்கள் . 
அனால் நாகரிகமற்ற இந்தச்  சமத்துவமின்மைக்கு எதிராக ஒவ்வொரு காலத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து சிலர் வெளிக்கிளர்ந்து சில போராளித்தலைமையின்  கீழ்ப்போராடி வந்திருக்கின்றார்கள். வடபுலத்தின் பல்வேறுபட்ட கிராமங்களில் பல்வேறு வடிவங்களில் அந்தக் கால சூழ்வினைக்கேற்ப இந்த போராட்ட வடிவங்கள் அமைந்திருக்கின்றன. அந்த வரலாறுகள் சில இன்னும் பதிவு செய்யப்படாமலே செவிவழிக்கதைகளாகவே கடத்தப்படுகின்றன. சில அழிந்து தொலைந்து போகின்றன. தொலையாது நிலைக்க நான் கேட்டறிந்த ஒரு சம்பவத்தினை இன்று குறித்து வைப்பதே இக்கணத்தின் நோக்கம். 

Monday, October 05, 2015

"தமிழில் சமகாலத்தில் எந்தப் பாடலாசிரியனும் நல்ல கவிஞன் என்ற பட்டியலில் இல்லை "

-திருமாவளவன்-
நேர்காணல் கருணாகரன் 
இலங்கையில் யாழ்ப்பாணத்தின் வடக்கில் உள்ள வருத்தலைவிளான் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த திருமாவளவன் இப்போதிருப்பதும் இலக்கியத்தில் இயங்குவதும் கனடாவில். அரசியலும் அரங்கும் கவிதையும் திருமாவளவனின் ஈடுபாடுகள். என்றாலும் அரசியல்வாதியல்ல. கவிஞர். அரங்காடி. ஒத்தோடியல்ல. மறுத்தோடி. இதனால் வாழ்வின் பெரும்பகுதியும் சவால்களோடுதான் திருமாவளவனுக்குக் கழிந்திருக்கிறது. இந்த நேர்காணலும் அந்தக் குணத்தையே கொண்டிருக்கிறது. பெரும்போக்கு, பொது இயல்பு போன்றவற்றை அனுசரிக்க வேண்டும் என்ற அவசியத்தைப் புறந்தள்ளியவை. ‘கவிதைக்கும் கவிஞனுக்கும் இடையில் எப்படி இடைவெளி இருக்க முடியும்? கவிதையை எப்படிச் செய்ய முடியும்?’ என்றெல்லாம் கேட்கும் கவிஞர், ‘வாழ்தலே கவிதை. என்னுடைய வலிகளும் வாழ்வின் அடையாளமும் அனுபவங்களுமே அவை’ என்கிறார். இதுவரையில் ‘பனி வயல் உழவு’, ‘இருள்யாழி’, அஃதே பகல் அஃதே இரவு’, ‘முதுவேனில் பதிகம்’ என நான்கு கவிதை நூல்கள் வெளியாகியிருக்கின்றன.
முந்நூறு ஆண்டுகள் உழுதோம் / எங்கள் நிலத்தில் அவர்க்கு / இனியும் உழுவோம் / அவர்கள் நிலத்தை அவர்க்கே’
என்று மேற்குலகத்தினருக்காக உழைத்து மாளும் நம் அவலத்தைச் சொன்ன கவி திருமாவளவனின் தந்தை கனகசிங்கம் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் மலேசிய விடுதலை அமைப்பில் போராளியாக இயங்கியவர். பின்னர் இலங்கை திரும்பி இடதுசாரி அரசியலின் ஆதரவாளராக இருந்தார். அந்த இடதுசாரி அரசியல் ஊற்றே திருமாவளவனின் ஆதாரம். திருமாவளவின் இளைய சகோதரர் கலைச்செல்வன் புலம்பெயர் படைப்பாளிகளில் முக்கியமானவர். பள்ளம், எக்ஸில், உயிர் நிழல் ஆகியவற்றின் மையத்தில் இருந்தவர். புகலிட சினிமாவின் ஆதாரமாகவும் விளங்கியவர். இலக்கியச் சந்திப்பின் இயக்கத்தில் முக்கிய பங்களிப்பாளர். திருமாவளவனும் கலைச்செல்வனும் இளவயதில் இருந்தே சேர்ந்தும் விலகியும் தோழமையோடும் சசோதரத்துவத்தோடும் இயங்கினர். இந்த நிலையில் கலைச்செல்வனின் இழப்பு பெரும்பாதிப்பை திருமாவளவனுக்கு ஏற்படுத்தியது. எனினும் அவருடைய இயக்கம் தளர்வடையவில்லை. இப்பொழுது தன்னுடைய பத்திகளையும் கதைகளையும் தொகுத்து நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்த நேர்காணல் மின்னஞ்சல் வழியாக கடந்த ஒரு ஆண்டாக மேற்கொள்ளப்பட்டது.

Saturday, September 12, 2015

யாழ்.சர்வதேசத் திரைப்பட விழா.

04. 09. 2015 இல், யாழ்ப்பாணம் மஜெஸ்ரிக் கூட்டுத் தொகுதியில் நடைபெற்ற, பத்திரிகையாளர் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கை!


தொனிப்பொருள்: குடாநாட்டில் சுயாதீன திரைப்படங்களைக் கொண்டாடுதல். 
விரைவில் யாழ்ப்பாணத்தில் சர்வதேசத் திரைப்பட விழாவானது ஆரம்பமாகிறது. 

விழாத் திகதிகள்: 2015  செப்ரெம்பர் 15ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை. 
யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறை மற்றும் சிலோன் தியேட்டர்ஸ்  என்பவற்றோடு  அஜன்டா 14 ஆகியன இணைந்து, முதலாவது யாழ்ப்பாண சர்வதேசத்  திரைப்பட விழாவினை ஏற்பாடு செய்துள்ளன. இத்திரைப்பட விழாக் காட்சிகள் அனைத்தும் இலவசமாகக் காட்டப்படுகின்றமை முக்கியமானதாகும். 

விழாவின் இயக்குநரான அனோமா ராஜகருணா, குடாநாட்டில் சுயாதீனமாக திரைப்படங்களினைக் கொண்டாடுவது என்பதே எங்களுடைய அடிப்படையான நோக்கமாகும். இவ்விழாவானது 30 வருடகால ஆயுத முரண்பாடு மற்றும் போரின் அழிவுகளிலிருந்து நிகழும் மீண்டெழுதலாக அமைவதோடு, கலையைப் பயன்படுத்தலானது, மக்களைச் சென்றடைதலாகும் என நாங்கள் நம்புகின்றோம். அத்துடன் இந்த விழாவானது, சினிமாவினூடாகச் சமூகங்கள் தமது எல்லைகளினைக் கடந்து, ஒருவர் மற்றவருடன் இடைவினை புரிவதற்கான ஒரு வெளியினை உருவாக்கும் எனவும் நாம் எண்ணுகின்றோம். எனக் கூறுகிறார்.

Saturday, September 05, 2015

நாம் நெல்லியடி அம்பலத்தாடிகளில் குழந்தைக் கலைஞர்கள்......

-கரவைதாசன்-


நெல்லியடி அம்பலத்தாடிகள்  என இலங்கையின்  நாடகவரலாற்றில் அறியப்பட்ட கலை  இலக்கியச் செயற்பாட்டாளர்கள் வெறுமனே நாடகக் கலைஞர்கள் என்பதனை தாண்டி மக்கள் கலைஇலக்கியச் செயற்பாட்டாளர்கள் எனச் செயற்பட்டவர்கள். இந் நாடகமன்று அந்நாட்களில்  இடது சாரியக்  கலை இலக்கிய மன்றாகவே  இயங்கி வந்தது. கந்தன் கருணை, சங்காரம் இதுவுமன்றி சமூக விழிப்பினை புகட்டவல்ல  தாளலய ஓரங்க நாடங்கங்கள் பல அந்நாட்களில் இவர்களால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில்  அரங்காடப்பட்டன. 

இலங்கை கம்யுனிஸ்டுகள் மாஸ்கோ,  பீக்கிங் என கோட்பாட்டு ரீதியிலே  பிளவுண்டிருந்த காலத்தினிலே நெல்லியடி அம்பலத்தாடிகள் கலைமன்று  சீன சார்பு செயற்பாட்டாளர்களின் கலை இலக்கிய மன்றாக இயங்கி வந்தது  என்பதே பொருந்தக் கூறக்கூடிய செய்தியாகும் . இம்மன்று  நெல்லியடியினிலே முகவரியினை கொண்டிருந்தபோதும் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் முற்போக்கு கலைஞர்கள்  மத்திமைப்பட்டு இம் மன்றில் செயற்பட்டார்கள். 

மட்டக்களப்பிலிருந்து சி.மௌனகுரு, தாளயடியிலிருந்து  தாசீசியஸ், ம.சண்முகலிங்கம், யாழ்ப்பாணத்தில் பிறந்து  கரவெட்டி கன்பொல்லையில் திருமணபந்தத்தினால் வாழ்வினைக்  கொண்ட கே.எஸ். இரத்தினம் இப்படியே ஒரு நீண்ட பட்டியல் நீளும். இன்று அண்ணாவியராக  விழிக்கப்படுகின்ற இளைய பத்மநாதன் கலைஞனாக  கருக்கொண்டதும் இம் மன்றில்த் தான். அந்நாளில் அம்பலத்தாடிகளின்  வில்லிசை குழுவில் பத்தண்ணா  பிரதான கதை சொல்லியாக   இருந்தார். இவ் வில்லிசைக் குழுவினை நெறிசெய்து இவர்களுக்கு ஒத்தாசையாக கன்பொல்லையைச்  சேர்ந்த நாடறிந்த இசை நாடகக் கலைஞர் நாடத்திலகம் கே.வி. நற்குணம் அவர்கள் இருந்தார். 

Thursday, August 27, 2015

"எம் சமூகத்திற்குச் சாபமா? தரித்திரமா? அத்தனை விரைவில் ஓர் பெண் ஆளுமையின் இழப்பு!

-ந.சுசீந்திரன் -
சாந்தி சச்சிதானந்தம் அவர்களின் மரணச் செய்தி அதிர்ச்சியளிக்கின்றது. முதன் முதலில் நான் அவரைச் சந்தித்ததை இன்று எண்ணிப்பார்க்கிறேன். சில காலங்களுக்கு முன்னர் காலமாகிவிட்ட இன்னொரு ஆளுமைமிக்க பெண் சுனிலா அபயசேகர அவர்களது தந்தை சார்ள்ஸ் அபயசேகர, நான் கொழும்பில் நின்றிருந்த வேளை விபத்தொன்றில் காலமானார். அவரது மரணச் சடங்கில் தான் நாங்கள் பரஸ்பரம் அறிந்து கொண்டோம். அவரது கணவர் காலஞ்சென்ற மனோ ராஜசிங்கம் மற்றும் அமரர் நீலன் திருச்செல்வம் ஆகியோருடனும் அன்று தான் அறிமுகமானேன். சர்வதேசப் பரிசொன்றினைக் கையேற்க அருந்ததி ராய் அவர்கள் பெர்லின் வந்திருந்தபோது நீலன் திருச்செல்வம் அவர்களோடு தனக்கிருக்கும் நட்பினை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். அன்பும் கவர்ச்சியும் ஆளுமையுங்கொண்ட சாந்தி அவர்களுடனான நட்பில் நான் எப்பொழுதும் பெருமை கொண்டிருந்தேன்.
வாழ்க்கை பற்றிய தீவிரமான விசாரணகள் கொண்டவர். பங்கேற்பு ஜனநாயகம், பெண்விடுதலை, பெண்களின் முன்னேற்றம், மனித உரிமைகள் போன்ற விடயங்களில் முற்போக்கான கருத்துக் கொண்டிருந்ததோடில்லாமல் சிவில் சமூகச் செயற்பட்டாளராகவுமிருந்தார். சமகால அரசியல் சமூக வாழ்க்கையில் தன் அனுபங்களினூடு தனக்குச் சரியெனப் பட்டதை துணிவாக முன்வைத்துச் செயற்பட்டு வந்தவர்.
விழுது என்ற அமைப்பின் மூலம் சாந்தி அவர்கள் முன்னெடுத்த பல்வேறு திட்டங்களில் எமது மக்கள் பலனடைந்தனர். இலங்கையின் பலவேறு சமுகப்பிரச்சினைகள் தொடக்கம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஏற்படும் சவால்கள் என்பது வரை விழுது வெளியிட்ட பல பிரசுரங்கள் மிகவும் பயன்பாடானவை. நண்பர் மதுசூதனன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ”அகவிழி” என்ற ஆசிரியத்துவத்துக்கான தரமான சஞ்சிகை பலகாலம் விழுது நிறுவனத்தினராலேயே வெளிக்கொணரப்பட்டது. “இருக்கிறம்” என்ற வெகுஜன சஞ்சிகை ஒன்றினையும் ஜனரஞ்சகமாகக் கொண்டுவர முயற்சித்தனர்.

Sunday, August 16, 2015

என் மனதில் இன்றும் நிறைந்து நிற்கும் துணிச்சல் மிக்க மாணவி

-சி.மௌனகுரு-

பறை பற்றி இப்போது பலர் பேசுகிறார்கள்
இங்கு.பெண்கள் சேர்ந்து செய்த பறை முழக்கம்
ஒன்றையும் நான் இணையத் தளத்திலும் பார்த்தேன்

மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
இப் பறை வத்தியத்தை நாம் கிழக்குப் பல்கலைக் கழகத்தில்
1996இல் அறிமுகம் செய்தோம்

.இற்றைக்கு 19 வருடங்களுக்கு முன்னர்.
எமது உலக நாடக தின விழாவினை பறை முழக்கத்தோடு ஆரம்பித்தோம்.
அது முதல் படி
.களுதாவளையிலிருந்து ஆனைக்குட்டி தலைமையில் ஒரு குழு வந்து இதனச் செய்தது
இணையத் தளங்கள் சிலவற்றில் வரும் படம் அதுதான்
இவரை இங்கு கூட்டிவந்தவர் களுதவளையச் சேர்ந்தவரும்
இன்று விரிவுரையாளராயிருப்பவருமான 
அன்றைய எமது மாணவன் சிவரத்தினம்

அவரோடு சேர்ந்து எனக்கு மிகுந்தவலதுகரமாக நின்றவர்.பாலசுகுமார்
உதவியாக இருந்தவர் ஜெயசங்கர்
முதன் முதலில் பறை தூக்கி அடித்த பல்கலைக் கழக விரிவுரையாளர் பாலசுமாரே
.அதனால் அவர் பெருமை பெற்றார்
.மாணாக்கருக்கு ஒரு வ்ழிகாட்டியுமானார்.
ஒவ்வொரு ஆண்டும் பறைமேளக் கூத்துடந்தான் வட்டக் களரியில் நாடக விழா ஆரம்பமாகும்.
பின்னால் இந்தப் பறையை அவர்களைக்கொண்டு மாணாக்கருக்குப் பழக்கினோம்.
ஆரம்பத்தில் பறை பழக மாணவர்கள் தயக்கம் காட்டிய வேளைகளில் நாங்கள் அவர்களுக்கு
தமிழ் மரபிலும் தமிழ் இசை மரபிலும்
பறையின் இடம் பற்றி வரலாற்று
விளக்கமளித்ததோடு.

Thursday, August 13, 2015

'சக்தி' என்பது வெறுஞ் சொல்லா என்ன?

-சுமதி தங்கபாண்டியன்-
பிரசன்னா ராமசாமியின் "சக்திக் கூத்து" அரங்க நிகழ்வை முன்வைத்து ஒரு பகிரல்
"திரெளபதியின்துகில் போல நீண்டு
கிடக்கின்றது இந்தப் பாதை..." நிகழ்வு முடிந்தபின் அது நடந்த இரவும் கூட!
"பாலுறவின் வேட்கையும், அது முடிந்தபின் மரணத்தின் பீதியுமே மனிதனை இயக்கும் மனவிசை" எனும் ஃபிராய்டின் கூற்றை முற்றும் நம்புபவளாகவே இருந்தேன் பிரசன்னா ராமசாமியின் "சக்திக் கூத்து" அரங்க நிகழ்வை மிகச் சமீபத்தில் அனுபவிக்கும் வரை. அந் நிகழ்வின் ஊடறுத்தலுக்குப் பின் கலையே மனிதனை இயக்கும் மனவிசை என உணர்ந்து உறுதியுடையவளாயிருக்கிறேன். எவ்வளவு இழந்தாலும் வாழ்வு முழுமை கொள்வது கலையில் தான் என்பதைத் தனது 'சக்திக் கூத்தினால்' எனக்குப் பொட்டில் அடித்தாற்போலும், முலைப் பாலமுதம் போலும் சொல்லியிருக்கிறார் பிரசன்னா ராமசாமி.
கண்களும், காதுகளும் மட்டும் உள்வாங்குவதல்ல ஒரு அரங்க நிகழ்வென்பது - புலன்களின் வழி ஊடுறுவி அது ஆன்மாவைக் கத்தி முனையில் ருசிப்பது எனப் புரிய வைத்தார் பிரசன்னா அந்த 90 நிமிடங்களில். "கலை ஒரு உலக மொழி" என்பதை மெய்ப்பித்துக் கொண்டே இருந்தார்கள், இருந்தன - நடிகர்களும், உத்திகளும், ஒலி அமைப்பும், பறை இசையும்.
இந் நாடகம் பேசும் ஒரே மொழி - காலந்தோறும், திசைகள்தோறும், நிலமெங்கினும் பாதிக்கப்பட்ட, அழுத்தப்பட்ட, அடையாளமழிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெண் மொழி. நிலத்தின் வலி - குறிப்பாக நமது ஈழத்தின் மறக்கமுடியா இன அழிப்பும், தொடர் வன்முறையும், புலம்பெயர் அலைந்துழல்வு அவலத்தின் துயர்மிகு வதைகளும் ஒலிக்கும் குரல்!