Monday, October 05, 2015

"தமிழில் சமகாலத்தில் எந்தப் பாடலாசிரியனும் நல்ல கவிஞன் என்ற பட்டியலில் இல்லை "

-திருமாவளவன்-
நேர்காணல் கருணாகரன் 
இலங்கையில் யாழ்ப்பாணத்தின் வடக்கில் உள்ள வருத்தலைவிளான் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த திருமாவளவன் இப்போதிருப்பதும் இலக்கியத்தில் இயங்குவதும் கனடாவில். அரசியலும் அரங்கும் கவிதையும் திருமாவளவனின் ஈடுபாடுகள். என்றாலும் அரசியல்வாதியல்ல. கவிஞர். அரங்காடி. ஒத்தோடியல்ல. மறுத்தோடி. இதனால் வாழ்வின் பெரும்பகுதியும் சவால்களோடுதான் திருமாவளவனுக்குக் கழிந்திருக்கிறது. இந்த நேர்காணலும் அந்தக் குணத்தையே கொண்டிருக்கிறது. பெரும்போக்கு, பொது இயல்பு போன்றவற்றை அனுசரிக்க வேண்டும் என்ற அவசியத்தைப் புறந்தள்ளியவை. ‘கவிதைக்கும் கவிஞனுக்கும் இடையில் எப்படி இடைவெளி இருக்க முடியும்? கவிதையை எப்படிச் செய்ய முடியும்?’ என்றெல்லாம் கேட்கும் கவிஞர், ‘வாழ்தலே கவிதை. என்னுடைய வலிகளும் வாழ்வின் அடையாளமும் அனுபவங்களுமே அவை’ என்கிறார். இதுவரையில் ‘பனி வயல் உழவு’, ‘இருள்யாழி’, அஃதே பகல் அஃதே இரவு’, ‘முதுவேனில் பதிகம்’ என நான்கு கவிதை நூல்கள் வெளியாகியிருக்கின்றன.
முந்நூறு ஆண்டுகள் உழுதோம் / எங்கள் நிலத்தில் அவர்க்கு / இனியும் உழுவோம் / அவர்கள் நிலத்தை அவர்க்கே’
என்று மேற்குலகத்தினருக்காக உழைத்து மாளும் நம் அவலத்தைச் சொன்ன கவி திருமாவளவனின் தந்தை கனகசிங்கம் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் மலேசிய விடுதலை அமைப்பில் போராளியாக இயங்கியவர். பின்னர் இலங்கை திரும்பி இடதுசாரி அரசியலின் ஆதரவாளராக இருந்தார். அந்த இடதுசாரி அரசியல் ஊற்றே திருமாவளவனின் ஆதாரம். திருமாவளவின் இளைய சகோதரர் கலைச்செல்வன் புலம்பெயர் படைப்பாளிகளில் முக்கியமானவர். பள்ளம், எக்ஸில், உயிர் நிழல் ஆகியவற்றின் மையத்தில் இருந்தவர். புகலிட சினிமாவின் ஆதாரமாகவும் விளங்கியவர். இலக்கியச் சந்திப்பின் இயக்கத்தில் முக்கிய பங்களிப்பாளர். திருமாவளவனும் கலைச்செல்வனும் இளவயதில் இருந்தே சேர்ந்தும் விலகியும் தோழமையோடும் சசோதரத்துவத்தோடும் இயங்கினர். இந்த நிலையில் கலைச்செல்வனின் இழப்பு பெரும்பாதிப்பை திருமாவளவனுக்கு ஏற்படுத்தியது. எனினும் அவருடைய இயக்கம் தளர்வடையவில்லை. இப்பொழுது தன்னுடைய பத்திகளையும் கதைகளையும் தொகுத்து நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்த நேர்காணல் மின்னஞ்சல் வழியாக கடந்த ஒரு ஆண்டாக மேற்கொள்ளப்பட்டது.

இப்பொழுது தன்னுடைய கிராமம் இல்லை என்ற வருத்தத்தோடு இந்த நேர்காணலைப் பதிவு செய்கிறார் திருமாவளவன்.
திருமாவளவனின் இயற்பெயர் கருணாகரன். இந்த நேர்காணலைச் செய்வது இன்னொரு கருணாகரன். இருவரும் கவிதைத்துறை சார்ந்தவர்கள்.


நீங்கள் புலம்பெயர்ந்து சென்றதைப் பற்றி…?
1980களில் புலம் பெயரும் எண்ணமோ விருப்பமோ இருந்ததில்லை. அப்போது நான் லங்கா சீமெந்து நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். வேலையில் ஓரளவு திருப்தி இருந்தது. ஊரைவிட்டு போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன். இயக்கங்கள் பெருகத் தொடங்க, வசதி படைத்த பெற்றோர்கள் பிள்ளைகளைப் பிடித்து வெளிநாட்டுக்கு அனுப்பத் தொடங்கினர். எங்கள் ஊரின் தன்மை அப்படி. முழுக்கமுழுக்க நடுத்தர சமூகத்தைக் கொண்ட ஊர். ‘புளட்’ இயக்கத் தலைவர் உமாமகேஸ்வரன் அந்த ஊரைச் சேர்ந்தவர். இருந்தபோதும் அந்த இயக்கத்தில் இணைந்தவர்கள் அரிது.
1984 இறுதியில் தம்பி கலைச்செல்வன் வெளிநாடு போவதென முடிவு செய்தார். எங்கள் ஒன்றுவிட்ட சகோதரி ஒருவர் அவருக்கு அந்த ஆசையை வளர்த்திருந்தார். வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டு சற்று மூச்செடுக்க முனைந்த காலம். அப்பொழுது எங்களிடம் சொத்து என்று இருந்தது, ஒரு ஐந்து பரப்பு காணி மட்டும்தான். அது நெடுங்காலமாக ஈடு வைக்கப்பட்டு அப்பா இறந்தபின் அறுதியாய்ப் போன வளவு. பணம் தந்தவரின் பெருந்தன்மையால் எங்கள் நிலையைக் கருத்தில்கொண்டு ஒரு பத்து வருடங்களின் பின் வட்டியின்றி மீள எங்களுக்கு அதை எழுதித் தந்தார். அதைத் தங்கைச்சிக்கென நம்பி வைத்திருந்தோம்.
தம்பி அதை மீள ஈடு வைக்க முற்பட்டபோது மறுத்துவிட்டேன். எங்கள் இருவருக்குமிடையில் பெருத்த வாக்குவாதமும் சண்டையும் நடந்தது. நான் வீட்டைவிட்டு வெளியேறினேன். அவர் பின்பு வேறு வகைகளில் உதவி பெற்று பிரான்ஸ் சென்றார். புறப்படும்போது என்னிடம் வந்து பயணம் சொல்லி விடைபெற்றுச் சென்றார்.
அக்காலத்தில் புளட் அமைப்பின் அரசியல் வகுப்புகளுக்குச் சென்று வந்தேன். தொடர்ச்சியாக பிரச்சார ரீதியில் ‘முகமூடிக் கூத்தாக’ நாடகம் போட்டோம். தினமும் ஒவ்வொரு ஊரிலும் மேடையேறி வந்தது. தொடர்ந்து கவிதா நிகழ்வு செய்தோம். அது என்னை இயக்க உறுப்பினனாக அடையாளப்படுத்தியது. எண்பதுகளின் நடுப்பகுதியில் இயக்க முரண்பாடுகள் தொடங்கிவிட்டன. புளட் இயக்கம் தானாகவே கரைந்தழிந்து போனது.
மற்றைய ஊர்களில் இயக்கத்தில் சென்றடைந்ததற்கு முரணாக எங்கள் ஊர் இளைஞர்கள் பெருவாரியாக வெளிநாட்டைச் சென்றடைவதில் குறியாய் இருந்தனர். அந்த வகையில் வீட்டில் மீதம் இருந்த தம்பியர்களும் பிரான்ஸ் சென்றடைந்தனர்.
நான் சிறுவயதிலிருந்தே ஊரோடு ஒன்றி வாழ்ந்தவன். அப்போ அம்மா இருந்தார். எனக்கிருந்தது ஒரே சகோதரி. வாய் பேச முடியாதவர். அவர் தன்னை ஒத்த ஒருவரைத் திருமணம் செய்திருந்தார். எனக்கும் மூன்று குழந்தைகள் இருந்தனர். நிரந்தரமான தொழில் ஒன்று இருந்ததென நம்பியதால் நான் ஊரில் இருப்பதென முடிவு செய்தேன்.
இயக்க முரண்பாடுகளும் மோதல்களும் கொலைகளும் விடுதலைப் போராட்டத்தின் பால் நம்பிக்கை இழக்கச் செய்தது. படிப்படியாக அது யுத்தத்தின் மீதான வெறுப்பாக மாறியது. அக்காலத்தில்தான் இந்திய ராணுவம் அமைதிப்படையென்ற பெயரில் இலங்கைக்குள் வந்தது. அந்த நிகழ்வானது எனக்கு மிகுந்த நம்பிக்கையைத் தந்தது. ஏதாவது வகையில் ஒரு தீர்வு வந்துவிடும் என்று நம்பினேன்.
நான் காதல் திருமணம் செய்தவன். நீண்ட காலமாக துணைவி பக்கத்திலிருந்து உறவுகளோ உதவிகளோ இருக்கவில்லை. குழந்தைகள் பிறந்ததன் பிற்பாடு சற்று கோபத்தின் வீரியம் தணிந்து எங்களுக்கென ஒரு சிறு காணித் துண்டைத் தந்தார்கள். என் தம்பியர் பணவுதவி செய்தார்கள். நானும் கட்டடப் பகுதியில் வேலை செய்ததால் எனக்குள் ஒரு கனவு வீடு மிதந்து கொன்டிருந்தது. எனவே என் கனவு வீட்டை அந்த சிறு காணிக்குள் இறக்கி வைப்பதில் மும்மரமாக இருந்தேன்.
கொலைகள் சர்வவாதாரணமாக நிகழ்ந்தன. அக்காலத்தில் புளட் அமைப்புக்காக மக்கள் அமைப்பில் வேலை செய்த என் நண்பர் கொல்லப்பட்டார். அந்த இரவு நான் துணைவியின் ஊரில் இருந்தேன். அவர்கள் என்னையும் தேடி வந்தாக ஊரெல்லாம் பேசிக்கொண்டார்கள். நான் சற்று மறைந்து அல்லது அவதானமாக வாழ வேண்டியவனானேன்.
அப்போது தினமும் மரணங்களைப் பார்க்கத் தொடங்கினேன். ஒருவரு கொல்லப்பட்டால் மறு இயக்கம் அதே இடத்தில் மற்றொருவரைக் கொண்டுவந்து சுட்டுப் போடும். எண்பதுகளின் இறுதி ஆண்டுகளில் மனம் துவண்டு போனேன். கட்டிய வீடு ஓடு வேய்ந்து நில வேலை செய்ததோடு நின்று போனது.
1989இல் ஒரு கொலையை இரத்தம் கொப்பளிக்கும் நிலையில் பார்க்க நேர்ந்தது. அது என்னை மிகவும் பாதித்தது. இனி ஊரில் இருப்பதில்லை என முடிவெடுத்தேன். என் முடிவை தம்பியர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் என்னும் சிறிது காலம் பார்க்கலாம் என ஆறுதல் படுத்தினர்.
திடீரென இந்திய மத்திய அரசு கைமாறியது. இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் இணைந்து செயல்பட்ட காலம். இந்தியா அமைதிப் படையை மீள அழைத்துக்கொள்வதென முடிவுசெய்தது. இந்திய ராணுவம் தமிழர்களுக்குப் பல அட்டூழியங்களை செய்திருந்தாலும்கூட இந்திய அரசியல் நிலையிலிருந்து பார்க்கும் போது அவர்கள் செய்த மிகப்பெரிய வரலாற்றுத் தவறு அது என்றே சொல்வேன்.
இந்திய இராணுவம் வெளியேறிய பிற்பாடு விடுதலைப் புலிகள் மீள இலங்கை இரானுவத்துடனான போர்த் தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கினர். தினமும் சீமெந்து தொழில்சாலையிலிருந்து பாதுகாப்பு அரண்கள் அமைப்பதற்கென தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். நான் நாட்டைவிட்டு வெளியேறுவதென முடிவெடுத்தேன்.
ஆனால் நான் நினைத்ததுபோல அது இலகுவில் அமையவில்லை. முதல் முயற்சி வங்காளதேசத்தோடு முடிந்துபோனது. மீண்டும் கொழும்புக்கு வந்தேன். மீளப் புறப்படுவதற்கு இரண்டு வாரம் இருந்தது. ஊருக்கு போய் வரலாம் எனப் புறப்பட்டேன். போருக்குள் சிக்கிக்கொண்டேன்.
மூன்று மாதங்கள் யாழ்குடாவை விட்டு அசைய முடியவில்லை. எனக்கும் மனைவி பிள்ளைகளை போருக்குள் விட்டு மீளப் புறப்பட விருப்பமிருக்கவில்லை. ஆனால் முழுக் குடும்பமும் அச்சத்திலிருந்தனர். என் வாயை அவர்களால் அடைக்க முடியவில்லை. எந்தநேரத்திலும் எனக்கு எதுவும் நடக்கலாம் என அஞ்சினர். எனவே என்னைத் துரத்துவதிலேயே குறியாய் இருந்தனர். எனக்கு அது வெறுப்பாக மாறியது. இனி குடும்பமும் வேண்டாம் இந்த மண்ணும் வேண்டாம் என்ற விரக்தி நிலையில் வெள்ளாங்குளத்தில் மண்ணெண்ணெய் வாங்கப் போவதாக விடுதலைப் புலிகளிடம் பாஸ் எடுத்துக்கொண்டு மன்னாருக்குப் புறப்பட்டேன். அங்கிருந்து தலைமன்னார் வழியாக இந்தியா வந்தேன்.
தென்காசி முகாமுக்கு அனுப்பி வைத்தார்கள். ஒரு வாரம் தங்கியிருந்தேன். அது இன்னொரு சிறைக்கூடமாக இருந்தது. எங்கே போவதெனத் தெரியாது. அங்கிருந்து அகப்பட்ட பஸ்சிலேறி தப்பி ஓடினேன். திருச்செந்தூர் வந்து சேர்ந்தேன். ஒரு தொலைபேசி நிலையத்திலிருந்து தம்பிக்கு பல தடவை தொடர்பெடுக்க முயற்சி செய்தேன். பதில் இல்லை. தொலைபேசி நிலைய உரிமையாளர் என்னைப் பார்க்கச் சந்தேகமாக இருப்பதாகவும்   பொலீசை அழைக்கப் போவதாகவும் உண்மையை சொல்லும்படியும் மிரட்டினார். நான் இந்தப் பெரிய பாரதத்தைப் படித்து வைத்தேன். நல்ல மனிதன். உணவு தந்து இரவு தங்க வைத்து மறுநாள் தம்பி தொடர்பு கிடைத்தபோது அவர்களைக் கடிந்து உதவினார்.
சென்னை வந்தேன். சில மாதங்களின் பின் துணைவி பிள்ளைகளை சென்னைக்கு அழைத்து அவர்களை அங்கு தங்கவைத்து விட்டுப் புறப்படுவது என்ற முடிவோடு வந்தனர். மீள நான் கொழும்பு செல்லப் புறப்பட்டபோது ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார்.
அதன்பின் பொலிஸ் நிலையம் அது இது என அலைந்து முடிவில் காசைத் தள்ளி கொழும்பு வந்தேன்.   பிறகு பயண ஒழுங்குகள் செய்து சிக்கல் அதிகமின்றி கனேடிய எல்லையில் அகதி நிலைகோரிக் கைகளை உயர்த்திய போது 1992ஆம் ஆண்டு இதமான குளிரில் மரங்கள் இலைகளை உதிர்த்துக்கொண்டிருந்தன.
ஒரு புலம்பெயரியின் வாழ்க்கைக்கும் மனதுக்கும் இடையில் உள்ள யதார்த்தமும் கற்பனையும் விருப்பங்களும் சவால்களும் எப்படியானவை?
புலம்பெயர் வாழ்க்கைக்கு என்னை ஒரு வகை மாதிரியாக கொள்ளலாமா என்று தெரியவில்லை. காரணம் புலம்பெயர்வு என்பது பலவகைகளில் நிகழ்ந்தது. எண்பதுகளின் ஆரம்பத்தில் புறப்பட்டவர்கள் சற்று வசதி படைத்தவர்களாகவும் ஓரளவு கல்வித் தகமை உடையவர்களாகவும் இருந்தார்கள். இவர்கள் தாங்கள் போருக்குள் சிக்காது வசதியுள்ள வாழ்வைத் தேடும் நோக்கோடு வந்தவர்கள். எண்பதுகளின் நடுப்பகுதிக்குப் பின் புறப்பட்டவர்களில் மாற்று விடுதலை அமைப்புகளை சார்ந்தவர்களே அதிகம் இருந்தனர். இவர்கள் உயிர் பாதுகாப்புத் தேடி வந்தவர்கள். ஆரம்பத்தில் இவர்களிடமிருந்தே எமது மக்களின் சமூகக் கட்டமைப்புகள் மற்றும் புகலிட இலக்கியங்கள் உருவாகின. தொண்ணூறுகளுக்கு பிற்பாடு புறப்பட்டவர்களில் பலவிதமானவர்களும் அடங்குவர். எனவே வெளிநாட்டுக்கு வந்தவர்களால் உருவாக்கப்பட்ட பிம்பம் வெளிநாடு மீதான ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி இருந்தது.
அது மட்டுமல்லாது வெளிநாட்டுக்கு வந்தவர்கள் அனுப்பிய பணத்தால் ஊரில் பெரும் பொருளியல் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது. குடும்பத்தில் ஒருவராவது வெளிநாட்டில் இருந்தால்தான் ஓரளவு சமூகத்தில் தாக்குப்பிடிக்க முடியும் என்ற நிலை உருவானது. இதனால் கிராமங்களில் வாழ்ந்தவர்கள், சிறுநகர வாழ்க்கைக்கே பழக்கப்படாதவர்கள் என எல்லோரையுமே விமானங்கள் அள்ளிவந்து சொரிந்தன. புதிய மொழி, புதிய சூழலில், புதிய திணையில் பெருநகர வாழ்க்கைக்குள் திணிக்கப்பட்டனர். திருமணத்தின் பொருட்டு ‘பொன்ஸர்’ செய்யப்பட்டவர்கள் அல்லது பிள்ளைகள் மூலம் பொன்சர் செய்யப்பட்ட பெற்றோர்கள் இன்னொரு ரகம். இப்படி இவர்கள் எல்லோருக்கும் புலம்பெயர் வாழ்வில் வேறுவேறு அவலங்களும் அனுபவங்களும் தீர்வுகளும் இருந்தது. எல்லோரையுமே ஒரு சட்டகத்தில் நிறுத்திப் பார்க்க முடியாது.
ஆரம்பத்தில் ஓரளவு வசதி படைத்தவர்கள் தம் சொந்தப் பணத்தில் வந்தார்கள். வெறும் ஐயாயிரம், பத்தாயிரம் டாலருக்கு உட்பட்ட பணம் புலம்பெயர் பயணத்துக்கு போதுமானதாக இருந்தது.
இறுதியில் கப்பலில் வந்தவர்கள் ஐம்பது ஆயிரம் கொடுத்து கனடா வந்து இறங்கினர். அவ்வளவும் வட்டிக்கெடுக்கப்பட்ட பணம். அதை உழைப்பதற்கு முழு வாழ்வையுமே பணயம் வைக்க வேண்டும். இவர்கள் அனைவரும் ‘களங்கட்டி’க் கூட்டுக்குள் அகப்பட்ட மீன் குஞ்சுகள் போல வெளிவரவும் முடியாது, சாகவும் முடியாது தினமும் இரண்டு மூன்று வேலையென வாழ்வைத் தொலைக்க முற்பட்டனர்.
எல்லோருக்கும் பனியும் குளிரும் பெரும் பிரச்சினையாக இருந்தது. 90 விழுக்காடு மக்கள் தொழிற்சாலைகளிலும் உணவுக்கூட அடுப்பங்கரையிலும் எச்சில்பாத்திரங்களை கழுவும் எந்திரங்கள் முன்னும் தொழில் செய்தனர். இவர்கள் அனைவருக்கும் ஊரின் மீதும் அந்த வாழ்வின் மீதும் ஏக்கம் இருக்கத்தான் செய்தது. இருந்தும் யாரும் இந்த நாட்டை விட்டு இலங்கைக்கு மீளத் தயாராக இருக்கவில்லை. தமிழீழம் கிடைத்திருந்தால் கூட வந்திருக்க மாட்டார்கள்.
அதுமட்டுமன்றி இவர்கள் இந்த யுத்தம் முடிந்துவிடக் கூடாதென்பதிலும் ஆர்வமாக இருந்தனர். இவர்களின் மனதுக்கும் புலம்பெயர் வாழ்வுக்குமிடையில் எத்தகைய தாக்கம் இருந்தது? அது உண்மையானதா என்பதை கணிப்பிட முடியவில்லை. எப்போதும் வியாபாரம் இல்லை என அழுது வடிக்கும் கடைமுதலாளியை ஒத்ததாகவே இவர்களின் மனது உள்ளதாகத் தோன்றுகிறது. குறிப்பாக ஊரில் ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருந்த சமூகங்களுக்கு இந்த புலம்பெயர் வாழ்வானது இனிப்பானதாகவே இருந்தது. இங்கு கல்வி கலாச்சார விழுமியங்களில் ஏற்றத்தாழ்வு கிடையாது. சாதீய ஒடுக்குமுறைகள் குறுகி வருகின்றன.
பலரும் புலம்பெயர் வாழ்வு அவலம் மிகுந்தது என்று கூறும் அதேவேளை தங்கள் உறவுகளை அழைப்பதில் இங்கு தீவிரங் காட்டுகிறார்கள். போர் முடிந்துவிடக்கூடாது என்றுகூட விரும்பினார்கள்! பலருக்குப் போர் ஒரு பிழைப்பாகப் போயிருந்தது. பல பத்திரிகைகள், ரேடியோ, தொலைக்காட்சி ஊடகங்கள் போரினால் ஏற்பட்ட இடர்களை விற்றுப் பிழைத்தன. அவர்கள் தங்கள் தங்களுக்கான விளம்பர வங்கிகளை உருவாக்கும் விதமாக தாயக ஏக்கத்தை மக்களிடம் உருவாக்கினர்.
அதனுள் புலிகளின் வலைப் பின்னல் ஊடுருவியது. அது பெருத்த பண முதலையாய் மாறியிருந்தது. அவர்கள் கையகப்படுத்தாத வியாபார நிறுவனங்களே இல்லை எனலாம். இங்கேதான் புலம்பெயர் வாழ்வுக்கும் மனதுக்குமிடையேயான முரண் எனக்குள் கேள்வியாக எழுகிறது. என்னைப் பொறுத்தவரையில் மண்ணை நேசித்து முடிவில் உயிர்ப்பாதுகாப்புத் தேடி ஓடிவந்த ஆரம்பகாலப் போராளிகள் மற்றும் நீண்டகாலம் ஊரிலிருந்து பின்னாளில் பிள்ளைகள் மூலம் வதிவுரிமை பெற்று வந்த பெற்றோர்கள்… இவர்களிடம் மட்டுமே ஊர்பற்றிய ஏக்கமும் மன உழைச்சலும் இருக்கிறது.
இவர்களால் உருவாக்கப்படும் இலக்கியப் படைப்புகளில் மட்டுமே இந்தப் பண்பைக் காணமுடியும். இவர்களிடம் கூட புலம்பெயர் அவலத்தைப் பேசும் படைப்புகள் மிகச் சொற்பமே!
பனிவயல் உழவைச் செய்ய விரும்பும் நிலை’யே – ‘புலம்பெயர வேண்டும் என்ற அவா’வே இலங்கையில் காணப்படுகிறது. குறிப்பாக இளைய தலைமுறை புலம் பெயர்ந்து செல்லவே விரும்புகிறது. பிள்ளைகளை எப்படியும் வெளிநாடுகளுக்குத் துரத்தி விடுவதிலேயே பெற்றோரும் உள்ளனர். உங்கள் அனுபவம் வேறாக இருக்கிறது. இதை எப்படிச் சமநிலைப்படுத்துவது?
நிச்சயமாக. இந்த நிலையை உருவாக்கியவர்கள் புலம் பெயர்ந்த எம்மவர்கள்தான். இதற்கு பல காரணிகள் உண்டு. நான் முன்னர் கூறியதுபோல பலருடைய புலப்பெயர்வானது பொருளியல் நோக்கோடு இருந்தது. போர் அதற்கொரு ஊக்கியாக இருந்தது. அந்தவகையில் இந்த விளைவுகள் தவிர்க்க முடியாதவை.
இருந்தாலும்கூட சில நடைமுறை சிக்கல்கள் தொடர்பாக அலசலாம். குறிப்பாக இங்கிருப்பவர்கள் (கனடாவில் உள்ளவர்கள்) தங்கள் உண்மை நிலையை தாயகத்தில் இருப்பவர்களுக்குச் சொல்வதில்லை. போருக்குள் அவர்கள் படும் துயருக்கு மேல் தங்கள் துயரை இறக்கிவைக்க விரும்புவதில்லை. எப்போதும் தாங்கள் சந்தோஷமாகவே இருப்பதாகக் காட்டிக்கொள்கிறார்கள்.
இரண்டாவது ஊரிலிருக்கும் உறவினர்களுக்கு எவ்வளவு காலந்தான் பணம் அனுப்பிக்கொண்டிருக்க முடியும்? ஒரு கட்டத்தில் அவர்களை அழைத்து இங்கே குடியேற்றிவிட்டால்தான் தங்களுக்கு விடுதலை கிடைத்துவிடும் என்ற நிலை. அதோடு இங்கு வந்தால்தான் நாங்கள் படும் கஷ்டம் அவர்களுக்குப் புரியும் என்ற எண்ணமும் உருவாகிறது. இதுவொரு சங்கிலித் தொடர் போலவே நிகழ்கிறது.
மூன்றாவது வயதான பெற்றோரை அழைத்து தங்களோடு குடியமர்த்தி விட்டால் அவர்களுக்கான அரச கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளலாம். கணவன் மனைவி வேலைக்கு போகும்போது பிள்ளைகளைப் பராமரிக்கும் செலவை மிச்சம் பிடிக்கலாம் என்ற எண்ணப்பாடும் இதில் உண்டு.
ஊரிலிருப்பவர்களும் வெளிநாட்டு வருவாயோடு வாழும் உறவுகளோடு போட்டிபோட்டு வாழ முடியாத நிலையில் தாங்களும் புறப்பட்டால்தான் உண்டு என்ற முடிவுக்கு வந்து யாருடையதாவது காலைப் பிடித்து, நச்சரித்து வெளிநாடு வந்து சேர்ந்து விடுகிறார்கள். இப்படிப் பலவுண்டு. முக்கியமாக எங்களிடமுள்ள இயல்பான (குறிப்பாக யாழ்ப்பாண) மனோபாவம் மிகவும் மோசமானது. சகோதரர்கள், உறவிவினர்களிடம் போட்டிபோடுவதும் ஒருவருக்கொருவர் பீற்றிக்கொள்வதும் இயல்பாகவே உண்டு. ஒருவர் ஒரு பொருளை வாங்கினால் அடுத்தவர் போட்டியிட்டு அதைவிட பெரிதாக வாங்குவது. பின் அதை போட்டோக்கள் மூலமும் வேறு வகைகளிலும் ஊரில் உள்ளவர்களுக்கு தாங்கள் பகட்டாக வாழ்வதாகக் காட்டிக்கொள்வது.
போரின் சூழலைப் பயன்படுத்தி பொருளியல் ரீதியில் புகலிடம் பெற்ற அதிகம் பேரிடம் இந்த நிலைகளைக் காணமுடிகிறது. இவர்கள் ஊருக்கு வரும்போது சுற்றுலாப் பயணிகளைப்போலப் பாவனை காட்டிக்கொள்கிறார்கள். இங்கு திருமணம், பூப்பு நீராட்டுவிழா போன்ற ஆடம்பர விழாக்களை நிகழ்த்தி அதை வீடீயோ மூலம் ஊருக்கனுப்பி இங்கு பாலாறு ஓடுவதுபோன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள். காட்டாற்றுவெள்ளத்தில் கரைந்தது போல மீதமுள்ளவர்களும் கரைந்து போய்விட்டார்கள்.
அனுப்பும் பணத்துக்குக்கூட என்ன செய்தீர்கள்? பயனுள்ள வகையில் செலவு செய்தீர்களா? என்றுகூட விசாரிப்பதில்லை. இவற்றின் மூலம் வெளிநாட்டிலுள்ளவர்கள் சுகபோகம் அனுபவிப்பதான ஒரு தோற்றப்பாடு அல்லது பிரமை எழுந்துள்ளது. இச்செயலானது இங்கு மட்டுமல்லாது தாயகத்தில்தான் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போது ஊர் சென்று வருபவர்களின் தகவல்களின்படி, பண்பாடு பழக்கவழக்கங்களில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. போரினால் ஏற்பட்ட மாற்றங்களைவிட புலப்பெயர்வு ஏற்படுத்திய பாதிப்பே அதிகம் என்கிறார்கள். குறிப்பாகத் தமிழ் மக்களின் மூலதனமான கல்வியும் உழைப்பும் இல்லாமல் போய்விட்டதென்கிறார்கள்.
பலருக்கு நிலமிருந்துங்கூட தோட்டம் செய்யாது தரிசாக கிடப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக போரின் உச்சத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்த உணர்வலைகளில் சிறு பங்குகூட யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களுக்கு இருக்கவில்லை என்பதையே ஊர் சென்று இங்கு மீள்பவர்கள் பதிவு செய்கிறார்கள். இது வன்னிக்கோ அல்லது மற்றைய இடங்களுக்கோ பொருந்தாது என்று நினைக்கின்றேன். சில நாட்களுக்கு முன் ஒரு நண்பன் வந்திருந்தான். ஊரிலுள்ள ஒரு குடும்பத்திற்கு உதவி செய்வதாகவும் அவர்களில் ஒருவர் தன்னை வெளிநாட்டுக்கு கூப்பிடும்படி கேட்பதாகவும் சொன்னார்.
தான் அழைப்பதாயின் இப்போ ஐம்பாதாயிரம் டாலர்கள் வேண்டும். இந்தப் பணம் இலங்கை வங்கியிலிருந்தால் அறுபதாயிரம் ரூபா வட்டி கிடைக்கும். அவர்கள் நோக்கம் வெளிநாடாகவே இருக்கிறது என்றார். இப்போ மேலைத்தேய நாடுகள் இலங்கை அகதிகளை நிராகரிக்கின்றன. எனவே அழைப்பது சாத்தியமில்லை என்றபோது மத்தியகிழக்கு நாட்டுக்காவது அனுப்பும்படி கேட்டார்களாம். சரி, ஏதாவது தொழில்நுட்பக் கல்வியாவது படி. படிப்பதற்கு நான் பணம் அனுப்புகிறேன் என்றாராம். ஆனால் இதை அவர்கள் இன்று வரை செய்யவில்லை என வருத்தப்பட்டார்.
இந்த மனோபாவத்தை எப்படி மாற்றுவதென்று புரியவில்லை. இன்று இந்த நாடுகளிலும் மிகப் பெரிய பொருளாதாரச் சிக்கல் இருக்கிறது. ஆரம்பத்தில் கணவன் – மனைவி ஓரிடத்தில் வேலை செய்து ஓட்டிய வாழ்க்கை வண்டி இப்போ சரிந்து கிடக்கிறது. என்னோடு வேலைசெய்யும் பலர் இப்போ இரண்டு வேலை செய்கிறார்கள். தினமும் காலை 6 மணிக்கு வேலைக்குப் புறப்பட்டு மூன்றரை மணிக்கு வேலை முடித்து, பின் இன்னொரு தொழிற்சாலையில் நாலரை மணிக்கு வேலை தொடங்கி, நடு இரவு வேலை முடித்துவரும் பலர் இருக்கிறார்கள்.
பொதுவாகவே சராசரி இயல்பு வாழ்கை வாழும் பெரும்பான்மையோரின் அனுபவங்கள் அதிகம் படைப்புகளில் வருவதில்லை. வந்தாலும் கூட அது வெளிநாட்டுக் கனவில் வாழும் இன்றைய சந்ததியின் கண்களுக்கு தெரிவதில்லை.
வெள்ளம் தேங்கிய நிலம் போல நீர்வற்றி பயிர் முளைக்க இன்னும் நெடுங்காலம் எடுக்கும்.
கருணாகரன் திருமாவளவன் ஆனது எப்படி?
எழுபதுகளின் ஆரம்பத்தில் எனது வாசிப்புப் பழக்கம் ஆரம்பமானது. எங்கள் ஊர்ச்சூழலில் நெறிப்படுத்தக் கூடிய இலக்கிய முன்னோடிகள் யாரும் எனக்கு வாய்த்திருக்கவில்லை. ஒரு காட்டுக் குதிரையைப்போல அகப்பட்ட திசையில் ஓடி கைக்கெட்டியது எதுவோ அதை எல்லாம் வாசித்துத் திரிந்தவன். அந்தவகையில் சரித்திர நாவல்களே என் நெடுங்கால வாசிப்பிற்கு தீனி.
கல்கி, அகிலன், சாண்டில்யன் போன்றவர்களின் எல்லா நாவல்களையும் தேடித்தேடி வாசித்தேன். அதற்குப் பின்னர் மு.வரதராஜனில் தொடங்கி காண்டேகர் வரை சென்றது. மிகப் பின்னாளில்தான் எனக்கு தீவிர எழுத்தாளர்களின் நூல்கள் அறிமுகமாயின. அந்த வகையில் எனக்கு ‘கரிகாலன்’ என்ற பெயரின் மீது ஒருவித ஈர்ப்பிருந்தது. முதல் பிறக்கும் ஆண் குழந்தைக்கு அந்தப் பெயரைச் சூட்டுவதென என்னுள் ஒருகனவை வளர்த்திருந்தேன். முதல் மகன் பிறந்தபோது கரிகாலன் என்றே பெயரிட்டேன்.
நான் எழுதத் தொடங்கியது என்று நினைவிலிருந்து எதையும் வரையறை கொள்ளமுடியவில்லை. ஆரம்பத்தில் எங்கள் ஊர் வாலிபர் சங்கத்துக்காக சிறிய நாடகங்களை எழுதி இயக்கியிருக்கிறேன். கவியரங்களில் கவிதை படித்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக ‘இளமருதம்’ என்ற பெயரில் ஒரு கையெழுத்து பத்திரிகையை கொண்டு வருவதென ஊர் வாலிபர் சங்கத்தில் முடிவு செய்தோம். தொடராக ஒரு ஐந்து, ஆறு பத்திரிகை வந்தது. அதில்தான் என் முதல் ஆக்கங்கள் வெளிவந்தன.
 என் நினைவுக்கெட்டிய வகையில் ‘சிங்ககிரி காவலன்’ என்ற தலைப்பில் முதல் சிறுகதையை எழுதியிருந்தேன். முகிலன் தமிழ்நாட்டிலிருந்து உதவி பெற்று படைநகர்த்தி வருகிறான். கடைசி இரவில் ‘காசீபன்’ தன் கடந்த காலத்தை சுயவிமர்சனம் செய்து கொள்வதனுடாக கதையை நகர்த்திச் சென்றிருந்தேன். முடிவில் யுத்த பேரிகை நெருங்கிவிட்டது. கட்டாரியால் தன்னை மாய்த்துக்கொள்கிறான் என்பதாக அந்தக் கதை அமைந்தது. அந்தக் காலத்தில் கவிதைகளிலும் சிறிது ஆர்வம் ஏற்பட்டது. எல்லோரையும் போலவே காதல் கவிதைக் கிறுக்கல்களில் ஆரம்பித்தேன். பாரதி நூற்றாண்டு விழா ஊரில் நிகழ்ந்தது. அதில் அறுசீர்விருத்தமாக பத்துப் பாடல்களும் ஒரு நீண்ட வசன கவிதையும் படித்தேன். அப்போதெல்லாம் அவ் வசன கவிதையைதான் புதுக்கவிதை என எண்ணிக்கொண்டிருந்தேன்.
எங்கள் ஊரில் மயில்வாகனப் புலவர், சரவணமுத்துப் புலவர் என சகோதரர் இருவர் வாழ்ந்திருக்கிறார்கள். இதில் இளையவர் மகள் குகானந்தநாயகி எனது காலத்தில் வாழ்ந்தவர். பின்னொருநாளில் நல்ல கவிஞனாவாய் என வாழ்த்தினார். அடுத்தடுத்த வருடங்களில் வாலிபர் சங்கத்தினர் ஒரு ஆண்டு மலரை அச்சில் கொண்டு வருவதென முடிவு செய்தனர். என்னிடம் சிறுகதை கேட்டிருந்தனர். வேலைதேடி கொழும்பு செல்லும் இளைஞன் அங்கு சிறிய தகப்பன் முறையில் உள்ள உறவினன் வீட்டில் தங்கியிருக்கிறான். அங்கே அவரின் இளம் மனைவிக்கும் அவனுக்கும் உறவு ஏற்பட்டுவிடுவதாக அந்தக் கதை அமைந்தது. இது முறையற்ற உறவைச் சித்தரிக்கும் கதை எனப் பிரசுரிக்க மறுத்துவிட்டனர். இத்தகைய ஊர்ச் சூழல்தான் எனக்கு அமைந்திருந்தது. அன்றே எனக்குள் ஒருவித இலக்கியமீறல் தோன்றியிருந்ததை இப்போ மீட்டுப் பார்க்கும் போது உணரமுடிகிறது.
பிறகு, போர் மேகம் சூழ்ந்தது. அக்காலத்தில் ‘புளட்’ அமைப்புக்காக ஊர் ஊராக கவிதா நிகழ்வுகள் செய்தோம். அதில் பொன். கணேசமூர்த்தி எழுதிய கவிதைகளை மேடையில் ஒப்புவிப்பவனாக நான் இருந்தேன். எனக்குள் மேடைக் கவிதைக்கான லயம் பிடிபட்டிருந்தது. அதற்குப் பின் புலம்பெயர்ந்து கனடா வரும் வரை எந்த இலக்கிய முயற்சிகளிலும் ஈடுபடவில்லை.
கனடா வந்ததும் முதன் முதலில் மொன்றியாலில் குடியேறினேன். அங்கு ஏற்பட்ட தனிமைச் சூழல் மீள இலக்கிய நண்பர்களைத் தேடி அணுக வைத்தது. எனது முதல் கட்டுரை மேடை நாடகம் தொடர்பாக எழுதப்பட்டது. தொரன்றோவிலிருந்து வெளிவரும் ‘தமிழர் தகவல்’ ஆண்டு மலரில் வந்திருந்தது. அதை சிவா. கருணாகரன் என்ற பெயரில் எழுதியிருந்தேன். அதே வேளை ‘தாயகம்’ பத்திரிகையில் ஓரிரு கவிதைகள் எழுதினேன். அவை ‘கரிகாலன்’ என்ற பெயரில் வெளிவந்தன. அக்காலத்தில் மொன்றியாலில் ஒரு பொங்கல் விழா நிகழ்ந்தது. விழா முடிந்த பிற்பாடு ஒட்டுமொத்த அதைப் பற்றிய விமர்சனத்தை நண்பர் ஒருவருடன் பகிர்ந்துகொண்டேன். அவர் தாயகம் பத்திரிகையில் எழுதுபவர். உன் கருத்தை தாயகம் பத்திரிகைக்கு எழுது என்றார்.
நான் அந்த விழாவின் நிகழ்வொன்றில் பங்காளியாக இருந்துவிட்டு எப்படி எழுதுவதெனத் தயங்கினேன். வேறு பெயரில் எழுது என்றார். சரித்திர நாயகன் ‘கரிகாலனின்’ இயற்பெயர் ‘திருமாவளவன்’ என்பதால் அப்பெயரில் எழுதினேன். இருந்தாலும் எழுத்தையும் கருத்தையும் கொண்டு நானே எழுதினேன் என்பது சிலநாளில் பரகசியமாயிற்று.
பின் தொரன்றோவில் ‘சூரியன்’ என்றொரு பத்திரிகை உதயமாயிற்று. அதில் விமர்சனக் கட்டுரைகளும் கவிதைகளுமாக கிறுக்கத் தொடங்கினேன். அக்காலகட்டத்தில் ‘பிறந்த பதியில் சிறந்த தொன்றில்லை’ என்ற தலைப்பில் கட்டுரைகளை அவ்வவ் ஊரவர்கள் எழுதவைப்பதென முடிவு செய்தோம்.
இரண்டு மூன்று வாரம் கழிந்த நிலையில் வெளிவந்த கட்டுரைகள் சுவரசியமற்று வெறும் பாடசாலைக் கட்டுரைகள் போல அமைந்தது. இதில் நான் அதிருப்திப்பட்டபோது ‘எடுத்துக்காட்டாக நீயே முதலில் எழுது’ என்றார்கள்.
ஒருவித கவிதை மொழி சார்ந்த வசனநடையில் என்னுடைய கட்டுரையை எழுதினேன். இரண்டு வாரம் தொடர்ச்சியாக வெளிவந்தது அந்தக் கட்டுரை. ஏனோ அப்போதிருந்த மனநிலையில் அக்கட்டுரையை மீள ‘திருமாவளவன்’ என்ற பெயரில் அனுப்பியிருந்தேன்.
அதன்பின் சொந்தப் பெயர் சொல்லி அழைத்த நண்பர்கள்கூட என்னைத் ‘திருமாவளவன்’ என்ற பெயரில் அழைக்கத்தொடங்கினர். பின் ‘ழகரம்’ சிற்றிதழ் வந்த காலத்தில் ‘இளங்கறுவல்’ என்றபெயரிலும் சிறு பத்திகள் எழுதியிருக்கிறேன். என்றாலும் திருமாவளவன்தான் நிரந்தரம்.
ஊர் நினைவில் உருகுதல்’ புலம்பெயர்ந்தவரின் பொதுப் பண்பு. உங்களுடைய முதுவேனிற் பதிகம் இதிலிருந்து நீங்கி புலம்பெயர் யதார்த்ததில் காலூன்றியிருக்கிறதே! இந்த நிலை எப்படி ஏற்பட்டது?
புலம்பெயர்ந்த தமிழர்களில் இலக்கியப் பணிகளில் ஈடுபட்டவர்கள் ஏதோ விதத்தில் ஈழப்போராட்டத்தின் பங்காளர்களாகவும் நிர்ப்பந்தத்தின் காரணமாக ஊரைவிட்டு வெளியேறியவர்களாகவும் இருந்தனர். ‘பொருளியல் புலம்பெயரிகள்’ தாங்கள் வந்த வேலையோடு போய்விட்டனர். அவர்களுக்கு இலக்கியத்தின் மீது கவனமிருக்கவில்லை. அந்தவகையில் புலம்பெயர் படைப்புகளில் ‘ஊர் நினைவில் உருகுதல்’ என்பது யதார்த்தம். அதை மாற்ற முடியாது. சட்டியில் உள்ளதுதானே அகப்பையில் வரும்! இது ஒரு வகை.
இரண்டாவது முள்ளிவாய்கால் பேரழிவு முடியும் வரையில் அல்லது இன்று வரையிலும் என்று கூடச் சொல்லலாம். உடலளவில் புலம்பெயர்ந்த நாட்டில் வசித்தாலும் மனதளவில் ஊரில்தான் வாழ்ந்தோம். அல்லது வாழவைக்கப்பட்டோம். இதைத் திட்டமிட்டே இங்குள்ள ஊடகத்தொடர்பு சாதனங்கள் செய்து வந்தன. மக்களின் கவனம் ஊரையும் போரையும் விட்டு சிதறிவிடக் கூடாதென்பதில் புலிசார் பணம் திரட்டும் அமைப்புகள் கவனமாக இருந்தன. ரேடியோ, தொலைக்காட்சி, கலைநிகழ்ச்சிகள் என எல்லாமே அந்த வகையில்தான் செயல்பட்டன. அவர்களின் அனுசரணையின்றி ஒரு கலைநிகழ்ச்சியையும் நிகழ்த்த முடியாத சூழல் இருந்தது. விரும்பியோ விரும்பாமலோ புலிகளுக்கு முரணாகச் செயல்பட்டவர்களும் இதற்கெதிராகச் செயல்படுவதாக கருதிக்கொண்டு இந்த சகதிக்குள்ளே புரண்டெழ வேன்டியதாயிற்று.
கனேடிய பாராளுமன்றத்துக்காக ஒரு தமிழ் பேசும் உறுப்பினரை அனுப்பிவிட்டு அவர் ஈழப் பிரச்சினைக்கு என்ன செய்தார் எனக்கேள்வி எழுப்பும் நிலையில்தான் இன்றும் நாங்கள் இருக்கிறோம். எங்கள் பேச்சும் மூச்சும் இன்று வரை ஊரில்தான் இருக்கிறது.
போருக்குள் வாழ்ந்த யோ. கர்ணனும் போரின் சுவடுகளைத்தான் எழுதுகிறார் என்றால் இருபது ஆண்டுகளுக்கு மேல் புலம்பெயர் நாடுகளில் வதியும் நட்சத்திர எழுத்தாளர் ஷோபாசக்தி போன்றவர்களின் படைப்புகளும் அதைத்தான் எழுதுகிறது.
ஈழப்போரிலிருந்து விலகி தன் அனுபவங்களை எழுதி வந்த அ. முத்துலிங்கத்தைக்கூட இதுவிட்டு வைக்கவில்லை. இந்த அவலம் எப்படி நிகழ்கிறது? பெரும்பாலான வாசகர்கள் தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் வதிவது காரணமா? அல்லது தமிழ்நாட்டிலுள்ள ஊடகங்கள் வியாபார நோக்கத்தில் இதுபோன்ற படைப்புகளுக்கு முன்னுரிமை கொடுப்பதால் ஏற்படும் தாக்கமா? தெரியவில்லை. இதற்குள் என் படைப்புகளை எப்படி வேறுபடுத்துவது அல்லது வேறுபடுத்தலாமா என்பது கூடப் புரியவில்லை. நான் புலம்பெயர்ந்த பின் எழுதத் தொடங்கியிருந்தாலும் கவிதை மீது தீவிரமாகக் கவனம் செலுத்தியது தொண்ணூறுகளின் பிற்பகுதியில்தான். சிறுகதை, நாடகம் என்பவற்றிலிருந்து விடுபட்டு ஒருமுகமாய் கவிதை மீதே என் கவனம் படிந்தது. எனக்கு மிகவும் உந்துசக்கியாக கவிஞர் சேரன் இருந்தார்.
கனடா வந்த ஆரம்பநாட்களில் மேடைக் கவிதையிலேயே அதிக கவனம் செலுத்தினேன். அந்நாளில் எனக்கு வ.ஐ.ச. ஜெயபாலனின் ‘நமக்கென்றோர் புல்வெளி’ திரட்டு அகப்பட்டது. அதன்மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. தொடர்ச்சியாக அவரது ‘சூரியனோடு பேசுதல்’ கிடைத்தது. தொடர்ச்சியாக மௌன வாசிப்புக்குரிய கவிதைப் பக்கம் என் சிந்தை திரும்பியது. ஈழத்துக் கவிதைகளை தேடிப் படிக்கத் தொடங்கினேன். அக்காலத்தில் ஓசைகளுக்கேற்ப வார்த்தைகளை அடுக்கும் வைரமுத்து போன்றவர்களின் கவிதைப் போக்கிற்கும் உணர்த்தல் பாங்கான ஜெயபாலன் பொன்றவர்களின் கவிதைகளுக்குமிடையில் நான் குழம்பிப் போயிருந்தேன்.
இலங்கையின் முக்கிய இடதுசாரிய தோழர் வீ. பொன்னம்பலம் நினைவாக இங்குள்ள சூரியன் பத்திரிகையில் என் கவிதை ஒன்று வந்திருந்தது. அதைப் பார்த்து விட்டு அ. கந்தசாமி தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார். அக்கவிதை வைரமுத்துவின் சாயலில் இருப்பதாக சொன்னார். எனக்கு அதைப் பாராட்டாக எடுப்பதா அல்லது தவிர்க்க வேண்டுமா என்பதுகூடப் புரியவில்லை. பின் தற்செயலாக கவிஞர் சேரன் சந்தித்தார். அக்காலத்தில் வந்திருந்த ‘நாகர்கோவில்’ என்ற என் கவிதை ஒன்றைப் பற்றிப் பேசினார். நல்ல சொல்லாட்சியும் சீரிய பார்வையும் இருப்பதாகப் பாராட்டினார். ‘கொஞ்சம் கவனம் எடுத்து சிறிய நாகாசு வேலை (நுட்பங்கள்) செய்தால் கவிதை மேலும் சிறப்பாயிருக்கும்’ என்றார்.
அக்காலத்தில் அ. கந்தசாமி, பொன்னையா விவேகானந்தன் ஆகியோருடன் இனைந்து ‘ழகரம்’ என்ற இருமாதச் சிற்றிதைழைத் தொடங்கினேன். அது இலக்கிய ரீதியில் என்னை வளர்த்துக்கொள்ள உதவியது. அடுத்தடுத்த ஆண்டுகளில் சேரன், செழியன், சக்கரவர்த்தி, கருணா போன்றவர்களோடு அடிக்கடி நிகழ்ந்த சந்திப்பும் உரையாடலும் அவர்களின் ஊக்குவிப்பும் என்னைப் புடம்போட உதவின. நிறைய கவிதைத் தொகுப்புகளைத் தேடிப் படித்தேன்.
அவ்வேளையில் பிரதீபா தில்லைநாதன், சக்கரவர்த்தி ஆகியோருடன் இணைந்து ‘யுத்தத்தைத் தின்போம்’ என்ற தலைப்பில் ஒரு சிறிய கவிதைத் திரட்டு வெளிவந்தது. அதில் எனது மூன்று கவிதைகள் இருந்தன. அத்தொகுப்பே என்னை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது.
ஒரு நீண்ட அலைக்கழிவுக்குப் பிறகு என் முதலாவது தொகுப்பான ‘பனிவயல் உழவு’ வந்தது. அது ஓரளவு அவதானிப்பைப் பெற்றது. அக்கவிதைகளில் ஊரின் நினைவில் உருகுதல், போரின் மீதான கோபம் இரண்டும் விஞ்சியிருந்தது. ஆனாலும் அதை நான் புகலிடப்புலத்தினூடுதான் நகர்த்தியிருந்தேன். இருந்தும் அப்போதைய என் வாசிப்பனுபவத்திலிருந்து அத்தொகுப்பானது எனக்கு பூரணதிருப்தி தரவில்லை.
அக்காலங்களில் தமிழகக் கவிதைத் திரட்டுகள் பலவற்றை தேடிப் படித்தேன். பசுவய்யா கவிதைகள் மற்றும் மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் என்னைக் கவர்ந்தனர். கவிதை பற்றிய என் சிந்தனையும் போக்கும் மாறின. எப்போதும் ஒருவித கவி மனநிலையில் இயங்கிக்கொண்டிருந்தேன். என் வாழ்வுக்கும் கவிதைக்குமான நெருக்கம் கூடி, ஒருபுள்ளியில் வாழ்வே கவிதையானது. அடுத்த இரண்டாண்டு இடைவெளியில் ‘அஃதே இரவு அஃதே பகல்’ வெளிவந்தது. அதில் புகலிடவாழ்வின் அவலமே விஞ்சியிருந்தது. அதிகமும் தன்னிலை சார்ந்த கவிதைகளாக இருந்தன.
இரண்டாயிரத்து ஒன்பதில் ‘இருள்யாழி’ தொகுப்பு வெளிவந்தது. அதில் அதிகம் கவிதைகள் போரின் மீதான வெறுப்பும் விரக்தியும் விமர்சனங்களுமாக அமைந்தது. தேக்கநிலை அடைந்துவிட்டதாகக் கூடச் சொன்னார்கள்.
ஆனால் என் தொடர்ச்சியான வாசிப்பு, கவிதை பற்றிய புதிய புரிதலைத் தந்தது. என் மனதை அப்படியே கவிதையில் இறக்கிவைக்கத் தொடங்கினேன்.
இளைய புலம்பெயரிகள் மற்றும் உங்களைப் போலப் புலம்பெயர்ந்தோரின் வாரிசுகள் தாயகம், மொழி, இலக்கியம், போராட்டம் அல்லது ஈழ அரசியல் ஆகியவற்றில் கொண்டிருக்கும் அக்கறைகள்?
நான் வாழும் கனடாவை மட்டும் வைத்தே இதற்கு பதிலளிக்க முடியும். காரணம் இங்கு மட்டும் ஐந்து லட்சம் வரையிலான தமிழ்ர்கள் வாழ்கிறார்கள். இதில் பெருந்தொகையானவர்கள் தொரன்றோ நகரில் நெருங்கி வாழ்கிறார்கள். மற்றைய நாடுகளில் அப்படியல்ல. தொரன்றோ நகரில் ஒவ்வொரு வார இறுதியிலும் மூன்று நான்கு தமிழர் விழாக்கள் நிகழ்கின்றன. ஐந்தாறு தமிழ் வாரப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. மூன்று நான்கு தொலைக்காட்சி மற்றும் ரேடியோக்கள் இயங்குகின்றன. அதைவிடக் கோவில் கொடியேற்றம், திருவிழாக்கள் வேறு. கனடாவுக்கென தனிப்பட கணிப்பிடப்பட்ட பஞ்சாங்கம் என இந்தச் சூழலானது மற்றைய புலம்பெயர் நாடுகளிலிருந்தும் மாறுபட்டது.
இந்தப் பெருந்தொகை மக்களில் நீங்கள் குறிப்பிட்ட வகையிலான வளர் இளந்தலைமுறையினர் பாதிக்கு மேல் வாழ்கிறார்கள். கனடாவைத் தெரிவுசெய்து பெருந்தொகையான மக்கள் குடியேறியதன் நோக்கங்களில் முதலாவது அகதி அந்தஸ்து இலகுவில் பெற்று மூன்று வருடங்களில் குடியுரிமை பெற்றுவிட முடியும். இரண்டாவது கனடா ஆங்கிலம் பேசுகிற நாடு. மூன்றாவது இலகுவில் தங்கள் குடும்பத்தினரை பொன்ஸர் மூலம் வரவழைக்க முடியும். இந்த பின்புலத்தில் வைத்துத்தான் இந்த கேள்வியை அணுகமுடியும்.
இந்த வகையில் புலம்பெயரும் போதே மீளத் தாயகம் திரும்புவதில்லை என்ற முடிவோடுதான் வந்தவர்கள். இவர்களிடம் தாயகம் பற்றிய ஆழமான சிந்தனையிருக்கும் என எதிர்பார்ப்பது தவறு. ஆனால் இதில் முரணும் உண்டு. நாங்கள் பேச்சிலும் மூச்சிலும் தாயக உணர்வோடுதான் வாழ்கிறோம். முதலில் இதற்கான காரணிகளை பார்க்கவேணும். ஒரு பல்கலாச்சார நாடாக இருந்தபோதிலும் தமிழர்கள் தனித்த கூட்டமாகவே வாழ்கிறார்கள். ஒரு பெருங் கடலிலே ஒவ்வொரு இன மீன்களும் தங்களுக்குள் கூட்டங்கூட்டமாக வாழ்வதற்கு ஒப்பானது. இவர்கள் மற்றைய இன மக்களுள் கலப்பது அரிது. இங்கு வந்து சில நாட்களிலேயே நாம் கொண்டுவந்த பெரும்சொத்தான யாழ்ப்பாண மனோபாவத்து அதிகார மையங்கள் உருவாகத்தொடங்கிவிட்டது.
ஊரிலே ஆசிரியர்களாக பணியாற்றிய பலர் எழுத்தாளர்களாகவும் சமூக அமைப்புகளின் தலைவர்களாகவும் மாறினார்கள். எத்தனை தலைவர்கள் உருவாகுவது? ஊருக்கு ஊர் பாடசாலைக்குப் பாடசாலை சங்கங்கள் உருவாயின. ஒன்றிலிருந்து ஒன்றாக இப்படித்தான் கோவில்கள், விழாக்கள், கலை, கலாசார மையங்கள் எல்லாமே உருவாயின.
விரும்பியோ விரும்பாமலோ தாயகம், மொழி, இலக்கியம், இயக்கம், போராட்டம் அனைத்திலும் திணிக்கப்பட்டோம். புலிகளின் வலைப்பின்னல் இவர்களை உள்வாங்கி மிகப்பெரியதொரு பண வருவாய் நிறுவனமாக மாறியது. இதற்குள் இணையாதவர்கள் துரோகிகளாக சித்தரிக்கப்பட்டார்கள். இதனால் இந்த வலைப் பின்னலுக்குள் இணையாதவர்களால் ஒரு சிறு வியாபாரத்தைக்கூட செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.
இத்தகைய சூழலில்தான் வளரிளந்தலைமுறையை ஒப்புநோக்க வேண்டியிருக்கிறது. இவர்கள் கல்வி மற்றும் அறிவுசார்ந்த விடயங்களிலும் கனேடிய ஆங்கிலச் சூழலிலும் கலாச்சாரம் மற்றும் உணர்வுசார்ந்த விடயங்களில் தமிழ் அடையாளத்துடனும் வாழவேண்டிய சூழல் இருக்கிறது.
பல பெற்றோர் தமிழ் கற்பிக்க விரும்பினாலும்கூட வாரம் ஐந்து நாட்களும் முழுநேரம் ஆங்கிலத்திலும் சனிக்கிழமைகளில் ஓரிரு மணிநேரமும்தான் தமிழ் கற்க முடிகிறது. இந்த இரண்டு மணி நேரப் படிப்பில் பொழியை உள்வாங்க முடியாமையானது பிள்ளைகளுக்கு மொழி மீது வெறுப்பை உருவாக்கி விடுகிறது.
கொஞ்சம் வளர இசை, நடனம், கராட்டி, நீச்சல் போன்ற வகுப்புகளுக்கு செல்லத் தொடங்க தமிழ் வகுப்பு விடுபட்டுப் போகிறது. காரணம் சாஸ்திரீய சங்கீதம், திரை இசை, பரதம், நடனம் போன்றவற்றுக்குக் கிடைக்கும் பாராட்டும் வரவேற்பும் தமிழ் படிப்பதில் அல்லது பேசுவதில் கிடைப்பதில்லை.
இங்கே நடைபெறும் கலைவிழாக்கள் நாடக நிகழ்சிகள் கூட பெரியவர்களுக்கு உரியதாகவே இருக்கின்றன. எந்த அமைப்புகளிலும் இளந்தலைமுறையினரை உள்வாங்கி தொடர்ச்சி பேணுவதில்லை. அவர்கள் வேறொரு உலகத்தில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு தாயக அரசியல் அல்லது ஈழ அரசியல் என்பது இன்னொரு நாட்டு அரசியல். அவர்களுக்கு தாயகம் கனடா. இவற்றை மீறிச் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்குள் இருந்துதான் ராதிகா சிற்சபேசன் பாரளுமன்ற உறுப்பினரானார். இன்னும் சில இளைஞர் அமைப்புகள் இருக்கின்றன. கருத்தியல் ரீதியில் இந்த இருசாராருக்குமிடையில் வேறுபாடு இருக்கிறது.
இதைவிட்டால் உணவு, கலை, பண்பாட்டு விழுமியங்களில் தாயகத்தைப் பின்பற்றுபவர்களாகவே இருக்கிறார்கள். அதைத் திருமண மண்டபங்களை நடாத்துபவர்கள் ஒழுங்கமைக்கிறார்கள். பல இளந்தலைமுறையினரிடம் இலக்கிய ஈடுபாடு உண்டு. ஆனால் அவர்களின் ஆக்கங்கள் ஆங்கிலத்திலே இடம்பெறுகிறது. அவர்கள் நடாத்துகின்ற விழாக்கள், உரைகள் என்பன ஆங்கிலத்தில்தான் இடம்பெறுகின்றன. ஆனால் விடயம் தமிழருடையதாக இருக்கிறது. எனவே அவற்றைத் தமிழர் நிகழ்வு, தமிழர் இலக்கியம் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது.
இப்போது எங்கள் பிள்ளைகளுக்கு அல்லது எங்கள் அடுத்த சந்ததிக்காக எங்கள் படைப்புக்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வைக்கவேண்டியவர்களாக இருக்கிறோம். அண்மையிலே வெளிவந்த ‘ஐn ழரச வசயளெடயவநன றழசடன’ என்ற மொழிபெயர்ப்பு நூல் இந்த நோக்கத்தையும் அடிப்படையாக கொண்டது.
இதைச் சொல்லும் அதே வேளையில் ‘என் பேரனுக்காய் யார் வைப்பார் பழத்தோட்டம்’ என்ற வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதை அடிகள் நினைவுக்கு வருகிறது. வளர் இளந்தலைமுறையினரின் இந்தப் பின்ணணியானது எதிர்காலத்தில் தாயகத்தில் பெரும் பொருளியல் சீரழிவை உருவாக்கும் என எண்ணத்தோண்றுகிறது. இப்போ பெருவாரியான குடாநாட்டு மற்றும் கொழும்பு வாழ் தமிழ்மக்கள் வெளிநாட்டு வருவாயிலேயே தங்கி இருக்கின்றனர்.
இன்னொரு பத்து ஆண்டுகளில் இது வெகுவாக வீழ்ச்சியடையப் போகிறது. அப்போது ஏற்படப்போகின்ற சீரழிவு யுத்தகாலத்தை விட மோசமாக இருக்கப்போகிறது என்பது என் கணிப்பு.
முதற்காலக் கவிதைகள்?
எழுபதுகளில் நிறைய கதைப் புத்தகங்களை படிக்கத் தொடங்கியிருந்தேன். கவிதையைப் பொறுத்த வகையில் அப்துல் ரகுமான், ஈரோடு தமிழ் அன்பன், மு. மேத்தா போன்றோர் அறிமுகமாயினர். பாருங்கள் என் விதியை. பின்நாளில் வைரமுத்து அறிமுகமானார். கனடா வந்த பின்தான் என் வண்டி தடம்மாறிச் சீரானது.
இதற்குப் பிறகு?
இந்த லட்சணத்தில்தான் என் ஆரம்ப எழுத்துக்களைக் கிறுக்கத் தொடங்கினேன். சொற்களை ஓசைக்கு லயம் பிசகாது அடுக்கவும் அதை உணர்வோடு மேடையில் ஒப்புவிக்கவும் தெரிந்திருந்தது. அதற்கு நாடக அனுபவம் மிகவும் கைகொடுத்தது. நானும் கவிஞனானேன். அல்ல கவிஞன் என மார்தட்டிக்கொண்டேன்.
நான் கனடா வந்த ஆரம்ப காலத்தில் தனிமை என்னை வாட்டி எடுத்தது. புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் போரின் விசுவாசிகளாயிருந்தனர். மற்றுக் கருத்துள்ளவர்கள் துரோகிகளாக சித்தரிக்கப்பட்டனர். சில பொருளாதாதார லௌதீக சிக்கல்களுக்குள்ளும் சிக்கிக் கொண்டேன். மனிதரை விலக்கி மரங்களோடும் பறவைகளோடும் பேசத் தொடங்கினேன். அவற்றோடு பேசுவதற்கான மொழியாகவே கவிதை அமைந்தது. உண்மையைச் சொல்வதெனில் மனநோய்க்கு மருந்தாகவே இலக்கியத்தை கையிலெடுத்தேன்.
இன்று இக்கேள்விக்காக என் பழைய பெட்டியைக் கிளறினேன் அக்காலத்தில் எழுதிய சில கவிதைகள் சிக்கின. மார்ச் 02, 1995 சூரியன் பத்திரிகையில் வ.பொ. நினைவாக எழுதிய கவிதையின் சில அடிகள்.
………..
இவன்,
சென்ற பாதச்சுவடுகளை
பற்றைக்காடுகள் இன்றும் பதுக்கி வைத்திருக்கும்
சிந்திய வியர்வைத் துளிகளை
புற்களின் நுனிகள்
சிவப்பு பூக்களாய் சுமந்திருக்கும்
நாவில் எழுந்த அழகுத் தமிழை
பனைமரங்கள் கூடப் பதிவுசெய்திருக்கும்
கண்ணில் அடிக்கும் மின்னலை குடிசைவீடுகள்
நம்பிக்கை தீபமாய் ஒளிரவிட்டிருக்கும்
…………..
இப்படி அந்தக்கவிதை தொடரும். இதற்கு அடுத்த கட்டத்தில் மே 01, செங்கதிர் இதழில் ‘உறவுகள்’ என்ற தலைப்பில் வெளிவந்த கவிதை இப்படித் தொடங்குகிறது,
விடிந்தும் விடியாத காலை.
எழுந்த பின்பும் இருட் போர்வைக்குள்
சோம்பல் முறிக்கும் சூரியன்.
கானற் பூ இதழ் மல்லிகை சொரியும்
வெண்பனி.
பல்ஹனி’ ஓரத்தில் உறைபனிக் குளிரில்
குடங்கியபடி ஒற்றைப் புறா
தொலைக்கமுடியாத் துயரநினைவுகளில்
சோர்ந்துபோய் என் ஆத்மா.
……………………………..
இப்படித் தொடங்கி நீள்கிறது அக்கவிதை. இன்னொரு கவிதை ஆகஸ்ட் 21, 1995 செங்கதிர் இதழில் வெளிவந்தது.
ஒரு அகதியின் காதல்
சூரியன் துவளாத நீண்ட பகற்பொழுது
துருவம் துளிர்த்து சிரித்தது
காலச்சுவட்டுத்குள் இறுகிப்போன
இதயச்சுவரை கொத்தி
இடம்பிடித்துக் கொண்டது
ஒரு மரங்கொத்திப்பறவை
அதிகாலை நேரத்து அறுகு நுனிகளாய்
கனவுத்துளிகளை சுமந்தது மனசு.
உறவோடிணைந்த ஈழத்து அகதியாய்
உவகை கொண்டது உள்ளம்
எல்லாம் ஒரு கணம்தான்
நினைவு முட்டைகளை கூடு அடைகாக்க
மீளப்பறந்தது குருவி.
மீண்டும் வசந்தம் வராமலா போகும்
இலைகளை உதிர்த்தாலும் நிமிர்ந்து நின்றது
மரம்
மிக நம்பிகையோடு.
இப்படித்தான் என் ஆரம்ப காலக் கவிதைப் போக்கு விரிவடைந்தது. அந்த வளர்ச்சிப் போக்கை இந்த மூன்று கவிதைகளும் எடுத்துக்காட்டும். இக்கவிதைகள் எதுவும் என் கவிதைத் திரட்டுகளில் பதிவாகவில்லை. இதற்குப்பிறகு ‘நாகர் கோவில்’ கவிதை வெளிவந்தது. அது சில திருத்தங்களுடன் இருள்யாழி திரட்டில் பதிவாகியிருக்கிறது.
உங்களுக்கும் உங்கள் தம்பி கலைச்செல்வனுக்குமான உறவு பற்றி?
நாங்கள் குடும்பத்தில் ஐந்து பேர். மூத்தவன் நான். எனக்குப் பின் ஒரு சகோதரி. மூன்றாமவன் கலைச்செல்வன். எங்கள் இருவர்க்குமிடையில் ஐந்து வருடங்கள் மட்டுமே வயதில் வேறுபாடு.
சிறு வயதிலிருந்தே எனக்கு அழகியல் மீது ஆர்வம் இருந்தது. உறவினர்களின் திருமணத்தின்போது வீட்டைச் சோடிப்பது (அலங்கரிப்பது) பூமாலை தொடுப்பது. பன்னம் இழைப்பது. நாடகம் போடுவது. மேடைகட்டுவது என ஏதாவதுதொரு அழகியல் சார்ந்த விசயங்களோடு தொடர்புபட்டே இருந்தேன்.
ஆகக் குறைந்தது வீட்டுக்கு முன்னால் உள்ள சங்கக்கடை ‘ராக்கை’யில் உள்ள சவுக்காரக் கட்டிகளையாவது மாறிமாறி அடுக்கி அழகு பார்ப்பேன். அழகியலில் கண்ணால் கண்டதை கை செய்து பார்த்துவிடும் ஆற்றல் இருந்தது. இதன் தொடர்ச்சி வீட்டிலிருந்த என் சகோதரர்கள் எல்லோருக்கும் வாய்த்திருந்தது.
1972ஆம் ஆண்டு முல்லைமணி எழுதிய ‘பண்டார வன்னியன்’ நாடகத்தை தொடர்பறாதவாறு ஏழு காட்சிகளை தெரிந்தெடுத்து நாடகமாகத் தயாரித்தோம். அப்போது எங்களை வழிநடத்த பெரியவர்கள் யாரும் இல்லை. எனக்குப் பாடசாலை நாடகங்களில் நடித்த அனுபவம் ஒன்றே இருந்த சிறுநம்பிக்கை..
நானே நாடகத்தை இயக்கி அதில் நான் பண்டார வன்னியனாகவும் நடித்தேன். அதில் பண்டார வன்னியனின் தம்பி கைலாயவன்னியனாக கலைச்செல்வன் நடித்திருந்தார். அதுவே அவரின் முதற் கலை வெளிப்பாடு என்பது என் நினைவு.
நாங்கள் இருவரும் எங்களைப் புடம்போட்டுக்கொண்டது ஊர் வாசகசாலையில்தான். அவரது முதல் சிறுகதையும் ‘இளமருதம்’ கையெழுத்து பத்திரிகையிலேயே வெளிவந்தது. இரண்டு இதழ்களுக்கு அவர் ஆசிரியராக இருந்தார்.
பட்டிமன்றமாக இருந்தால் என்ன, இல்ல விளையாட்டு போட்டியாக இருந்தாலென்ன இருபக்கத் தலைமைப் பொறுப்பிலும் இருவரும் இருப்போம். அதுபோல நிர்வாக சபைக் கூட்டங்களில் முரண் அணிகளில் நின்று ஆக்ரோசமாக வாதங்கள் புரிவோம். கூட்டம் முடிந்ததும் நண்பர்கள்போல ஓரு ‘சைக்கிலில்’ வீடு செல்வோம். வாசகசாலை விவாதம் வாசகசாலைக் கதவோடு முடிந்துவிடும். இன்று அப்படியான உலகத்தைப் பார்ப்பது அரிதாயிருக்கிறது.
எல்லாச் சகோதரர்களைப் போலவே சிறுசிறு சச்சரவுகளின்போது அடிபட்டு கட்டிப்புரண்டு எழுந்திருக்கிறோம். ஒருவருக்கொருவர் கண்ணீர் வடித்திருக்கிறோம். எங்கள் இருவரின் கனவுகளும் ஒன்றாகவே இருந்தது.
ஆரம்பத்தில் வாசிப்புப் பழக்கம் இருவருக்கும் ஒன்றே. நான் படித்த புத்தகங்களையே அவரும் தொடர்ந்தான். என்னைப் போலவே காண்டேகரின் ‘கிரௌஞ்சவதம்’ நாவலைப் பல தடவை படித்திருக்கிறார்.
எண்பதுகளின் தொடக்கத்தில் இருவரும் லங்கா சீமெந்து நிறுவனத்தில் கடமையாற்றினோம். அந்தக் காலத்தில் எங்களுக்குள் தனித்துவங்கள் வெளிப்படத் தொடங்கியது. நாங்கள் நெருங்கிய நண்பர்களாகவும் ஒருவர்கொருவர் போட்டியாளர்களாகவும் இருந்தோம்.
நாங்கள் வறுமைச் சூழலில் இருந்து விடுபடத் தொடங்கிய காலம். எங்கள் வறுமை காரணமாக என்னுடைய காதலுக்கு பெரும் எதிர்ப்பிருந்தது. மிக நெருக்கடியான சூழலில் அவளை என் வீட்டுக்கு அழைத்துவர வேண்டியதாயிற்று. அப்போ கலைச்செல்வனே அழைத்துவந்து எங்களைச் சேர்த்து வைத்தார்.
1984 இல் கலைச்செல்வன் பாரீஸ்க்கு புலம் பெயர்ந்தார். அங்குதான் இவரது கலை இலக்கிய முயற்சிகளும் சமூக அரசியல் போக்குகளும் புதிய பரிணாமம் கண்டது. நான் போருக்குள் உழன்று கொண்டிருந்தேன். அவர் அக்காலத்தில் பாரிசில் இயங்கிய ‘புளட்’ அமைப்பின் சர்வதேச ஒலிபரப்பில் வேலை செய்துகொண்டிருந்தார். அக்காலத்தில் நல்ல இலக்கிய நண்பர்களும் சீரிய வாசிப்புப் பழக்கமும் ஏற்படத் தொடங்கியிருந்தாக அவர் சொல்லி கேட்டிருக்கிறேன். அக்காலத்தில் அவரோடு சேர்ந்தியங்கிய ஆத்மன், சகாப்தன் போன்ற நண்பர்கள் சொல்லவும் கேட்டிருக்கிறேன்.
அவ்வமைப்பு கலைந்து போனதன் பிற்பாடு ‘பள்ளம்’ என்ற இலக்கியச் சஞ்சிகையை வெளியிட்டதாக அறிந்திருந்தேன். எத்தனை இதழ்கள் வெளிவந்ததென்பது அறியக் கிடைக்கவில்லை.
அப்படி ஒரு பத்திரிகையைக் கொண்டு வருவதற்கு நாங்கள் ஊரில் இருக்கும்போது நடாத்திய ‘இளமருதம்’ கையெழுத்துப் பத்திரிகையே உந்துதலாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.
தொடர்ந்து ‘ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு’ இயக்கத்தோடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் கலை. அதை வளர்த்தெடுப்பதிலும் அதன் தொடர்ச்சியைப் பேணுவதிலும் முக்கிய பங்காற்றினார். இறக்கும் வரையிலும் அந்த இயக்கத்துக்காக உழைத்தார். இவற்றினுடாக அவர் தன்னை இலக்கிய ரீதியாக நன்கு வளர்த்துக்கொண்டார்.
அவர் புலம்பெயர்ந்திலிருந்து கிட்டத்தட்ட பத்து வருடகால இடைவெளியில் கடைசி பஸ்சில் வந்தவன் போல வீட்டிலிருந்து கனடா வந்து சேர்ந்தேன். ஆரம்ப காலத்தில் என் கவிதைகள் மீது கலைச்செல்வனுக்கு பெரிய ஈடுபாடு இருக்கவில்லை. காரணம் அவர் பத்து வருடம் எனக்கு முன்னே பயணித்திருந்தார்.
நான் நண்பர்களுடன் இணைந்து ‘ழ’கரம் என்னும் சிற்றிதழை நடத்தினேன். ஐந்து இதழ்கள் வரையில்தான் பயணிக்க முடிந்தது. அது முடிவுறும் காலத்தில் பாரிசில் அவர் தன் நண்பர்களுடன் இணைந்து ‘எக்ஸில்’ என்ற சிற்றிதழைத் தொடங்கினார். நான் தொரன்றோவிலிருந்து ஆக்கங்களை ஓழுங்குபடுத்திக் கொடுக்கும் மற்றும் வினியோகப் பணி போன்றவற்றை ஏற்றுக கொண்டேன்.
சில இதழ்களுடன் அக்குழுவினர் இரண்டாக பிரிந்தனர். ஒருகட்டத்தில் இரண்டு குழுவினரும் தனித்தனியாக ஒரு மாதம் எக்ஸில் இதழை வெளியிட்டனர். அதன் பின் கலைச்செல்வன் ‘உயிர்நிழல்’ என்ற தலைப்பில் சிற்றிதழை வெளியிடத் தொடங்கினார். அந்தப் பிரிவானது தொரன்றோ இலக்கியச் சூழலிலும் இருந்தது. என்னுடன் மிக நெருக்கமான நட்புடன் இருந்த சக்கரவர்த்தி, ஓவியர் கருணா போன்ற நண்பர்கள் எக்ஸில் சார்பாக இருந்தனர்.
நான் என் முதலாவது தொகுப்பை வெளியிட முனைந்தபோது எக்ஸில் வெளியீடாக வெளியிட விரும்பினார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் காத்திருந்தேன்.
இரண்டாயிரமாம் ஆண்டு புது வருடத்தின்போது நான் முதன் முதலாக பாரீஸ் போயிருந்தேன். அதற்கு இப்புத்தக முயற்சியும் ஒருகாரணமாக இருந்தது. அன்று கடும் புயற்காற்று வீசிய நாள். கலைச்செல்வன் என்னை அழைத்துச் செல்ல விமான நிலையம் வந்தபோது பிரமித்துப் போய்விட்டேன். என் தந்தையார் எதிரில் நடந்து வருவது போன்ற பிரமை எழுந்தது. அவரது பேச்சிலும் ஆளுமையிலும் நான் கட்டுண்டு போனேன். ஏனோ அக்காலச் சூழல் காரணமாக அப்புத்தக முயற்சியானது காலதாமதமாகிக்கொண்டே போனது. முடிவில் அதை நானே முன்னெடுப்பதென முடிவுசெய்தபோது அதை ‘எக்ஸில்’ வெளியீடாகவே வெளியிடும்படி வேண்டிக்கொண்டார். அப்படியே நடந்தது.
பாரீஸ் நகர் புராதன கட்டடக் கலைக்கு எடுத்துக்காடான நகரம். குறுகலான தெருக்களைக் கொண்ட வீதிகள் இருபுறமும் ஒரேமாதிரியான ஏழு அடுக்கு மாடிகளைக் கொண்ட நகரம். ஏழடுக்கின் மேல் கூரைக்குள் வீடு பராமரிப்பு சிப்பந்திகள் தங்கும் கூடங்கள் இருக்கும். அதற்கு வீட்டின் பின் புறத்தில் குறுகலான மாடிப்படி இருக்கும். அத்தகைய ஒரு அறையில்தான் வாழ்ந்தார். மிகக்குறைந்த வாடகை என்பதே அதற்கான காரணி. வீடு முழுவதும் புத்தகங்களால் நிரம்பியிருக்கும்.
பல சிறுகதைகளையும் கட்டுரைளையும் எழுதியிருந்தார். எனக்கு மூன்று, நான்கு கதைகளுக்கு மேல் படிக்கக்கிடைக்கவில்லை. அவருடைய படைப்புகள் இன்று வரையிலும் தொகுக்கப்படாதது துரதிஷ்டம்.
அவர் தொடர்ச்சியாக வாழ்வாதாரத்துக்கான வேலைகளோடுதான் இயங்கிக்கொண்டிருந்தார். அவரது உழைப்பு முழுவதும் இலக்கியத்துக்காகவே அர்ப்பணமானது. எப்போதும் போராட்டங்களேடும் போட்டிகளோடும் இலட்சியங்களோடும் வாழ்ந்து முடித்திருந்தார்.
அவர் மரணத்தின்போது கிடைத்த கௌரவமானது அவரது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிற்று.
கலைச்செல்வனின் இழப்பு?
என்னைப் பொறுத்த வகையில் கலைச்செல்வனின் இழப்பை இரண்டு வகையில் பார்க்கலாம். ஒன்று எங்கள் குடும்பம் சார்ந்த இழப்பு. அடுத்தது புகலிட சமூக இலக்கியப் புலத்தில் அவரது இழப்பு.
எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரையில் அவரது வாழ்க்கைத் தெரிவானது எல்லோருக்கும் மகிழ்வளிக்கக்கூடியதாக இருக்கவில்லை. துறவறத்துக்கு விட்டுக்கொடுப்பதுபோல தன் முழு வாழ்க்கையையும் உழைப்பையும் இலக்கியத்துக்கு என அர்ப்பணித்து வாழ ஒருவரை விட்டுக் கொடுக்கின்ற மனப்பக்குவம் எங்கள் சமூக அமைப்பில் இன்றும் இல்லை.
எங்கள் குடும்பத்தினர் மகிழ்வோடு அனுப்பி வைத்தார்கள் என்று சொன்னால் அது போலித்தனமானது. அந்த வகையில் எங்கள் அம்மா சகோதரர்களுக்கு ஆரம்ப நாட்களில் சற்று வருத்தமிருந்தது. நாட்கள் செல்ல அது அவரது தெரிவு என்ற வகையில் ஏற்றுக்கொண்டார்கள்.
எங்கள் குடும்ப நிகழ்வுகளில் தன் ஆளுமையுடன் செயற்பட்டு தனக்குரிய அன்பையும் முன்னுரிமைகளையும் பெற்றுக்கொண்டார். எங்கள் பிள்ளைகளுக்கும் மிகப் பிரியத்துக்குரியவராக இருந்தார்.
பாண்டவர்களில் அர்ச்சுனன் போல எங்கள் மத்தியில் அவர் நின்றால் நாங்கள் தனிப்பலம் பெற்றவர்களாக உணர்வோம். இலக்கியத்தைப் போலவே எங்கள் குடும்பம் பற்றியும் அவருக்குக் கனவுகள் இருந்தன. அந்த வகையில் அவரது இழப்பானது எங்களால் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகவே அமைந்தது.
இரண்டாவது புகலிடத்து சமூக இலக்கியப் புலத்தில் அவரது இழப்பு தனித்தன்மை வாய்ந்தது.
எஸ். பொ ‘பனியும் பனையும்’ என்றொரு புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறுகதைத் திரட்டொன்றை வெளியிட்டார். அதற்கு வலுச்சேர்க்கும் விதமாக போகிறபோக்கில் இனி புலம்பெயர் இலக்கியந்தான் தமிழ் இலக்கியத்தை முன்நிறுத்தும் என்ற பொருளில் சொல்லிவிட்டு சென்றார். அந்த வாக்கினைக் சிந்தையில் கொண்டு எம்மவர்கள் புளங்காதிதம் அடைந்தார்களே தவிர ஆக்கபூர்வமான செயற்பாடுகள் அரிதாகவே இருந்தது. இக்காலத்தில் வெளிவந்த பல சிற்றிதழ்கள் படிப்படியாக நின்றுபோயின.
ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு ஒன்றே புலம்பெயர் இலக்கியத் தொடர்ச்சிக்கு ஆதாரக் கொடியாக இருந்தது. இவ்வியக்கமானது ஜெர்மனியில் தொடங்கினாலும் அது தொடர்ச்சியாக ஐரோப்பிய நாடெங்கும் எடுத்துச் செல்லப்பட்டது. ஏன், கனடா வரையிலும் படர்ந்திருந்தது.
இந்த இயக்கத்தில் மூன்றாவது அல்லது நான்காவது சந்திப்பில் இணைந்து கொண்ட கலைச்செல்வன் தன் இறுதிக்காலம் வரையிலும் அதன் தொடர்பறாமல் எடுத்துச் செல்வதில் ஒருவராக முன்னின்று உழைத்தார்.
அக்காலத்தில் புலம்பெயர்ந்த எழுத்தென்றால் எது என்ற கேள்விக்கு ஒவ்வொருவரிடமும் மாறுபட்ட பதில் இருந்தது. புலம் பெயர்ந்தவர்கள் எழுதும் எல்லாப் படைப்புகளும் என்றார்கள், புகலிட வாழ்வின் அகநிலைக் கூறுகளை எழுதுவது என்றார்கள். புதிய நிலம், புதிய சொற்கள், புதிய காலைநிலை அடங்கலாக புறநிலச் சூழலை தமிழ்க்கு கொண்டு வருதல் என்றார்கள். இந்தப் போட்டிக்குள் பெண்ணியம் தலித்தியம் பின்நவீனத்துவம் என்ற வகைப்பாடுகள் வந்தன. பெருங்கதையாடல், விழும்புநிலை எழுத்துகள் என ஆளுக்காள் கூறுபோட்டார்கள்.
புலம்பெயர் இலக்கியச் சூழலில் பிரான்ஸ் ஒரு வித்தியாசமான களமாக இருந்தது. தினமும் இலக்கிய நண்பர்கள் கூடுவதும் விவாதிப்பதும் முரண்படுவது பின் எல்லோரும் ஒன்றிணைந்து கொண்டாடுவதுமான சூழல் அது. அதிலும் சபாலிங்கம் கொல்லப்பட்டது, கலைச்செல்வன் தாக்குதலுக்கு உள்ளானது போன்ற சம்பவங்கள் இந்த மாற்றிலக்கியக்காரரிடம் இத்தகைய நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
எக்ஸில்’ என்ற சஞ்சிகையின் உருவாக்கம், அதில் கலைச்செல்வனின் பங்கு, நான்கைந்து இதழ்களுக்குப் பின் வழமையைப் போல குழு இரண்டுபட்டது…. கலைச்செல்வன் தன் சார்பானவர்களுடன் இணைந்து கொண்டு உயிர்நிழல் என்ற சஞ்சிகையை கொண்டு வந்தது எனப் பல நடந்து முடிந்தன. இவற்றில் தனது உழைப்பு முழுவதையுமே அர்ப்பணித்தார். ஒவ்வொரு இதழிலும் நூற்றுக்கணக்கான பிரதிகளை ஈழத்து தமிழக ஆளுமைகளுக்கு தன் சொந்த செலவிலேயே அனுப்பிவைத்தார். அது புகலிடஇலக்கியம் குறித்த கணிசமான பார்வையைத் தந்தது.
எக்ஸில் வெளியீடாக பல நூல்களை கொண்டு வந்தார். திரைப்படத் துறையிலும் இவரது பங்களிப்பிருந்தது. நூறுவருடத்திற்கு பின்பும் ஈழத்தமிழரின் அகதி வாழ்வை ஆவணப்படுத்திச் சொல்லக்கூடிய திரைப் படைப்பு என்று சொன்னால் அது ‘முகம்’ திரைப்படம் ஒன்றாகத்தான் இருக்கமுடியும் அதில் முக்கிய பாத்திரமேற்று நடித்தார். தொடர்ந்தும் சில புகலிடத் திரைப்படங்களில் இயங்கினார்.
இந்த வகையில் அவர் பணி முக்கியமானது. அன்று கருத்தியல் ரீதியாக முரண்பட்ட நண்பர்கள் கூட அவர் விட்டுச்சென்ற இடைவெளி நிரப்ப முடியாதது என்று மனசார எண்ணும் அளவுக்கு அவரது இழப்பு பெரியது.
ஒரு கவிதை உருவாகும் அனுபவம் அதை எழுதி முடிப்பது அதை மீளப் படித்தல் அப்படிப் படிக்கும்போது தோன்றும் மீள் அனுபவம் குறித்துச் சொல்லுங்கள்?
இன்று கவிதை தொடர்பாக ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட கருத்துண்டு முதலில் நான் எதைக் கவிதை எனக் கருதுகிறேன் என்பதை சொன்னால்தான் கவிதை தொடர்பான என் அனுபவம் பற்றி கதைக்க முடியும்.
புலம் பெயர்ந்தவர்களுக்கு வாழ்க்கை கவிதையாகிறது. பலர் கவிதைகளைத் தேடுகிறார்கள். வார்த்தைகளில் மட்டும்.’ என்று நண்பன் ஒருவனின் கூற்றையே முன்வைக்கிறேன். இப்படித்தான் கவிதை இருக்கவேண்டும் என்று கட்டாயம் எதுவும் கிடையாது.
முதலாவது நான் கவிதை புனைபவன் அல்ல. அவை எனது வாழ்க்கை. நான் கடந்து வந்த அனுபவங்கள். எனது சீற்றம், எனது மறுப்பு, எனது விமர்சனம், எனது துயரம், எனது கண்ணீர், எனது தேடல். நான் சந்தித்த அனுபவங்கள் அவையே என் கவிதையாக பதிவாகியிருக்கிறது.
நான் வாழ்வில் தத்தளித்தபோது கடந்து செல்லும் படகாகவே கவிதை அமைந்தது. அது என்க்கு ஆறுதலைத் தந்தது. அவை என்னை ஆற்றுப்படுத்தின. அவை எனக்கு புதிய புதிய தரிசனங்களைத் தந்தன. பல ஆச்சரியங்களை ஏற்படுத்தின. அப்படித்தான் எனக்கு கவிதை அறிமுகமாகியது. இன்று வரையிலும் இதுதான் என் கவிதையின் அடிநாதமாக இருக்கிறது.
அதனால் நான் எழுதிய எந்தக் கவிதையையும் இதுநாள்வரையிலும் விலக்கியது கிடையாது. காரணம் அது என் வாழ்வில் ஒரு அங்கம். காலத்துக்கு காலம் எனது கவிதை மொழியில் மாற்றமும் மெருக்கும் ஏறியிருக்கிறது. அது கவிதையின் நுட்பம் சார்ந்த விடயம். அவை என் வாசிப்பனுபவத்தினூடாக உள்வாங்கப்பட்டவை.
இரண்டாவது கவிதை என் வசப்பட்டதல்ல. ஒரு காலத்திலும் அதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை. எப்பொழுது எழுதத் தோன்றுகிறதென்பதுகூட எனக்குத் தெரியது. சில பொழுதகளில் பல மாதங்களாகக்கூட கவிதை எழுதாமல் இருந்திருக்கிறேன்.
சில சமயங்களில் ஒரு மரத்திலிருந்து முற்றிப் பழுத்து இலை உதிர்வதைப் போல இரண்டு அல்லது மூன்று கவிதைகள் தானாக இறங்கி விடுவதுன்டு. அந்தக் காலங்களில் யாரோடும் அதிகம் உசாவ என் மனம் ஒப்புவதில்லை. பாதித்த எண்ணம் மட்டுமே என்னை ஆட்கொண்டிருக்கும்.
கவிதையின் முதல் அடியைக்கூட நான் தீர்மானிப்பதில்லை. அந்தக் கணமே தீமானிக்கிறது. அந்தக் கவிதையின் நீளம் என்ன. அது எப்படி முடியும். ஈற்றடி எப்படியிருக்கும் என்ற எந்தத் தீர்மாணங்களும் என்னிடம் இருப்பதில்லை. அவற்றை அந்தக் கவிதையே தீர்மானிக்கிறது
ஆனால் எழுதிய பிற்பாடு சில திருத்தங்கள் செய்வதுண்டு. அவை என் திரட்டில் பதிவாகும் வரையிலும் நடக்கும்.   அந்தக் கவிதைகளோடு அளைந்து விளையாடுவது என்பது என் குழந்தைகளோடு விளையாடுவதற்கு ஒப்பானது.
தேவையற்ற சொற்களை நீக்குவது. ஒரு சொல் பல இடத்தில் அமையாது தவிர்ப்பது. வரிகளைப் பிரித்தும் சேர்த்தும் இடம் மாறிப்போட்டும் வேடிக்கை பார்ப்பது. விருப்பத்திற்கேற்ப பந்தி பிரிப்பது எனச் செய்துகொண்டே இருப்பேன். அந்த கணங்கள் எனக்கு தியானம் போல அமையும்.
எனது கவிதைகளை நானே அனுபவித்தல் என்பது அலாதியானது. கவிதை எழுதத்தோன்றாத காலத்தில் எனது கவிதைகளையே மீளமீள வாசிப்பேன். அல்லது எனக்கு பிடித்தமான சில திரட்டுகள் உள. அவற்றை வாசிப்பேன். நான் ஒருவித கவிதா மனநிலையில் இருக்க அது உதவும்.
என் கவிதைகள் திரட்டில் வெளிவந்த பிற்பாடு என்னால் அவற்றுடன் அளைந்து விடையாடமுடியவில்லையே என்ற வருத்தம் ஏற்படும். சில சமயங்களில் சில கவிதைகளை நானா எழுதினேன் என்னும் வகையிலான ஆச்சரியம் மேலிடும்.
சிலசமயம் இப்படிச் திருத்தங்கள் செய்திருக்கலாமோ என்பது போன்ற ஆதங்கம் தலைகாட்டும். சில கவிதையை திரட்டிலிருந்து தவிர்த்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றும். வேறொரு தருணத்தில் அதுவே ஆச்சரியமூட்டும் கவிதையாகத் தோன்றும்.
இன்றும் நான் ஒருநல்ல கவிதையை தேடித் துரத்திக்கொண்டு செல்லும் ஒருவனாகவே இருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் கவிதையில் மொழி என்பது உடல் அல்லது உருவம். உணர்வு என்பதே அதன் உயிர். எனவே என் உணர்வுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறேன். அவ்வளவே.
நீங்கள் அனுபவமே கவிதையின் ஆதாரம் என்கிறீர்கள். கவிதை ஒரு கற்பனைச் செயல். வாழ்வையும் இயற்கையையும் பிரபஞ்சத்தையும் விதவிதமாக உருமாற்றிப் பார்ப்பது என்ற வகையில் இன்று கவிதை தொடர்பான புதிய விளங்குதல்கள் உருவாகியுள்ளன. இதுபற்றி உங்களுடைய கருத்து?
கவிதை ஒரு தாவரம் போன்றது என நான் கருதவில்லை. அது ஆலவிருட்சம்போல பல விழுதுகளின் மேல் கிளைத்துக் கிளைத்து எழுவது. அது ஒரு பேராறு. வெவ்வேறு திசைகளிலிருந்து வரும் நதிகளால் ஆனது. வளமுள்ள நதிகள் ‘தமிழ்க் கவிதை’ என்ற பேராற்றில் கலக்கின்றன. வளமற்றவை இடையில் வரண்டுபோகின்றன.
இதுதான் கவிதைக்கு வரைபு’ என யாரும் ஒற்றைப் பரிமாண விளக்கம் கூறிவிட முடியாது. அது எப்போதும் எனக்கு ஒருபடி முன்னே செல்கிறது. இன்றும் கவிதையைப் பின் தொடர்பவனாகவே இருக்கிறேன். நானும் கவிதை என்ற பேறாற்றை வந்தடைய முயலும் நதிகளில் ஒன்றாய் பயணிப்பவன். நான் எல்லா நதிகளையும் அவதானிக்கிறேன். அதில் நீச்சலடித்துத் திளைக்கிறேன். அதற்காக அவரவர் கவிதைப் போக்கையோ கவிதை பற்றிய கருதுகோளையோ நான் ஏற்றுக்கொள்ளவே மறுக்கவோ வேண்டிய அவசியமில்லை.
என் முதலாவது கவிதைத் தொகுப்பு வெளிவந்தபோது இருந்த புரிதல் எனது இரண்டாவது தொகுப்பு வந்தபோது இருக்கவில்லை. அப்போது வேறாக இருந்தது. மூன்றாவது தொகுப்பின் போதும் அவ்வாறே. இன்று எனது புரிதல் வேறாக இருக்கிறது.
எனது வாசிப்பும் அனுபவமும் நாளை புதிய புரிதல்களை உருவாக்கலாம். இன்று என் அறிதலுக்குள் திரிபுற்றவை நாளை எனக்கு ஏற்புடையவை ஆகலாம். எனவே நான் எதையும் எழுந்தமானமாய் புறந்தள்ளுபவன் அல்ல.
எனினும் எனது இன்றைய சிந்தனைப்போக்கிலிருந்து என் மனது இன்றும் கவிதை ஒரு ‘கற்பனைச் செயல்’ அல்லது ‘வெறும் புனைவு’ என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பல கட்டுரைகள் மூலம் ஒருவிடயத்தை நன்கு கற்றுத்தேர்ந்துவிட்டு அதையே கவிதை என்றவகையில் பதிவுசெய்வதை வெறும் செய்யுள் என்றே கருதுகிறேன். அதை எப்படி உருமாற்றி மாற்றி போட்டாலும் செய்யுள்தான். சிலசமயம் திறனாய்வாளர்கள் பொருள்பிரித்து பார்த்து நல்ல கவிதை எனப்பாராட்டக் கூடும். அதை அனுபவத்தில் உணர்ந்தவன் எழுதும்போது அதிலிருக்கும் உயிருப்பும் உணர்வும் தனி. அதுவே நுகர்பவன் மனதில் படிந்து விடுகிறது. கவிதை உணர்தலுக்கான ஊடகம் என்றே கருதுகிறேன். உயிர்ப்புள்ளதில்தான் வாசனையுண்டு.
இன்று முகப் புத்தகத்தில் இலையான் பீச்சுவது போல தினமும் இரன்டு கவிதைகளை பதிவு செய்யும் தோழர்களைப் பார்க்கிறேன். எந்த வாசனையும் அற்ற அழகான பிளாஸ்க் பூக்களே நினைவுக்கு வருகிறது. அழகான புகைப்படங்களை அல்லது ஓவியங்களை வைத்துக்கொண்டு அவற்றிக்கு கவிதை எழுதுகிறார்கள். முன்பெல்லாம் தலைப்பை கொடுத்துவிட்டு கவிதை எழுதுங்கள் என்று சொல்வதற்கு இணையான செயல் என்றே தோன்றுகிறது.
முன்பெல்லாம் ஒரு புகைப்படம் எடுப்பதெனில் அக்கலைஞன் முன் பெரும் சவால்கள் இருந்தது. தன்னிடமிருக்கும் புகைப்படச் சுருளுக்குள் காத்திரமாக அதை இறக்கி வைக்கவேண்டும். இன்று அப்படியல்ல. ஒரு நிமிடத்துக்குள் நூறு படங்களை எடுத்துவிட முடிகிறது. அதில் ஒன்றாவது நன்றாக வராமலா போய்விடும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. கவிதை எழுதுவது எனது நோக்கம் அல்ல. ஒரு கவிஞனாய் வாழ்வதே என் நோக்கம். அதனூடு எழும் நுட்பமான அனுபவங்கள் சிலசமயம் கவிதையாக பதிவாகிவிடுகின்றன. அதற்காக இதுதான் கவிதை என வரையறை செய்யவில்லை

நன்றி: வல்லினம் 


No comments: