Saturday, October 10, 2015

என்ன மண்ணால் அடித்தார்களா?

-கரவைதாசன்- 


இலங்கையின் வட புலத்தில் கிராமம் என்பது சாதியக் குறியீடாகவே இருக்கின்றது என்பது நாகரிகமற்ற உண்மை. நீ உன் கிராமத்தினை சொல்லு உனது சாதியினை நான் கண்டறிவேன் என்பது ஆதிக்கசாதி மனோபாவமாக இருக்கின்றது. இதனாலேயே  ஒழுங்கை ,குறிச்சி விசாரிப்புக்கள் இரண்டு ஈழத்தமிழர்களின் முதல்ச்சந்திப்பினிலே  மிக இயல்பாக அரங்கேறும்  முடிந்தால் கண்டுபிடி  என்ற வகையில் ஒருவர் உச்சுவதும் இந்தாபார் உன்னையறிகின்றேன் என்றவகையில் மற்றவரின் தொடுப்புமாக இருக்கும். இறுதியில் அவரைத் தெரியுமோ அவர் எனக்கு உறவுக்காரன் என ஒரு பிரபலத்தினை இழுத்துச்  சாதி அறிந்து கொள்வார்கள். எனக்கோ இவர் விடுகிறார் என்ற ஆதிக்கச் செருக்கோடு ஒருவரும். விடுகிறான் இல்லை என்ற நளுவலுடன் மற்றவர் நளுவுவதுமாக பல சம்பவங்களை  கண்டு நாகரிகமுள்ள மனிதர்கள்  அருவருத்திருக்கின்றார்கள் . 
அனால் நாகரிகமற்ற இந்தச்  சமத்துவமின்மைக்கு எதிராக ஒவ்வொரு காலத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து சிலர் வெளிக்கிளர்ந்து சில போராளித்தலைமையின்  கீழ்ப்போராடி வந்திருக்கின்றார்கள். வடபுலத்தின் பல்வேறுபட்ட கிராமங்களில் பல்வேறு வடிவங்களில் அந்தக் கால சூழ்வினைக்கேற்ப இந்த போராட்ட வடிவங்கள் அமைந்திருக்கின்றன. அந்த வரலாறுகள் சில இன்னும் பதிவு செய்யப்படாமலே செவிவழிக்கதைகளாகவே கடத்தப்படுகின்றன. சில அழிந்து தொலைந்து போகின்றன. தொலையாது நிலைக்க நான் கேட்டறிந்த ஒரு சம்பவத்தினை இன்று குறித்து வைப்பதே இக்கணத்தின் நோக்கம். 
நாம் எந்த ஆயுத்தத்தினை கையில் எடுப்பது என்பதினை எதிரியே தீர்மானிக்கின்றான். என்கின்ற அரசியல் வினை  இங்கு கண்கூடு . இலங்கைத்தீவு  பிரித்தானிய காலனித்துவத்துக்கு கீழ்ப்பட்டிருந்த காலத்தில் உடையார், முதலியார் போன்ற  பதவிகள் தேர்தல் மூலமாகவே தெரிவு செய்யப்பட்டு  பதவிக்கு ஆட்கள் அமர்த்தப்பட்டார்கள். பிற்காலத்தில் அப்பதவிக்குறியீடே ஒரு சாதியாகிப்போனது  என்பது இன்னொரு கதை. நாங்கள் இந்துக்கள் அல்ல வீரசைவர்கள் என இந்துக் கடவுளரை  வணங்க மறுத்து லிங்கத்தினை மட்டுமே  வழிபட்ட ஒரு பெரும் பிரிவினரை (லிங்காயத்துக்கள்) பின்னாளில்  வீரசைவர்களென குறுக்கி, சாதியாக்கி வைத்திருப்பதை போன்ற  கதை நிறையவே எம்மிடம்  உண்டு . 

காலனித்துவ காலத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்களினால் தருவிக்கப்பட்ட  கோல்புறுக், டொனமூர், சோல்பெரி என மூண்று ஆணையாளர்களினால் இலங்கைத்தீர்வு நிர்வகிக்கப்பட்டது என்பதும்கூட வரலாறுதான். சோல்பெரிக் ஆணைக்குழு காலத்தில் கட்டைவேலி கிராமாட்சி பிரிவில் உடையார் பதவிக்கான தேர்தலில் கன்பொல்லை கிராமத்தினைச் சேர்ந்த (அப்போது கன்பொல்லைக் கிராமத்தின் அரசபதிவுப்பெயர் கனுவில்)    வல்லி நல்லதம்பி அவர்கள் சித்த மணியம் உடையார் அவர்களுக்கு எதிராக தேர்தலில் நின்றார்.  பாரம் இறக்கும் தொழிலுக்குப்போன  அவரது உறவினர்  சிலரைப் பிடித்துச் சென்று  மாலைவரை மறைத்து வைத்து சில சொற்ப வாக்குக்களினால். அவரைத்  தோற்கடித்திருக்கிறார்கள். அந்த சித்தமணியம் உடையாரின் பேரன்தான் உடுப்பிட்டித் தொகுதியின் சிங்கம், நல்லூர் தொகுதியின் தங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் முருகேசு சிவசிதம்பரம் அவர்கள். உடையார் தேர்தலில் தாழ்த்தப்பட்ட சாதியினைச் சேர்ந்த நல்லதம்பி அவர்கள் போட்டியிட்டதினை பொறுக்கமுடியாத ஆதிக்க சாதியினர் அவர்களைத்  தாக்கினார்கள். அவர்களது குடிசைகளினை தீவைத்து எரித்தார்கள். ஆதிக்க சாதியினரை எதிர்த்துத் தாக்க  பல்வேறு பொறிமுறைகளை  நல்லதம்பி  கையாண்டார். கல்லால், பொல்லால் அல்லது கூரிய ஆயுதம் கொண்டு தாக்குவது பெரும் தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வகை ஆயுதங்களை வீட்டில் வைத்திருப்பதே தண்டனைக்குரிய செயலாகும். எனவே   இப்போது கன்பொல்லையில் மாதிரிக்கிராமம் அமைந்திருக்கும் பகுதியின்  நிலம் களிமண் நிலமாகும். எனவே அக்களி  மண்ணிலிருந்து உருண்டைகளை  செய்து சுடவைத்து  மாலைநேரங்களில்  ஆதிக்க சாதியினரைத் தாக்கி பின்வாங்கச் செய்திருக்கின்றார்கள். மண்ணால் அடித்தார்களென சட்டரீதியாக வழக்குத் தொடரமுடியாமல் அவர்களைத் திணறச் செய்திருக்கின்றார்கள். 

இக்காலத்தில் உடுப்பிட்டித் தொகுதியென்று  ஒன்று இருக்கவில்லை அப்போது பருத்தித்துறை தொகுதிக்குள் தான் கட்டைவேலி கிராமாட்சிப் பிரிவு இருந்தது. ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் பருத்தித்துறைதொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். சோல்பெரிபிரபுவை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து கன்பொல்லையில் எரிந்த வீடுகளை காண்பிக்க பொன்.கந்தையாவின் அனுசரணையுடன்    எம்.சி. சுப்பிரமணியம் எடுத்த முயற்சிகளை பொன்னம்பலம் தடுத்தார் . அதனையும் மீறி எம்.சி .சுப்பிரமணியம் அவர்கள் போலிஸ் பாதுகாப்புடன் சோல்பெரி பிரபுவை அழைத்து வந்து கண்பித்திருக்கின்றார். அதன்பின் போகும் வழியில் நெல்லியடிச் சந்தியில் வைத்து  எம்.சி.சுப்பிரமணியத்தினை மரத்தில் கட்டிவைத்துத்   தாக்கியிருக்கின்றார்கள்.  அவரை  உயிருடன் வைத்து எரிப்பதுக்கான முயற்சிகள் நடந்திருக்கின்றன. எதிர்பாராதவிதமாக வழியில் வந்த போலீசார் அவரை காப்பாற்றியிருக்கின்றார்கள் . 

தகவல்:வல்லி செல்லன், உசாத்துணை நூல் எம்சி ஒரு சமூகவிடுதலைப்போராளி 

No comments: