Saturday, September 05, 2015

நாம் நெல்லியடி அம்பலத்தாடிகளில் குழந்தைக் கலைஞர்கள்......

-கரவைதாசன்-


நெல்லியடி அம்பலத்தாடிகள்  என இலங்கையின்  நாடகவரலாற்றில் அறியப்பட்ட கலை  இலக்கியச் செயற்பாட்டாளர்கள் வெறுமனே நாடகக் கலைஞர்கள் என்பதனை தாண்டி மக்கள் கலைஇலக்கியச் செயற்பாட்டாளர்கள் எனச் செயற்பட்டவர்கள். இந் நாடகமன்று அந்நாட்களில்  இடது சாரியக்  கலை இலக்கிய மன்றாகவே  இயங்கி வந்தது. கந்தன் கருணை, சங்காரம் இதுவுமன்றி சமூக விழிப்பினை புகட்டவல்ல  தாளலய ஓரங்க நாடங்கங்கள் பல அந்நாட்களில் இவர்களால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில்  அரங்காடப்பட்டன. 

இலங்கை கம்யுனிஸ்டுகள் மாஸ்கோ,  பீக்கிங் என கோட்பாட்டு ரீதியிலே  பிளவுண்டிருந்த காலத்தினிலே நெல்லியடி அம்பலத்தாடிகள் கலைமன்று  சீன சார்பு செயற்பாட்டாளர்களின் கலை இலக்கிய மன்றாக இயங்கி வந்தது  என்பதே பொருந்தக் கூறக்கூடிய செய்தியாகும் . இம்மன்று  நெல்லியடியினிலே முகவரியினை கொண்டிருந்தபோதும் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் முற்போக்கு கலைஞர்கள்  மத்திமைப்பட்டு இம் மன்றில் செயற்பட்டார்கள். 

மட்டக்களப்பிலிருந்து சி.மௌனகுரு, தாளயடியிலிருந்து  தாசீசியஸ், ம.சண்முகலிங்கம், யாழ்ப்பாணத்தில் பிறந்து  கரவெட்டி கன்பொல்லையில் திருமணபந்தத்தினால் வாழ்வினைக்  கொண்ட கே.எஸ். இரத்தினம் இப்படியே ஒரு நீண்ட பட்டியல் நீளும். இன்று அண்ணாவியராக  விழிக்கப்படுகின்ற இளைய பத்மநாதன் கலைஞனாக  கருக்கொண்டதும் இம் மன்றில்த் தான். அந்நாளில் அம்பலத்தாடிகளின்  வில்லிசை குழுவில் பத்தண்ணா  பிரதான கதை சொல்லியாக   இருந்தார். இவ் வில்லிசைக் குழுவினை நெறிசெய்து இவர்களுக்கு ஒத்தாசையாக கன்பொல்லையைச்  சேர்ந்த நாடறிந்த இசை நாடகக் கலைஞர் நாடத்திலகம் கே.வி. நற்குணம் அவர்கள் இருந்தார். 


நான் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது  மாவோசேதுங் அவர்களின் பிறந்தநாளினை  அம்பலத்தாடிகள் நெல்லியடி மத்திய மகா வித்தியாலய எல் மண்டபத்தில் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் கொண்டாடினார்கள். வில்லிசை, கவியரங்கம், "மலைகளை அகற்றும் மூடக்கிழவன்" தாளலய நாடகம் என பல்வேறு  கலை அரங்க செயற்பாடுகளினால் மண்டபம்  விழாக்கண்டது. அந்நாடகத்தில் மூடக்கிழவனாக கே.எஸ். இரத்தினம் நடித்திருந்தார். துணைக் கலை ஞர்களாக சிறுவர்கள்   ஆனந்தஜெயசிறி, புஸ்பானந்தம்,  சத்தியதாஸ், இங்கே டென்மார்க்கில் நான் வாழும் நகரினிலேயே  வாழ்ந்து வரும் எனது பாடசாலைத்தோழன் விஜயகுமார் இன்னும் பலரும்  சேர்ந்து நடித்தோம். 

நெல்லியடியில் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்துக்கு முன்பாக அமெச்சூர் கலாசாலை என அந்நாளில் ஒரு தனியார் மாலை நேர பாடசாலை இருந்தது.  அங்கே நான், ஆனந்தஜெயசிறி, புஸ்பானந்தம், சாந்திக்குமார்,அமிர்தலிங்கம், ஆனந்தராசா  இங்கே டென்மார்க்கில் நான் வாழும் நகரினிலேயே  வாழ்ந்து வரும் எனது பாடசாலைத் தோழன் விஜயகுமார், ரகுதீஸ்வரன், ராஜன்பாபு, சிவச்சந்திரன், ஜெயச்சந்திரன் எல்லோரும் படித்து வந்தோம். சிறுவர்களான எங்களை வைத்து பத்தண்ணா நெறியாள்கை செய்து சர்சைக்குரிய அரசியல் கருத்துக்களை கருவாகக் கொண்ட பல நாடகங்களை அரங்கேற்றினார். அதில் குற்றவாளிகள் என்னும் நாடகமும் ஏகலைவன் நாடகத்திலும் கூட நான் பங்களிப்புச் செய்திருக்கின்றேன். குற்றவாளிகள் நாடகத்தில் நான் கிப்பியாக நடித்திருந்தேன். எமனாக கரவெட்டியைச் சேர்ந்த துரைசிங்கம் நடித்திருந்தார். சித்திரபுத்திரனாராக ஆனந்த ஜெயசிறியும், தந்தை செல்வவாக ரகுதீசும், அடங்காத்தமிழன் சுந்தரலிங்கமாக விஜயகுமாரும் நடித்திருந்தோம். அந்நாடகத்தில் தொண்டமானும்  வருகிறார். இந்தப் பாத்திரப் படைப்புக்களையெல்லாம் எமலோகத்தில் விசாரணை செய்வதுபோல் நாடகம் அமைந்திருந்தது. 

அம்பலத்தாடிகளின் ஏகலைவன் நாடகம் இலங்கைத்  தொலைக்கட்சி ரூபவாகிநியிலும் இந்தியாவில் தமிழ்நாட்டின்  பல  பகுதிகளிலும்   எங்கள் ஊர்  இசைவாணன் தங்கபாஸ்கரன் அவர்களின் இசை யமைப்பிலும், அண்ணாவியார் பத்தண்ணா அவர்களின் நெறியள்கையிலும்  அளிக்கை பல செய்யப்பட்டன. 

இப்படியொரு நீண்ட வரலாறு அம்பலத்தாடிகளுக்கு இருக்கின்றது. அவர்களின் அரங்கச் செயற்பாடுகளில் கந்தன்கருணை காத்தான் கூத்துப்  பாணிசை நாடகம் உச்சமாகப் இன்றுவரை பேசப்படுகிறது. தமிழர்களுக்கிடையே ஒருவருக்கொருவர்  சாதிபார்த்து சமத்துவத்தினை  பேணாத அநாகரீகமான பிரச்சினைக்கு தீர்வை நோக்கி போராட மக்களை அணிதிரட்டிய சிறப்பு இந்நாடகத்துக்கு உண்டு. 

இவ் ஓரங்க நாடகத்தின் மூலப்பிரதியினை ஆசிரியர் என்.கே.ரகுநாதன் அவர்கள் எழுதியிருந்தார். எச்சந்தர்ப்பத்திலும் இதனை அப்பலத்தாடிகள் மறுக்கவுமில்லை. மறைக்கவுமில்லை. 1969ல் எழுதப்பட்டு 1999ல் ஆசிரியர் என்.கே.ரகுநாதன் அவர்களால் வெளிக்கொணரப்பட்ட மூலப் பிரதியின் பிரதியும் என்னிடம் இருக்கின்றது. அம்பலத்தாடிகளிகளினால்  புனரமைக்கப்பட்ட சில பாடல்கள்  உண்மையில்  மூல நூலில் இல்லை. 
உ+ம்:  சந்தி சிரிக்குதெல்லோ  
சுந்தரலிங்கம் மந்தியைப் பார்த்து
 சந்தி சிரிக்குதெல்லோ 
விடயம் இப்படியிருக்க நண்பர்கள் சிலர்  விசமத்தனமாக நெல்லியடி அம்பலத்தாடிகள் மீது குற்றம் காண எத்தணிப்பது கவலையைத் தான் தருவிக்கின்றது. 

No comments: