Sunday, February 14, 2016

பல்துறையாளன் நாடகக் கலைஞன் அரசையா

சி .மௌனகுரு 
அன்புமிக்க நாடக ஆர்வலர்களே!
விசேடமாக யாழ்ப்பாணத்தில் நாடகம் செய்யும் இளம் நாடகக் கலைஞர்களே!,

உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். அரசையா என நாடக உலகில் அழைக்கப்பட்ட  திருநாவுக்கரசு அவர்கள் தமக்கு எண்பத்திரண்டு வயதாகிய நிலையில்
உடற் சுகயீனமுற்று  மிக மிகத் தளர்ந்து போய் இருப்பதாக அறிந்தேன். இன்று என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் தன் மன ஆதங்கங்களை மள மளவென ஒரு மணி நேரம் என்னிடம் கொட்டினார் தளதளத்த குரலில் கொட்டினார். அக்கொட்டலுக்குள் மிகுதியான அவர் மனத் துயரங்களும்அதிகமான பல உண்மைகளும் இருந்தன. இவற்றையெல்லாம் சுமந்து கொண்டு அந்த முதியவர் தனிமையில் வாடுகிறார்  என்பதை எண்ணி என் மனமும் வாடுகிறது. 1950 1960,1970 களில் யாழ்ப்பாண நாடக உலகில் புகழ் மிக்க இப்பெரியவர் கலையரசு சொர்ணலிங்கம் 90 வயதாகி நவாலியில் வாழ்ந்த காலத்தில் அடிக்கடி அவர் வீடு சென்று பார்த்துப் பராமரித்து வந்தவர். அவருடன் நானும் ஓரிரு தடவைகள் கலையரசின் முதுமைக் காலத்தில் அவர் வீடு சென்று வந்துள்ளேன். நாடக டிப்புளோமா எடுக்கக் கொழும்புப் பல்கலைக் கழகம் செல்லும்படி குழந்தை சண்முகலிங்கம் அவர்களை 1970 களில் வற்புறுத்தி அனுப்பி வைத்தவர்களுள் முக்கியமானவர். அரசையா 1970 களின் பிற்பகுதியில் நாடக அரங்கக் கல்லூரியை வளர்த்த முதன்மையருள் ஒருவர். அன்று யாழ்ப்பாணப் பாடசாலைகள் பலவற்றில் நாடகங்கள் பழக்கி மாணவர் மத்தியில் நாடக ஆர்வத்தை வளர்த்தவர் பிற்காலத்தில் மிகச் சிறந்ததோர்  ஒப்பனைக் கலைஞனராகப் பரிணமித்தவர். குத்து விளக்குத் திரைப்படத்தில் நடித்தவர் சின்னமணி அவர்களின் வில்லுப்பாட்டுக் குழுவில் இருந்தவர். சிறந்த புகைப்படப் பிடிப்பாளர், பல் திறன் மிகுந்த ஓர் கலைஞர். இன்று மாணவர்கள் இவர் பற்றி அறியார். யாழ்ப்பாணத்தில் இன்று பல நாடக மன்றங்கள் காத்திரமான நாடகச் செயற்பாடுகளில் ஈடுபடுவது மகிழ்ச்சி தருகிறது.

அவற்றின் தலைவர்கள் ஒரு முறை தம் மாணவர்களை அழைத்துச் சென்று இப்பெரியாருடன் கதைக்க விடுங்கள். பாடசாலயில் நாடகம் கற்பிக்கும் ஆசிரியர்கள்
இவரை அழைத்து உங்கள் மாணவர்களுடன் அவர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மாணவர்களுக்கு அவரை அறிமுகம் செய்யுங்கள். எமது மாணவர்கள் சிலரை நாம் பல தடவைகள் அவரைச் சந்தித்து வர அனுப்பியுள்ளோம் இங்கு ஒரு மாணவன் அவரது நாடகப் பணிகள் பற்றி ஒரு பெரும் ஆய்வுக்கட்டுரையும் சமர்ப்பித்துள்ளான். தான் கணிக்கப்படுகிறேன் என்ற உணர்வு அவருக்கு வலுவும், மகிழ்ச்சியும் தரும் கொடிதினும் கொடிது முதுமையில் தனிமை. தன் அதிகமான நாட்களை மக்கள் மகிழ்ச்சிக்காக அதிகமாகச் செலவழித்த ஒரு கலைஞனுக்கு மக்கள் தாம் பட்ட கடன்களைத் திருப்பி கொடுக்க வேண்டும் கொடுப்பது எப்படி? அவரைத் தேடிச் செல்லல் அவர் மீது அன்பு செலுத்தல். அவரோடு உரையாடல்.

தான் கணிக்கப் படுகிறேன் என்ற இன்பத்தை அவருக்குக் கொடுத்தல். செத்ததற்குப் பின்னர் சிலைகள் எழுப்புவதை விட அஞ்சலிக் கூட்டங்கள் நடத்துவதை விட உயிரோடு இருக்கையில் அவர் சேவைகளை நினைவு கூர்ந்து அவருக்கு மகிழ்ச்சி தருதலே பெரும் செயலாகும்.


No comments: