(டெல்லியின் புகழ் பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் கன்னைய குமார் 2016 பிப்ரவர் 12இல் இந்த உரையை நிகழ்த்தியதற்காக தேசதுரோகக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார். இப்போது அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்).
COUNTERCURRENTS.ORG, 18 FEBRUARY, 2016 இதழில் வெளியாகியுள்ள இவ்வுரையை தோழர். எஸ்.வி.ராஜதுரை தமிழாக்கம் செய்துள்ளார்.
மூவண்ணக் கொடிய எரிக்கின்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கேட்ட சாவர்க்கரின் கைக்கூலிகள். அவர்கள்தாம் இப்போது ஹரியானாவில் ஒரு விமான நிலையத்திற்குச் சூட்டப்பட்டிருந்த தியாகி பகத்சிங்கின் பெயரை அகற்றிவிட்டு சங் பரிவாரத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரைச் சூட்டியுள்ள கட்டார் அரசாங்கத்தை நடத்துகிறார்கள். இதில் நாம் முடிவுக்கு வரவேண்டியது என்னவென்றால், நாம் தேசிய வாதிகள் என்னும் சான்றிதழை வழங்க நமக்கு ஆர்.எஸ்.எஸ். தேவையில்லை என்பதுதான்.
நாம்தாம் இந்த நாடு. இந்த மண்ணை நாம் நேசிக்கிறோம். இந்த நாட்டில் ஏழைகளாக உள்ள 80 விழுக்காடு மக்களுக்காக நாம் போராடுகிறோம். நம்மைப் பொறுத்தவரை இதுதான் தேசபக்தி. பாபாசாகெப் மீது நமக்கு முழு நம்பிக்கை உள்ளது. நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மீது நமக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. சங் பரிவாரத்தினரோ,வேறு யாரொ இந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மீது கை வைப்பார்களேயானால் நாம் அதை சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதை உறுதியாக அறுதியிடுகிறோம். ஆனால் ஜண்டேன்வாலாவிலும் நாக்பூரிலும் கற்பிக்கப்படும் அரசமைப்புச் சட்டத்தின் மீது நாங்கள் நம்பிக்கை வைக்கமாட்டோம். மனுஸ்மிரிதி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த நாட்டில் ஆழமாக வேறூன்றியுள்ள சாதி அமைப்பின் மீது எங்களுக்குப் பற்றுறுதியோ, நம்பிக்கையோ இல்லை. அதே இந்திய அரசமைப்புச் சட்டமும், அதே பாபாசாகெப் டாக்டர் அம்பேத்கரும் அரசமைப்புச்சட்டரீதியான நிவாரணிகளைப் பற்றிப் பேசுகின்றனர். அதே பாபாசாகெப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் மரண தண்டனையை ஒழித்துக்கட்டுவது பற்றிப் பேசினார். அதே பாபாசாகெப் டாக்டர் அம்பேத்கர், கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசினார். நாங்கள் அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிக்க விரும்புகிறோம்; நாங்கள் எங்களது அடிப்படை உரிமையை, அரசமைப்புச்சட்டரீதியான எங்களது உரிமையை உயர்த்துப் பிடிக்கிறோம்.
