Wednesday, November 25, 2015

எஸ்.பொவின் "வரலாற்றில் வாழ்தல்" நூலை முன் வைத்து.....

-நோயேல்  நடேசன்  -
மறைந்த இலங்கை தலைமை இலக்கியவாதி எஸ்போவின் மறைவை நினைவு கூர்ந்து அவரது வரலாற்றில் வாழ்தல் என்ற சுயசரிதை நூலை முன்வைத்து 27-11-2015 ல் வெளிவரும் கட்டுரை
இரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட எஸ் பொன்னுத்துரையின் வரலாற்றில் வாழ்தல் என்ற சுயசரிதை நூலின்  இரண்டு பாகங்களையும் நான் ஏன் படிக்கவேண்டும்? படித்தால் என்னிடத்தே வைத்திராமல் அதைப் பற்றி உங்களுக்கு ஏன் சொல்லவேணடுமென்பது என்ற முக்கியமான கேள்விக்கு நான் பதில் தரவேண்டும்.
பதிலை எனது கூற்றாகச் சொன்னால் அது மதிப்பிழக்கலாம். எனவே எனது கருத்தைச் சொல்லாமல் பண்டிதமணி கணபதிப்பிள்ளையின் வார்த்தையில் சொல்வது நலமானது.
‘எமக்கு முந்திய தலைமுறையில் தமிழுக்கு தொண்டு செய்தவர்களை நாம் நினைத்துப் பார்க்காவிடில் அடுத்த சந்ததியில் நம்மை மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்ற தார்மீகமான நினைவை நாங்கள் வைத்திருக்க முடியாது.’
இதை மிகவும் அழுத்தமாக சொல்வதானால் எனது பெற்றோரையோ எனது மனைவியின் பெற்றோரையோ பராமரிக்க தவறினால் எனது மகனிடம் அல்லது மகளிடம் எனது வயோதிபகாலத்தில் எதையும் எதிர்பார்க்க தகுதியில்லாதவனாகிறேன். அதை யாழ்ப்பாணத்து வழக்கத்தில் சொன்னால் எனது தந்தைக்கு சிரட்டையில் தேநீர் பரிமாறினால் எனது மகனும் அதிலே எனக்குத் தருவான்.
எமது மத்தியில் சுயசரிதை எழுதுவது வழக்கமில்லை ஆனால் இறந்தவர்களுக்கு கல்வெட்டு எழுதுவோம் ஆனால் கல்வெட்டு எழுதினால் எல்லோருக்கும் பெயரைத் தவிர மற்றவை எல்லாம் ஒரே மாதிரி தேவார திருவாசகத்துடன் இருக்கும். அந்தியேட்டி செலவோடு கல்வெட்டும் பழைய கடதாசியாகிவிடும்.
தனது வாழ்கையில் நடந்த விடயங்களை காய்தல் உவத்தல் அற்று எழுதுவதோ மற்றவரை எழுதுவதற்கு அனுமதிப்பதோ இல்லாதது தமிழ் சமுகம். தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் பிற்காலத்து போரட்டத்; தலைமுறையில் வந்தவர்களைப் பற்றிய குறிப்புகள் எம்மிடமில்லை. அதை எழுதுவதற்கு எந்த ஏற்பாடுகளும் எம்மிடமில்லை. இது ஈழத்தமிழர்மத்தியில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் நிலையும் அதுவே. கருணாநிதி எம்.ஜி. இராமச்சந்திரன் போன்றவர்கள் தங்கள் அரசியல் தேவைக்காக எழுதியவை உள்ளன. இக்காலத்திலும் பூரணமாக எம்ஜிஆர் சம்பந்தமப்பட்ட ஒரு புத்தகத்தை யாராவது எழுதினால் அவர்களுக்கு உயிராபத்து ஏற்படும்.
இப்படியான தமிழ்ச்சூழலில் எஸ்.பொ. தனது ஐம்பது வருட எழுத்து வாழ்வை எந்த ஒளிவு மறைவுமின்றி எழுதியது ஒரு இமாலய துணிவு. அதைப் படைப்பாக்கியது மகத்தான சாதனை. இதை குறைந்தபட்சம் இன்னமும் ஐம்பது வருடங்களுக்கு தமிழில் எவராலும் செய்யமுடியுமா என்பது கேள்விக்குறி. எழுதுவது முடிந்தாலும் பாவனை காட்டாது தனது பலங்களையும் பலவீனங்களையும் மதியத்தில் சூரிய குளியல் நடத்தும்; மேற்குநாட்டுப் பெண்கள்போல் துணிவுள்ளவர்கள் எவருமில்லை அந்தவகையில் தமிழில் இது ஒரு முன்னுதாரணம்.

இந்தப் புத்தகத்தில் தனது வரலாற்றை மட்டும் எழுதியிருந்தால் எஸ்.பொ.வை நேசிப்பவர்கள் மட்டுமே படிக்கவேண்டும். ஆனால் மொத்தமான தமிழர் வரலாற்றை எழுதியுள்ளார்.
தன் வளரிளம் பருவத்தில் யாழ்ப்பாண வாழ்க்கை. கல்லூரியின் பின்னர் மேற்படிப்பில் ஈடுபடும் தமிழ்நாடு, அதன்பின் மணவாழ்க்கை. பின்பு கிழக்கு மாகாணம் அங்கிருந்து கொழும்பு எனத் தமிழர்கள் வாழும்; நிலப்பரப்பை எமக்கு காட்டுவதோடு நிற்காமல் பிற்காலத்தில் ஆபிரிக்காவில் வாழ்வதும் பின்பு ஐரோப்பா கனடா எனப்போய் வரும்போது இது பயணியின் குறிப்பாக வளர்ந்து அவுஸ்திரேலியாவில் பல விடயங்களை எழுதி முடித்தாலும் அவரது இறுதிவருடங்கள் பல இதில் இல்லை. அதேவேளையில் மரணத்தை தழுவும்வரையும் இயங்கிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தவர். சி.ஐ.ஏ.யின் உளவுத்துறைக் கணனிமாதிரி பலமடங்கு நினைவாற்றலுடன் நகைச்சுவை உணர்வுடன் இறுதி வரை வாழ்ந்தவர்.
இது தனது சுயபல்லவி மட்டும் சொல்லும் புத்தகமல்லாமல் மானிடவியல் வரலாற்று நூலாக்கியிருக்கிறார்.
இது ஒரு வரலாற்று இலக்கியம்.
நான் கண்ட தமிழ் எழுத்தாளர்களில் ஈழத்தமிழர்கள் பாவிக்கும் வட்டாரத் தமிழ் வார்த்தைகளை மிக அழகான சரமாக கோர்ப்பவர் எஸ்.பொ. அவரைப் பொறுத்தவரை வார்த்தைகள் சீனதேசத்து இராணுவ அணிவகுப்பைப்போன்று நேரத்தியானவை.
இந்த நூலை நான் இலக்கியம் என்று சொன்னால் நீங்கள் எவ்வகை இலக்கியம் எனக் கேட்பது நியாயம்.
ஆங்கிலத்தில் கத்தாசில் (Catharsis or Cathartic literature)) எனப்படுவது. ஆரம்பத்தில் கிரேக்க அறிஞர் அரிஸ்ரோட்டிலால் இலக்கியத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பொருள் தன்னை சுத்தப்படுத்துதல். இதை மதத்தில் பலிகள் கொடுத்தோ, கழுவியோ கடவுளை வழிபடுவது. இந்தவகை. நீங்கள் கேள்விப்பட்ட பழைய வேதாகமத்தில் எக்ஸோடசில்(Exodus in Old Testament) யூதர்களை விடுவதற்கு மறுத்த எகிப்த்திய மன்னனின் இராட்சியத்துக்கு பல தீமைகள் வருகின்றன. கடைசியில் துஷ்ட தேவதை இராட்சியத்தில் முதல் ஆண்பிள்ளையை காவு எடுக்க வருகிறது. அப்போது யூதர்கள் செம்மறியை கொலை செய்து தங்கள் வீட்டு வாசலில் பூசுவதன் பிரகாரம் தங்களை புனிதமாக்கி துர்த்தேவதையில் இருந்து பாதுகாத்துக்கொள்கிறார்கள். ஆனால் எகிப்திய குழந்தைகள் மன்னனின் குழந்தை உட்பட மரணமடைகிறார்கள். இதையே பாஸ் ஓவர் என்று யூதர்கள் கொண்டாடுவார்கள். அந்த பாஸ் ஓவர் விருந்தின் பின்பே யேசுநாதர் கைது செய்யப்பட்டதாக மத்தியூவின் வேதம் சொல்கிறது. இதேபோல் பாரதப்போரில் பாண்டவர்கள் அரவானை உயிர்ப்பலி கொடுத்து தங்களை புனிதராக்கினார்கள் குருஷேத்திரப்போரில் வெல்லும் பொருட்டு.
கங்கையில் மூழ்கியோ இல்லை மசூதிக்கு செல்லுமுன் தடாகத்தில் உடல் கழுவியோ மனிதர்களை புனிதமாக்குவதாக மதங்களில் உள்ளது. பிற்காலத்தில் சிக்மண்ட் ஃபரய்டால் இது மனம் சம்பந்தப்பட்டது அடிமனத்து நினைவுகளை வெளியகற்றுதல் என்று பொருள்படுகிறது. மொத்தத்தில் அழுத்தங்களை இறக்கி வைக்கும் செயல் இது.
பல கிரேக்க நாடகங்கள், ஷேக்ஸ்பியரின் நாடகங்களை இதற்கு உதாரணமாக சொல்கிறார்கள்.
இப்படியான கத்தாசிஸ் எழுத்தை இரண்டாயிரம் பக்கங்கள் எழுதுவதற்கு எஸ். பொன்னுத்துரைக்கு என்ன தேவை வந்தது என்பது உங்களது அடுத்த கேள்வி.
WriterS.Ponnuthurai

பொன்னுத்துரை தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்ததால் அவரை தொடர்ச்சியாக யாழ்ப்பாண சமூகம் புறக்கணிக்கிறது. பாடசாலைகளில் அவரை மாணவராக ஏற்க மறுக்கிறது இந்தியாவில் இருந்து பட்டதாரியாக வந்து ஊர்காவற்றுறை கதோலிக்க பாடசாலையில் அவரது சாதி தெரியாமல் ஆசிரிய பதவி கொடுத்தபின்னர் அவரது சாதி தெரிந்து அவரை அடித்து உதைக்க முற்படுகிறார்கள். இந்துக்கள் மட்டுமல்ல கத்தோலிக்க சமயத்தில் கூட புகலிடம் இல்லையென,கம்பளை ஸாகிரா மகாவித்தியாலயத்தில் தனது ஆசிரிய பதவியைப் பெறுகிறார் . மட்டக்களப்பில் 17 வருடங்கள். அங்கு திருமணமாகியபின் அங்கே வாழ்ந்தபோதும் யாழ்ப்பாணத்தவன் என்பது அங்கு பாதிப்பிற்கான விடயமாகிறது. இதைவிட எஸ்.பொ.வின் வித்துவத்தில் அதிருப்தியடைந்தவர்கள் முக்கியமாக முற்போக்கு எழுத்தாளர் கூட்டமும் ஈழத்தின் மூடிசூடா மன்னர்களாகிய பல்கலைக்கழப் பேராசிரியர்கள் iலாசபதி சிவத்தமபி போன்றவர்களால் தொடர்ச்சியாக பாதிக்கபடுகிறார். இப்படியாக தொடர்ச்சியாக பலவிடயத்தில் பாதிப்படைந்த எஸ்.பொ.வும் தொடர்ச்சியான சமரில்; ஈடுபடுவதோடு பல வில்லன்களையும் சந்திக்கிறார். அல்லது உருவகிக்கிறார்;. மட்டக்களப்பு அங்கத்தவர் இராசதுரை தில்லானாமோகனம்பாள் வைத்தியாக வருகிறார். பிற்காலத்தில் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த டொக்டர் கந்தையா அந்த பாத்திரத்தை கொழும்பில் எடுக்கிறார். இப்படி பலமான அரசியல், சமூகசக்திகளால் பந்தாடப்படும் எஸ்.பொ. துரதிஷ்டவசமாக இரண்டு புத்திரர்களை இழக்கிறார். மித்ர விடுதலைப்புலிப் போராளியாகவும் புத்ரவை தற்செயலான விபத்திலும் பறிகொடுக்கிறார். புத்திரசோகம் என்பது கொடுமையானது. இவற்றின் பாதிப்புகளிடையே தனது தமிழ் இலக்கியப் படைப்பை தமிழுக்கான ஊழியமாக அல்லது தவமாக கம்பன் வள்ளுவன் பாரதி புதுமைப்பித்தன் ஜானகிராமன் வரிசையில் செய்ததாக பதிந்திருக்கிறார். இதேவேளையில் வழ்க்கையில் தோல்வியடைந்த இடங்களையும் குறிப்பிடுகிறார்.
இந்த நிலையில் இவரது வரலாறு மனதில் இருப்பதை சுத்திகரிக்கும் (Catharsis) வகையை சேர்ந்தது என நான் சொன்னது சரிதானே.
எஸ். பொ தனக்கான சில கொள்கைகளை இங்கு வரையறுக்கிறார். எந்த ஒரு இடத்திலும் தன்னை சாதாரண மனிதனாகவே கொண்டு செல்கிறார் பலவீனமான மனிதராக, குடிகாரனாக, காம விருப்புள்ளவனாக வைத்து அதே நேரத்தில் அவரது சில கொள்கைகளை வரையறுக்கிறர். அவை மற்றைய யாழ்ப்பாணத்தவர்களை தலையில் துண்டுபோட்டு மறைக்கக்கூடியவை. எக்காலத்திலும் பெண் வீட்டாரிடம் சீதனம் வாங்கும் பொலிகாளைபோல் நடக்கமாட்டேன் என்கிறார் அதைவிட உறவுக்குள் திருமணம் செய்ய மறுக்கிறார் இதன் மூலம் குடும்பத்தில் பெரும்பகையே ஏற்படுகிறது. தனது மனைவியின் பணத்தில் எந்த பாத்தியதையும் பாராட்டமாட்டேன் எனும்போது அவர் மிகவும் கண்ணியவானாக எனக்குத் தெரிகிறது. மச்சாளை திருமணம் செய்வதும் இலட்சக்கணக்கில் சீதனம் வாங்கும் யாழ்ப்பாண கலாச்சாரத்திற்கு இவரது நடத்தை எதிர்காலத்திலாவது அறைவலாகட்டும்
யாழ்ப்பாணத்தின் சமூகவரலாறுகள்
ஆறுமுகநாவலரால் சிலப்பதிகாரம் புறக்கணிக்கப்பட்டது. ‘சமணசெட்டிச்சிக்கு சிலை ஏன்?’ என ஏளனம் செய்யப்பட்டதன் காரணமாக கண்ணகி சிலை வற்றாப்பளைக்கும் மட்டக்களப்புக்கும் சென்றது. இது ஒருவிதத்தில் புதுமையானது. திராவிடக்கழகக்தினர் முன்னுரிமை கொடுத்த சிலப்பதிகாரம் யாழ்ப்பாணத்தவரால் பின் தள்ளப்பட்டு வைணவ இராமனின் புகழ்பாடும் இராமாயணம் முன்னிலைப்படுத்தப்படுகிறது. கந்தபுராண கலாச்சாரம் பேசும் யாழ்ப்பாணத்தில் கம்பன் கழகம் தழைத்து வளர்ந்திருக்கிறது. என்ற எஸ்.பொவி.ன் கேள்வி எனக்கும் இருக்கிறது.
சென் பட்ரிக்ஸ் கல்லூரியில் இருந்து விலக்கப்பட்ட பொன்னுத்துரை முதலாவது சிறுபான்மை மாணவனாக பரமேஸ்வரா பாடசாலையில் கார்த்திகேயன் மாஸ்டரால் சேர்க்கப்படுகிறார். அதற்குக் கூட காரணம் மகாத்மா சுடப்பட்டதால் யாழ்ப்பாணம் கவலைகொண்டிருந்த சூழ்நிலைதான். பாடசாலையில் சேர்ந்தாலும் அருகில் உள்ள உணவுச்சாலைகளில்; சாப்பிடமுடியாது. இப்படியான நேரத்தில் எழுத்தாளர் கணேசலிங்கன் என்ற சைவவேளாளர் தமது வீட்டிற்கு அவரைக்கூட்டிச்சென்று உணவு படைக்கிறார்(பக்கம் 65) நான் படித்த யாழ் இந்துக்கல்லூரி அக்காலத்தில் சிறுபான்மைத் தமிழரை மாணவர்களாக ஏற்பதில்லை என்பது புதிதான செய்தி (P 49)
மரவரி முறைமையே யாழ்ப்பாணத்தில் சாதியமைப்பை அழித்த முதலாவது அஸ்திரம். கள்ளிறக்குபவர்கள் மரவரியை கட்டிவிட்டு கள்ளிறக்கி விற்கலாம். இதனால் வந்த உபரி வருமானத்தால் சிறுமுதலாளிகளாகிய சிறுபான்மையினர் காணிகள் வாங்கி சொந்தவீடுகளில் வசிக்க முடிந்தது.

செல்லாத்துரை என்ற தனிமனிதன் வீரகேசரி நிருபராக இருந்தபோது அவரை நிறுத்தும்படி கேட்ட அரசாங்கம் சிறிது காலத்திற்கு வீரகேசரிக்கு அரசவிளம்பரங்களை நிறுத்தியது. இது நடந்தகாலம் சிறிமாவோ அரசில் குமாரசூரியர் அமைச்சராக இருந்தபோது (P 147)
அரசியல் விடயங்கள்
இலங்கைக்கு வந்த நேரு, மலையகத் தமிழர்களை இலங்கைத் தமிழர்களாக்காமல் என்றென்றும் இந்தியத் தமிழர்களாக இருப்பதற்கான இந்திய தமிழ்க் காங்கிரசை உருவாக்கி அத்திவாரத்தை இட்டார். இதற்கு மாறாக அவர்கள் இலங்கைத் தமிழர்களாக வாழ அறிவுறுத்தியிருந்தால் இடதுசாரிகளும், இலங்கைத் தமிழர்களும் கையை விட்டிருக்க மாட்டார்கள். மேலும் இப்படி அவர்களை அன்னிய நாட்டில் தனது நாட்டின் மக்களாக்கிவிட்டு தொடர்ந்து அவர்களுக்கு என்ன உதவிகள் செய்தார் என்பது மிகவும் முக்கியமான கேள்வியாகிறது. எனது கருத்தில் நேருவின் தவறு இன்னமும் இலங்கையில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
வன்முறையானது நாமெல்லாம் நினைப்பதுபோல் இயக்கப் பொடியளின் காலத்தில் தொடங்கவில்லை தமிழரசுக் கட்;சியில் இருந்து தமிழக்காங்கிரசில் பிரிந்து நல்லூரில் தனது அங்குரார்பண கூட்டம் நடத்தியபோது ஜி.ஜி. பொன்னம்பலத்தின் ஆதரவாளர்கள் கல்லெறிந்து அந்தக் கூட்டத்திற்கு வந்த மக்களை கலைத்தார்கள்.
தமிழ்க்காங்கிரஸ் தட்டாதெரு சந்தியில் அருளம்பலத்துக்கு 70 ல கூட்டம் நடத்தியபோது உடைந்த பல்பில் மலம் வைத்து அப்போதைய தமிழரசுக்கட்சியினர் எறிந்ததை நான் பார்த்தேன். அவுஸ்திரேலியாவில் சிட்னியில் தற்போதைய தமிழ் பிரதிநிதி சுமந்திரனுக்கு நடந்தவிடயம் புதுமையானதா..? ஏலலாம் நமது மரபணுவில் இருப்பதுதானே?
கிழக்கு மாகாண விடயங்கள்
இவரது புத்கத்திலிருந்து கிழக்கு மாகாணவிடயங்களை அதிகமாக என்னால் அறிய முடிந்தது . யாழ்ப்பாணவாசியாகிய நான் இலங்கையில் இருந்தபோது சூறாவளியின் பின்பு மட்டக்களப்பு சென்றபோது பெரும்பாலான தென்னைமரங்கள் மொட்டையாக நின்றன. பின்பு ஒரு முறை பாசிக்குடா சென்றேன். அதுவே எனது கிழக்குமாகாண பயண அனுபவம்.
எஸ்.பொ. கிழக்கு மாகாணக் கலாச்சாரம் வித்தியாசமானதாக இருப்பதாகக் கூறி யாழ்ப்பாணம்போல் சாதியம் இல்லாதது நெகிழ்வாக இருந்தது என்கிறார். கம்யூனிஸ்ட் தோழராக இருந்த கிருஷ்ணகுட்டியுடன் சேர்ந்து இராசதுரையை எதிர்ப்பது அரசியலாக இருந்தபோதும் அவருக்கு எதிராக வன்முறை பாவிக்கப்படுகிறது
இலங்கையில் திராவிட இயக்கத்தைப் பின்பற்றி ஈழத்துக்காந்தி, தானைத்லைவன், இரும்புமனிதன் என்ற பெயர்களை சூடி அழகு பார்த்தவர் சிவநாயகம் என்ற சுதந்திரன் ஆசிரியர் என்கிறார் எஸ்.பொ.
முதல்முழக்கம் போன்ற நாடகங்களையும் தமிழ் மகாநாடுகளையும் நடத்தி மட்டக்களப்பில் கலையுணர்வை உருவாக்கும் எஸ்.பொ. அங்குள்ள தமிழ் பற்றாளர்களுடன் சேர்ந்து வேலை செய்கிறார்.
57 இல் வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டநேரத்தில் பிரதமர் பண்டாரநாயக்கா வந்து வெள்ளத்தைப் பார்த்தபோது இராசதுரை எதுவும் பேசாமல் நிற்பதாக சொல்கிறார். இதைக் கண்டித்து ஓரங்க நாடகத்தைப்போட்டபோது இராசதுரை எம.பி.யின ஆதரவாளர்கள் மாணவர்களுக்கு கல் எறிந்தார்கள்.
இந்த நிலைமை இன்னமும் தொடர்கிறதுதானே…?
தமிழ் முஸ்லீம்களது உறவுகளைப் பற்றியும் பேசுகிறார். அந்தவிடயத்தில் கடைசிவரையும் உறுதியாக இருப்பதோடு இஸ்லாமியர்கள் தனித்துவமானவர்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறார். இஸ்லாமியர்களை 1915இல் தமிழர்கள் தங்களில் இருந்து பிரித்த, சிங்கள – முஸ்லீம் கலவரத்தில் பொன்னம்பலம் இராமநாதனின் நடத்தையை சுட்டிக்காட்டுகிறார். வடமாகாண முஸ்லீங்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றியதை கண்டிக்கிறார்
நீpலாவாணனைப்பற்றி எழுதும்போது நீலாவாணனது வீட்டின் பெயர் ‘ வேளாண்மை’ என்றும் அந்தப் பேரில் அவர் கவிதை இலக்கியம் படைத்ததையும் சொல்லி நீலாவாணனின் கவிதையையும் தருகிறார். எவருக்கும் கொடுக்காத மதிப்பை நீலாவாணனுக்கு கொடுக்கிறார்.
இந்த இருளைத் துளாவித் தேர்ந்தேன் ஒரு சத்தியம
சூரியன உதிப்பான் என்பது நிச்சயம்
முகிலின் அசைவில் ஓர் அமைதியுண்டு
அதில் அழகுண்டு
அது மழையாக ஒழுகும்போழுது
அதற்கு இசையுண்டு
இசை இனிது
தென்றலில் சுருதியுண்டு
சுருதி இனியது
புயலில் ஒரு வேகம் உண்டு
வேகம் நன்று

இலங்கையில் பிறந்த பிள்ளை ஆணானால் ரஸ்தாளைப் பழத்தோடு கல்கண்டும் பெண்ணானால் இதரைப் பழத்துடன் வெல்லமும் கொடுப்பார்கள் என்பது எனக்கு புதிய செய்தி.
இந்தியாவின் ரஸ்தாளைப்பழம் சிங்களவர் மத்தியில் கோழிக்கூட்டுப்பழம். யாழ்ப்பாணத்தில் கப்பல் மட்டக்களப்பில் அது பறங்கிப்பழமாகிறது. இதை அறிந்து கொள்ள மகாவித்துவான் நடராஜாவை நாட அவர் பறங்கியர் கப்பலில் கேரளத்தைச்சேர்ந்த கோழிக்கூட்டில் இருந்து கொண்டு வந்தது என விளக்கமளிக்கிறார்.
தமிழ் இலக்கியம்
Kaila

சங்க இலக்கியத்தை கிரேக்க இலக்கியங்களோடு ஒப்பிட்டு வீரயுகம் என பேராசிரியர் கைலசபதி கலாநிதி தேர்வுக்கு எழுதியதை கேள்வி கேட்கிறார். அவரது கேள்வியில் முக்கியமான அம்சங்கள் விவாதத்திற்கு உரியன.
1 சங்க இலக்கியம் வாய்மொழி இலக்கியமல்ல. சங்ககாலப் பாடல்கள் இயற்றியவர்களில் பலரை எமக்குத் தெரிகிறது. அதாவது கபிலன் பாடினார். பரணர் பாடினார் என அடிக்குறிப்புகள் நமக்கு கிடைக்கிறது.
2) சங்ககாலத்துப் பாடல்கள் வீரத்தை மட்டும் பாடவில்லை. ஈகை நிலையாமை என ஏராளமான பாடல்கள் உள்ளதென்கிறார்.
3) கைலாசபதி இலக்கியத்தில் விஞ்ஞானத்தை செருகியதாக குற்றம்சாட்டும் எஸ்.பொ., விஞ்ஞானம் வேறு இலக்கியம் வேறு என்பதை சொல்கிறார். அதற்கு உதாரணமாக மாரக்கோனி ரேடியோவை கண்டு பிடிக்காவிடில் வேறு ஒருவர் பிற்காலத்தில் கண்டுபிடித்திருப்பார்கள். ஆனால் காளிதாசன் இல்லையெனில் சாகுந்தலம் வந்திராது என்கிறார்.
மொத்தத்தில கைலாசபதி தமிழிலக்கியத்தை, அதிலும் சங்க இலக்கியத்தை அவமானப்படுத்துகிறார் என்கிறார்
கைலாசபதியின் தமிழ்நாவல் இலக்கியம், இளங்கீரனுக்கும் கணேசலிங்கனுக்கும் கொடுத்த முன்னுரைகளுடன் மாணவர்களுக்காக எடுத்த குறிப்புகள் என்கிறார். இளங்கீரனின் நீதியே நீ கேள், கணேசலிங்கனின் செவ்வானம் ஆகியனவற்றை தமிழில் சிறந்த நாவல்கள் வரிசையில் சேர்க்கமுடியுமா? என்கிறார்
கொழுப்பில் வீ என்ற அவரது சிறுகதைத் தொகுப்பிற்கு நடந்த அறிமுகவிழாவில் சிறப்பு விமர்சன உரையாற்றிய சிவத்தம்பி முக்கால் மணி நேரம் சிறுகதை இலக்கிய போக்குகள் பற்றி பேசிவிட்டு முற்போக்கு இலக்கியவாதிகள் அந்த உரைகல்லில் வீயில் ஒருகதையும் தேறமாட்டாது என முடித்தார் என்கிறார் (P 987)
நூலாசிரியன் என்ற முறையில் பதிலுரையில் நான் கேட்டேன். உங்கள் வட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களின் இரு கதைகளை இவைதான் முற்போக்கு இலக்கியத்தின திருத்தாட்டமாக அமைந்துள்ள இலக்கியம் என்று உங்களால் கூறமுடியுமா என்றபோது, நிட்சயமாக தீயுமல்ல வீயுமல்ல என சிவத்தம்பி சீறினார்.
இலக்கிய விருதுகள், தினகரன் பத்திரிகை ஆசிரியர் பதவிகளை தடுத்த முற்போக்கு அரசியல்வாதிகளை பெயர் சொல்லி அடையாளப்படுத்துகிறார்.
இந்திய சஞ்சிகைகளை இலங்கையில் தடைசெய்வதற்கு எச். ஏம். பி மொஹிதீன் மற்றும் ரூபசிங்காதான் காரணம் என்கிறார். இலங்கைக்கு வரும் இந்திய வெளியீடுகள் கேளிக்கை விடயங்களை முன்வைப்பவை இது வணிகம் சார்ந்தது. ஆனால் தமிழ்க்கட்சிகள் இதை இனமானத்துடன் எதிர்த்தார்கள்.
தமிழ்நாட்டையும் எஸ்.பொ விட்டு வைக்கவில்லை
திரைப்படம் என்ற தமிழ் படைப்பு ஊடகத்தை தனி செவிப்புலன் ஊடகமாக்கிய திராவிட இயக்கம் அத்துடன் அவர்களது தமிழ்பாவனையை (அடுக்கு மொழிகளை) தமிழுக்கு வந்த கேடாக சொல்லி விட்டு இந்தத் திராவிட இயக்கங்கள் ஊழலுக்கு தமிழ்நாட்டில் நடைபாடை விரித்தார்கள் என்கிறார். அதே வேளையில் எம்.ஜி.ஆர் நடிகரல்ல. அரசியல்வாதி. ஆனால் கருணாநிதி அரசியல்வாதியல்ல. நல்ல நடிகர் என்பதுடன் காமராஜருக்கு பின்பாக மக்களை வழிநடத்திய தலைவர் எம். ஜி.ஆர் என்கிறார்.
எஸ்.பொ.வின் நகைச்சுவை
கொழும்பில் நடைபெறவிருந்த ஒரு விழாவின் மலருக்கு வி. கே ரி. பாலன் என்பவர் ஊடாக சரஸ்வதியை கோட்டோவியமாக வரைந்தபோது டொக்டர் கந்தையா ‘அசிங்கம் ஆபாசம்’ என்றார்.
டோக்டர் கந்தையா பின்பு என்னிடம் எஸ். போ. உங்கள் கருதத்தென்ன எனக்கேட்டார்.
‘பாலன் இதை ஆர்வக்கோளாறால் செய்வித்துவிட்டான் பாவம். பாலனோ அந்த ஓவியர்களோ சத்தியமாக சரஸ்வதியைப் பார்த்ததில்லை. டொக்டர் நீக்கள் பார்த்த சரஸ்வதியின் உண்மைக் கோலத்தை சொன்னால் அவர்கள் திருத்திக் கொள்வார்கள் என்கிறார்.
புலம்பெயர் இலக்கியம்
புலம்பெயர் இலக்கியம் என்ற பெயர் ஏற்கனவே புழக்கத்தில் இருந்தாலும் அதற்கு தமிழில் உயிர் கொடுத்தவர் எஸ்.பொ. அவரால் அரங்கேறியர்கள் ஏராளம். அவர் தனது ஏமாற்றத்தைப் பற்றி சொல்கிறார். வெளிநாட்டுத்தமிழர்கள்; நண்பர்களை அழைத்து பல நூற்று கணக்கான டொலரில் மதுவருந்தி விருந்து நடத்துவர்கள். அவர்களில் புலம் பெயர்ந்த எழுத்தளானின் புத்தகத்தை வாங்குபவர்கள் அவுஸ்திரேலியாவில் விரல்விட்டு எண்ணமுடியும்(P 1699)
கோயில்கள் பாடசாலைகள் மன்றங்கள் நடத்துபவர்கள் செய்வது தமிழ் நோக்கிய பாவனை மட்டுமே. ஆங்காங்கே தமிழ் மொழியில் புத்திலக்கியம் படிப்பவர்களாலே தமிழ் வாழுகிறது என்கிறார்
எஸ்.பொ. யாரையும் பரிசுத்தமானவர்களாக(Holy-cow) கருதவில்லை
சில உதாரணங்கள்
குமுதத்தில் வைரமுத்து மகனுக்கு எழுதிய கடிதம் பிரசுரமாகியிருந்தது அதில்

நீ நலமா?
உனது நண்பர்கள் நலமா?
ஆஸ்திரேலிய புல்வெளிகள் நலமா?
பூக்கள் நலமா என்ற வரிகள் வருகிறது.

வைரமுத்து நலம் விசாரிக்காவிடில் அவுஸ்திரேலிய புல்வெளிகள் வாழாதா?
அல்லது பூக்கள் மலராதா? (P 1797)

தற்போது போதய ஷோபாசக்தி கூட தனது செவ்வியை எடுத்து பிரசுரித்த விதத்தில் குற்றம் கண்டு அதுவும் வேதாக வசனங்களால் குட்டுகிறார்
‘கர்த்தரே என்னை மன்னியும் பாரிஸிலே உங்கள் உபதேசத்துக்கு மாறாக பன்றிகள் முன் கருத்து முத்துக்களை போட்டுத் துன்பப்பட்டேன்(P 1864)’
பேராசிரியர் மௌனகுருவின் வீட்டில் அவரது மனைவி சித்திரலேகா தோன்றியபோது எஸ்.பொ. கைகுவித்து வணக்கம் செலுத்தியபோது அவர் பதில் வணக்கம் செலுத்தவில்லை. காரணம் அவர் தன்னை திருப்பி வணங்கினால் பெண்ணிய நிலைப்பாட்டிற்கு ஊறு நேர்திருக்குமோ என்று ஊகிக்கிறார்.
கல்குடாவிலிருந் அமைச்சராகிய நல்லையா, கவிஞர் நீலவாணன் மக்கத்துச்சால்வை சிறுகதை எழுதிய எஸ்.எல.எம். ஹனிபா மற்றும் யாழ்ப்பாணத்தில் கார்த்திகேசு மாஸ்டர் எழுத்தாளர் கணேசலிங்கன் ஆகியோர் எஸ்.பொ.வால் உயர்த்தப்படுகிறார்கள்.
சுவைக்காக
இறக்கும் நிலையில் கிடந்த தகப்பனுக்கு பால் பருக்குவதற்காக மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் வரவழைக்கப்படுகிறார். பால் ஊத்தமறுத்து அவருக்கு சாராயம் பருக்கினார். அதன்பின் தகப்பனார் எழுந்து சிலகாலம் வாழ்ந்தார் (P 1129)
பலவிதமாக பணமுடைகளின் மத்தியில் நைஜீரியா போக சந்தர்பம் வாய்த்தபோது எக்ரே எடுக்கவேண்டும் ஆனால் ஏற்கனவே கயரோகம் வந்து குணமாகியிருந்தாலும் மாததளைக் கதிரேசு என்பவரை எக்ஸ்ரே அறைக்கு அனுப்பி அவருடைய எகஸ்ரேயுடன் வெளிநாடுபோகிறார். இதைத் தனது மனச்சாட்சியின் மறுவாக பதிகிறார். (P 1507) இக்காலத்தில் வெளிநாடுபோகச் செய்யும் பொய், களவுகளுடன் ஒப்பிடும்போது நம்மால் புரிந்து கொள்ள முடியும் ஆனால் இந்த விடயத்தை சொல்லாமல் அவர் தவிர்க்கவில்லை.
ஆபிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் ஆபிரிக்க மக்களைப் பற்றி பல விடயங்களை எழுதியுள்ளார். இவை தமிழ் மொழியில் எவரும் எழுதாதவை. இதில் ஆபிரிக்க ஆண்கள் பல பெண்களை மணந்திருப்பது அவர்களுடன் குடும்பத்தில் சந்தோசமாக குடும்பம் நடத்துவதும் எனக்கு எப்பொழுதும் புதிரானது.
எஸ்பொவின் விவரிப்பு பிரகாரம் அப்படி மணந்த ஆண் வீட்டில் முன்பகுதியில் மிகவும் ஆடம்பரமான அறையில் வசிப்பார் பின்புறமான கட்டிடத்தில் குழந்தைகளுடன் மனைவிகள் வசிப்பார்கள். அவர்களில் அன்றைய தினம் உடலுறவு மேற்கொள்ளும் பெண் அன்றைய சமையல் வேலையுடன் வீட்டுவேலைகளைப் பார்த்து மற்ற மனைவிகளுக்கு ஓய்வு நாளாக்குவாள் என்கிறார்.
இதைப்போல் பல ரசமான விடயங்கள் உள்ளன.
கவிதை, சிறுகதை, நாடகம், நாவல் என்பதெல்லாம் தமிழில் எமக்கு முன்னோடியாக இருப்பது தமிழ் நாட்டவர்களே ஆனால் தமிழிக்கு புதிதான கதாசிஸ் Catharsis)) இலக்கிய வடிவத்தை தந்துவிட்டு சென்றுள்ளார் எஸ.போ என்பதை உறுதி செய்து கொள்கிறேன்.

நன்றி : NOELNADESAN.COM

No comments: