Tuesday, February 25, 2014

செங்கை ஆழியன் பல கதைகள் - எனக்கு பிடித்தவை

-நாவுக் அரசன்-

யாழ்பானத்தில் இளவயதில் வாசித்த எழுத்தாளரில், கொஞ்சம் ஜனரஞ்சகமா சுவாரசியமா , தினசரி பத்திரிகை ,மல்லிகை போன்ற முற்போக்கு பத்திரிகை , வேறு பல இலக்கிய வெளியிடுகளில் நாவல் ,சிறுகதை எழுதிய ஒருவர் செங்கை ஆழியன் என்ற புனைபெயரில் எழுதிய, குணராசா மாஸ்டர் என்ற பெயரில புவி இயல் படிப்பித்த , உதவி அரசாங்க அதிபரா இருந்து ,பின்னர் யாழ் பல்கலைகழக பதிவாளரா, புவியியலில் டாக்டர் பட்டம் பெற்ற கலாநிதி கந்தையா குணராசா. அவர் எப்படியான இலக்கிய வகை எழுத்தாளர் எண்டு எனக்கு சொல்ல முடியவில்லை ,பலராலும் அதிகம் வாசிக்கப்பட்ட ஒரு எழுத்தாளர் , 30 வருடங்களின் முன் அவர் எழுதி ஏறக்குறைய 30 வருடங்களின் முன் நான் படித்த சில நாவல்கள் பற்றி சொல்லுறேன் .


அவர் எழுதிய ஒரு முக்கியமான நாவல் வாடைகாற்று, நெடுந் தீவில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிபடையில்,அவர் அந்த தீவில் அரசாங்க அதிகாரியா வேலை செய்த பொது எழுதிய கதை. மன்னாரில் இருந்து வாடைகாத்து சீசனுக்கு, வாடி அமைத்து தற்காலிகமா தங்கி , தங்கு தொழில் செய்யவந்த ஒரு மீனவ இளைஞனுக்கும்,உள்ளுரில் இருந்த ஒரு இளம் மீன்கொத்திப் பெண்ணுக்கும் இடையில் வந்த காதலில்,சம்மடியார் ,கரைவலை ,கருவாடு சகிதம்,வில்லன்களும், வில்லங்களும் வர ,அந்தக் கதையைப் பின்னர் இலங்கை இந்திய தயாரிப்பா படம் ஆகினார்கள் "வாடைக்காற்று" என்ற நாவலைச் சினிமா ஆக்குமாறு முன் மொழிந்தவர் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்த பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா என்கிறார்கள்!

Thursday, February 20, 2014

லெனின் எம். சிவம் அவர்களின் A GUN & A RING


-ந.சுசீந்திரன்- 

லெனின் எம். சிவம் அவர்களின் திரைப்படம் A GUN & A RING 17.02.2014 அன்று ஜெர்மனியில் பெர்லினில் திரையிடப்பட்டது. நல்ல திரைப்படங்களின் தரத்தில், இந்திய வணிக, வெகுஜன சினிமாக்களின் பாதிப்பு பெருமளவு இல்லாமல், தமிழ் வெகுஜனங்களுக்கு என்று இல்லாமல் உலகப்பொதுப் பார்வையாளரை நினைத்து எடுக்கப்பட்டிருக்கின்றது இத் திரைப்படம். 2013 இல் சீனாவின் சங்காய் சர்வதேச 16 ஆவது திரைப்பட விழாவிலும் அதே ஆண்டு கனடாவின் மொன்றியல் சர்வதேச 37 ஆவது திரைப்பட விழாவிலும் காட்சிக்காகத் தேர்வுசெய்யப்பட்டதுடன் 2013 ஆண்டின் கோல்டன் கோப்பிலட் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 

மிகக் குறைவான நிதி ஆதாரங்களுடன் அதேவேளை தொழில் நுட்பரீதியில் நிறைவாகத் தயாரிக்கப்பட்டிருப்பதும், அனேகமாக புகலிடத்தில் வாழும் ஈழத் தமிழர்களையே நடிக்க வைத்திருப்பதும், ஆர்ப்பாட்டம் இல்லாத கனேடிய நிலைக்களன்களும், காட்சிகளும் இயக்குனர் லெனின் எம். சிவம் அவர்களுக்கு பாரிய சவாலை எதிர்கொள்ளும் துணிவு இருப்பதையும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வந்து விடுவார் என்று நாம் நம்பிக்கை கொள்ளவும் முடிகின்றது. 

Wednesday, February 19, 2014

ஈழத்தில் எதிர்ப்பு இலக்கியம் எதுவரை ?

-கோபால் நாதன்- 
ஈழத்து தமிழ் இலக்கிய மரபில் எதிர்ப்பு இலக்கியம் மிக முக்கிய இடத்தைப் பெற்று வருகின்றது. ஈழத்து சமூக அரசியல் வரலாற்றின் தோற்றம் முக்கியமான ஒரு மாற்றத்தை எதிர் கொண்டது. பல்லின சமூகங்கள் வாழ்கின்ற ஒரு சூழலிலே மக்களது வாழ்வு நிலையை சமூக அதிகார மேலாதிக்கங்கள் பாதிப்புறச் செய்த போது எழுந்த எதிர்ப்புணர்வுகளை சித்தரிக்கும் முகமாக இத்தகைய இலக்கியங்கள் தோற்றம் பெறுகின்றன.

பொதுவாக இலக்கியம் என்பதே சமூகத்தின் பொதுப் போக்கிலிருந்தும் சமுதாயத்தின் ஒழுக்க சட்டகங்களிலிருந்தும் ஏதாவதொரு வகையில் மாறுபட்டதாகவே அமைந்திருக்கும் பொதுப் போக்குடன் முட்டி மோதுவதாகவே இருக்கும் இந்த மாறுபாடு அல்லது மோதுகை தீவிர நிலைப்பட்டதாகவும் இருக்கலாம் அல்லது சில முரண்பாடுகளை அடையாளப்படுத்துவதாகவும் இருக்கலாம். அது அந்த படைப்பு தோன்றும் புறச் சூழலை அனுசரித்த ஒன்றாகும் .இப்படியான தன்மையிலிருந்து விலகும் எழுத்துக்களை நாம் ஜனரஞ்ச எழுத்துக்கள் என்போமே தவிர இலக்கியம் என்பதில்லை .எனவே இலக்கியம் சமூகத்தின் பொதுப் போக்கிலிருந்து மாறுபடும் அது எதிர்ப்புக் கூறுகளை உட்கொண்டாதாகவே இருக்கும்.அந்த வகையில் நாம் இலக்கியம் என்பதே எதிர்ப்பு நிலைப்பட்ட ஒன்றுதான் என்று சொல்ல முடியும் ஆனால் எதிர்ப்பு இலக்கியம் என்னும் அழுத்தமான வகைப்படுத்தல் இவ்வாறானதொரு பொது நிலை வகைப்படுத்தல் அல்ல அது ஓர் அரசியல் உள்ளடக்க நோக்கிலான வகைப்படுத்தலாகும்.

Sunday, February 09, 2014

பிரேம்ஜியின் வாழ்க்கைச் சுவடுகள்

-ராஜா ஸ்ரீகாந்தன்- 
பிரேம்ஜியின் வாழ்க்கைச் சுவடுகளைப் பதிவு செய்யும் வகையில் அவர் குறித்து, எழுத்தாளரும் முன்னாள் தினகரன் ஆசிரியருமான அமரர் ராஜ ஸ்ரீகாந்தன் எழுதிய ஒரு கட்டுரையும், இன்னும் சில பதிவுகளும் பிரேம்ஜியின் நினைவாக ...
வரலாற்று நிகழ்வுப் போக்குகளும் காலத்தின் தேவைகளும் பொருத்தமான சூழற்புலங்களும் சமாந்தர சிந்தனைப் போக்குள்ளவர்களின் கூட்டு முயற்சிகளும் தனிப்பட்ட முன்னெடுப்புகளுமே சங்கங்களையும் இயக்கங்களையும் உருவாக்குகின்றன. இருந்த போதிலும் கொள்கைப் பற்றுள்ளஇ இலட்சிய வீறுகொண்டஇ மனித நேயமும் ஜனநாயகப் பண்பும் கொண்ட 'ஒரு சில மனிதர்களின்' இடையறாத முயற்சிகளும் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகளுமே இந்த இயக்கங்களை வெற்றியின் நெடுஞ்சாலையில் ஆர்முடுகலுடன் உந்திச் செலுத்துகின்றன. இந்த வகையைச் சேர்ந்த 'ஒரு சில மனிதர்களில்' ஒருவராக பிரேம்ஜி ஞானசுந்தரன் திகழ்கின்றார். இந்த 'ஒரு சில மனிதர்களின்' சொந்த வாழ்க்கையினைப் பயின்றறிதல் கூட பயன்மிக்க பாடமாயிருக்கும்.

யாழ்ப்பாணத்திற்கு வடக்கேஇ சந்நிதி முருகன் ஆலயத்திற்கு முன்னே ஓடாது நிற்கும் தொண்டமான் ஆற்றிற்கு அண்மையில்இ பனைமரங்களும் பயிர்ச்செய்கை நிலங்களும்இ பழத்தோட்டங்களும் நிறைந்த பசுமை கொஞ்சும் அழகிய கிராமம் அச்சுவேலி. அங்கே நடராஜா பவளம்மா தம்பதிகளின் மூன்றாவது மகனாக 1930.11.17 ஆந் திகதி பிறந்தார் பிரேம்ஜி. பெற்றோர் சூட்டிய பெயர் ஸ்ரீP கதிர்காம தேவ ஞானசுந்தரம். மூத்த தமையனார் மாணிக்க நடராஜா. சிறுவர் நலன்புரி ஆணையாளராகப் பணியாற்றியபின் காலமாகிவிட்டார். இரண்டாவது தமையனார் ஞானசம்பந்தர். அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்று தற்போது ஐக்கிய ராஜ்யத்தில் வாழ்ந்து வருகிறார். இவர்கள் மூவரதும் ஒரே சகோதரியான திருமதி கருணாதேவி சிவகுருநாதன் தற்போது கந்தர்மடத்தில் வாழ்ந்து வருகிறார். நெடுங்காலம் வாழ்ந்தஇ கடைசிமகனில் கொள்ளையன்பு வைத்திருந்த அன்னையார் பவளம்மா அண்மையில் காலமாகி விட்டார்.

பிரேம்ஜி தனது ஆரம்பக் கல்வியை அச்சுவேலி கிறீஸ்தவக் கல்லூரியில் தொடங்கி கனிஷ்ட பாடசாலைப் பத்திர வகுப்பு வரை கற்றார். 10-15 வயதிற்கிடைப்பட்ட இக் காலத்தில்; 'வீரகேசரி' செல்லத்துரை அவர்கள் மூலமாக பாரதி கவிதைகள்இ பகவத் கீதைஇ சத்திய சோதனை உட்பட பல பல நூற்றுக்கணக்கான நூல்களைப் பெற்றுப் படித்தார். திரு.வி.க. வினதும் சுவாமிநாத சர்மாவினதும் நூல்கள் இவரது பிஞ்சு உள்ளத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தின.

யாழ். பரமேஸ்வராக் கல்லூரியில் சிரேஷ்ட பாடசாலைப் பத்திர தயார் நிலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது இளம் ஆசிரியர் ஒருவர் பிரேம்ஜியிடமும் இன்னொரு மாணவனிடமும்இ 'நீங்கள் இருவரும் வகுப்பில் மிகவும் திறைமைசாலிகளாக இருக்கிறீர்கள். எனவே அடுத்த ஆண்டில் எடுக்க வேண்டிய இறுதிப் பரீட்சையை நீங்கள் இருவரும் இந்த ஆண்டு இறுதியிலேயே எடுக்க வேண்டும்' என்று மகிழ்வுடன் கூறினார்.

பிரேம்ஜிக்கு இது பிடிக்கவில்லை. நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு 'நான் இங்கு படிக்க வந்தது பரீட்சை எழுதுவதற்காகவல்லஇ அறிவை வளர்ப்பதற்காகவே' என்றார்.

Sunday, February 02, 2014

எனக்குள் அண்ணன் கொக்குவில் கோபாலின் கடக்க முடியா நினைவுகள்

-கரவைதாசன்-
அண்ண! இது கண்ணீர் அஞ்சலி செலித்தி தீர்க்க கூடிய துயரல்ல, உன் பிரிவுத் துயர்.உனது அர்த்தமுள்ள வாழ்வின் பக்கங்களில் சுமார் பதினேழு வருடங்களுக்கு முன்பாக உன்னை  நான் சந்தித்தேன். அதற்கு முன்பாகவே உன்னைப்  பற்றி அறிந்து வைத்திருந்தேன். எல்லோருக்கும் கிட்டும் நாடகம், இலக்கியம், அரசியல் சமூகச்செயற்பாடு, மாயஜாலம் வானொலி இயக்குனர் எனப் பன்முகம் கொண்ட உன்னைச்  சந்தித்து பழகும்  அனுபவம் தான் முதலில் எனக்கும் எட்டியிருந்தது.  அதனிடையே, யாழ்பாணத்தின் சராசரித்தமிழர்களில் ஒருவராகத்தான் உன்னையும் எண்ணியிருந்தேன், பின்னாளில் உனது  செயற்பாடுகளை அவதானித்த போதுதான்  வானத்துக்கும் பூமிக்கும் இடையேயான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உன்னை இணைத்துக் கொண்டு பிரக்ஞை பூர்வமாக இயங்கும் உன் சிந்தனைப் போக்கும், துடிப்பும் "அநீதியை எதிர்த்து நிற்பதில் நீயும் நானும் ஒரே மன உறுதி கொண்டவர்கள் என்றால் நீயும் நானும் தோழர்களே " என்ற சேயின் பிரசன்னம் உன்னிடம் தெறிப்புக்கொள்வதைக் கண்டேன்.

முதலில் என்னை நீ தம்பி என அழைத்தாய், பின் தாசர் என்பாய், கேட்டல் எனக்கு நீதான் அயோத்தி தாசர் என்றாய். என் தந்தையைப் பற்றி எனக்கு நீ சொன்னாய் எனது பெரியப்பா உனக்கு உறவு என்றாய். "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" என்ற வாசகத்தை அப்படியே தலை கீழாக புரட்டிப் போட்டாய். அண்ணன் உடையான் ஆருக்கும் அஞ்சான் என்றுதான் வலம் வந்தேன்.

உன் தோள்களில் இருந்து என் கைகளை நான் உயர்த்தினேன். என் தோள்களில் இருந்து உன் கைகளை நீ உயர்த்தினாய்.

Sunday, January 26, 2014

தட்சிணாமுர்த்தி சுவாமிகள், சாமானியர்களால் புரிந்து கொள்ளப்படாதவர், ராஜாவின் குரு.

-கலைச்செல்வன் -றிக்ஸ்சிஅமிர்தம்-
நந்தா என் நிலா – தட்சிணாமுர்த்தி சுவாமிகள், சாமானியர்களால் புரிந்து கொள்ளப்படாதவர், ராஜாவின் குரு. ஒரு மனிதனின் தோற்றத்துக்கும் அவனின் மேதாவித்தனத்துக்கும் ச...ம்பந்தமில்லையென்பதற்கு இன்னொரு உதாரணம். தமிழ் இசையில் பல புதுமைகளை செய்து அதை இன்னொரு பரிமாணத்துக்கு இட்டுச்சென்றவர் இளையராஜா. அவரின் இசைக்கு கோடிக்கணக்கானவர்கள் ரசிகர்கள். இவர்களில் இசை தெரிந்தவர் தெரியாதோர் என எல்லோருமே அடங்குகிறார்கள். அதுதான் ஒரு நல்ல இசையமைப்பாளனின் வெற்றி. ஆனால் கோடிக்கனக்கானவர்களை தனது இசையால் கட்டிப்போடும் இசைஞானி, இசையைப் பற்றித்தெரிந்து அதற்காகவே தம்மை அர்ப்பணித்த பலரின் தீவிர ரசிகர். அதுமட்டுமல்லாமல் அவர்களின் மேல் மிகுந்த மரியாதை கொண்டுள்ளவர். இசைஞானியைக் கவர்ந்த இசை மேதைகள் உலகில் வாழ்ந்து, காலம் கடந்தும் வாழும் பல இசைப்பொக்கிஷங்களை விட்டுச்சென்ற பாச், பீதோவன், மொசார்ட் போன்றவர்களுடன் இந்திய மேதைகளும் அடங்குகின்றார்கள். தென் இந்திய இசை மேதைகளில் மெல்லிசை மன்னர்கள் , பாலமுரளி கிருஷ்ணா போன்றோருடன் இன்னொருவரிடம் ராஜாவுக்கு அதீத மரியாதையும் ஒருவிதமான பக்தியும் உண்டு என்பதை அவரைப்பற்றிய தேடல்களின் போது நான் அறிகிறேன். அவர் தட்சிணாமுர்த்தி சுவாமிகள் இசைஞானியால் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்படும் ஒருவர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள். கேரளத்தில் பிறந்த இவர் மலையாளத்தில் பலநூறுக்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். சென்ற ஆகஸ்ட் டில் திகதி தனது 94 வயதில் இறந்துபோன இவரை ஒரு இசைமேதை என்று இசையை நன்கு தெரிந்தவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.. லீலா. ஜேசுதாஸ், சுசீலாம்மா போன்றவர்கள் மட்டுமல்லாமல் இசைஞானியும் இவரை தனது குருவென்பதில் பெருமை

Friday, January 17, 2014


தலித் பேந்தர் இயக்கத்தின் 

தலித் பேந்தர்ஸ் இயக்கத்‌தின் நிறுவனர்களில் ஒருவரும், மராட்டிய மண்ணின் புரட்சிகர கவிஞருமான தோழர் நாம்தியோ தாசல் அவர்கள் தன்னுடைய 63ஆம் வயதில் உடல் நலக் குறைவால் நேற்று (15.1.14) மரணமடைந்துள்ளார்.

தன்னுடைய 23ஆம் வயதில் மற்றும் இரு நண்பர்களுடன் இணைந்து அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக தோன்றிய கருஞ் சிறுத்தைகள் அமைப்பின் தாக்கத்தில் 'தலித் பேந்தர்ஸ்' என்னும் அமைப்பை தொடங்கினார். அம்பேத்கரிய இயக்கத்தின் புதிய போராட்ட வடிவமாக 'திருப்பி அடி' என்னும் முழக்கத்தை தன்னுடைய எழுத்துக்களிலும் அமைப்பின் செயல்பாடுகளிலும் அறிமுகப்படுத்தினார். இந்த சமூகத்தால் ஒடுக்கப்படும் பெண்கள் உள்ளிட்ட அனைவருமே தலித்துகள் தான் என்று தலித் பேந்தர்ஸ் அமைப்பின் கொள்கையாக பிரகடனம் செய்தார். அவருக்கு இந்திய அரசு 'பத்மஸ்ரீ' விருதும், சாகித்ய அகாடெமி 'வாழ்நாள் சாதனையாளர்' விருதும் வழங்கி சிறப்பித்தது.

Tuesday, December 31, 2013

தலைமுறைகள் விமர்சனம்

-உமா சக்தி -

நாம் விட்டு விலகிக் கொண்டிருக்கும் வேர்கள் மிக ஆழமானது. தொன்மையானது. ஆனால் வளர்ச்சி, தொழில்நுட்பம், சம கால வாழ்வியல் முறைகள் நம் கண்ணை மட்டுமல்ல கருத்தையும் மறைக்கும் மாயைகள். அது தற்காலிகமாக நமக்கு பெருமை தருவது போலத் தோன்றினாலும் நம்மை இழந்து, வேறு எதைப் பெறுவதற்காக இவ்வாழ்க்கை என்ற கேள்விக்கு உட்படுத்துவது தான் தலைமுறைகள் திரைப்படத்தின் மூலம் பாலுமகேந்திரா கேட்கும் கேள்வி. (ஆனால் சரியாகக் கேட்டிருக்கிறாரா என்பது தான் நம் கேள்வி) பணத்தின் பின் ஓடும் எந்த மனிதரையும் நிறுத்திக் கேளுங்கள் வாழ்க்கை உங்களுக்கு என்னவாக இருக்கிறது என்று அவர்களுக்கு பதில் சொல்லக் கூட நேரமிருக்காது. வாழ்க்கை அவர்களுக்கு பேப்பர்களால் ஆனது. வீட்டுப் பத்திரம், நிலப் பத்திரம், அலுவலகப் பேப்பர்கள், பணத் தாள்கள். அவர்களுக்கு அதுவே உலகம். அதுவே வாழ்க்கை.
சுப்பு பிள்ளையின் மகன் பணத்தைத் தேடி ஓடுபவனாக இருந்தாலும் பாசத்துக்கும் கட்டுப்படுபவன். இத்திரைப்படத்தில் மூன்று தலைமுறைகள் பற்றி கோடிட்டுக் காட்டுகிறார். பழையவை, இடைப்பட்டவை, புதியவை. இவ்வளவு தான். தலைமுறை இடைவெளி என்பது அன்பில் உருகும் நெஞ்சங்களுக்கு இல்லை. புரிதல் இருந்தால் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தாலும் இந்த இடைவெளி சமன்படும் என்று இப்படத்தில் சொல்லாமல் சொல்கிறார்.இத்திரைப்படம் நேர்க்கோட்டில் ஒரே விஷயத்தை நோக்கி நகர்கிறது.

காவேரிக்கரை கிராமத்தில் ஓய்வு பெற்ற தமிழ் வாத்தியார் சுப்பு (பாலுமகேந்திரா). அவருடைய மகன் சிவா சென்னையில் பெரிய டாக்டர் ஆனால் சாதி விட்டு கிருத்துவப் பெண்ணை மணம் முடித்ததால் பெரியவர் மகனை தன் சாவுக்குக் கூட வரக் கூடாது என்று விலக்கி வைத்துள்ளார். பெரியருக்கு இதய நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி இரண்டு மாதங்கள் கழித்துதான் சிவாவுக்குத் தெரிய வருகிறது.

Wednesday, November 13, 2013

டாக்டர் நோர்மன் பெத்யூன்

-ந.இரவீந்திரன்- 

இன்று டாக்டர் நோர்மன் பெத்யூன் பிறந்தநாள்

டொராண்டோ பல்கலைக்கழகம், ஓவன் ஒலி கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனம் போன்றவற்றில் கல்விகற்றார்.ஹென்றி நார்மன் பெத்யூன்  ஒரு கனடிய மருத்துவர் மற்றும்  சிறந்த மருத்துவ கண்டுபிடிப்பாளராக இருந்தார்.1935 ல் பெத்யூன்  சோவியத் ஒன்றியம் பயணித்தார் . இந்த ஆண்டில் அவர் ஒரு ஈடுபாடுள்ள  கம்யூனிஸ்ட் ஆனார் .ஸ்பானிஷ்  காலத்து போரின் போது வெளிப்படையாக  கம்யூனிஸ்ட் ஆக  அறியப்பட்டார்.அறுவை தலைவராகவும்,இரத்ததானம் நிர்வகிக்கும் பொறுப்பும் ஏற்றுநடாத்தினார் . அருகே காயமடைந்த வீரர்கலுக்கு தேவையான இரத்தத்தை  பாட்டில்கள் மூலம் பொதுமக்களிடம்   நன்கொடையாக இரத்த எடுக்க முடியும் எனக்கருதி ஒரு மொபைல் இரத்தம் சேவை அமைத்தார். அது இரத்தத்தை  எடுத்துச் செல்ல உதவியது. இரண்டாம் சீன - ஜப்பனீஸ் போரின் போதும் , ஸ்பானிய உள்நாட்டு போரின் போதும் , (சீன கம்யூனிஸ்ட் எட்டாவது வழி இராணுவம் போர் )யுத்தமுனைக்கு சென்றார்.
ஜனவரி 1938 சீனாவுக்குச் சென்று   மாவோ சே துங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார் .யுத்தத்தில் காயமடைந்த போர்வீரர்களுக்கு அனைத்து சிகிச்சைகளையும் செய்துகொடுத்து,பல அறுவைச் சிகிச்சை உபகரணங்களையும் உருவாக்கினார். ,தன்னைக் கவனிக்காது மக்களுக்காகவே வாழ்ந்து மரணித்தார். அவரைப் பற்றி தோழர் மணியம் அவர்கள் முதலில் சொல்லி இருந்தார்.பின் பெத்யூன்  பற்றி தேடி வாசித்திருந்தேன்.இந்தியாவில் இருந்தபோது அவர் பற்றிய நூலை எழுத்துத் திருத்தும் வாய்ப்புக் கிடைத்தது. கண்கலங்கி ,கண்கலங்கி திருத்தினேன்.(டாக்டர் நோர்மன் பெத்யூன் கதை- சவுத் விசன் வெளியீடு 415 பக்கங்கள் : படிக்க விரும்புவோர் என்னிடமிருந்து பெற்றுத் திரும்பத் தரவும் )

Wednesday, October 23, 2013

30வது பெண்கள் சந்திப்பு - ஒரு பார்வை

-உமா- (ஜேர்மனி)
1990ம் ஆண்டு ஜேர்மனியின் கேர்ண நகரில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பின் 30வது தொடர் ஒக்டோபர் மாதம்12ம் திகதி பாரிஸில் நடைபெற்றது.
viji 12.10
இச்சந்திப்பின் ஆரம்பவுரையை நிகழ்த்திய விஜி,  1990 களில் ஜேர்ம னி கேர்ண நகரில் தொடங்கிய இப்பெண்கள் சந்திப்பு, 30 வது  சந்திப்பு வரை பல ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடக்கூடியது.  இதற்கு முதல் மூன்று சந்திப்புகள் பிரான்சில் நடைபெற்றுள்ளதாகவும், எல்லாச் சந்திப்புகளுமே காத்திரமான சந்திப்புகளாக அமைந்தனவென்றும், 2000ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பெண்கள் சந்திப்பில் தலித் சிந்தனையாளரும் பெண்ணியவாதியுமான சிவகாமி கலந்து கொண்டு ஆழமான கருத்துகளை வழங்கியதோடு பங்குபற்றியஅனைத்துப் பெண்களையும் மனந்திறந்து பேசவைத்தார் என்பதையும் பதிவுசெய்தார்.
 சந்திப்பின் முதல்நிகழ்வாக,

Thursday, October 17, 2013

இருவர்

-அ.யேசுராசா- 

ஏ.ஜே. கனகரத்தினா

 ஏ.ஜே. கனகரத்தினா, ஓவியர் மாற்குபோன்றோருடன் நெருங்கிப் பழகியிருக்கிறீர்கள் ; அவர்களைப் பற்றிச் சுருக்கமாகக்  கூறுங்கள்!

*  1976 ஆம் ஆண்டிலிருந்து இருவருடனும் பழகத்தொடங்கினேன். மாற்கு மாஸ்ரர் எனது வீட்டுக்கு அண்மையிலும், ஏ.ஜே. எங்கள் ஊருக்கு மிக அண்மையிலும் வசித்தனர்.
ஏ.ஜேயைப் பற்றி ஏற்கெனவே,  மனிதனாயிருந்த மனிதன் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். எனது வாழ்வில் நான் சந்தித்த மிக முக்கிய மனிதருள் ஒருவர் அவர்! பரந்த வாசிப்பும், எளிமையும், அனைவருக்கும் உதவும் பண்பும், எதற்காகவும் தனது நிலையில் நின்று வழுவிச் சோரம்போகாத ஆளுமையும் கொண்டிருந்தவர். அவருடன் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் அக்காலங்களில் பழகியிருக்கிறேன் ; அவரிடமிருந்து நிறையக் கற்றிருக்கிறேன். அன்னா அக்மதோவா, ஃவெடரிக்கோ கார்ஸியா லோர்கா ஆகியோரின் கவிதைகள் கொண்ட சிறிய ஆங்கில நூல்களைத் தந்து, “இனிமேல்ஆங்கிலத்திலும் வாசிக்கவேண்டும், மொழிபெயர்க்கவும் முயலுங்கள்” என்று தூண்டியவரும் அவரே.  ஆரம்பத்தில் மல்லிகைக்கும் டொமினிக் ஜீவாவுக்கும் நிறைய உதவியிருக்கிறார். எண்பதாம் ஆண்டுக்காலம் வரை மல்லிகை சிறப்பாக வந்ததென்றால், அதில் அவரின் பங்கு முக்கியமானது; அலை, சமர்முதலிய இதழ்களுக்கும் பின்னர் உதவினார். எழுபதுகளில் நடைபெற்ற, இலக்கியத்தில் கலை அம்சத்தின் முக்கியம் பற்றிய கருத்தாடல்களில், பிரச்சாரப் படைப்புகளுக்கு எதிரானதாக அவரது  நிலைப்பாடு இருந்தது.மார்க்சியமும் இலக்கியமும்  சில நோக்குகள் என்ற நூலும், அவர் எழுதிய – மொழிபெயர்த்த ஏராளமான கட்டுரைகளும், அவரது கருத்துநிலைச் சார்பை வெளிப்படுத்துகின்றன. பேராசிரியர் கைலாசபதிதனது இலக்கியமும் சமூகவியலும் என்ற நூலைத்  தந்து அபிப்பிராயத்தைத் தெரிவிக்கும்படி கேட்டதாகவும், ‘இலக்கியம் பற்றிக் கூறப்பட்டுள்ளது; சமூகவியல் பற்றியும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இரண்டுக்குமுள்ள தொடர்பு கூறப்படவில்லை’ என்ற சுருக்கமான குறிப்பை மட்டும் துண்டொன்றில் எழுதித் தான்  கொடுத்ததாகவும்,  ஒருதடவை என்னிடம்

Tuesday, October 15, 2013

தமிழக மீனவ உறவுகள் அறங்காக்க வேண்டும்

-தமயந்தி-

"இழுவைப்படகு, இரட்டைமடி மீன்பிடி போன்றவற்றை நிறுத்தும்படி இலங்கை மீனவர்கள் சொல்கிறார்கள்.
அது இந்தியாவில் நிறுத்தப்படவில்லை, நாட்டுக்கு நாடு கடல்ச் சட்டங்கள் வேறு வேறானவை.
இலங்கையைப் பொறுத்தவரை, இலங்கையில் கடலட்டைத் தடைச் சட்டம் இல்லை. ஆனால் இழுவைப்படகு, இரட்டைமடி தடைச் சட்டம்தான் இருக்கிறது.
கடலட்டைத் தடைச் சட்டம் இந்தியாவில் கொண்டுவரக் காரணம் கடலில் காணக்கூடிய அபூர்வமான உயிரினம்"

இந்திய, தமிழகக் கடலட்டைத் தடைச் சட்டத்தை கழிப்பறையில் கிழித்துப்போட! 
இந்திய, தமிழக கடல்வள ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக் குதத்துக்குள் கொள்ளியைச் சொருக!! 


இது எப்படி இருக்கிறதென்றால் குடியிருக்கும் வீட்டைப் பெற்ரோல் ஊற்றிக் கொழுத்துவார்களாம் ஆனால் வீட்டு வளையில் இருக்கும் குருவிக்கூட்டுக்குப் பாதுகாப்புச் சட்டம் போடுவார்களாம். கடலட்டை என்ற உயிரினம் எப்படி இனப்பெருக்கம் செய்கிறது, அபிவிருத்தியாகிறது என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர்களின் கடல்வள ஆராய்ச்சி அறிவை என்னவென்பது....? 


1968 இறுதியிலும் 70களின் தொடக்கத்திலும் யாழ் தீவகத்தில் கடலட்டைத் தொழில் அறிமுகமாகி ஏற்றுமதி செய்யத் தொடங்கியபோது அங்கொன்று இங்கொன்றாய் அருந்தலாகக் காணப்பட்ட கடலட்டைகள் அதற்குப் பிற்பாடுதான் அதிகளவில் பல்கிப் பெருகி பாரிய அபிவிருத்தி அடைந்தது. தொழிலாளர்கள் கடலட்டையை எவ்வளவுக்கெவ்வளவு பிடித்தார்களோ அவ்வளவுக்கவ்வளவு பல நூறு மடங்காகப் பெருகியது.

Saturday, October 12, 2013

பாலியல் தொழிலில் கேந்திர நிலையமாக மாறிவரும் வடமாகாணம்

வட மாகாணத்தில் பாலியல் தொழில் மிகுந்த முனைப்புடன் வளர்ச்சியடைந்துள்ளதாக ஐ.ஆர்.ஐ.என். தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னைய யுத்த வலயத்தின் பெரும்பான்மையான பெண்கள் குடும்பத் தலைமைப் பொறுப்பை வகித்து வருகின்றனர்.

யுத்ததினால் கணவனை இழந்த, காணாமல் போன அல்லது கைது செய்யப்பட்ட பல பெண்கள் குடும்பச் சுமையை சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

போதியளவு வாழ்வாதார வழிகள் இல்லாமை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

வடக்கில் சுமார் 7000 பெண்கள் இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

யுத்தத்தில் கணவனை இழந்த அல்லது காணாமல் போன பல குடும்பத் தலைவிகள் விருப்பிமின்றியேனும் பாலியல் தொழிலை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

2012ம் ஆண்டு அரசாங்க மதிப்பீடுகளின் அடிப்படையில் வடக்கில் 59000 குடும்பங்களுக்கு பெண்கள் தலைமை தாங்குகின்றனர்.

தங்களது கணவர், சகோதரர், தந்தைமார் சுமந்த பொருளாதாரச் சுமையையே இவர்கள் இவ்வாறு சுமக்கின்றனர்.

வறுமை மற்றும் வாழ்வாதார வழிகளில் காணப்படும் வரையறுக்கப்பட்ட தன்மை பெண்களை வர்த்தக ரீதியான பாலியல் தொழில் நோக்கி உந்துகின்றது.

Wednesday, October 09, 2013

திரையில் வரையப்பட்ட தமிழ் நிலம்

-பிரேம்-
திரைப்படத்தை முன்வைத்து நம் காலத்திய அரசியல் உளவியல்புகள் பற்றிச் சில கருத்துரைகள்

திரையில் வரையப்பட்ட தமிழ்நிலம் என்ற இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள்  ‘விலகும் திரைகள்’ என்ற தலைப்பில் தீராநதி மாத இதழில் தொடராக வெளிவந்தவை. ஒரு பொருள் பற்றியோ அல்லது பல்வேறு பொருள் சார்ந்தோ சில எழுத்தாளர்கள் எழுதுவதை ஒரு பொதுத்தலைப்பின் கீழ் ஒவ்வொரு இதழிலும் வெளியிடுவது அந்த இதழில் உள்ள நடைமுறை. முன்பு 2007-இல் தீராநதியில்  ‘இருண்மைகள்  இடைவெளிகள்  மௌனங்கள்’ என்ற  தலைப்பில் தொடராகச் சில கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். கவிஞர் கடற்கரை கேட்டுக் கொண்டதன் பேரில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரைகள் பின்நவீனத்துவ அரசியல் சார்ந்த உரையாடல்களாக அமைந்தன. தமிழில் அதுவரை முழுமையாக விவாதிக்கப்படாத பல்வேறு கோட்பாட்டுச் சிக்கல்கள் பற்றிய தொடக்க கட்ட உரையாடலாக அமைந்த அக்கட்டுரைகளைத் திட்டமிட்டபடி தொடர இயலாத சூழல் ஏற்பட்டது.
மீண்டும்  2011, செப்டம்பர் மாத தீராநதி இதழுக்கு  எழுதிய ஒரு கட்டுரை இத்தொடருக்கான தொடக்கமாக அமைந்தது. திரைப்படத்தை முன் வைத்து நம் காலத்திய  சமூக-அரசியல் உளவியல் பற்றிய கட்டுரைகளைக் கொண்டதாக இத்தொடர் அமையும் என நான் தெரிவித்திருந்தேன். திரைப்படங்களை முன்வைத்து நம் காலத்திற்கான சில கோட்பாட்டுச் சிக்கல்களைப் பேச இந்தப் பக்கங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற திட்டம் இருந்தது.
தமிழில் திரைப்படங்கள் பற்றிய கோட்பாடுகள் சார்ந்த ஆய்வுகள், வாசிப்புகள் இல்லை.  திரைப்பட வரலாறு, திரைப்படத் தொழில்நுட்பம் பற்றிய அறிமுக நூல்கள் சில மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

Thursday, September 19, 2013

சிவகாமியின் அரிதிலும் அரிதான புலிவாதம்

-வேப்பூர் திருடன்-
டெல்லி மருத்துவ மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகளையும், அதனையொட்டிய கொலையையும் முன்வைத்து 13.09.2013 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்த்திய நேர்படப்பேசு நிகழ்ச்சியில் சமூக சமத்துவப்படையின் (SSP) தலைவர் சிவகாமி அய்.ஏ.எஸ்பங்கேற்று அவ‌ர் தெரிவித்த  பெண்கள் மீதான பாலியல் பிரச்சனைகளையும், அதனூடாக‌ ஈழப்புலிகள் குறித்துப் பேசிய கருத்துக்களுக்கும் எதிர்வினையாக நாகரிகமற்ற, கீழ்த்தரமான, அறிவார்த்தமில்லாத‌ விமர்சனங்களை வலைத்தளங்களில் கண்ட பின்னரே தலித் மனித உரிமைப் பார்வையில் சில குறிப்புகளை முன் வைக்கிறேன்.
—————————————-
நிர்பயா வழக்கில் நால்வருக்கு விதிக்கப்பட்ட அரிதிலும் அரிதான தூக்குத் தண்டணை குறித்து ஒடுக்கப்பட்ட மக்கள் பார்வையில் சிவகாமி மிகவும் கூர்மையான விவாதங்களை நேர்படப்பேசு நிகழ்ச்சியில் எழுப்பினார். நடுத்தர வர்க்க மேட்டுக்குடி கலாச்சார மனோபவம் கொண்ட பெண்ணிய வாதிகளுக்கும், தலித் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களுக்கும் அவரின் அடித்தளப் பார்வையிலான விமர்சனம் சற்று எரிச்சலானது. அதிலும் அவர் சொல்ல வந்த‌ கருத்து எதையும் முகம் சுளிக்காமல், மற்றவரை நேருக்கு நேர் விமர்சிக்கின்ற ஆளுமை கொண்டவராக இருந்ததினால் விவாதத்தினூடாக விடுதலைப்புலிகள் பற்றியும் பேசினார்.
அவர் பேசிய கருத்து என்னவென்றால் “விடுதலப்ப்புலிகள் ஈழத்தமிழருக்காகப் போராட்டம் நடத்தும்போது ஈழப்புலிகள் இராணுவத்தில் சில பெண்கள் இருந்தார்கள். ஈழப்புலி இராணுவத்தின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட்டார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு வந்த போது என்ன பதில் சொன்னார்கள் என்றால், உயிரையே பணயம் வச்சி ஒருத்தன் நாட்டுக்காக உழைக்கும்போது இது அதோட ஒப்பிடுகையில் ஒரு சாதாரண விஷயந்தான் என்பதை செய்திகளில் நான் படிச்சேன்” என்று கருத்து தெரிவித்தார். அவரின் கருத்தை இடை மறித்த  நிகழ்ச்சித் தொகுப்பாளர் குணசேகரனும், வழக்கறிஞர் அருள்மொழியும் நீங்கள் இதுவரை கேள்விப்படாத ஆதாரமற்ற செய்திகளை அவதூறாக புலிகள் மீது சொல்லுகிறீர்கள் என்று பேசினார்கள். இதனையடுத்த தொடர் விவாதங்களில் “பாரீசில் வாழும் தமிழர் ஒருவர் என்னிடம் இதனைப் பகிர்ந்து கொண்டார். என்னிடம் இதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன” என சிவகாமி விளக்கமளித்தார். இறுதியில் வழக்கறிஞர் அருள்மொழியும், திலகவதியும் இதனை மீண்டும் மறுத்தார்கள் (பார்க்க இணைப்பு – http://www.dailymotion.com/video/x14o4u3_nerpada-new_lifestyle).
———————————————–

nerpada_(new) by tamildoom

சிவகாமி எந்த கருத்தை வலியுறுத்தி விவாதிக்க விரும்பினாரோ, அந்த நோக்கம் சற்று திசைமாறி சிவகாமி மீதான புலிகள் விமர்சனத்துக்கு அது அகல வழி ஏற்படுத்தியது.

Friday, September 13, 2013

(For Sunila Sundari Janet Abeysekera)


Twenty-six years have passed.

Our first meeting,
North of Colombo,
a house on the beach.


flowers and creepers;
Beyond the fence,
fearful and shy
lovers trembling in passionate embrace.
Waves breaking incessantly.

For both of us
the agony and haste
of flight to safety.

The spark of righteous anger
a straight line on the sea,
unswerving we stayed the course,
reaching the Hague
where dawn and dusk
merged as one.

“Goluhathavaththin thunveniyamatta”  -
your  music my lullaby.

When  Subha was born,
I heard her cry
I saw your tears.

Scattered like floating lotus
defying land and time,
our wings gained strength.

Your life the essence of kindness.

Divided by land and sea and space,
our dreams
a constant bridge.

“Son, where are you?
I don’t hear your voice,
send me your picture.”
The messages you sent.
The telephone bursting with
love.

A short life,
what did we learn?

We are puddles
created by chance;
not crystals of love;
poetry, music and freedom
remain always entwined;
we can tread on fire, or
defy the wind;
we cannot lose our lives.

This year in the Hague
when we met,
my farewell was final.
From you
a smile and a tear.


R. Cheran | September 11, 2013

Translated from Tamil by Chelva Kanaganayakam

Tuesday, September 10, 2013

Sov godt søster Sunila

Prisbelønnet menneskerettighedsforkæmper og berømte aktivist Sunila Abeysekera gik bort i Colombo for et øjeblik siden.

Sov godt kammerat!

Vi har mistet en meget god ven, søster og kammerat hvis aktiviteter altid lange betegnes og uden for vores hori
sont. Hele hendes liv var dedikeret til ét mål, rettigheder for mennesker.


Vi vil savne hende. Du vil forblive i vores tanker og hjerter for evigt.


Saturday, September 07, 2013

ஒரு வரலாற்று எழுதியை வக்கிரமாக கொன்றுள்ளனர்.

-கரவைதாசன்-

இந்தியதேசத்து கல்கத்தா நகரினைச் சேர்ந்த நடுத்தர வர்க்க குடும்பத்தில் 1964ல் பிறந்த வரலாற்று எழுதி சுஸ்மிதா பானர்ஜி அவர்கள், முஸ்லீம் அடிப்படைவாதிகளால் ஆப்கனிஸ்தான் நாட்டின் பக்கிற்றா மாகாணத்திலுள்ள அவரது வீட்டின் முன்னால் மிகவும் வக்கிரமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சமூகத்தில் முன்னனியில் உள்ள பெண்களுக்கு ஆப்கானிஸ்தான் ஆபத்தான இடம் அதிலும் முஸ்லீம் அடிப்படைவாத தலிபான்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருக்கும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலை மிகவும் மோசமானது. கடந்த வருடம் உயர்பதவியில் இருந்த இரண்டு ஆப்கான் பெண்கள் லக்மான் (Laghman)  மாகாணத்தில் கொல்லப்பட்டனர். பெண்கள் சம்பந்தமான வாரியத்தின் தலைவியாக இருந்த நஜியா சித்திக்கி அவர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். அந்த வரிசையில் சுய ஆற்றலும் இன்பமான காதல் வாழ்வும் கொண்ட  இந்திய எழுத்தாளர் சுஸ்மிதா பானர்ஜி கொல்லப்பட்டுள்ளார். பெண்களின் உரிமை பற்றி பேசும் எல்லோருமே அதிலும் கிழக்கு ஆப்கனிஸ்தானில் பயமுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்                  

மூன்றாம் உலக நாடுகளுக்குள் அவர்களது சிறு சிறு வித்தியாசங்களை கண்டறிந்து அவற்றை  ஊதிப்பெரிதாக்கி, எப்போதும் தமது நலன்களுக்காகவே அத்துமீறி பிரவேசித்து நாட்டாள்மை செய்யும் நேட்டோ நாட்டுப்படைகள்  ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகளையும், பெண்களின் நிலையையும் உயர்த்தி, பெண்களுக்கு பாதுகாப்பைக் கொடுத்தமை நேட்டோ(Nato) நாடுகளின் தலையீட்டால் நடைபெற்ற சாதனை, ஓரளவேனும்  பாராட்டப்பட்ட விடயமாகும். நேட்டோ நாடுகள் 2014 இல் தமது படைகளைக் மீளப் பெற்றுக் கொள்ளவுள்ள நிலையில், பெண்ணுரிமை என்பதே  ஆப்கானிஸ்தானில் மீண்டும் கேள்விக்குறியாகவுள்ளது. 

Friday, September 06, 2013

மரணத்தில் நேசித்தவர்களே சீவியத்திலும் மறவாதிருங்கள்

-லீனா மணிமேகலை-
 

யாழ்ப்பாணத்தில் ஜூலை 20, 21 தேதிகளில் நடைபெற்ற41 வது இலக்கிய சந்திப்பை பற்றிய குறிப்புகளை எழுதும் இந்த தருணத்தில், ”நாங்கள் எல்லா தரப்புகளாலும் விசாரிக்கப்பட்டவர்கள்” என்ற ஐயா சோ.பதம்நாதனின் சொற்கள் தான் நினைவில் மோதுகின்றன. 

சிங்களப் பேரினவாதமும், ராணுவவாதத்தை மட்டுமே நம்பிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களும் குற்றவாளிகளெனவும், துரோகிகளெனவும் வேட்டையாடியது போக இன்னும் மிச்சமிருக்கும் கலைஞர்கள் உண்மைகளை இரத்தப்பலியென எழுத்தில் கழுவிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு சாட்சியாக நிற்கும் புலம் பெயர்ந்த படைப்பாளர்களின் இயக்கமான “இலக்கிய சந்திப்பு” மூன்று தசாப்தங்களைக் கடந்து புலத்தின் கரை சேர, வரலாறு சற்று நெகிழ்ந்து நிற்கிறது. 

தேசியம் குறித்த இலக்கிய சந்திப்பின் அரங்கில் பேசிய யதீந்திரா, அல்ஜீரிய சிந்தனையாளர் பிரான்ஸ் ஃபனானின் “தேசியம் என்பது ஒரு வெற்றுக்கூடு” என்ற கூற்றை முன்வைத்து, எப்படி தேசியம் அடிப்படைவாதிகளின் வசமிருந்தால், அவர்களுக்கு சேவை செய்யும், அது இடதுசாரிகள் வசமிருந்தால்,இடதுசாரி முகம் காட்டும், அதுவே பயங்கரவாதிகள் வசமிருந்தால் பயங்கர முகம் காட்டும் என தேசியத்தின் பண்பை நாடி பிடித்துக் காட்டினார். இன்று ஈழத்தில் தமிழ்த்தேசியம், ஐக்கிய இலங்கையில் அதிகாரப் பகிர்வு என்ற ஆரம்பகால மிதவாத தேசிய அரசியலுக்கே திரும்பியிருப்பதின் நெருக்குவாரங்களினூடே கலை இலக்கிய செயற்பாட்டாளர்கள் தங்கள் பற்றுக்கோள்களைக் குறித்த விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள்.

Sunday, September 01, 2013

நிர்மல் ரஞ்சித் தேவசிறி - சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு எதிரான தொடர் குரல்

என் .சரவணன்

தோழர் நிர்மல் ரஞ்சித்தை 11 வருடங்களுக்குப் பின் நான் மீண்டும் நேரில் சந்தித்தது, கொழும்பில் ஊடக ஒழுக்கக்கோவை பற்றி கடந்த ஜூலை 17 அன்று நடந்த மாநாட்டில். அப்போது தான் இலக்கிய சந்திப்புக்கு யாழ்ப்பாணம் செல்வதாக என்னிடம் தெரிவித்தார். ஒரு காலத்தில் ஜே.வி.பி செயற்பாட்டளராக இருந்து பின்னர் 90களில் X-group எனும் பெயரில் இயங்கி வந்த அணியில் செயற்பட்டு வந்தார்... சிங்கள சூழலில், அமைப்பியல்வாதம், நவ-மாக்சியம், பின்நவீனத்துவம் போன்றவற்றை அறிமுகம் செய்து அதன்வாயிலாக பலத்த விவாதங்களையும், புதிய அரசியல் பார்வைகளையும், மொழிப்பிரயோகங்களையும், எழுத்து நடைகளையும் கொணர்ந்ததில் இந்த X-Group க்கு முக்கிய பங்குண்டு. பின்னர் அந்த குழு உடைந்து வெவ்வேறு அணிகளானார்கள். சரிநிகர் காலத்தில் எங்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

அவரது கட்டுரைகளையும், பெட்டிகையும் பிரசுரித்திக்கிறோம். அப்போது கூட சமாதான பேச்சுவார்த்தை, அதிகாரப்பகிர்வு என்பவற்றிற்கு எதிராக நலின் டி சில்வா பேசும் கருத்துக்களுடன் தர்கிக்க மேடைகளில் அழைக்கப்படும் பேச்சாளராக இருந்தவர் நிர்மல். பேரினவாதத்தை புலமைத்துவ அறிவோடு நிறுவ முயல்பவர்களுக்கு புலமைத்துவ அறிவோடு தென்னிலங்கை சிங்கள பேரினவாத சக்திகளுக்கு தக்க பதிலளிப்பதில் வல்லவரும் நிர்மல் தான் என்பது என் கருத்து. குறிப்பாக சொல்வதென்றால் "சமூக விஞ்ஞானிகள் சங்கம்" (SSA - Social scientist association) த்தில் குமாரி ஜெயவர்தன, ஜயதேவ உயன்கொட போன்றோருடன் பல வருடங்களாக இயங்கி வருபவர். அவர்கள் வெளியிடும் "ப்ரவாத" சஞ்சிகையில் இலங்கையின் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் உருவாக்கம், அதன் அமைப்பு, செயல் என்பன குறித்து நிர்மாலின் பல கட்டுரைகளை காணலாம்.