Tuesday, October 15, 2013

தமிழக மீனவ உறவுகள் அறங்காக்க வேண்டும்

-தமயந்தி-

"இழுவைப்படகு, இரட்டைமடி மீன்பிடி போன்றவற்றை நிறுத்தும்படி இலங்கை மீனவர்கள் சொல்கிறார்கள்.
அது இந்தியாவில் நிறுத்தப்படவில்லை, நாட்டுக்கு நாடு கடல்ச் சட்டங்கள் வேறு வேறானவை.
இலங்கையைப் பொறுத்தவரை, இலங்கையில் கடலட்டைத் தடைச் சட்டம் இல்லை. ஆனால் இழுவைப்படகு, இரட்டைமடி தடைச் சட்டம்தான் இருக்கிறது.
கடலட்டைத் தடைச் சட்டம் இந்தியாவில் கொண்டுவரக் காரணம் கடலில் காணக்கூடிய அபூர்வமான உயிரினம்"

இந்திய, தமிழகக் கடலட்டைத் தடைச் சட்டத்தை கழிப்பறையில் கிழித்துப்போட! 
இந்திய, தமிழக கடல்வள ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக் குதத்துக்குள் கொள்ளியைச் சொருக!! 


இது எப்படி இருக்கிறதென்றால் குடியிருக்கும் வீட்டைப் பெற்ரோல் ஊற்றிக் கொழுத்துவார்களாம் ஆனால் வீட்டு வளையில் இருக்கும் குருவிக்கூட்டுக்குப் பாதுகாப்புச் சட்டம் போடுவார்களாம். கடலட்டை என்ற உயிரினம் எப்படி இனப்பெருக்கம் செய்கிறது, அபிவிருத்தியாகிறது என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர்களின் கடல்வள ஆராய்ச்சி அறிவை என்னவென்பது....? 


1968 இறுதியிலும் 70களின் தொடக்கத்திலும் யாழ் தீவகத்தில் கடலட்டைத் தொழில் அறிமுகமாகி ஏற்றுமதி செய்யத் தொடங்கியபோது அங்கொன்று இங்கொன்றாய் அருந்தலாகக் காணப்பட்ட கடலட்டைகள் அதற்குப் பிற்பாடுதான் அதிகளவில் பல்கிப் பெருகி பாரிய அபிவிருத்தி அடைந்தது. தொழிலாளர்கள் கடலட்டையை எவ்வளவுக்கெவ்வளவு பிடித்தார்களோ அவ்வளவுக்கவ்வளவு பல நூறு மடங்காகப் பெருகியது.
காரணம் என்னவெனின் ஏற்றுமதிக்காக இலங்கையில் பிடிக்கப்படும் கடலட்டை echinodermata இனத்தைச் சேர்ந்தாலும் அதன் இனப்பெருக்க முறைமை வேறானது.. ஒரு கடலட்டை வளர்ந்து முற்றி மரணிக்கும் காலத்தில் வயிற்றுப்பாகம் பிரிந்து அதனுள் குடலோடு இருக்கும் உயிரணுக் காவியான சினைநண்டு வெளியேறி இனப்பெருக்கத்துக்கான ஆயிரக்கணக்கான முட்டைகளை, அறுகு, கோரை, தாழை தாவரங்களிலும், சாட்டாமாறு, பூமுருகை, பவளப்பாறை போன்றவற்றிலும் படர விடும். இலங்கையில் கடலட்டை பிடிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து கடலட்டையின் இனப்பெருக்கமும், அபிவிருத்தியும் பலமடங்காகக் காரணம் தொழிலாளிகள் அட்டையைப் பிடித்துக் கொண்டு வரும்போதோ, அல்லது தோணியில் அவற்றை போடும்போதோ கடலட்டைகள் தன்னியல்பாகவே தமது குடலை முழுவதுமாக வெளியேற்றிவிடும். அதனோடு சேர்ந்து உயிரணுக்காவியான சினை நண்டும் வெளியேறிவிடும். தொழிலாளிகள் உடனுக்குடன் அவற்றை மீண்டும் கடலில் எறிந்து விடுவார்கள். (அட்டை இனப் பெருக்கத்தின் அக்கறையின் மீது அவர்கள் எறிவதல்ல, கழிவு என்றும், தோணிகள் பாரமாகி விடும் என்றும்தான். பின்னைய காலங்களில்  உண்மையை அறிந்து அட்டைக் குடல், உயிரணூக்காவி சினைநண்டு போன்றவற்றைக் கரைக்குக் கொண்டுவராமல் அந்தந்த உடனேயே கடலில் போட்டு விடுவார்கள்) தவிரவும் அட்டைகுளிகாரர் வளர்ந்த அட்டைகளை மட்டுமே குளித்தார்கள். அட்டையின் அளவுகள் 7வகையாகப் பிரிக்கப்பட்டு, அந்த அளவுகள் மட்டுமே பிடிக்கப் பட்டன. அட்டைக் குஞ்சுகளை மிகப் பக்குவமாகத் தவிர்த்து வருவார்கள். கோழிக்குஞ்சுகளைப் பருந்திடமிருந்து காப்பதுபோல் அட்டைக் குஞ்சுகள் கூடுகளில் அகப்பட்டால்கூட மிகக் கவனமாக அதனை மீண்டும் கடலில் விட்டு விடுவார்கள். சுழியோடத் தெரியாத சில தொழிலாளிகள் களக்கடலிலிருந்து குஞ்சுஅட்டைகளைப் பிடித்தபோது பெரும் கலவரமே உருவான கதைகளும், தடுத்த சம்பவங்களும் உண்டு. சுழியோடத் தெரியாத ஒருசில தொழிலாளிகள் மண்டாவைப் பயன்படுத்தித் தோணியில் நின்றவாறே அட்டையைக் குத்திப் பிடிக்கும் முறைகளும் அறிமுகமாகிப் பரவலானது. 


இப்படி நீண்டகாலம் உயிர்வாழ்ந்து மடியும்போதே இனவிருத்தியைச் செய்துவந்த கடலட்டை தொழிலாளிகளின் இந்த தொழில்முறையால் பலநூறு மடங்காகப் பெருகத் தொடங்கியது. 69, 70களில் ஒரு100, 150 அட்டைகளோடு கரை வந்த தோணிகள் 75களில் ஆயிரம், ஆயிரத்து500 என பத்துமடங்கு அதிகமாகத் தோணி நிரப்பிக் கரை வந்தன. அந்தளவுக்கு கடலட்டைகளின் இனப்பெருக்கம் அதிகரித்து வந்தன. யாழ் தீவகப் பரவைக் கடலிலிருந்து பள்ளிக்குடா, வலைப்பாடு, எருக்கலம்பிட்டி, குமுழமுனை, இரணைதீவு, நாச்சிக்குடா, மன்னார், அரிப்புத்துறை, சிலாபத்துறை, குதிரைமலை, பளுக்காத்துறை, புத்தளம் என அட்டைத்தொழில் பரவியதால் மேற்கூறிய அத்தனை கடல்களிலும் கடலட்டை வியாபித்துப் பெருக்கமடைந்தது. 78, 80ம் ஆண்டுகளில் எதை எடுப்பது எதை விடுவது என்று தெரியாமல் கடற்பரப்பெங்கும் விளைந்து சிந்திக் கிடந்தது கடலட்டை. உண்மையில் கடலட்டையின் அழிவு ஆரம்பமானது ட்ரோலர்களின் வருகையின் பின்புதான். ட்ரோலர்கள் அட்டைகளை மட்டும் அழிக்கவில்லை, அதனோடு சேர்த்து உயிரணுக்காவி ஆகப்பட்ட சினை நண்டுகளையும் பூண்டோடு கொன்றது. கடலட்டையின் சினைகளும் முட்டைகளும் தங்கிப் பொரிக்கக்கூடிய கடற்தாவரங்களையும், சாட்டாமாறுகளையும், சிறுமுருகைக் கற்களையும், பவளப் பாறைகளையும் மண்ணோடு மண்ணாக்கின.

 இந்தியாவும் தமிழகமும் கடலட்டையைக் காமேந்து பண்ணத் தடுக்க வேண்டியதை விட்டுவிட்டு, செய்யக்கூடாத காரியத்தைச் செய்கிறார்கள். இது ஒருவகையில் சந்தேகங்களையும் எழுப்புகிறது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப் படாத, அல்லது அருந்தலாகக் இருக்கக்கூடிய கடலட்டைத் தொழிலால் இலங்கைக்கு வருடாவருடம் பலகோடி சிங்கப்பூர் வெள்ளிகளை ஈட்டிக் கொடுப்பதைச் சகிக்க முடியாமல் இருக்கலாம். தவிரவும் ட்ரோலர், இரட்டைமடித் தொழில்கள் மீனைப் பிரதானமாகக் கொண்டதல்ல. இறால்தான் அதன் முக்கிய வருமானமாகும். வெளி நாடுகளுக்கு இறால் ஏற்றுமதி செய்வதால் கிடைக்க கூடிய வருமானமே இந்திய தமிழக அரசுக்கு உகந்ததாகும். இலங்கைக் கடல்வளம் பாதிக்கப்படுவது பற்றிய கரிசனை அவர்களுக்குத் தேவையற்றது. ட்ரோலர் அறிமுகமாவதற்கு முன்னால் இரு கரை மீனவர்களும் வழிவலைத் தொழிலையே (GillNet) செய்து வந்தார்கள். இதனால் யாருக்கும் எந்தப் பாதகமுமில்லை. கடற்தாயின் ஒரே வயிற்றுப் பிள்ளைகளாக, தாங்கள் தாங்கள் எடுத்துவரும் கட்டுச்சோற்றை தங்கி நிற்கும் தீவுகளான கச்சைதீவு, கக்கடதீவு, நெடுந்தீவு, இரணைதீவு போன்ற இடங்களில் பகிர்ந்துண்டார்கள். அவ்வாறே கடல்படு திரவியங்களையும் பகிர்ந்து பிடித்துக் கொண்டார்கள். நாசமறுத்த ட்ரோலர் அறிமுகமானதும் அந்நிய நாடுகளின் கரன்ஸி வருமானத்துக்காகத் தமிழகக் கடற்பரப்புக்களையும் கட்டாந்தரையாக்கி விட்டார்கள். எஞ்சியிருக்கும் யாழ் தீவகக் கடற் பரப்புக்களும் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டுக் கட்டாந்தரையாகும் நிலைக்குப் போய்விட்டது. (இந்த இழுவைப் படகுகளாய் கடலட்டை மட்டுமல்ல, இன்னும் பல அரிதான உயிரினங்கள் முற்றாக அழிந்துவிட்டன. தாழைகடியன் பாம்புகள், குட்டூறு, கடற்குதிரை, தாமரைகாத்தான். உறுமீனினம் போன்றவை முற்றாக அழிக்கப் பட்டுவிட்டன.)  

கடல் இயற்கை வளங்களுக்குப் பாதகமில்லாமல் இப்போதுகூட இருகரை மீனவர்களும் வழிவலைத் தொழிலைத் தாராளமாகவே செய்ய முடியும். ஆனால் வழிவலைத் தொழிலில் இறால் பிடிக்க வாய்ப்பில்லை. மீன் மட்டுமே. மீன்களை அதிகளவில் உள்ளூர் மக்களுக்குத்தான் விற்க முடியும். உள்நாட்டு மக்களுக்கெல்லாம் மீன் எதற்கு...? வெளிநாடுகளின் அந்நியக் கரன்ஸிகளால் அரசியல்வாதிகளின் கல்லா நிறைந்தால் போதும்தானே. 

தவிரவும் இந்திய மத்திய அரசும், தமிழக மாநில அரசும் தமிழக மீனவர்களுக்கு மானியங்களை வழங்கி தென்கடற் பரப்புக்குள் ஆள்கடல் மீன்பிடிக்கு ஒத்தாசையும், அபிவிருத்தியும் செய்ய முடியும். ஏகப்பெருவெளியாய் பரந்த கடலும், விளைந்த மீனும் பிடிப்பாரற்றுக் கிடக்கிறது. உலகச் சந்தையில் மிக முக்கிய இடத்திலிருக்கும் சூரை மீன்பிடியைச் செய்யக்கூடிய ஏகப்பட்ட வளங்கள் கூட தென் கடலில் உண்டு.

மொத்தத்தில் பார்க்கப்போனால் இந்திய அரசு இரு நாட்டுத் தமிழர்களையும் மோத வைத்து, மிகச் சாதுர்யமான அரசியலொன்றை நடத்துகின்றது. இதனை தமிழக மீனவர்கள் புரிந்து கொள்ளாதவரை மீட்சியோ, தீர்வோ கிடைக்கப் போவதில்லை. 

இன்னும் நீண்ட காலங்களில்லை. இரு நாட்டு தமிழ் மீனவர்களும் குடும்பம் குடும்பமாக பட்டினித் தற்கொலைக் களத்துக்குச் செல்ல இன்னும் நீண்ட காலங்களில்லை. 

இலங்கைக் கடற்படையால் கடலில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக உறவுகளின் சடலங்களை மீட்டெடுத்துத் தமது கரையிலேயே தகனம் செய்து, நினைவுத் தூண்களும் எழுப்பிய தீவக மீனவர்கள் இன்று வயிறெரிந்து, பட்டினியால் நொந்து சாகிறார்கள். ஆனால் இதுவரை தமிழக மீனவர்களையோ, பெருமுதலாளிகளின் இழுவைப் படகில் கூலியாக வரும் தொழிலாளிகளையோ மனம் நொந்து திட்டவில்லை. கடலில் பயணம் செய்பவனை அவர்கள் திட்ட மாட்டார்கள். ஆனால் இதே நிலையில்தான் தொடர்ந்தும் இருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது. தங்களது குழந்தை குட்டிகள் இந்தக் கடற் கொள்ளையால் பட்டினியாகக் கிடந்து சாகிறார்கள் என்றால் பெற்ற வயிறுகள் எத்தனைதூரம்தான் பொறுத்தருளும்.....?  

பொன்முட்டையிடும் வாத்துக் கதையை நூற்றாண்டுகளுக்கு மேலாக, சந்ததி சந்ததியாகக் கேட்டுத்தானே வளர்ந்தோம் உறவுகளே! அதுதான் இது என்பதைச் சற்றுப் புரிந்துகொள்ல முயற்சி செய்யுங்கள். 
-------------------------------------------------------------------------------------------

1985ம் ஆண்டு நெடுந்தீவுக்கும் கச்சத்தீவுக்கும் இடையில் இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு, தீவகக் கடற்பரப்புக்குள் எமது மக்களால் கண்டெடுக்கப்பட்ட 9தமிழக மீனவர்களின் உடல்களை வேலணை தெற்குத் துறமுகத்தில் அடக்கம் செய்து, கொல்லப்பட்டவர்களின் பெயராலேயே தீவக மீனவமக்களால் கட்டப்பட்ட நினைவுக் கல். 

கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள்:
1. செல்வம் 
2. மொஹமெட் 
3. செல்வராஜ் 
4. சும்பிரமணி 
5. காளிமுத்து 
6. மதணாளியன் 
7. மஞ்சகோதன் 
8. சேதுமாணிக்கர்
9. துவரி ஐயர் பிச்சை 

நான் அகதியாகப் பல நாடுகள் ஓடும்போதெல்லாம் கூடவே சுமந்து திரிந்த எனது புகைப்படங்களில் மிக முக்கியமான ஒன்று. இந்த நெகடீவ்கூட இந்துமகா சமுத்திரத்தின் உப்புக்கறையால் பழுதடைந்தே விட்டது.

நன்றி: பிறத்தியாள்

No comments: