Wednesday, February 19, 2014

ஈழத்தில் எதிர்ப்பு இலக்கியம் எதுவரை ?

-கோபால் நாதன்- 
ஈழத்து தமிழ் இலக்கிய மரபில் எதிர்ப்பு இலக்கியம் மிக முக்கிய இடத்தைப் பெற்று வருகின்றது. ஈழத்து சமூக அரசியல் வரலாற்றின் தோற்றம் முக்கியமான ஒரு மாற்றத்தை எதிர் கொண்டது. பல்லின சமூகங்கள் வாழ்கின்ற ஒரு சூழலிலே மக்களது வாழ்வு நிலையை சமூக அதிகார மேலாதிக்கங்கள் பாதிப்புறச் செய்த போது எழுந்த எதிர்ப்புணர்வுகளை சித்தரிக்கும் முகமாக இத்தகைய இலக்கியங்கள் தோற்றம் பெறுகின்றன.

பொதுவாக இலக்கியம் என்பதே சமூகத்தின் பொதுப் போக்கிலிருந்தும் சமுதாயத்தின் ஒழுக்க சட்டகங்களிலிருந்தும் ஏதாவதொரு வகையில் மாறுபட்டதாகவே அமைந்திருக்கும் பொதுப் போக்குடன் முட்டி மோதுவதாகவே இருக்கும் இந்த மாறுபாடு அல்லது மோதுகை தீவிர நிலைப்பட்டதாகவும் இருக்கலாம் அல்லது சில முரண்பாடுகளை அடையாளப்படுத்துவதாகவும் இருக்கலாம். அது அந்த படைப்பு தோன்றும் புறச் சூழலை அனுசரித்த ஒன்றாகும் .இப்படியான தன்மையிலிருந்து விலகும் எழுத்துக்களை நாம் ஜனரஞ்ச எழுத்துக்கள் என்போமே தவிர இலக்கியம் என்பதில்லை .எனவே இலக்கியம் சமூகத்தின் பொதுப் போக்கிலிருந்து மாறுபடும் அது எதிர்ப்புக் கூறுகளை உட்கொண்டாதாகவே இருக்கும்.அந்த வகையில் நாம் இலக்கியம் என்பதே எதிர்ப்பு நிலைப்பட்ட ஒன்றுதான் என்று சொல்ல முடியும் ஆனால் எதிர்ப்பு இலக்கியம் என்னும் அழுத்தமான வகைப்படுத்தல் இவ்வாறானதொரு பொது நிலை வகைப்படுத்தல் அல்ல அது ஓர் அரசியல் உள்ளடக்க நோக்கிலான வகைப்படுத்தலாகும்.எதிர்ப்பு இலக்கியம் என்ற பகுப்பு நிலை பெரும் இனம் சிறு இனத்துடன் அல்லது சிறு இனக்குழு இன்னொரு சிறு இனக்குழுவுடன் முரண்படும் போது உணர்வுகளை ஒவ்வொரு இனக் குழுவும் தனக்குரிய கலைகளை இலக்கியமாக படைப்பதில் ஈடுபட்டுக் கொண்டியிருப்பதும் அந்த இலக்கியங்களை பிரசாரம் செய்வதும் இருக்கிறது.சுதந்திரத்துக்குப் பின்னரான நமது அரசியல் ஈழத்து மக்களை ஆழமாக பிளவுபடுத்தி இருக்கிறது. சுரண்டலையும் சமூக முரண்பாடுகளையும் வளர்த்து சமூக நீதியை ,சமத்துவத்தை புறந்தள்ளி இருக்கிறது.

உண்மையான ஆக்க முயற்சி முழுமையான உறவுகளை உண்டாக்கும் போராட்டமாகும் இவ்வுறவு தனிமனித நிலையிலும்,சமூதாய நிலையிலும் உள்ளது இதனை விரிவுபடுத்துவதே சாதிக்க வேண்டிய காரியம் யதார்த்த இலக்கியம் இதற்குகந்த கட்டளைக் கல் ஏனெனில் கருத்தும் உணர்ச்சியும் தனி மனிதனும் சமூகமும்,மாற்றமும் உறுதிப்பாடும் மாறி மாறி ஒன்றையொன்று ஊடுருவிப் பாதிப்பதை அது நுணுக்கமாகக் காட்டுகிறது

ஈழத்து தமிழர் வரலாறு உன்னிப்பாக பார்க்க தொடங்கியது போராட்ட வரலாற்றுக்கு பின்னர் தான் ஒவ்வொரு தமிழர் வரலாறு பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது.ஓர் தனி நபரின் வாழ்க்கையில் போராட்டம் ஒரு சக்தியாக உலாவித் திரிகின்றது. தமிழர் இருப்பு இருக்கின்றது. என்றால் போராட்டம் வெடிப்புக்கு பின்னர் தான்.

பிரபல்யம் பெற வேண்டும் என்பதற்கு ஏதாவது ஒன்றை பதிவு செய்ய முற்படும் பஞ்சமிகள் கைகளில் எடுத்துக் கொண்டிருக்கும் ஆயுதம் ஈழத் தமிழர் துயர் வாழ்வு நிலை. ஈழத் தமிழரை கொச்சைப்படுத்திய ஊடகங்களில் தனது வக்கிர எழுத்துக்களை திரிவு படுத்தி மலிவு எழுத்துக்களாக கொணர்கின்றார்கள்.

ஈழம் பற்றிக் கையாளும் எழுத்தாளர்கள் போராட்ட எதிர் நிலையிலிருந்து ஈழத்தின் பேரவலத்தை விற்பனைச் சரக்காக மாற்றிக் கொண்டியிருக்கின்றார்கள். ஈழப்பிரச்சனை ஆத்மார்த்தமாக இதுவரை யாரும் கையாளவில்லை என்பது மட்டும் மிகத் தெளிவு. அவலத்தில் தனது இருப்பு நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், புலம் பெயர்ந்து குடி நிலையை பெற்றுக் கொள்ளவும், எதிர்நிலை எழுத்துக்களை புனைசார்ந்து படைப்பாக வாணிக நோக்கத்தில் புனைகின்றனர்.

தமிழ் எழுத்து என்ற பெரும் விருட்சம் ஈழத்தில் இரு வகையான போக்கின் தோற்றப்பாட்டை எழுத முனைந்து கொண்டியிருக்கின்றது.
யுத்த காலக் கட்டத்தில் தான் படைப்புகளும் படைப்பாளிகளும் தோற்றம் மிக உக்கிரமாக இலக்கியம் பேசப்பட்டது அதில் அதிகம் எதிர்ப்பு/ சார்வு இலக்கியங்கள் தோன்றியது இந்த சம்ராச்சியத்துள் குழப்பம் மிகுந்த காலங்களில் கருத்துக்களையும் ,அபிப்பிராயங்களையும் வெளிப்படுத்தும் இலக்கியங்கள் பெருமளவில் இயற்றப்பட்டன.

போர்ச்சூழலிலும்,சமூகச் சூழலிலும் ஏற்படுத்தும் தாக்கத்தினை வெளிபடுத்தும் புறச்சூழலின் மாற்ற வெளிப்பாடு எதிர்ப்பு இலக்கியம்.

No comments: