Saturday, September 07, 2013

ஒரு வரலாற்று எழுதியை வக்கிரமாக கொன்றுள்ளனர்.

-கரவைதாசன்-

இந்தியதேசத்து கல்கத்தா நகரினைச் சேர்ந்த நடுத்தர வர்க்க குடும்பத்தில் 1964ல் பிறந்த வரலாற்று எழுதி சுஸ்மிதா பானர்ஜி அவர்கள், முஸ்லீம் அடிப்படைவாதிகளால் ஆப்கனிஸ்தான் நாட்டின் பக்கிற்றா மாகாணத்திலுள்ள அவரது வீட்டின் முன்னால் மிகவும் வக்கிரமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சமூகத்தில் முன்னனியில் உள்ள பெண்களுக்கு ஆப்கானிஸ்தான் ஆபத்தான இடம் அதிலும் முஸ்லீம் அடிப்படைவாத தலிபான்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருக்கும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலை மிகவும் மோசமானது. கடந்த வருடம் உயர்பதவியில் இருந்த இரண்டு ஆப்கான் பெண்கள் லக்மான் (Laghman)  மாகாணத்தில் கொல்லப்பட்டனர். பெண்கள் சம்பந்தமான வாரியத்தின் தலைவியாக இருந்த நஜியா சித்திக்கி அவர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். அந்த வரிசையில் சுய ஆற்றலும் இன்பமான காதல் வாழ்வும் கொண்ட  இந்திய எழுத்தாளர் சுஸ்மிதா பானர்ஜி கொல்லப்பட்டுள்ளார். பெண்களின் உரிமை பற்றி பேசும் எல்லோருமே அதிலும் கிழக்கு ஆப்கனிஸ்தானில் பயமுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்                  

மூன்றாம் உலக நாடுகளுக்குள் அவர்களது சிறு சிறு வித்தியாசங்களை கண்டறிந்து அவற்றை  ஊதிப்பெரிதாக்கி, எப்போதும் தமது நலன்களுக்காகவே அத்துமீறி பிரவேசித்து நாட்டாள்மை செய்யும் நேட்டோ நாட்டுப்படைகள்  ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகளையும், பெண்களின் நிலையையும் உயர்த்தி, பெண்களுக்கு பாதுகாப்பைக் கொடுத்தமை நேட்டோ(Nato) நாடுகளின் தலையீட்டால் நடைபெற்ற சாதனை, ஓரளவேனும்  பாராட்டப்பட்ட விடயமாகும். நேட்டோ நாடுகள் 2014 இல் தமது படைகளைக் மீளப் பெற்றுக் கொள்ளவுள்ள நிலையில், பெண்ணுரிமை என்பதே  ஆப்கானிஸ்தானில் மீண்டும் கேள்விக்குறியாகவுள்ளது. 


சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர் ஒருவர் தனது குழந்தைகளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் போது கடத்தப்பட்டுள்ளார். சில பழமைவாத இஸ்லாமிய அமைப்புகள் வீட்டுக்கு வெளியே தொழில் புரியும் பெண்களுக்கும், தமது உழைப்பில்  வாழ தமக்கென தொழில்களைத் தேடிக் கொள்ளும் பெண்களுக்கெதிராகவும் எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. 


எனினும் ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தில் பெண்களின் உரிமைகளுக்காக பல சட்டங்கள் அண்மையில் நிறைவேற்றப்பட்டன, ஆனால் பழமை வாத அமைப்புகள் ஆதரவற்ற பெண்களின் விடுதிகளைக் கூட  மூடுமாறும் அவை எல்லாம் விபச்சார விடுதிகள் எனவும் போர்க்கொடி தூக்கியுள்ளன. முன்னாள் ஆப்கானிய பாராளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவர் அண்மையில் ஐக்கிய இராச்சியத்தில் அகதி உரிமை கேட்டு விண்ணப்பம் செய்துள்ளமையும் . அவரைக் கொடுமைப்படுத்திய கணவனை விவாகரத்து செய்ததால், அவரது உறவினர்கள் அவரைத் தனிமைப்படுத்தி விட்டமையும்  . அதனால் ஆப்கானிஸ்தானில் வாழ அவருக்கு பாதுகாப்பு இல்லாமை எனும் நிலையும்  வெறும் செய்தியாகக் கூட அங்கு பார்க்கப்படுவதில்லை.  அதனால் பெண்களுக்கெதிரான வன்முறைகளில் ஈடுபடுகிறவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்துவது என்பது முடியாத காரியம் என முதலாளித்துவ ஜனநாயக முகத்தினைச் சார்ந்த  மனிதவுரிமை அமைப்புகள் தமது கவலையைத் தெரிவித்துள்ளன.

இப்படியாக வளைந்து வரும் சூழலில் ஒரு இந்தியப்  பெண் வரலாற்று எழுதி ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் கடந்த செவ்வாய் பதினொருமணியளவில் அவரது சொந்த வீட்டிலிருந்து தலிபான் தீவிர வாதிகளால் கடத்தப்பட்டு அடுத்துள்ள வீதியொன்றில் வைத்து பதினைந்து தடைவைகளுக்கு மேல் தொடர்ச்சியாக  சுடப்பட்டு வக்கிரமாக கொல்லப்பட்டுள்ளார்.

இந்தியதேசத்து கல்கத்தா நகரினைச் சேர்ந்த நடுத்தர வர்க்க குடும்பத்தில் 1964ல் பிறந்த   சுஸ்மிதா பானர்ஜி அவர்கள்,  ஆப்கனிஸ்தான் நாட்டி லிருந்து வணிகம் செய்ய வந்திருந்த ஜான்பாஸ் கான்  அவர்களை காதல் வயப்பட்டு ஓடிச்சென்று திருமணம் செய்துள்ளார். தொழில்ரீதியில் பெண்களுக்கே வரும்  நோய் பற்றி ஆயும் மருத்துவ ஆய்வில் தாதியாக இருந்திருக்கிறார். காபூலில் பெண்களுக்காக ஒரு மருத்துவ நிறு வனத்தினையும்   நடத்தி வந்துள்ளார். ஆப்கனிஸ்தான் தாலிபன் தீவிரவாதிகளின் ஆட்ச்சிக்கு உட்பட்டிருந்த காலகட்டங்களில் இதுவே தலிபான் ஆட்ச்சியாளர்களுக்கும் இவருக்குமான முரண்பாட்டுக்கு முன்தாய்ப்பாக இருந்தது. பெண்கள் நிறுவனங்களை நடத்தக் கூடாது, இதுவே தலிபான்களின் வாதம். பல தடவை விசாரணைக்கு உட்படுத்தபட்டு வீட்டரசில் வைக்கப்பட்டுள்ளார். அவர்களது கோர்ட்டில் இவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில். அங்கிருந்து தப்பித்து கல்கத்தாவுக்கு வந்தார்.

சிறு வயது முதல் இசை, நாடகம் ஆகிய துறைகளில் ஈடுபாகொண்ட சுஸ்மிதா அவர்கள் தனது இளவயதில் சில நாடகங்களை தானே எழுதி நடித்துள்ளார். அவ் எழுத்துபயிற்சி கைவரவே காபூல் அனுபவங்களையும் வைத்து  இவரது பிரசித்தி பெற்ற வரலாற்று படைப்பான "காபூல்வாலாவின் வங்காள மனைவி" (A Kabuliwala's Bengali Wife)   என்ற நூலை எழுதியிருந்தார். 1998ல் வெளிக்கொணரப்பட்ட இந்நூலினை மூலமாக வைத்து  2003ல் பொலிவூட்டில்   Escape from taliban   எனும்  திரைபடம் வெளி வந்தது.  தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய பல புத்தகங்களை  எழுதிய நிலையில். பதினெட்டு வருடங்களின் பின் ஆப்கானிஸ்தானுக்கு  திரும்பி தனது கணவருடன் சேர்ந்து வாழும் நிலையில் "துர்க்காவின் பூசை" எனும் நாவலுக்கான எழுத்து வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை. கடந்த செவ்வாய்க் கிழமை (03.09.13) நள்ளிரவு  தலிபான் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டு அடுத்துள்ள வீதியொன்றில் வைத்து பதினைந்து தடைவைகளுக்கு மேல் தொடர்ச்சியாக  சுடப்பட்டு வக்கிரமாக இவரது வாழ்வு பறிக்கப்பட்டுள்ளது..

No comments: