Wednesday, November 13, 2013

டாக்டர் நோர்மன் பெத்யூன்

-ந.இரவீந்திரன்- 

இன்று டாக்டர் நோர்மன் பெத்யூன் பிறந்தநாள்

டொராண்டோ பல்கலைக்கழகம், ஓவன் ஒலி கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனம் போன்றவற்றில் கல்விகற்றார்.ஹென்றி நார்மன் பெத்யூன்  ஒரு கனடிய மருத்துவர் மற்றும்  சிறந்த மருத்துவ கண்டுபிடிப்பாளராக இருந்தார்.1935 ல் பெத்யூன்  சோவியத் ஒன்றியம் பயணித்தார் . இந்த ஆண்டில் அவர் ஒரு ஈடுபாடுள்ள  கம்யூனிஸ்ட் ஆனார் .ஸ்பானிஷ்  காலத்து போரின் போது வெளிப்படையாக  கம்யூனிஸ்ட் ஆக  அறியப்பட்டார்.அறுவை தலைவராகவும்,இரத்ததானம் நிர்வகிக்கும் பொறுப்பும் ஏற்றுநடாத்தினார் . அருகே காயமடைந்த வீரர்கலுக்கு தேவையான இரத்தத்தை  பாட்டில்கள் மூலம் பொதுமக்களிடம்   நன்கொடையாக இரத்த எடுக்க முடியும் எனக்கருதி ஒரு மொபைல் இரத்தம் சேவை அமைத்தார். அது இரத்தத்தை  எடுத்துச் செல்ல உதவியது. இரண்டாம் சீன - ஜப்பனீஸ் போரின் போதும் , ஸ்பானிய உள்நாட்டு போரின் போதும் , (சீன கம்யூனிஸ்ட் எட்டாவது வழி இராணுவம் போர் )யுத்தமுனைக்கு சென்றார்.
ஜனவரி 1938 சீனாவுக்குச் சென்று   மாவோ சே துங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார் .யுத்தத்தில் காயமடைந்த போர்வீரர்களுக்கு அனைத்து சிகிச்சைகளையும் செய்துகொடுத்து,பல அறுவைச் சிகிச்சை உபகரணங்களையும் உருவாக்கினார். ,தன்னைக் கவனிக்காது மக்களுக்காகவே வாழ்ந்து மரணித்தார். அவரைப் பற்றி தோழர் மணியம் அவர்கள் முதலில் சொல்லி இருந்தார்.பின் பெத்யூன்  பற்றி தேடி வாசித்திருந்தேன்.இந்தியாவில் இருந்தபோது அவர் பற்றிய நூலை எழுத்துத் திருத்தும் வாய்ப்புக் கிடைத்தது. கண்கலங்கி ,கண்கலங்கி திருத்தினேன்.(டாக்டர் நோர்மன் பெத்யூன் கதை- சவுத் விசன் வெளியீடு 415 பக்கங்கள் : படிக்க விரும்புவோர் என்னிடமிருந்து பெற்றுத் திரும்பத் தரவும் )

  இந்த வருடத்தின் ஜூலை மாதத்தில் கனடா போயிருந்தோம்.அங்கு செல்வதை எண்ணியதும் முதலில் நோமன் பெத்யூன் பிறந்து வளர்ந்த நாடு அது என்ற நினைப்பே மேலோங்கியதால் அவரது நினைவில்லத்தைப் பார்க்கவேண்டும் என முடிவு செய்திருந்தேன்.கனடா செல்லக் காரணமான வைபவங்களில் கலந்தவாறே இதுகுறித்து நண்பர்களை கேட்டிருந்தேன்.பொதுவாக உறவினர்கள் கனடாவின் அவசியமான இடங்களுக்கு அழைத்து செல்வதிலேயே அக்கறையாக இருந்தார்கள். அது அவ்வகையில் அமையும் என்பதால் நண்பர் சேகர் ஓரிரு தினங்களை எங்களோடு செலவிட இயலுமாக இருப்பதால் பெத்யூனின் ஊருக்கு அழைத்து செல்லும் பொறுப்பை ஏற்றார்.அவரே கணணி வழி இடத்தையும்,போகும் மார்க்கத்தையும் கண்டறிந்து தனது வாகனத்திலேயே அழைத்துச் சென்றார். சென்று திரும்பிய பின்னரே பலருக்கும் இப்படி ஒரு முக்கியத்துவமான இடம் இருப்பது தெரிந்தது.மொஸ்காக்கொ என்ற அந்த ஊரை ஏரிகள் நிறைந்த சுற்றுலா இடமாக பலர் அறிந்திருந்தனர். பெத்யூன் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக சீனா விடுதலைப் போராட்டத்தை நடாத்தியபோது சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான விடுதலைப் படைக்கு வைத்திய உதவி செய்யச் சென்றவர்.பொதுவான தமிழ் உணர்வுக்குள் இது ஆட்படாத விவகாரம் என்பதாலொ என்னவோ கனடாத் தமிழர்களுக்கு இந்தவகையில் அவ்வூரைத் தெரிந்து வைத்திருக்க இயலவில்லை. ஆயினும் விபரத்தையும் பார்த்து வந்ததையும் கூறியபோது தாமும் சென்று பார்க்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.எம்மவர் நினைவெல்லாம் தமிழர் எதிர்காலம் என்னவாகும் என்ற வரையறையோடு மட்டுப்பட்டுவிடுவது தவிர்க்கவியலாதது.வேலை,வேலை என்ற தொடர் ஓட்டமும் அன்றாட பிரச்சனைகளின் தீர்வு முயற்சியும் என்பதோடு அவர்களது பெரும் பொழுது கழிந்து போய்விடுகிறது. அப்படிஎன்றால் அவர்கள் அர்த்தமற்ற வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்களா என்ற கேள்வி எழும்.இங்குமட்டும் என்னவாம் வாழ்கிறது?இங்கு எந்த அளவில் சமூக-பண்பாட்டு-அரசியல் அக்கறைகள் பொதுத் தளத்தில் காணப்படுகிறதோ அதற்குக் குறையாத அளவில் அங்கும் எம்மவர் மத்தியில் அவை ஊடாட்டம் கொண்டுள்ளன. பலரும் இதுகுறித்துக் கேட்டார்கள்."இங்கு வந்து பார்த்த பின்னர் கனடா குறித்து முன்னதாக நீங்கள் கருதியிருந்த முடிவில் மாற்றமுள்ளதா?" என்ற கேள்விக்கு உள்ளே ஊரில் எல்லோரும் எங்களைக் குறித்துத் தவறான முடிவுகளுடன் தானே இருக்கிறீர்கள் என்ற மறை கேள்வி தொக்கிக் கொண்டு இருப்பதுண்டு. இந்த முடிவுகள் எம்மளவில் ஆளாளுக்கு ஒவ்வொருவகையில் அமைந்திருக்கும்.அங்கே பெரும் ஆடம்பரத்தில் மூழ்கி,கடந்தகாலத்தை மறந்து இருப்பவர்கள்;மரத்தில் காய்க்கும் பணமுடிச்சுகளைப் பறித்து அனுப்புகிறவர்கள்;வாழ்க்கையின் பன்முகத்தைத் தரிசிக்காமல் செக்குமாடுகளாக உழைப்பும் அர்த்தமற்ற பொழுதுபோக்கும் என அல்லாடுகிறவர்கள் என்றவாறாக பலவகை நினைப்புகள் எம்மிடம். சூரியன் உதிக்க முன் முப்பதாம் மாடிக்கு மேலிருந்து காருக்குள் குதித்து ஒன்று மாற்றி ஒன்றாக வேலைத் தலங்களுக்கு ஓடி,இருள் சூழ்ந்த பின்னர் வீட்டுக்கு வருகிற யாரெவரோ என்பதுபோலவே எம்மவர் வாழ்வு அங்கிருக்கும் என்ற நினைப்புத்தான் எனக்கும் இருந்தது.பெரும்பாலும் எம்மவர்கள் தனி வீடுகளில் இருக்கிறார்கள்.ஒன்று,அதிகப்பட்டால் இரண்டு வேலைகளோடு உடல் ஆரோக்கியத்தையும் மன ஆறுதலையும் பெறக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த அவதானிப்பைக் கூறினேன். பத்து வருடங்களுக்கு முன்னர் அப்படித்தான் என்றார்கள்(அப்போது வந்தவர்கள் வாயிலாகக் கட்டமைக்கப்பட்ட சித்திரமே இருந்திருக்கிறது).கடும் உழைப்போடு இந்த வளர்ச்சி எட்டப்பட்டது என்றார்கள்.
கனடாவில் குடியேறிய பல்தேசத்தவர்களில் இலங்கைத்தமிழர்களே இத்தகைய வியக்கத்தக்க வளர்ச்சியைக் காட்டி நிற்பதாக அங்கே கணிப்பு நிலவுகிறது.கல்வி-தமிழ்த் தேசிய உணர்வு-மண்ணில் வாழும் உறவினர் குறித்த அக்கறை என்பவற்றால் தூண்டப்பட்ட உந்துதல் கடின உழைப்போடு வளமான வாழ்வொன்றைக் கட்டமைக்க அவர்களை ஆற்றுப்படுத்துகின்றன. இருக்கும் பிரச்சனை தீர்க்கதரிசனத்தோடு எமக்கான அரசியல்-பண்பாட்டு மார்க்கத்தை அறிய இயலாமல் இருப்பதுதான்.அந்த நெருக்கடி இங்கும் இருக்கிறது.எமக்கான பெரும் சாபக்கேடு பக்கத்தில் தமிழ்நாடு இருப்பது என்பதை உணராமல் இருப்பதே மிகப்பெரும் அவப்பேறு.பிராந்திய மேலாதிக்கமாக முன்னேறி இலங்கையைக் கபளீகரம் செய்திருக்கும் இந்தியாவில் தமிழ்நாடே எம்மை மிக அதிகமாக சுரண்டுகிறது.எமது நலனைக் கண்டறிந்து எமக்கான மார்க்கத்தில் செல்லவிடாது எம்மீது கருத்தியல் மேலாதிக்கத்தொடு எம்மைத் தொடர்ந்தும் அடிமை நிலையில் நீடிக்கும் பிரிவினையைத் தூண்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தமிழக கருத்தியல்-சினிமா-பொருளியல் வணிகர்கள் கனடாவிலும் எம்மவர் மத்தியில் தாராளமாகக் கடை விரித்துள்ளார்கள்.அந்த ஆக்கிரமிப்பிலிருந்து அவர்களும் நாமும் மீள்வதற்குக் கனதியான பண்பாட்டு இயக்கங்கள் முன்னெடுக்கப்படுவது அவசியமானதாகிறது. அங்கு இறுதியாக இடம்பெற்ற மறுமலர்ச்சிமன்ற ஒன்றுகூடலில் "கனடாவில் நாங்கள் பண்பாட்டு சிதைவுகளுடன் இருக்கிறோம் என்பதாக ஊரில் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்;அவ்வாறன்றி நல்ல பண்பாட்டுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்துங்கள்" எனக் கேட்கப்பட்டேன்.இது குறித்து முன்னதாக "நாங்கள் சிதைவுப் பண்பாட்டுடன் இருப்பதாகக் கருதுகிறீர்களா" என்று கேட்டபோது அவ்வாறு இல்லை எனச்சொல்லிய தருணத்தில்தான் இதனைச் சொன்னார்கள்.
இங்கே இந்திய மேலாண்மைக்கு ஆட்பட்டதும்,ஆதிக்க மனோபாவங்களில் அல்லது அடிமைப்புத்தியில் உழல்வதுமான பண்பாட்டு சிதைவுக்குரிய நிலைப்பாடு எந்த அளவில் உள்ளதோ அந்த அளவில் அதே சமூக சக்தியால் அதே பண்பாட்டுக் கோலங்கள் அங்கேயும் முன்னெடுக்கப்படுகின்றன.மாறாக, இங்கேயும் சரி அங்கேயும் சரி ஆளுமை மிக்க எமக்கான பண்பாட்டைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற விழிப்புணர்வு நிறையவே உள்ளது.அதற்கான வேலை முன்னெடுக்கப்படாமல் உள்ளது என்பதே பிரச்சனை.பொது நிலையில் இயக்க வடிவத்துடன் மேலாதிக்க-அடிமைமனப்பாங்கு சார்ந்த பண்பாட்டு செயலாற்றல் மேவி நிற்பதால்(இங்கும் அப்படி உள்ளதை மறந்து) கனடாவில் இந்தியப் பட்டிமன்றக்காரர் அல்லது சினிமாக்காரருடன் மாரடிக்கும் பண்பாட்டுச் சிதைவே உள்ளதாகக் கருதிவிடுகிறொம். வெளிக்குத் தெரியாத,ஒழுங்கமைக்கப்படாத புதிய-பண்பாட்டு இயக்கத்துக்குரிய செயற்பாடுகள் கனடாவில் நிறையவே முன்னெடுக்கப்படுகின்றன. தேவகாந்தன் நடாத்தும் "கூர்" சஞ்சிகைகளில் இது குறித்துப் பல தகவல்களை அறிய இயலுமாயிருந்தது. அத்தகைய காத்திரமான இதழ்கள் வெளிவர இயலுமாயிருப்பதே ஆரோக்கியமான அடையாளம்தான்.மிகச் சிறந்த நாடகங்கள்,சினிமாக்கள் அங்கே அரங்கேறியுள்ளன. இறுதி நிகழ்வான மன்ற ஒன்றுகூடலுக்கு முன்னதாக "ஒரு துப்பாக்கியும் கணையாழியும்"என்ற சினிமாவைப் பார்க்க இயலுமாயிருந்தது.வன்முறை துப்பாக்கி வாயிலானது மட்டுமல்ல,கலியாண மோதிரத்திலும் உறைந்துள்ளது என்பதை மிக அற்புதமாகக் காட்டித்,தமிழ்ச் சினிமாவை இன்னொரு தளத்துக்கு நகர்த்தும் இந்த முயற்சியைக்கூட அறிய இடந்தராத இந்தியச் சினிமா மேலாதிக்க வன்முறையை என்னென்பது? ஆக,மந்தையை விலகிய ஆடுகளாக அல்லாமல் இன்னொரு தளத்திலான அர்த்தமுள்ள வாழ்க்கையைக் கனடாத் தமிழர்கள் வாழ்கிறார்கள்.இன்றைய உலகு மேலாதிக்க சக்திகளின் பல்வேறுவடிவ ஆக்கிரமிப்புகளையும் அபகரிப்புகளையும்,அவற்றுக்கு எதிரான ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களையும் கண்டுவருவது.இது பாட்டாளி வர்க்கமும் ஏனைய உழைக்கும் மக்களும் முதலாளித்துவத்தால் அடக்கியொடுக்கப்பட்டு சுரண்டப்படுவதன் மற்றொரு பரிமாணம்.இது சர்வவியாபகமானது. அதனாலேதான் கனடியனான டாக்டர் நோமன் பெத்தியூன் சீனாவில் சென்று பணியாற்றி அங்கே மரணித்தார்.முன்னதாக பாசிசத்துக்கு எதிராகப் போராடிய ஸ்பெயின் குடியரசிலும் சென்று பணியாற்றியுள்ளார்.
சீனாவில் ஓய்வோழிவின்றி சத்திர சிகிச்சைகளைச் செய்தபோது நோய்த் தடுப்புப் பாதுகாப்பை மேற்கொள்ளும் வசதியற்று இருந்ததால் இறப்பைத் தழுவ நேர்ந்தது.அவரது அந்த அர்ப்பணிப்புமிக்க பங்களிப்பை மாஒ சேதுங் சிலாகித்துப் பேசியுள்ளார். மட்டுமன்றி சீனாவில் பெத்யூன் நினைவில்லம் உண்டு.கனடாவின் அவரது வீடும் அன்று இருந்த வடிவப் பொலிவோடு நினைவிள்ளமாகப் பேணப்படுகிறது. நாங்கள் சென்றபோது சீனர்,வெள்ளையர் எனப் பலரும் வந்து பார்வையிட்டதை அவதானிக்க முடிந்தது. நம்மவர்களும் கனடாவில் காட்ட அவசியமான இடமென்று இனி ஒன்ட்டாரியோ மாநிலத்துக்கு உட்பட்ட மொஸ்காக்கொ கிராமத்து நோமன் பெத்யூன் நினைவில்லத்தை விருந்தாளிகளுக்குக் காட்டி,விடுதலை நாடும் எமது பார்வை விசாலிப்பை சாத்தியமானதாக்குவர் என நம்புவோம்.இது வீணான நம்பிக்கையல்ல.
எங்களை சேகர் அழைத்து சென்றபோது கருணை வின்சென்ட் வந்திருந்தார்.இவர்கள் நாம் பார்க்க அவசியமான இடமென்று டொரோண்டோ விலுள்ள பழங்குடி மக்களது நூதன சாலைக்கு வேறொரு நாள் அழைத்துச் சென்றார்கள்.அன்று பார்த்து முடிந்தபின்னர் "தாய் வீடு"ஆசிரியர் குழுவைச் சேர்ந்த குமார் எங்களோடு வந்து இணைந்தார்.மாலை "தாய் வீடு" இதழுக்காக சேகர் பேட்டி கண்டபோது கனடா அனுபவங்கள் குறித்துக் கேள்வி எழுப்பியிருந்தார்.இவற்றின் வாயிலாக தாய்மண்ணிலிருந்து அங்குவரும் எம்மவரை தமது மண்ணுடன் இணைத்துப் பொது விடுதலை நாட்டத்தில் இணையாக்கும் அக்கறை புரிகிறது.இதற்கு அதியுச்சமாக அமையும் பெத்யூனை அவர்கள் எம்மவருக்கு அறிமுகப்படுத்தாது போவார்களா? 

இன்று டாக்டர் நோர்மன் பெத்யுனின் 74 ஆவது நினைவுதினம் !!
பிறப்பு: மார்ச் 4, 1890,  கனடா , இறப்பு : நவம்பர் 12, 1939, , சீனா

No comments: