Showing posts with label பிரேம். Show all posts
Showing posts with label பிரேம். Show all posts

Wednesday, October 09, 2013

திரையில் வரையப்பட்ட தமிழ் நிலம்

-பிரேம்-
திரைப்படத்தை முன்வைத்து நம் காலத்திய அரசியல் உளவியல்புகள் பற்றிச் சில கருத்துரைகள்

திரையில் வரையப்பட்ட தமிழ்நிலம் என்ற இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள்  ‘விலகும் திரைகள்’ என்ற தலைப்பில் தீராநதி மாத இதழில் தொடராக வெளிவந்தவை. ஒரு பொருள் பற்றியோ அல்லது பல்வேறு பொருள் சார்ந்தோ சில எழுத்தாளர்கள் எழுதுவதை ஒரு பொதுத்தலைப்பின் கீழ் ஒவ்வொரு இதழிலும் வெளியிடுவது அந்த இதழில் உள்ள நடைமுறை. முன்பு 2007-இல் தீராநதியில்  ‘இருண்மைகள்  இடைவெளிகள்  மௌனங்கள்’ என்ற  தலைப்பில் தொடராகச் சில கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். கவிஞர் கடற்கரை கேட்டுக் கொண்டதன் பேரில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரைகள் பின்நவீனத்துவ அரசியல் சார்ந்த உரையாடல்களாக அமைந்தன. தமிழில் அதுவரை முழுமையாக விவாதிக்கப்படாத பல்வேறு கோட்பாட்டுச் சிக்கல்கள் பற்றிய தொடக்க கட்ட உரையாடலாக அமைந்த அக்கட்டுரைகளைத் திட்டமிட்டபடி தொடர இயலாத சூழல் ஏற்பட்டது.
மீண்டும்  2011, செப்டம்பர் மாத தீராநதி இதழுக்கு  எழுதிய ஒரு கட்டுரை இத்தொடருக்கான தொடக்கமாக அமைந்தது. திரைப்படத்தை முன் வைத்து நம் காலத்திய  சமூக-அரசியல் உளவியல் பற்றிய கட்டுரைகளைக் கொண்டதாக இத்தொடர் அமையும் என நான் தெரிவித்திருந்தேன். திரைப்படங்களை முன்வைத்து நம் காலத்திற்கான சில கோட்பாட்டுச் சிக்கல்களைப் பேச இந்தப் பக்கங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற திட்டம் இருந்தது.
தமிழில் திரைப்படங்கள் பற்றிய கோட்பாடுகள் சார்ந்த ஆய்வுகள், வாசிப்புகள் இல்லை.  திரைப்பட வரலாறு, திரைப்படத் தொழில்நுட்பம் பற்றிய அறிமுக நூல்கள் சில மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.