Wednesday, June 26, 2013

டொமினிக் ஜீவா பிறந்த தின சந்திப்பு

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் 87 வது பிறந்த தின சந்திப்பு

Wednesday, June 05, 2013

பிணங்களால் பிரச்சினை இல்லை மனுஷங்கதான் பிரச்சினை



சுடுகாட்டின் திசையிலேயே பெண்கள் நடக்கக் கூடாது என்று கட்டுப்பாடு காக்கும் சமூகம் நம்முடையது. சுடுகாட்டுக் காற்று அடித்தாலே ஆவி  அண்டியதாக அஞ்சும் மக்கள் மத்தியில்தான் கிருஷ்ணவேணி வாழ்கிறார். அனாதைப் பிணங்களை வண்டியில் சுமந்துவந்து அடக்கம் செய்வதோடு,  சந்நியாசித்தோப்பு சுடுகாட்டுக்கு வரும் ஊர்ப் பிணங்களை எரிக்கும் பணியையும் செய்கிறார்.


புதுவை பொது மருத்துவமனை வளாகத்திலிருந்து கிளம்புகிறது அந்த வண்டி. முன்னும் பின்னும் பிணவண்டியிலிருந்து சகிக்க இயலாத நாற்றம்  நாசியை உறுத்துகிறது. வியர்வை உருக உருக வலுகொடுத்து வண்டியை இழுத்துச் செல்லும் கிருஷ்ணவேணியை சபித்துக்கொண்டே நடக்கிறார்கள்  மக்கள். பிரதான சாலையைக் கடக்கும் வண்டி, சந்துகளில் நுழைந்து சந்நியாசித்தோப்பு சுடுகாட்டை வந்தடைகிறது. வண்டியை நிறுத்திவிட்டு,  படபடவென மண்வெட்டியை எடுத்து குழிவெட்டத் தொடங்குகிறார் கிருஷ்ணவேணி. குழி ஆழமானதும் வண்டியைச் சரிக்க, குழியில் விழுகிறது  வெண்துணி போர்த்திய சடலம். அருகே அமைதியாக எரிந்து கொண்டிருக்கிறது இன்னொரு பிணம்.



பிணம் புதைக்க குழி தோண்டித் தோண்டி கைகளில் இயல்புக்கு மீறிய சுருக்கங்கள். வாழ்க்கையின் இருட்டுப்புற ரகசியங்களை கண்டடைந்து விட்ட  ஞானியைப் போல அலட்சியம் தொனிக்கும் பார்வை... கிருஷ்ணவேணி சாதாரண மனுஷியில்லை. சாதனை மனுஷி.


‘‘இந்த ஊர்லதான் நான் பொறந்தேன். அப்பன் பேரு பிச்சமுத்து. முனிசிபாலிட்டில குப்பை வேலை செஞ்சார். அம்மை பேரு செங்கேணி. நாலு  புள்ளைகள்ல மூத்தவ நான். ஆறாப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். மூத்த பிள்ளைங்கிறதால சிறு வயசுலயே கல்யாணம் கட்டிட்டாங்க. புருஷன் பேரு  அல்பர். மனுஷன் தங்கமானவரு. குடிப்பழக்கம் மட்டும் உண்டு. ஒருநாளும் என்னை அழ வச்சுப் பாத்ததில்லை. 

Saturday, May 25, 2013

டி.எம்.எஸ் .மக்களின் பாடகன்.

-ஷாஜி-
                            இசை பயிற்சியல்ல இசை உணர்ச்சி

''நான் டி.எம்.எஸ் பாடல்களை வெறுக்கிறேன்'' என்று இப்போதுள்ள ஒரு தமிழ் பின்னணிப்பாடகர் என்னிடம் சொன்னார். அந்த வெறுப்புக்கான காரணத்தைக் கேட்டபோது அவரால் சரியாகச் சொல்ல முடியவில்லை. ''அவருடைய பாடல்கள் தமிழ்நாட்டின் வெயிலையும் புழுதியையும்தான் ஞாபகத்துக்குக் கொண்டுவருகின்றன'' என்று சொன்னார். ''நீங்கள் கோடைவிடுமுறைக்கு மட்டும் தமிழ்நட்டுக்கு வந்திருப்பீர்கள். அப்போது மட்டுமே அந்தப்பாட்டுகளைக் கேட்டிருப்பீர்கள்'' என்று நான் சொன்னேன். தமிழ்நாடில் பிறந்து வேறு பகுதிகளில் வளர்ந்த ஒரு சிறுவனின் மனப்பதிவு மட்டும்தான் அது. சிலர் அந்த மனப்பிராயத்தை தாண்டுவதேயில்லை!

நானும் சிறுவயதில் டி.எம்.எஸ் பாட்டை அவ்வளவாக விரும்பவில்லை. ஜேசுதாசை உலகிலேயே பெரிய பாடகர் என்று நினைத்திருந்த காலகட்டம் அது. ஆனால் கொஞ்சவருடங்களுக்குள்ளேயே டி.எம்.எஸ் பாட்டை கவனிக்க ஆரம்பித்தேன். அவரது பாட்டு என் மனதில் தீவிரமான பதிவை உண்டுபண்ணியிருந்தது என்ற ஒரே காரணத்தால் ஒரு முறை அவரது பாடலொன்றை பள்ளிநிகழ்ச்சியில் பாடினேன். பாடலின் வரிகளோ அதன் மெட்டோ எதுவுமே சரியாக தெரியாமல் மேடையேறி மானத்தை வாங்கினேன். மேற்கொண்டு நான் பாட்டே பாடக்கூடாது என்று எச்சரித்தார் தலைமையாசிரியர்.

'அண்ணாச்சி' என்று நாங்கள் அழைத்த ஒருவரிடமிருந்து தான் டி.எம்.எஸ் பற்றிய என் நினைவுகள் ஆரம்பிக்கின்றன. 'அண்ணாச்சி' என்றுதான் எல்லா தமிழர்களையும் எங்களூரில் சொல்வார்கள். மற்றபடி அவர் பெயரே தெரியவில்லை. அவர் ஒரு தேநீர் கடையில் தினக்கூலித் தொழிலாளர். கரிய மெலிந்த மனிதர். முகத்தில் சின்னப்பையன்களைப்போல ஒரு இனிய சிரிப்பு உண்டு. 'சத்தியமே லட்சியமாய் கொள்ளடா' பாட்டை அவர்
அருமையாக பாடுவார். அதைக் கேட்டநாள் முதல் அந்த அண்ணாச்சியே என் கதாநாயகன் என உறுதிபூண்டேன்.

Monday, May 20, 2013

காற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா

-இரா.வினோத்-


இலங்கையின் மலையகத்தில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர் நலனுக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் துடி துடித்த மூத்த தொழிற்சங்கவாதி ஓ.ஏ.ராமையா நேற்றிரவு காற்றில் கலந்தார். கடந்த ஓராண்டாக உடல் நலிவுற்று இருந்த அவருக்கு அகவை 76!

''உலகத்தில் பசி... பட்டினி என்ற இருபெரும் பூதங்கள் தோன்றிய நாள் முதல் இன்று வரை உழைத்து உழைத்து ஓடாகி போன‌ பாட்டாளி வர்க்கத்தின் ரத்தம் கொடூரமாக உறிஞ்சப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. உலகமே கைக்குள் சுருங்கி விட்டதாக நாம் காலரை தூக்கி விட்டு கொண்டாலும், கால் வயிற்று கஞ்சிக்கு ஏங்கி தவிக்கும் வறண்ட நாவுகள் எத்தியோப்பியாவிலும், சோமாளியாவிலும், பாலைவனங்களிலும் மட்டுமின்றி பசும் போர்வைப் போர்த்தி செழுமையாக காட்சியளிக்கும் மலையகத்திலும் ஏராளமாக இருக்கின்றன.

இந்த அவல நிலை பொறுக்காமலே 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என சீறினான் பாரதி. மகாகவியும் மண்ணாகி போய் நூறாண்டு ஆகப்போகிறது. இன்னமும் மக்களின் வாழ்நிலை மாறலையே தம்பி!'' நான்கு மாதங்களுக்கு முன்பு ஓ.ஏ.ராமையாவை ஹட்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தபோது கடைசியாக உதிர்த்த உயிருள்ள வார்த்தைகள் இவை.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தென் தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது, இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கு பஞ்சம் பிழைக்க சென்ற பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் ஒன்று தான் ராமையாவின் குடும்பமும். இலங்கையின் கண்டி மலை தொடரில் இருக்கும் நாவலபிட்டி, பூண்டுலோயாவில் உள்ள தோட்டமொன்றில் 1938ஆம் ஆண்டில் பிறந்தார். 'என்னுடைய தாய் நாடு இலங்கை என்றாலும், தமிழ் நாட்டுக்குள் கால் வைத்தாலே உடம்பெல்லாம் சிலிர்த்து விடும். என்னுடைய வேரும் வேரடி மண்ணும் இங்கே தானே இருக்கிறது. மறுத்தாலும், வெறுத்தாலும் இந்தியா என் தந்தை நாடு' என அடிக்கடி நினைவுகளை அசைப்போடுவார்.

இளம் வயது முதலே சமூக பிரச்னைக‌ளில் அக்கறை கொண்டிருந்த ஓ.ஏ.ராமையா 1950களின் இறுதியில் தனது வாழ்க்கையைத் தொழிற்சங்கத்தோடு இணைத்து கொண்டார். இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளராக இருந்த போது, தேயிலைக் கூடையில் தேசத்தை சுமக்கும் மலையகத் தமிழர்களுக்காக போராடி பல்வேறு உரிமைகளை பெற்று கொடுத்திருக்கிறார்.

Sunday, May 12, 2013

இசைப்பார் இல்லை என்பதால் அந்த ராகம் இல்லாமலா போய்விடும்?

-சி.மெளனகுரு-

(70 களில் ஈழத்து நாடக அரங்கின் போக்குகள் பற்றியும் கந்தன்
கருணை நாடகப் பங்கேற்பு பற்றியுமான சிவ அனுபவப்
பதிவுகள்)


அரங்கு அரசியல் பேசியது

1969ஆம் ஆண்டு ஈழத்து தமிழ் அரங்க வரலாற்றில் மிக முக்கியமானதொரு ஆண்டாகும். அக்காலகட்டத்தில் அரங்கு அரசியல் பேசியது மாத்திரமன்றி சமூக விடுதலைக்கான காத்திரமிக்கதொரு கருவியாகவும் செயற்பட்டது.

இவ்வாண்டிலேதான் யாழ்ப்பாணத்து இந்துக் கோயில்களை தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கும் திறந்து விட வேண்டுமென்ற போராட்டம் தீவிரம் பெற்றது. சாதி அடக்கு முறைக்கு எதிரான இப்போரைத் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் முன்னின்று நடத்தியது. இப்போர் இந்து ஆகமக் கோயில்களின் கதவுகளைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக திறந்து விடுதல் என்ற நடவடிக்கையினை மையம் கொண்டபோது மட்டுவில் பன்றித் தலைச்சியம்மன் கோயிலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் போராட்டக் களங்களாயின. குறிப்பாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் நுழைவுப் போராட்டம் இலங்கை எங்ஙனும் பேசப்பட்டது.
தமிழருக்காகத் தனிநாடு கேட்டவரும், அடங்காத் தமிழர் என அழைக்கப்பட்டவருமான திரு. சி. சுந்தரலிங்கம் அவர்களே தமிழருள் ஒரு பிரிவினரான தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் கோயிலினுள் நுழைவதை மூர்க்கமாக எதிர்த்தமையையும் அன்றைய பிரபல தமிழ்த் தலைவர்கள் எனக் கருதப்பட்டோர் பலர் இப்போராட்டம் பற்றி மௌனம் சாதித்தமையையும் தமிழ் கூறும் நல்லுலகம் வியப்போடு பார்த்த காலம் அது.

போராட்டமும் போராளிகளும்

அப்போராட்டம் ஈழம் எங்ஙணும் பரந்து வாழ்ந்த முற்போக்குச் சிந்தனகள் கொண்ட மனிதாபிமான அறிஞர்களதும், கலைஞர்களதும், எழுத்தாளர்களதும் மனச்சாட்சியை உலுப்பி விட்டிருந்தது. இவர்கள் தம் எழுத்தாலும், செயலாலும் சத்தியம் மிகுந்த அப்போராட்டத்திற்கு ஆதரவு நல்கினர்.அப்போராட்டத்தில் இளம் போராளிகள் பலர் உருவாகினர். அவ்வுரிமைப் போரில் பங்கு கொண்ட பலருக்கு அன்று பிரபலியமாகியிருந்த மாசே - துங் சிந்தனைகளும் மாபெரும் சீனக் கலாச்சாரப் புரட்சியும் ஆதர்சங்களாயிருந்தன.
தமிழர் மத்தியிலே காணப்பட்ட தீண்டாமைக்கும் சாதிக் கொடுமைக்கும் எதிராக கலைஞர்களும் எழுத்தாளர்களும் அன்று ஒன்று திரண்டனர் தம் பேனாக்களைத் தூக்கினர்..
போராடிய மக்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் இரத்தக் கடன் என்ற தலைப்பில் சாதி எதிர்ப்பு போராட்டக் கவிதைத் தொகுதி ஒன்றினை மட்டக்களப்பிலிருந்து கவிஞர் சுபத்திரன் வெளியிட்டார்.

கலைச்சங்மம்


Thursday, May 02, 2013

பு.ஜ.மா.லெ.கட்சியின் புரட்சிகர மேதின ஊர்வலம் யாழ்ப்பாணம் 2013

கொட்டும் மழையில் சுன்னாகம் சந்தை வளாகத்தில் பிற்பகல் 2 மணிக்கு சைக்கிள் பேரணியுடன் ஆரம்பித்து யாழ் ஸ்ரான்லி வீதியில் உள்ள பட்டப்படிப்புகள் வளாகத்தில் பிற்பகல் 4 மணிக்கு கூட்டமும் இடம்பெற்றது.

Wednesday, May 01, 2013

சபாலிங்கம்

-
-ந.சுசீந்திரன்-
[1994 ஆம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி ச. சபாலிங்கம் அவர்கள் பிரான்ஸ் தேசத்தின் தலைநகர் பாரிசில் அவரது இல்லத்தில் வைத்து புலிகளின் கொலைப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 12.05.1994 இல் சபாலிங்கத்தின் உடல் எரியூட்டப்பட்டது. அன்றைய தினத்தில் இறுதி அஞ்சலிக்காக மயானதில் சுமார் 500க்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். அங்கு நடந்த மயான இறுதி அஞ்சலிக் கூட்டத்தில் ந.சுசீந்திரன் ஆற்றிய உரை.] 

காலத்தின் சாட்சிகளை அழித்துக் கொண்டே இருங்கள். நீங்கள் எழுதப்போகும் எங்கள் வரலாற்றை வாசிக்க இறுதியில் யார் இருக்கப் போகின்றார்கள்? தொடர்ந்தும் துப்பாக்கிகளின் கீழ்ப்படிவின் முன்னினையில் வரலாற்றைப் படிக்கவும் பாடமாக்கவும் சாம்பல் மேடுகளும் எலும்புத்தோட்டங்களும்…! இன்னும் போதாதா உங்களுக்கு? 

தின்ற மண்ணில் அவன் செத்து, அவன் அழைந்த புழுதியில் அவனது குருதியோடி, அவன் அலம்பியதண்ணீரில் அவன் அஸ்தி கரைந்து போவதை தடுத்துவிட மட்டும் உங்களால் இன்று முடிந்திருக்கின்றது. இவன் பதித்த தடயங்களை உங்கள் துப்பாக்கிகள், துர்ப் பாக்கிகள் ஒன்றும் செய்துவிடமுடியாது. மாற்றுக் கருத்தின் சிறு பொறிகளைக்கூட கண்டு குலை நடுக்கங் கொள்ளும் கோழை எப்போதுமே கொடூரமானவனாகத்தான் இருப்பான். 

Sunday, April 21, 2013

இளையதலைமுறைக்கு புதிய வாசல்






ஆசிரியர் சிதம்பரப்பிள்ளை அவர்களின் நினைவாக


-இராகவன்-
காலச்சுவடு என்ற பெயரை 2001 பிற்பகுதியில் நண்பர் குப்பிழான் ஐ. சண்முகன் வாயிலாகத்தான் நான் முதன் முதலாகக் கேள்வியுற்றேன். 1988 காலப் பகுதியில் குப்பிழான் ஐ. சண்முகன் அவர்கள் தமிழகத்திற்கு வந்து சுந்தர ராமசாமி வீட்டில் தங்கியிருந்ததாகவும் தான் இதுவரை சந்தித்த மனிதர்களுள் கேண்மை பூண்டு விருந்தோம்புவதில் சுந்தரராமசாமி போல் ஒருவரை எடுத்துக்காட்ட இயலாதென்றும் கதை கதையாகச் சொல்லி சுந்தர ராமசாமியின் மகள் தைலாவின் ஒளிப்படத்தையும் எனக்குக் காட்டியிருக்கிறார். எனினும் நான் காலச்சுவடு இதழைக் கண்டது தேவதாசனின் ‘சலன சித்திரம்’ அலுவலகத்தில்தான். தேவதாசன் ஈழத்துத் தமிழ் சினிமாவை வளப்படுத்தப் போகிறேனென ‘சலன சித்திரம்’ அமைப்பைத் தொடங்கினார். அப்போதுதான் ‘பாரதி’ திரைப்படம் வெளியாகியிருந்தது. தேவதாசன் ‘பாரதி’ திரைப்படம் குறித்து ஈழம் தமிழகம் மற்றும் புலம்பெயர் சஞ்சிகைகளில் வெளிவந்த விமர்சனக் கட்டுரைகளைத் தொகுத்து ‘பாரதி - திரைப்பட விமர்சனத் திரட்டு’ என்ற நூலை சலன சித்திர வெளியீடாகக் கொண்டுவந்திருந்தார். அந்நூல் குறித்துக் காலச்சுவடில் கண்ணன் ‘சலனபாரதி’ என்ற தலைப்பில் ஒரு விமர்சனக் குறிப்பை எழுதியிருந்தார். அக்குறிப்பு வெளியான இதழையே தேவதாசன் சலன சித்திரம் அலுவலகத்தில் பார்வைக்காக வைத்திருந்தார். அவ்விதழை எடுத்துப் புரட்டிப் பார்த்தபோது வடிவமைப்பும் உள்ளடக்கமும் அதுவரை நான் பார்த்திருந்த இதழ்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. எனினும் அவ்விதழை வீட்டிற்கு எடுத்துச்சென்று வாசிக்கத் தேவதாசன் அனுமதிக்க வில்லை.2002 பிற்பகுதியில் பருத்தித்துறைக் காணிப் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் நண்பர் உமாகாந்தன் ஒருநாள் தமது அலுவலகத்திற்கு காணியுறுதி அலுவலாக ஒருவர் வந்ததாகவும் அவர் பெயர் குலசிங்கம் என்றும் அவர் தீவிர இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடுடையவராகத் தோன்றுவதாகவும் விரும்பினால் புலோலியிலுள்ள தனது வீட்டிற்கு வரும்படி சொன்னதாகவும் என்னிடம் கூறினார். ஒருநாள் சனிக் கிழமை நானும் உமாகாந்தனும் புலோலியிலுள்ள குலசிங்கம் வீட்டிற்குப் போனோம். வீட்டில் ஒரு நூலகமே வைத்திருந்தார். யாழ் மாநகரசபை நூலகத்தில் கூட இல்லாத நூல்கள் எல்லாம் அந்த நூலகத்தில் இருந்ததைக் கண்டு பிரமிப்பிலாழ்ந்தோம். அங்கே காலச்சுவடு இதழ்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். அவ்விதழ்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் விரும்பினால் வாங்கிக்கொள்ளலாம் என்றும் குலசிங்கம் சொன்னார். அப்போது எனக்கு வேலை இல்லை. அதனால் கையில் பணப்புழக்கமுமில்லை. ஆனால் உமாகாந்தனின் நிலமை வேறுவிதமானது. அதனால் 500ரூபா கொடுத்து 50 காலச்சுவடு இதழ்களைக் குலசிங்கத்திடம் வாங்கினார். காலச்சுவடு இதழொன்றில் குலசிங்கத்தின் நேர்காணலும் வெளியாகியிருந்தது. இவ்விதழை குலசிங்கம் எங்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார். அவரிடம் வாங்கிய 50 இதழ்களையும் ஆளுக்கு 25 எனப் பிரித்து வாசித்துப் பரிமாறிக்கொள்ளத் தீர்மானித்தோம்.

Thursday, April 18, 2013

சீனா புதிய சவால்கள்- புதிய தலைவர்கள்


-மருதன்-
ஒரு பக்கம் பராக் ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கியிருக்கிறது. மற்றொரு பக்கம், சீனாவில் ஹூ ஜிண்டாவ் தனது இரண்டாவது பதவிக்காலத்தை முடிக்கும் தருவாயில் இருக்கிறார். இந்தக் கட்டுரை சீனாவின் புதிய தலைமை குறித்தும் அந்நாடு எதிர்கொண்டுள்ள முக்கியப் பிரச்னைகள் குறித்தும் சுருக்கமாக ஆராய்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு
சீனாவின் பதினெட்டாவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு கடந்த நவம்பர் 14ம் தேதி நடந்து முடிந்தது. 1.4 பில்லியன் சீனர்களை ஆளப்போகும் ஒரு புதிய தலைமையை சீனா இந்த மாநாட்டில் அறிமுகம் செய்துவைத்துள்ளது. சீனாவின் உயர்ந்த அதிகார மையமான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ ஸ்டாண்டிங் கமிட்டியில் இந்த முறை ஏழு பேர் இடம்பெறுகிறார்கள். சீனா முழுவதிலும் இருந்து திரண்டு வந்த 2200 பிரதிநிதிகள் இவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.  பத்தாண்டுகள் சீனாவை வழிநடத்திச் சென்ற ஹூ ஜிண்டாவின் அதிபர் பதவிக்காலம் மார்ச் 2013ல் முடிவடைகிறது. புதிய அதிபராக ஜி ஜின்பிங் அப்போது பொறுப்பேற்பார்.

Sunday, April 07, 2013

லண்டன் இலக்கியச்சந்திப்பு 40

லண்டன் இலக்கியச்சந்திப்பு 40 அமர்வு இரன்டு 7.04.2013

Wednesday, April 03, 2013

மெளனக்கடலில் ஒரு கல் -ஆனந்தவிகடன்


-டி.எல்.சஞ்சீவிகுமார்-


ஒரு படைப்பாளியின் பார்வையில்... ஒரு சாமானியனின் பார்வையில்... ஓர் இயலாமைவாதியின் பார்வையில்... ஈழ மக்களின் வலியை, தனுஷ்கோடி மீனவனின் துயரத்தை ஆவணப்பட மாக்கி இருக்கிறார் இயக்குநர் லீனா மணிமேலை. 



ஈழப் போரின் இறுதியில் உயிருக்குப் பயந்து தமிழகத்துக்கு அகதிகளாகத் தப்பி வரும் ஈழத் தமிழர்கள் ஒரு பக்கம், இந்தியாவிலேயே இருந்தும்கூட உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத மீனவத் தமிழர்கள் இன்னொரு பக்கம் என இரு நிலப்பரப்பு மக்களின் வாழ்வும் வலி யும்தான் கதை. ஈழத் தமிழனின் ரத்தமும் தனுஷ் கோடி மீனவனின் ரத்தமும் ஒன்றாகக் கலந்து நீலம் மறைந்து நிறம் மாறும் வங்காள விரிகுடா தான்... 'செங்கடல்’!

படப்பிடிப்புக்கு அனுமதி மறுப்பு, சென்சார் பிரச்னை என பல பிரச்னைகளைத் தாண்டி மேல் முறையீட்டு ஆணையத்தின் தலையீட்டால், 'பொது இடங்களில் திரையிடலாம்’ என்று அனுமதி வாங்கி வெற்றிபெற்றிருக்கிறார் இயக்குநர் லீனா மணிமேகலை.

Monday, April 01, 2013

BBC சுசரித்த கம்லத் அவர்கள் மரணம்


இலங்கையின் பிரபலமான மொழியியலாளரும் எழுத்தாளருமான சுசரித்த கம்லத் அவர்களின் மரணம் இலங்கையின் இலக்கிய உலகுக்கு பெரும் இழப்பு என்று பலரும் கூறியுள்ளனர்.
சனிக்கிழமையன்று காலமான அவரது இறுதிச் சடங்குகள் திங்கட்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளன.
ஆங்கில-சிங்கள மொழி அகராதியை மேம்படுத்தியவர் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு.
மார்க்ஸிய இலக்கிய திறனாய்வை சிங்கள் மொழியில் அறிமுகம் செய்தவர் இவரே என்று கூறுகிறார் அவருடன் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் எம். ஏ. நுஃமான்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வந்ததால், அவர் சிங்கள ஏகாதிபத்தியவாதிகளின் எதிர்ப்பையும் சந்தித்திருந்ததாகவும் பேராசிரியர் எம். ஏ. நுஃமான் கூறியுள்ளார்.
சுசரித்த அவர்களால், பிபிசி சிங்கள சேவையில் 15 வருடங்களாக தொடர்ந்து நடத்தப்பட்ட ''ஹீ மினி ஆர'' என்னும் சிங்கள பாடல் வரிகளின் இலக்கியம் பற்றிய நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக திகழ்ந்த ஒன்றாகும்.

சாதியமைப்பு பற்றிஓர்ஆவணப்படம்

-மாதினி -விக்னேஸ்வரன்- 

இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள சாதியமைப்பு பற்றி விரிவாக இந்த ஆவணப்படம் பேசாவிட்டாலும் ஓரளவுக்கு பேசியுள்ளது என்றே கூறலாம் சாதியமைப்பினால் தனித் தனி கோயில்கள் வெவ்வேறான சமூகம் என பிரிக்கப்பட்டுள்ளதை இந்த ஆவணப்படம் எடுத்துக்காட்டியுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக இந்து மன்றத்தினால் பல்கலைக்கழக பீடங்களுக்கு நடாத்தப்பட்ட ஆவணப்படப்போட்டியில் முதலாம் இடத்தையும் சிறந்த வசன அமைப்புக்காக பரிசும் பெற்றுள்ளது


 Religion is for man Man is not for religion this documentary film is based on caste system & Hinduism.

லண்டன் இலக்கியச்சந்திப்பு40


Sunday, March 31, 2013

தோழர் சீனிவாசனுக்கு எம் அஞ்சலி.



தோழர் சீனிவாசன்

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் இன்று 5.5.2012, சனிக்கிழமை காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 61.

எழுபது களின் பிற்பகுதியிலிருந்தே அவர் நக்சல்பாரி புரட்சிகர அரசியலின் ஆதரவாளராக இருந்து, பின்னர் அமைப்பு நடவடிக்கைகளில் தன்னை இணைத்துக் கொண்டார். அமைப்பு நடவடிக்கைகளிலும், புரட்சிகர அரசியலின் மீதும் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக, அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வில் விடுபட்டு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையாக அமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். மகஇக மாநிலப் பொருளாளராகப் பணியாற்றியது மட்டுமின்றி, பல்வேறு போராட்டங்களிலும் முன்னணிப்பாத்திரம் ஆற்றி, பல முறை சிறை சென்றிருக்கிறார்.
பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளத் தயங்காமை, அர்ப்பணிப்பு உணர்வு, உழைப்பு ஆகியவை அவர் வெளிப்படுத்திய சிறந்த பண்புகள். 60 வயதை நெருங்கிக் கொண்டிருந்த நிலையிலும், அவரிடமிருந்த ஒரு இளைஞனுக்குரிய சுறுசுறுப்புடனும், உற்சாகமும் எள்ளளவும் குன்றவில்லை.

கடந்த ஓராண்டுக்கு முன்னர் தான், அவரை கணையப் புற்றுநோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இது ஆட்கொல்லி நோய் என்று மருத்துவர்கள் வெளிப்படையாக தெரிவித்துவிட்ட பின்னரும், கடும் வலியால் வேதனைப்படும் நிலையிலும் கலக்கமோ அச்சமோ சிறிதுமின்றி அமைப்பு நிகழ்ச்சிகள், போராட்டங்கள் பற்றி கேட்டறிதல், நமது பத்திரிகைகளைப் படித்தல், தன்னை சந்திக்க வருகின்ற தோழர்களுடன் மகிழ்ச்சியுடன் உரையாடுதல் என உறுதியையைம் உற்சாகத்தையும் தோழர் வெளிப்படுத்தி வந்தார்.

இன்று காலை அவரது வாழ்க்கை முடிவுற்றது. ஒரு விபத்தைப் போல புற்று நோய் அவரைத் தாக்கியிருக்காத பட்சத்தில், தன் வாழ்நாள் முழுவதும் தன்னை அமைப்புப் பணியில் அவர் ஈடுபடுத்திக் கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக புரட்சிகர அரசியலில் தோளோடு தோள் நின்று ஓய்வின்றி உழைத்த தோழர் சீனிவாசனுக்கு, கனத்த இதயத்துடனும் கண்ணீருடனும் விடைகொடுக்கிறோம். தோழர் சீனிவாசனுக்கு எம் சிவப்பஞ்சலி.

அவரது உடல் சென்னை சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில்
இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலம் மே 6 ஞாயிறு காலை 8 மணிக்கு புறப்படும்.
தொடர்புக்கு: செல்பேசி: 99411 75876


தகவல்: மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

Saturday, March 30, 2013

புரட்சிகர தோழர் இ.கா சூடாமணி இறப்பெய்தினார்


பொதுவுடமை இயக்கத்தின் புரட்சிகர தோழர் இ.கா சூடாமணி இயற்கை எய்தினார் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கடசியின் மத்திய குழு உறுப்பினரும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராகவும் தமிழ்பவுத்தகாங்கிரசின் தலைவர்களில் ஒருவராகவும்இருந்து போராட்ட தழும்புகள் பெற்றவரும் லங்கா சீமேந்து தொழிற்சாலையின் தொழிற்சங்க தலைவரும் புதிய பூமி புதிய நீதி பத்திரிகைகளின் நிர்வாகக் குழு உறுப்பினரும் தனது ஜம்பத்தைந்து வருட கால அரசியல் பணியில் பல போராட்டங்களில் பங்கு பற்றி முன்னெடுத்த முன்னுதாரணமிக்க கம்யூனிஸ்ட் போராளியுமாவார் 29.03.2013 அன்று வவுனியாவில் இயற்கை எய்தினார் அவருக்கான இறுதி அஞ்சலி நிகழ்வு 01.04.2013 புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கடசியின் தலைமையில் அவரது வவுனியா தோணிக்கல் இல்லத்தில் இடம்பெற்று பூந் தோட்டம் மயானத்தில் புகளுடல் தகனம் செய்யப்படும்.

Sunday, March 24, 2013

பரதேசி-திரை விமர்சனம்

-அமிர்தம் சூர்யா- 

 நாம் குடிக்கும் கதகதப்பான காலை நேரத் தேநீர் உருவாக எத்தனை ஆயிரம் மக்களின் வாழ்வு சிதைக்கப்பட்டு அவர்களின் ரத்தமும் வியர்வையும் தேயிலைத் தோட்டத்துக்கு எப்படி உரமாகிறது என்பதைச் சொல்லும் கதை ‘பரதேசி’. பஞ்சம் பிழைக்க 1939ல் சாலூரிலிருந்து நாற்பத் தெட்டு நாட்கள் கால்கடுக்க பச்சை மலைக்கு வேலை தேடி நடக்கிறது ஒரு சமூகம். அதில் கதை நாய கன்(அதர்வா) ஒட்டுப் பொறுக்கியும் ஒருவன். போகிற போதே சிலர் செத்து வீழ்கிறார்கள். தேயிலைத் தோட் டத்தில் பனி, அட்டைக்கடி, உணவு பற்றாக்குறை, பாலியல் கொடுமை, தப்பிக்க நினைத்தால் கால் நரம்பு துண்டிப்பு, இவற்றோடு கொள்ளை நோயும் தொடர்ந்து கொள்ள... கொத்து கொத்தாக மடிகிறார்கள் மக்கள். தன்னுடைய அங்கம்மாவை (வேதிகா) பார்க்கவே முடியாத சூழலில் ‘நியாயமாரே’ என்று அழுகிறார் அதர்வா. குழந்தையோடு கொத்தடிமையாக வேதிகா வும் வந்துசேர ‘ஓ’வென வானம் பிளக்கும்படி ‘இந்த நரகுழியில் நீயுமா வந்திட்ட?’ என்று கதறுகிறான் - கதை முடிகிறது. இந்தப்படம் டேனியலின் எரியும் பனிக்காடு நாவலின் தழுவல், தாக்கம் என்று சொல்லப்பட்டாலும் அது இல்லை. அதைவிட கால குளறுபடி, தெளிவாக நிலம் குறித்தான தகவல் இன்மை, கருத்து மோசடிகளை இந்தப் படத்தில் வரிசையாக அடுக்கலாம்.