-மருதன்-
ஒரு பக்கம் பராக் ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கியிருக்கிறது. மற்றொரு பக்கம், சீனாவில் ஹூ ஜிண்டாவ் தனது இரண்டாவது பதவிக்காலத்தை முடிக்கும் தருவாயில் இருக்கிறார். இந்தக் கட்டுரை சீனாவின் புதிய தலைமை குறித்தும் அந்நாடு எதிர்கொண்டுள்ள முக்கியப் பிரச்னைகள் குறித்தும் சுருக்கமாக ஆராய்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு
சீனாவின் பதினெட்டாவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு கடந்த நவம்பர் 14ம் தேதி நடந்து முடிந்தது. 1.4 பில்லியன் சீனர்களை ஆளப்போகும் ஒரு புதிய தலைமையை சீனா இந்த மாநாட்டில் அறிமுகம் செய்துவைத்துள்ளது. சீனாவின் உயர்ந்த அதிகார மையமான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ ஸ்டாண்டிங் கமிட்டியில் இந்த முறை ஏழு பேர் இடம்பெறுகிறார்கள். சீனா முழுவதிலும் இருந்து திரண்டு வந்த 2200 பிரதிநிதிகள் இவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். பத்தாண்டுகள் சீனாவை வழிநடத்திச் சென்ற ஹூ ஜிண்டாவின் அதிபர் பதவிக்காலம் மார்ச் 2013ல் முடிவடைகிறது. புதிய அதிபராக ஜி ஜின்பிங் அப்போது பொறுப்பேற்பார்.
