Thursday, April 18, 2013

சீனா புதிய சவால்கள்- புதிய தலைவர்கள்


-மருதன்-
ஒரு பக்கம் பராக் ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கியிருக்கிறது. மற்றொரு பக்கம், சீனாவில் ஹூ ஜிண்டாவ் தனது இரண்டாவது பதவிக்காலத்தை முடிக்கும் தருவாயில் இருக்கிறார். இந்தக் கட்டுரை சீனாவின் புதிய தலைமை குறித்தும் அந்நாடு எதிர்கொண்டுள்ள முக்கியப் பிரச்னைகள் குறித்தும் சுருக்கமாக ஆராய்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு
சீனாவின் பதினெட்டாவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு கடந்த நவம்பர் 14ம் தேதி நடந்து முடிந்தது. 1.4 பில்லியன் சீனர்களை ஆளப்போகும் ஒரு புதிய தலைமையை சீனா இந்த மாநாட்டில் அறிமுகம் செய்துவைத்துள்ளது. சீனாவின் உயர்ந்த அதிகார மையமான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ ஸ்டாண்டிங் கமிட்டியில் இந்த முறை ஏழு பேர் இடம்பெறுகிறார்கள். சீனா முழுவதிலும் இருந்து திரண்டு வந்த 2200 பிரதிநிதிகள் இவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.  பத்தாண்டுகள் சீனாவை வழிநடத்திச் சென்ற ஹூ ஜிண்டாவின் அதிபர் பதவிக்காலம் மார்ச் 2013ல் முடிவடைகிறது. புதிய அதிபராக ஜி ஜின்பிங் அப்போது பொறுப்பேற்பார்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கூடுகிறது. அவ்வாறு கூடும்போது தலைமை மாற்றம் குறித்தும் கொள்கை பிரகடனங்கள் குறித்தும் அறிவிப்புகள் வெளிவருவது வழக்கம். கறுப்பு நிற கோட், சூட் அணிந்து தலைவர்களும் பிரநிதி நிதிகளும் கூடும் இந்தப் பிரமாண்டமான நிகழ்வு சீனத் தலைமை மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின்  பலத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைவது வழக்கம். மாநாட்டு விவாதங்கள் மூடிய அறைகளுக்குள் நடைபெறும். பின்னர் பொதுச் சந்திப்பின்போது முக்கிய அம்சங்கள் வெளியிடப்படும். என்றாலும், தலைமை மாற்றமும் பொலிட் பீரோ உறுப்பினர்கள் தேர்வும் மாநாட்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டுவிடுகின்றன என்று சொல்லப்படுகிறது.
பொதுவாக கடைபிடிக்கப்படும் நடைமுறை இது. மத்திய கமிட்டி உறுப்பினர்களை கட்சி மாநாடு தேர்ந்தெடுக்கிறது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் கமிட்டி உறுப்பினர்கள் பொலிட் பீரோ உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதுதான் பொதுவான நடைமுறை என்றாலும், கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுகளையே கட்சி காங்கிரஸ் எந்த மாற்றமும் இன்றி முன்மொழிகிறது என்றும் சொல்கிறார்கள்.
புதிய தலைவர்கள்
ஏழு புதிய தலைவர்களைக் கொண்ட பொலிட் பீரோ இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பின்வருமாறு. 1) ஜி ஜின்பிங் (Xi Jinping) 2) லி கெகியாங்  (Li Keqiang) 3) ஷாங் டெஜியாங் (Zhang Dejiang) 4) யு ஷெங்ஷெங் (Yu Zhengsheng) 5) லியு யுன்ஷன் (Liu Yunshan) 6) வாங் கிஷன் Wang Qishan) 7) ஷாங் கோலி ( Zhang Gaoli).
தற்போதைய பிரீமியரான வென் ஜியாபோ இடத்தில் நியமிக்கப்படவுள்ள லி கெகியாங், ஹூ ஜிண்டாவுக்கு நெருக்கமானவர். புதிய அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள ஜி ஜின் பிங் முந்தைய அதிபர் ஜியாங் ஜெமினுக்கு நெருக்கமானவர். இவர் போக பொலிட் பீரோவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேலும் நான்கு பேர் ஜியாங் ஜெமின் ஆதரவாளர்கள். 86 வயது  ஜியாங் ஜெமினின் செல்வாக்கு இன்றளவும் கட்சியில் நீடிப்பதை இது உறுதிப்படுத்துகிறது.
சீனாவைப் பொருத்தவரை ஆட்சி மாற்றம் என்பது ஒரு தலைமுறையிடம் இருந்து இன்னொரு தலைமுறைக்கு ஆட்சியும் அதிகாரமும் மாற்றம் பெறுவதுதான்.  தற்போது ஹூ தலைமை வகிக்கும் பொலிட் பீரோவில் 9 பேர் இடம்பெற்றுள்ளபோதும், மார்ச் 2013 ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு 7 பேர் மட்டுமே இடம்பெறுவார்கள்.
அடுத்த அதிபர்
கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் மத்திய ராணுவ கமிஷனின் தலைவராகவும் ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த பத்தாண்டுகள் சீனாவை முன்னகர்த்திச் செல்லும் பொறுப்பு இவரையே சாரும்.‘சீனாவை ஒரு வலிமையான, சக்தி வாய்ந்த நாடாக உருமாற்ற நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்கவேண்டும்.’ என்று மாநாட்டில் குறிப்பிட்டுள்ளார் ஜி ஜின்பிங்.
ஜி ஜின்பிங்கை அறிந்தவர்கள் அவரை ஒரு கன்சர்வேடிவ் என்றே அழைக்கிறார்கள். ராணுவத்தோடு நெருங்கிய தொடர்புகள் கொண்டிருக்கும் ஜி, அரசுத் தலைமையிலான தொழில்துறைக்கு ஆதரவானவர்.
ஜி ஜின்பிங், பெய்ஜிங்கில் ஜூன் 1953ல் பிறந்தவர். இவருடைய தந்தை ஜி ஷோங்ஷன் (Xi Zhongxun) முதல் தலைமுறை சீனத் தலைவர்களில் ஒருவர். சீனப் புரட்சியிலும் மக்கள் சீனக் குடியரசை நிர் மாணிப்பதிலும் முப்பதுகளில் கெரில்லா தளங்கள் உருவாக்கத்திலும் பங்காற்றியவர். பிற்காலத்தில் புகழ் இழந்து பலமுறை கட்சியில் இருந்தும் பொறுப்புகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டவர்.
பதினைந்தாவது வயதில் ஜி ஜின்பிங் ஷாங்ஸி கிராமப் பகுதிகளுக்கு ‘மக்களிடம் இருந்து கற்றுக்கொள்வதற்காக’ அனுப்பிவைக்கப்பட்டார். ஏழு ஆண்டுகள் கிராமப்புற மக்களோடு இணைந்து கடுமையாகப் பணியாற்றினார். அப்போது அவரை அறிந்தவர்கள், ஜியை எளிமையானவராகவும் கடுமையான உழைப்பாளியாகவும் நினைவுகூர்கிறார்கள். மாவோ தொடங்கிய கலாசாரப் புரட்சியின் ஓரங்கமாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. தற்போதைய அதிபரான ஹூ ஜிண்டாவும் கிராமப்புறங்களில் இவ்வாறு பணியாற்றியவர்தான்.
கலாசாரப் புரட்சியை வெளிப்படையாக விமரிசித்தவர் என்றாலும், கிராமப்புறங்களில் விவசாயிகளோடு இணைந்து பணியாற்றிய அனுபவம் தனக்கு இன்றளவும் உதவிகரமாக இருப்பதாக ஜி ஜின்பிங் வேறோரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். பின்னர்,சிங்குவா பல்கலைக்கழகத்தில் ரசாயனத் தொழில்நுட்பம் பயின்றார். 1974ல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்டார். ஹெபேய், ஃபுஜியான், ஜெஜியாங் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றினார். 2007ம் ஆண்டு ஷாங்காய் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட முக்கியப் பணி, ஊழலை ஒழிப்பது. 2008ல் துணை அதிபர் ஆனார்.
வெளிப்படையாகப் பேசக்கூடியவர் என்றும் ஊழலைச் சகித்துக்கொள்ளாதவர் என்றும் ஜி பெயர் பெற்றிருக்கிறார். 2004ல் ஒருமுறை அவர் செய்த அறிவிப்பு இது. ‘உங்கள் மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரை கட்டுக்குள் வைத்திருங்கள். தனிப்பட்ட லாபத்துக்காக அதிகாரத்தைத் தவறாகப் பிரயோகிக்காதீர்கள்.’ ஜி ஜின்பிங்கின் மனைவி பெங் லியுவான் ஒரு பாடகர். ஜியைக் காட்டிலும் இவரே சீனாவில் பிரசித்தி பெற்றவர் என்கின்றன மேற்கத்திய ஊடகங்கள்.
ஹூ ஜிண்டாவ் ஆட்சிக்காலம்
நவம்பர் 2002 தொடங்கி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக இருந்து வருகிறார் ஹூ ஜிண்டாவ். ஹூவின் பத்தாண்டு கால ஆட்சியில் சீனா மிகப் பெரிய அளவில் பொருளாதார முன்னேற்றம் கண்டுள்ளது.
முதலாளித்துவ சந்தை முறை 1978ல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1990களில் பல்வேறு துறைகளில் தனியார்மயமாக்கம் மும்முரமாக அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பல பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கின. சீனாவின் குறைந்த கூலி அவர்களைச் சுண்டி இழுத்தது.
ஹூ ஜிண்டாவின் ஆட்சிக்காலத்தில் சீனப் பொருளாதாரம் நான்கு மடங்கு வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. ‘சீனாவின் சாலைகளும் ரயில் போக்குவரத்தும் வான் உயரக் கட்டடங்களும் உலகைப் பொறாமை கொள்ள வைக்கின்றன. கிராமப்புறங்களில் வசிக்கும் சீனர்களின் வாழ்க்கைத் தரத்தில் புரட்சிகர மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.’ என்கிறார் பெய்ஜிங்கைச் சேர்ந்த மால்கம் மூர். (டெலிகிராஃப், நவம்பர் 11). அதே கட்டுரையில் இடம்பெறும் வாங் ஜியோஹாங் என்னும் 24 வயது ரஷ்ய மொழிபெயர்ப்பாளரின் கருத்து இது. ‘முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் சீனா பொருளாதாரத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. நான் வசிக்கும் அன்ஹுய் மாகாணத்தில் மக்களின் சுகாதாரம் முன்னேறியுள்ளது. ஊதியங்கள் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளன.’
2002ல் உலகளவில் பொருளாதார பலம் கொண்ட நாடுகள் வரிசையில் சீனா ஆறாவது இடத்தில் இருந்தது. இப்போது, ஜப்பானைப் பின்னுக்குள் தள்ளிவிட்டு உலகின் இரண்டாவது பெரும் பொருளாதார சக்தியாக (முதலிடம் அமெரிக்கா) சீனா வளர்ந்துள்ளது.
ஹூ ஜிண்டாவ் நிர்வாகம் பல நகரங்களின் அடிப்படை கட்டுமானத்தை மாற்றியமைத்துள்ளன என்கிறார்கள் பலர். பெய்ஜிங்கில் சப்வே பாதைகள் பல உருவாகியுள்ளன. அடுக்குமாடிக் கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. சாலை நெருக்கடி குறைந்துள்ளது.  ‘பத்தாண்டுகளுக்கு முன்னால் சீனாவின் சிறு மற்றும் நடுத்தர நகரங்கள் தரிசு நிலப் பகுதிகளாக இருந்தன. இப்போது அவை நவீனமடைந்துள்ளன.’ என்கிறார் சுதந்தரச் சந்தைப் பொருளாதாரத்தை உயர்த்திப்பிடிக்கும் 83 வயது மாவோ யுஷி.
ஹூ ஜிண்டாவ் சந்தித்ததைப் போன்ற சிக்கல்களையும் நெருக்கடிகளையும் வேறு ஒருவர் சந்தித்திருந்தால் அவர் பதவி எப்போதோ பறிபோயிருக்கும் என்கிறார் மால்கம் மூர். ‘2008ல் லாசாவில் திபெத்தியர்கள் ஹன் சீனர்கள்மீது தாக்குதல் நடத்தினார்கள். சிச்சுவான் நிலநடுக்கத்தில் 80,000 பேர் இறந்துபோனார்கள். கலப்படம் செய்யப்பட்ட பால் உண்டு 3 லட்சம் சீனக் குழந்தைகள் பாதிப்படைந்தனர். அடுத்த ஆண்டு, ஹன் சீனர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் பலர் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு, பொலிட் பீரோ உறுப்பினர் போ ஜிலாய் சரிவு ஏற்பட்டது. பல மூத்த தலைவர்களின் சொத்து விவகாரங்கள் வெடித்தன.’ ஆனால் அனைத்து சவால்களையும் ஹூ ஜிண்டாவால் பெரிய பிரச்னையின்றி கடந்து வர முடிந்தது.
சீனா நிச்சயம் மேற்கை பிரதி எடுக்காது என்று ஹூ ஜிண்டாவ் அறிவித்திருக்கிறார். ஹூவின் பொருளாதாரக் கொள்கையை எந்தவித மாற்றமும் இன்றி ஜி ஜின்பிங் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சவால்கள்
சீனா எதிர்கொண்டுள்ள முதன்மையான சவால் என்ன என்பதை மாநாட்டில் சிவப்பு நட்சத்திரங்கள் ஜொலிக்கும் கொடிக்குக் கீழே நின்றபடி  ஹூ ஜிண்டாவ் மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார். ‘ஊழலை ஒழிக்காவிட்டால் அது கம்யூனிஸ்ட் கட்சியைக் கொன்றொழித்துவிடும். மட்டுமின்றி, அரசாங்கத்தையும் கவிழ்த்துவிடும்.’ இதைத் தவிர்க்கவேண்டுமானால், ‘உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் கடுமையான சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும். தங்கள் குடும்பத்தையும் தங்களுக்குக் கீழ்பணிபுரியும் ஊழியர்களையும் தக்க முறையில் கண்காணிக்கவேண்டும்.’ சட்டத்துக்கு மேலானவர்கள் என்று இங்கு யாருமில்லை என்றார் ஹூ. ‘தவறு இழைப்பவர்கள்மீது நீதிமன்றம் இரக்கம் காட்டாது.’
இத்தனை கடுமையான ஒரு எச்சரிக்கையை ஹூ ஜிண்டாவ் விடுத்திருப்பதற்கு போ ஜிலாய் சம் பவமும் ஒரு காரணம். பொலிட் பீரோ உறுப்பினரான போ ஜிலாயின் மனைவி பிரிட்டன் தொழிலதிபர் நீல் ஹேவுட் என்பவரைக் கொன்றதும், அந்தக் கொலையை மறைக்க போ தன் அதிகாரத்தைப் பயன்படுத்தியதும் தெரிய வந்ததையடுத்து, போ பதவி நீக்கம் செய்யப்பட்டார்.  கடந்த ஆண்டு, லியு ஷிஜுன் என்னும் ரயில்வே மந்திரிமீது ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்பட்டு அவருடைய பதவி பறிக்கப்பட்டது.
உயர் மட்டத்தில் மட்டுமல்ல, உள்ளூர் அளவிலும் ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்திருக்கின்றன. ஊழலுக்கு எதிராக சீனா முழுவதிலும் நடைபெறும் மக்கள் போராட்டங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
பொருளாதாரத் துறையைப் பொருத்தவரை, உடனடியாகக் கவலைப்படுவதற்கு எதுவுமில்லை என்றாலும், சந்தை இன்னமும் சுதந்தரமாகச் செயல்பட அனுமதிக்கப்படவேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். ‘அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் ஒருங்கே நடைபெறவேண்டும்’ என்கிறது ஒரு சீனப் பத்திரிகை. சந்தையில் அரசாங்கத்தின் கரம் வலுவாக இருப்பதாகவும் அவ்வப்போது அதன் போக்கை இடைமறிப்பதாகவும் இவர்கள் கூறுகிறார்கள்.
நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான இடைவெளி பெருகியிருப்பது சீனா எதிர்கொண்டுள்ள மற்றொரு முக்கியச் சவால். 1985ல் இருந்ததைவிட இப்போது இருக்கும் நகர கிராம இடைவெளி 68 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் ஒரு சாராருக்கே அதிகம் சென்று சேர்கிறது என்பதை இது அழுத்தமாக உணர்த்துகிறது.  இவை போக, மக்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பதை ஜி ஜின்பிங் தனது மாநாட்டு உரையில் குறிப்பிட்டார். ‘நல்ல கல்வி. சமூகப் பாதுகாப்பு. மேம்பட்ட மருத்துவ வசதி. சுத்தமான சூழல்.’
இவற்றை அடைவதற்கு ‘நாம் செல்லவேண்டிய தூரம் அதிகம்’ என்று குறிப்பிடும் ஜி ஜின்பிங் தனது கட்சித் தோழர்களுக்கு விடுத்த வேண்டுகோள் இதுதான். ‘மக்களோடு மக்களாக நாம் நெருங்கிப் போகவேண்டும். அவர்களுடைய சுக, துக்கங்களில் பங்கேற்கவேண்டும். இரவும் பகலும் நம் கடமையை நேர்மையாகச் செய்யவேண்டும்… வரலாற்றைப் படைப்பவர்கள் மக்கள். அவர்களே நம்முடைய நாயகர்கள். நாம் அவர்களிடம் இருந்தே பலம் பெறுகிறோம். நாம் அனைவராக ஒற்றுமையாக இருக்கும்வரை, நம்மால் சமாளிக்கமுடியாத பிரச்னை என்று எதுவொன்றும் இருக்கமுடியாது.’
0
பெட்டி செய்தி
சீன அரசை விமரிசித்ததற்காக ஹூ ஜிண்டாவ் அரசால் கைது செய்யப்பட்ட அய் வெய்வெய் (Ai Weiwei) என்னும் கலைஞர், புதிய சீன அதிபரிடம் இருந்து தான் எதிர்பார்க்கும் ஆறு முக்கிய மாற்றங்களைப் பட்டியலிடுகிறார்.
  1. தடையின்றி, தணிக்கையின்றி இணையத்தளத்தைப் பயன்படுத்தும் உரிமை. செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சியிலும் எவரும் தங்கள் கருத்தை அச்சமின்றி வெளிப்படுத்தும் உரிமை.
  2. கவிஞர்கள், ஓவியர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் தங்கள் படைப்பை தங்கள் விருப்பப்படி உருவாக்க அனுமதிக்கப்படவேண்டும்.
  3. சுதந்தரமான நீதி விசாரணை அமைப்பு. வெளிப்படையான விசாரணை முறை.
  4. உயர் அதிகாரிகள் அவ்வப்போது தங்கள் சொத்துக்கணக்கைக் காண்பிக்கவேண்டும்.
  5. சீனாவின் வெவ்வேறு சிறுபான்மையின மக்களும் அவர்களுடைய மத, கலாசார நம்பிக்கைகளும் காக்கப்படவேண்டும்.
  6. அரசு மனிதாபிமானத்துடன் செயல்படவேண்டும்.
பொதுவாக, பதவிக்காலம் முடிந்ததும் அதிபர்கள் திரைக்குப் பின்னால் நகர்ந்து மீடியா வெளிச்சத்தில் இருந்து கிட்டத்தட்ட முழுவதுமாக மறைந்துவிடுகிறார்கள். அதே சமயம், கட்சியில் அவர்கள் செல்வாக்கு மறைந்துவிடுவதில்லை. ஹூ ஜிண்டாவுக்கு முன்பு அதிபர் பதவி வகித்த ஜியாங் ஜெமின், தனது அதிபர் பதவியைத் துறந்த பிறகும் மத்திய ராணுவக் கமிஷனின் தலைவராக 2 ஆண்டுகாலம் நீடித்தார். ஆனால் ஹூ ஜிண்டாவ் அந்தப் பொறுப்பையும் சேர்த்தே துறந்திருக்கிறார். மார்ச் 2013க்குப் பிறகு, அரசியல் களத்தில் இருந்து முற்றிலுமாக ஹூ விலகிக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி:ஆழம்

No comments: