Saturday, May 25, 2013

டி.எம்.எஸ் .மக்களின் பாடகன்.

-ஷாஜி-
                            இசை பயிற்சியல்ல இசை உணர்ச்சி

''நான் டி.எம்.எஸ் பாடல்களை வெறுக்கிறேன்'' என்று இப்போதுள்ள ஒரு தமிழ் பின்னணிப்பாடகர் என்னிடம் சொன்னார். அந்த வெறுப்புக்கான காரணத்தைக் கேட்டபோது அவரால் சரியாகச் சொல்ல முடியவில்லை. ''அவருடைய பாடல்கள் தமிழ்நாட்டின் வெயிலையும் புழுதியையும்தான் ஞாபகத்துக்குக் கொண்டுவருகின்றன'' என்று சொன்னார். ''நீங்கள் கோடைவிடுமுறைக்கு மட்டும் தமிழ்நட்டுக்கு வந்திருப்பீர்கள். அப்போது மட்டுமே அந்தப்பாட்டுகளைக் கேட்டிருப்பீர்கள்'' என்று நான் சொன்னேன். தமிழ்நாடில் பிறந்து வேறு பகுதிகளில் வளர்ந்த ஒரு சிறுவனின் மனப்பதிவு மட்டும்தான் அது. சிலர் அந்த மனப்பிராயத்தை தாண்டுவதேயில்லை!

நானும் சிறுவயதில் டி.எம்.எஸ் பாட்டை அவ்வளவாக விரும்பவில்லை. ஜேசுதாசை உலகிலேயே பெரிய பாடகர் என்று நினைத்திருந்த காலகட்டம் அது. ஆனால் கொஞ்சவருடங்களுக்குள்ளேயே டி.எம்.எஸ் பாட்டை கவனிக்க ஆரம்பித்தேன். அவரது பாட்டு என் மனதில் தீவிரமான பதிவை உண்டுபண்ணியிருந்தது என்ற ஒரே காரணத்தால் ஒரு முறை அவரது பாடலொன்றை பள்ளிநிகழ்ச்சியில் பாடினேன். பாடலின் வரிகளோ அதன் மெட்டோ எதுவுமே சரியாக தெரியாமல் மேடையேறி மானத்தை வாங்கினேன். மேற்கொண்டு நான் பாட்டே பாடக்கூடாது என்று எச்சரித்தார் தலைமையாசிரியர்.

'அண்ணாச்சி' என்று நாங்கள் அழைத்த ஒருவரிடமிருந்து தான் டி.எம்.எஸ் பற்றிய என் நினைவுகள் ஆரம்பிக்கின்றன. 'அண்ணாச்சி' என்றுதான் எல்லா தமிழர்களையும் எங்களூரில் சொல்வார்கள். மற்றபடி அவர் பெயரே தெரியவில்லை. அவர் ஒரு தேநீர் கடையில் தினக்கூலித் தொழிலாளர். கரிய மெலிந்த மனிதர். முகத்தில் சின்னப்பையன்களைப்போல ஒரு இனிய சிரிப்பு உண்டு. 'சத்தியமே லட்சியமாய் கொள்ளடா' பாட்டை அவர்
அருமையாக பாடுவார். அதைக் கேட்டநாள் முதல் அந்த அண்ணாச்சியே என் கதாநாயகன் என உறுதிபூண்டேன்.

டீக்கடைக்கு கிராமத்துக் கிணறுகளில் இருந்து தண்ணீர் சேந்தி சுமந்துகொண்டுவருவது அவரது வேலை. சமையலெண்ணை வைத்திருக்கும் பெரிய சதுர தகர டின்களை மூங்கிலின் இருபக்கமும் கட்டி நீர் நிறைத்து தோளில் காவடியாக தூக்கி வருவார். அவருடனேயே நடந்து சென்று அவரிடம் 'சத்தியமே லட்சியமாய்' பாடும்படி சொல்லி வற்புறுத்துவேன். சிலசமயம் அவர் பாடவும் செய்வார். நான் அந்த 'சத்தியமே...' என்ற தீவிரமான எடுப்பையும் 'செல்லடா' என்ற மென்மையான முடிப்பையும் ஒருபோதும் மறக்க முடியாது. ஏனோ அந்த டீக்கடைவேலையிலிருந்து ஒருநாள் அவர் நீக்கப்பட்டபோது, கண்ணீர் வடித்தபடி அண்ணாச்சி எங்களூரைவிட்டு சென்ற காட்சியையும் என்னால் மறக்கமுடியாது.

'பட்டிக்காடா பட்டணமா', 'அடி என்னடி ராக்கம்மா', 'பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த' போன்ற டி.எம்.எஸ் பாடல்களெல்லாம் எங்கள் குளிர்ந்த மலைக்கிராமங்களில் மிகப்பிரபலமாக இருந்தன. ஆரம்பத்தில் டி.எம்.எஸ் பாட்டை வெறுத்த நான் மெல்லமெல்ல அவரது உணர்ச்சிகரமான பாடும் முறைக்காக அவரை விரும்ப ஆரம்பித்தேன். ஆனால் ஹைதராபாதில் நான் வாழ்ந்த காலகட்டத்தில்தான், நான் டி.எம்.எஸ் பாடல்களை முழுமையாகக் கேட்டேன்.

ஃபெரோஸ் குடா என்னும் அரைச்சேரிப்பகுதியில்தான் நான் அப்போது வாழ்ந்துவந்தேன். இந்தியா முழுக்க இருந்து வேலைதேடிவந்த பிரம்மசாரிகள் அந்த தெருகக்ளில் அலைந்தனர். அவர்கள் இடுங்கலான ஒற்றை அறைக் குடியிருப்புகளில் சேர்ந்து வாழ்ந்தார்கள். அங்கேயே சமைத்துச் சாப்பிட்டு, ஒண்டிக்கொண்டு தூங்கினார்கள். ஒருவரோடொருவர் கலந்து, ஒருவர் கனவை ஒருவர் பகிர்ந்து, வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிப்பதைப்பற்றி
பேசியே நாட்களை கழித்தனர். தமிழ்நாட்டு வெயிலைவிட ஹைதராபாதின் கோடைவெயில் கடுமையானது. கூரைமேலும் மொட்டைமாடியிலும் போய் படுத்துத் தூங்குவார்கள். நானும் அவர்களில் ஒருவன். எங்கள் தெருவின் மூலையில் ஒருவர் இருந்தார். பிரம்மசாரிதான். ஆனால் தனியாக ஒரு ஒற்றையறையில் குடியிருந்தார். வெளியே வருவதோ மற்றவர்களிடம் பழகுவதோ சுத்தமாக கிடையாது. குமரி மாவட்டம் குழித்துறை அவரது ஊர், பெயர் டென்னிஸ். வெயில் நாற்பத்தேழு டிகிரியை தொட்டாலும் அவரை வெளியே பார்க்கமுடியாது!

காலையிலேயே எழுந்துவிடுவார். உடனே தன் டேப் ரிகார்டரில் டி.எம்.எஸ் பாடிய ஒரு பக்திப்பாடலைப்போடுவார். 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கிலகளே', 'நீ ஒரு தாயானால்', 'கற்பனை என்றாலும்' இம்மாதிரி ஏதாவது. அதன்பின் வேலைக்குப் போகும்வரை இடைவேளையே இல்லாமல் டி.எம்.எஸ் பாடிய திரைப் பாடல்களை போட்டு கேட்டுக்கோண்டே இருப்பார். மாலையில் வந்ததுமே அவரது டேப் ரிக்கார்டர் டி.எம்.எஸ் பாடல்களை மறுபடியும் முழங்க ஆரம்பித்துவிடும். அவர் வேறு எந்த பாடகரின் பாடலையாவது போட்டுக்கேட்டதாக எனக்கு நினைவில்லை. ஞாயிறுகளில் காலை முதல் இரவு வரை நிற்காமல் டி.எம்.எஸ் பாட்டுகள் அவரது அறையிலிருந்து ஒலிபரப்பாகும். நான் அந்த ஒலிபரப்பின் தினசரி நேயர்!

டென்னிஸ் எப்போதுமே அணுகமுடியாத ஒரு பாவனையை கொண்டிருப்பார் என்றாலும் நான் அவரிடம் நட்பு கொள்ள ஆசைப்பட்டேன். முக்கியமாக அவரது ஒலிநாடாக்களை பார்ப்பதும் நல்ல ஒலியைக் கொடுத்த அந்த ஒலிநாடாக்கருவியைப் பார்ப்பதும்தான் என் நோக்கம். ஆனால் என் அறை நண்பர்கள் என்னை எச்சரித்தார்கள். டென்னிஸுக்கு ஏதோ குணப்படுத்தமுடியாத தோல்நோய் இருக்கு, அது தொற்று நோயும்கூட என்றார்கள். அவரது முகமும் உடலும் தோல் ஆங்காங்கே தடித்து பொருக்குலர்ந்து சிவந்து காணப்படும். அவர் பிறரிடமிருந்து அன்னியப்பட்டது அதனால்தான்.

ஒருநாள் காலை நான் அவரது வீட்டுக்கதவைத் தட்டினேன். பனியன் மட்டும் போட்டு வந்து கதவைத்திறந்தார். அவரது சருமம் எல்லாம் அடையடையாக உரிந்து கொண்டிருந்தது. அது சோரியாஸிஸ் (Psoriasis) என்ற தோல் ஒவ்வாமை நோய்தான். நான் தமிழில் அவரிடம், பேசலாமா என்றேன். அவர் என்னை உள்ளேயே விடவில்லை. வேலையிருக்கிறது என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

அவரை நட்பாக்கிக்கொண்டு அந்த அறைக்குள் நுழைவதற்கு எனக்கு பலநாட்கள் தேவைப்பட்டன. ஆனால் அவருடன் நட்பு கொண்டபின் ஒன்று தெரிந்தது, டென்னிஸ் மிக அருமையான ஒரு நண்பர். நான் அவரிடம் சோரியாஸிஸ் என்பது ஒன்றும் ஒரு மாபெரும் நோய் அல்ல என்று விளக்கினேன். அது தொற்றுவதுமில்லை என்றேன். அவர் என்னுடன் நெருங்கினார்.

அவரது ஒலிநாடாப்பெட்டி பெரியது. ஹாலந்தில் செய்யப்பட்ட அசல் பிலிப்ஸ் ஒலிநாடாக்கருவி அது. அவரது டி.எம்.எஸ் சேகரிப்பும் மிகப்பிரம்மாண்டமானது. எந்த பாட்டைச் சொன்னாலும் அது அவரிடம் இருக்கும். நான் டென்னிஸ் அறையில் பல வெப்பமான இரவுகளை டி.எம்.எஸ் பாட்டை கேட்டபடியும் அவ¨ற்றப்பற்றி பேசியபடியும் செலவழித்திருக்கிறேன். எப்போது போனாலும் சுவையான தேநீர் போட்டுத்தருவார், சிலசமயம் சாப்பாடும் சமைப்பார். அவர் எவருக்குமே தன் இசை சேகரிப்புகளை காட்டுவதோ கொடுப்பதோ இல்லை. ஆனால் எனக்கு நிறைய ஒலிநாடாக்களை பதிவு செய்வதற்க்காக அளித்தார். இன்றும்கூட அவர் தந்த ஒலிநாடாக்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்ட பல டி.எம்.எஸ் பாடல்கள் என்னிடம் இருக்கின்றன.

ஓரிரு வருடங்கள் கழித்து ஒரு காதல்தோல்வியினால் ஏற்பட்ட மன அழுத்தம் என்னை ஹைதராபாதை விட்டுவிட்டு மும்பைக்குச் செல்லவைத்தது. கையில் வெறும் நூறு ரூபாயுடன் ஒரு டாங்கர் லாரிக்காரர் கொடுத்த இலவசப்பயணம் வழியாக நான் மும்பைக்கு வந்திறங்கினேன். இரண்டுநாட்கள் எதாவது வேலை கிடைக்குமா என்று அலைந்தேன். சில உறவினர்களையும் பழைய நண்பர்களையும் தேடிப்போனேன். யாருமே உதவவில்லை.

கையில் மீதமிருந்த முப்பது ரூபாயில் இருபது ரூபாய்க்கு ஒரு புட்டி பீர் வாங்கி குடித்தேன். அந்த அளவுக்கு மன அழுத்தம் இருந்தது. அங்கிருந்து எங்களூரைச்சேர்ந்த ஒருவர் இருந்த தலோஜா என்னும் பகுதிக்கு பஸ் பிடித்து சென்றேன். அவரது அறை மூடியிருந்தது. பக்கத்துவீடுக்காரர் அவர் ஏதோ வெல்டிங் வேலைக்காக நகரத்துக்குச் சென்றிருப்பதாகவும் என்றைக்கு வருவாரென்றே தெரியாது என்றும் சொன்னார்.

இரவு எட்டு மணிக்கு நான் மும்பை பூனா ஹைதராபாத் நெடும்சாலையில் உள்ள கலாம்பொலி என்ற ஊரை அடைந்தேன். லாரிகளுக்காக கை காட்டினேன். யாருமே நிறுத்தவில்லை. இலக்கில்லாமல் நெடும்சாலையில் நடக்க ஆரம்பித்தேன். பசியும் களைப்புமாக என் மனம் அப்படியே மரத்துப்போய் இருந்தது. அருகே வேகமாகச் செல்லும் வண்டிகளின் காற்று விம் விம் என்று என்னை அறைந்து சென்றது. அரைமணிநேர நடைக்குப்பின் நான் லாரிகள் நிறுத்தும் ஒரு வளைவை கண்டேன். அதை நெருங்கியபோது நான் டி.எம்.எஸ் பாடிய 'என்னைத்தெரியுமா' என்ற பாடலைக் கேட்டேன். என் மனம் விழித்துக்கொண்டது. வெள்ளை தகரத்தில் சிவப்பு எழுத்துக்களில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் தெலுங்கிலும் அதோடு தமிழிலும் 'மணி கா தாபா' என்று எழுதப்பட்டிருந்தது. ஒரு சாலையோர சாப்பாடுக்கடை. அதை நோக்கி தள்ளாடி நடந்து சென்றேன்.

அங்கே வாடிக்கையாளர்களான டிரைவர்களும் உதவியாளர்களும் பொரித்த சிக்கனுடன் பலவகையான குருமாக்களையும் தந்தூரி ரொட்டியையும் சாப்பிடுவதில் மும்முரமாக இருந்தார்கள். நான் அங்கே இருந்த காசாளரின் பக்கம் சென்று பரிதாபகரமாக நின்றேன். அவர் ''என்ன?'' என்று கடுமையாக இந்தியில் கேட்டார். நான் என் நிலைமையை தமிழில் அவரிடம் சொன்னேன். அவர் என் பேச்சை புரிந்துகொள்ளவில்லை, ஏனென்றால் அவருக்கு தமிழ் தெரியாது.

அவர் சமையலறைக்கு குரல் கொடுத்து 'வா, இங்கே ஒரு தமிழ் ஆசாமி வந்து என்னமோ சொல்றான்'' என்றார். கரிய நிறமுள்ள கட்டுமஸ்தான ஒருவர் சட்டையேதும் இல்லாமல் வெளியே வந்தார். அவர்தான் மணி, அந்தகக்டையின் உரிமையாளர். அவர்தான் அங்கே சரக்குமாஸ்டர் கூட என்று தோன்றியது. நான் டி.எம்.எஸ் பாட்டைக்கேட்டு அங்கே வந்ததாகச் சொன்னேன். என் கதையை அவர் கொஞ்சம் சந்தேகத்துடன் கேட்டுவிட்டு சமையலறைக்கு போய்விட்டார்.

'பல்லாக்கு வாங்க போனேன்', 'கண்போன போக்கில் கால் போகலாமா', 'யாரை நம்பி நான் பொறந்தேன்', 'சோதனைமேல் சோதனை'...டி.எம்.எஸ் பாட்டுகளாக வந்து கொண்டேயிருந்தன. அவை என் பசியை மறக்கச்செய்தன. அங்கே கயிற்றுக்கட்டில்களில் அமர்ந்து சாப்பிடுபவர்களைப் பார்த்துக்கொண்டு, தாகூரின் பாடலில் வருவதைப்போல தொலைதூரக் கரைக்கு என்னை கூட்டிச்செல்லும் கப்பலை எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன். கொஞ்சம் நேரம் கிடைத்ததும் மணி வந்து என்னிடம் பேச ஆரம்பித்தார்.

திருச்சிக்காரரான அவர் ஒரு டி.எம்.எஸ் அடிமை. டி.எம்.எஸ் பற்றி என்னிடம் அவர் ஆவேசமாகப் பேசினார். அவரது ஒலிநாடாப்பெட்டி மிகப்பழைய பாணியிலானது. ஆனால் டி.எம்.எஸ் பாடல்கள் அடங்கிய ஒலிநாடாக்கள் அங்கே குவிந்து கிடந்தன. ''டி.எம்.எஸ் பாட்டு தான் தம்பி என்னோட வாழ்க்கையே. முட்டாப்பசங்க அதையெல்லாம் எம்ஜியார் பாட்டு சிவாஜி பாட்டுன்னு சொல்றாங்க. எல்லாமே டி.எம்.எஸ் பாட்டு தான். நான் சாகிறவரைக்கும் என் வீட்டிலே டி.எம்.எஸ் பாட்டுதான் கேட்டுட்டே இருக்கும்...'' மணி எனக்கு தந்தூரி ரொட்டியும் சிக்கன் குழம்பும் தந்தார். அங்கேயே கொஞ்சநேரம் ஓய்வெடுக்கும்படி சொன்னார்.

பெரிய மரத்தின் அடியில் நான் கயிற்றுக்கடிலில் படுத்துக்கொண்டேன். 'உலகம் பிறந்தது எனக்காக', 'அறிவுக்கு வேலை கொடு'.. நான் மிகக் கவனமாக அந்தப்பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். சட்டென்று நான் அப்பாடல்கள் அளிக்கும் நம்பிக்கையைப்பற்றி எண்ணிக்கோண்டேன். அவை ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன. அவற்றில் உள்ள தன்னம்பிக்கை, தெளிவு, மிதப்பான உச்சரிப்பு, ஓங்கி உச்சத்துக்குச் செல்லும் கம்பீரம்... ஆகவே தான் வாழ்க்கையில் நம்பிக்கையிழந்த லட்சக்கணக்கான எளிய மக்களுக்கு டி.எம்.எஸின் பாட்டு அத்தனை பிடித்திருக்கிறது என்று தோன்றியது. என் மனமும் சோர்வை இழந்து ஆறுதல் கொண்டது.

தூங்கியதே தெரியவில்லை. மணி ஒரு மஸ்தா டிரைவரை ஏற்பாடுசெய்தபின் என்னை எழுப்பினார். நான் அவரது வண்டியில் ஹைதராபாத் போகலாம், அங்கே போன பின்னர் பணம் கொடுத்தால் போதும். நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியாமல் நின்றேன். டி.எம்.எஸ் பாடிக்கொண்டிருந்தார் 'நீயெங்கே என் நினைவுகள் அங்கே...' எதனால் என்று தெரியவில்லை, என் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது.

பலவருடங்கள் கழித்து நான் சென்னையில் டி.எம்.எஸ்-ஐ ஒரு பேட்டி எடுப்பதற்காகச் சந்தித்தபோது அண்ணாச்சி, டென்னிஸ், மணி மூவரைப்பற்றியும் சொன்னேன். அண்ணாச்சியின் அதே களங்கமில்லாத சிரிப்பை டி.எம்.எஸ் முகத்திலும் கண்டேன். ''நான் என் வாழ்க்கைய தொடங்கினப்ப உங்க அண்னாச்சிய மாதிரித்தான் இருந்தேன் தம்பீ'' என்றார் டி.எம்.எஸ். ''பாட்டு படிக்கிறதுக்கு பணம்கேட்டு பலபேர் முன்னாடி பிச்சைக்காரனா நின்னிருக்கேன். அப்றம் பாடறதுக்கு சான்ஸ் கேட்டு இன்னொருவகையான பிச்சைக்காரனா அலைஞ்சேன். அந்த காலத்தில் ஒரு படத்திலே பிச்சைக்காரனா நடிக்கவும் செஞ்க்சிருக்கேன் தெரியுமா? பாத்திருக்க மாட்டீங்க, 1951லே வந்த 'தேவகி'ங்கிற சினிமாவிலே. அதிலே நான் 'தீராத துயராலே பாழாகியே'ங்கிற பாட்டை பாடி பிச்சை எடுக்கிறேன். ஆனா பாட்டுக்கு என் பேரைப்போடலை. பெயர் காட்டறப்ப டி.எம்.சௌந்தரராஜன் - பிச்சைக்காரன்னு வந்தது...'' அவரது புன்னகை பெரிதாகி சிரிப்பாக மாறியது. ''என் வாழ்க்கையிலே நான் சம்பாரிச்சதெல்லாம் லட்சக்கணக்கான ரசிகர்களைத்தான். அதுதான் கடவுள் எனக்குப்போட்ட மிகப்பெரிய பிச்சை''.

'தொகுளுவ மீனாட்சி சௌந்தர ராஜன்' 24-03-1923 ல் பிறந்தவர். நான் பிறக்கும்போதே டி.எம்.எஸ்ஸுக்கு 45 வயது தாண்டிவிட்டிருந்தது. ஆனால் நான் இன்றும் எங்கே போனாலும் டி.எம்.எஸ் பாட்டுக்களை கேட்க முடிகிறது. கிட்டத்தட்ட பத்தாயிரம் பாட்டுகளைப் பாடியிருக்கிற டி.எம்.எஸ் தான் தமிழ் பின்னணிபாடகர்களிலேயே மிகமிகப் பிரபலமானவர். அடிநாதம் முதல் உச்ச ஸ்தாயி வரை சாதாரணமாக உலவும் அபாரமான குரல் கொண்டவர். கர்நாடக சங்கீத பாடகராக ஆகவேண்டும் என்ற கனவு கொண்டிருந்த டி.எம்.எஸ்ஸின் அக்கால லட்சியப் பாடகர் எம்.கெ.தியாகராஜ பாகவதர். பாகவதரை போலவே பாட ஆரம்பித்த டி.எம்.எஸ், பின்னர் தன்னுடைய பிரபலமான பாணிக்கு மாறிக்கொண்டார். 1950ல் திரையில் பாட ஆரம்பித்த டி.எம்.எஸ் விரைவிலேயே ஒரு நட்சத்திரப் பாடகராக ஆனார். அவர் காலகட்டத்தில் இருந்த எல்லா பிரபல நடிகர்களுக்கும் அவர்தான் பின்னணி பாடினார்.

பாடலின் உணர்ச்சிகளுக்கும் அந்த நடிகரின் நடிப்புப் பாணிகளுக்கும் ஏற்ப நாடகத்தனமாக பாடி உணர்ச்சிகளை உருவாக்குவதில் அவருக்குத் தனித்திறமை இருந்தது. அவர் குரல் எப்படி ஒரு திரைநட்சத்திரத்தை மக்கள் தலைவராக ஆக்கி முதல்வராகவும் ஆக்க பயன்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள். சாதாரண மனிதனின் வாக்குகளைப் பெறுவதற்கான கருவியாக அவரது குரல் இன்றும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுவருகிறது!

மதுரையில் ஒரு மிக வறுமையான குடும்பத்தில் டி.எம்.எஸ் பிறந்தார். அவரது அப்பா மீனாட்சி அய்யங்கார் அவ்வப்போது கிடைக்கும் புரோகித வேலையின் வருமானத்தில் இரண்டுவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலையில் குடும்பத்தை நடத்தினார். அவர் ஒரு பஜனைப்பாடகரும்கூட. தன் பஜனைகளுக்கு மகனையும் அழைத்துச்செல்வார். எம்.கெ.தியாகராஜ பாகவதரின் படங்களைப் பார்த்தும் பாட்டுக¨ளைக் கேட்டும் டி.எம்.எஸ் தன் இசையார்வத்தை வளர்த்துக்கொண்டார். எம்.கெ.டி பாடல்களை அற்புதமாக திருப்பிப் பாடிய டி.எம்.எஸ் பள்ளிப்படிப்பில் பரிதாபகரமான
தோல்வியையே அடைந்தார்.

ஆனால் அவர் கவலைப்படவில்லை. நல்ல ஒரு குருவிடமிருந்து கர்நாடக சங்கீதம் படிப்பதுதான் அவரது லட்சியமாக இருந்தது. அதற்கு குருதட்சிணை கொடுக்க அவரிடம் பணமிருக்கவில்லை. தான் சார்ந்த சௌராஷ்டிர சமூகத்தின் செல்வந்தர்களிடம் இரந்து பெற்ற சிறிய தொகையுடன் அவர் காரைக்குடி ராஜாமணி அய்யங்காரிடம் சீடராகச்சேர்ந்து இசையை முறையாக கற்க ஆரம்பித்தார். ஆனால் அந்தக்கல்வி ஓராண்டுக்கு மேல் நீடிக்கவில்லை.

டி.எம்.எஸ், அவர் தன் குருவிடமிருந்து ஒரு வருடத்திலேயே ஸ்வரஸ்தானங்களை மதிப்பிடுவதையும் கர்நாடக சங்கீத அடிப்படைகளையும் 48 கீர்த்தனைகளையும் 12 வர்ணங்களையும் கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார். அவருக்கு அதன்பிறகு கர்நாடக சங்கீதத்தில் எந்த சந்தேகமும் இருக்கவில்லையாம். மிச்சமெல்லாம் அவரே தன்னுடைய கடுமையான சொந்த உழைப்பு மூலம் கற்றுக்கொண்டதாம். அந்த தன்னம்பிக்கையுடன் அவர் தன் அரங்கேற்றத்துக்கு முயன்றார். ஆனால் கூடத்தை வாடகைக்கு எடுப்பது, விழா ஏற்பாடுகள் எதற்கும் அவரிடம் பணமிருக்கவில்லை. வறுமை. ஆகவே அவர் எந்த தொகை கொடுத்தாலும் கச்சேரி செய்ய போக ஆரம்பித்தார். அவர் சில கச்சேரிகளில் எம்.கெ.தியாகராஜ பாகவதரின் திரைப் பாடல்களை பாடியபோது பெரும் கூட்டம் நிகழ்ச்சிகளுக்கு வர ஆரம்பித்தது. அந்த வரவேற்பு அவரை திரையிசையை நோக்கிச் செல்ல தூண்டியது. மேலும் அப்போது அவருக்கு திருமணமாகியிருந்தது, குடும்பம் நடத்த வருமானம் தேவைப்பட்டது.

கோவை சென்டிரல் ஸ்டுடியோ அக்காலத்தில் தமிழின் முக்கியமான படங்களை எடுத்து வந்தது. டி.எம்.எஸ் வாய்ப்புதேடி அடிக்கடி அங்கே செல்ல ஆரம்பித்தார். பி.யூ.சின்னப்பா நடித்த 'சுதர்சன்' என்ற படம் அப்போது எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அங்கே அவர் ஒரு எடுபிடி ஊழியராக வேலைக்குச்சேர்ந்தார். சமையல், சுத்தப்படுத்துதல், நடிகர் நடிகைகளுக்கு பணிவிடைசெய்தல், உரிமையாளர் குழந்தைகளை பராமரிப்பது என எல்லா வேலைகளையும் அங்கே அவர் செய்தார். அதேசமயம் வேற் குரலை நாடுபவர்கள் என்றாவது தன்னைக் கவனிப்பார்கள் என்ற எண்ணத்தில் தொடர்ந்து முயற்சியும் செய்துவந்தார். ஒருமுறை சுப்பையா நாயுடு முன்னால் பி.யு.சின்னப்பாவின் பாடல் ஒன்று பயிற்சி செய்யப்பட்டுவரும்போது டி.எம்.எஸ் வெளியே நின்று பி.யு.சின்னப்பா பாடல் ஒன்றை உரத்த தொண்டையில் பாடினாராம். 'இதென்ன இந்தப்பையனுக்கு பைத்தியமா?' என்று அங்கே இருந்த ஒருவர் கேட்டபோது பி.யூ.சின்னப்பா ''இல்லை, நல்லாத்தான் பாடுறான். நல்ல குரல். இப்டியே சாதகம் பண்ணினான்னா ரொம்ப நல்ல பாடகனா வந்திருவான்'' என்று சொன்னாராம்.

1950 ல் இயக்குநர் சுந்தர் ராவ் நட்கர்னி டி.எம்.எஸ்க்கு முதல் திரை வாய்ப்பை வழங்கினார். அது 'கிருஷ்ண விஜயம்' என்ற படம். இன்றைய சொல்லாட்சியை வைத்து அந்த பாடலை ஒரு ரீமிக்ஸ் என்று சொல்லவேண்டும். 1936ல் வந்த 'சிந்தாமணி' படத்தில் எம்.கெ.டி பாடிய 'ராதே உனக்குக் கோபம் ஆகாதடீ' என்ற செஞ்சுருட்டி ராகப்பாடலை அப்படியே போட்டதுதான் அந்தப்பாடல். அதேமெட்டில் 'ராதே நீ என்னைவிட்டு ஓடாதேடீ' என்று எழுதப்பட்டிருந்தது. அதன் பின்னணி இசையமைப்பு இன்னும் சமகாலத்தன்மையுடன் அமைக்கப்பட்டிருந்தது. சில ஸ்வரங்களையும் ஜதிகளையும் டி.எம்.எஸ் அவரே சேர்த்துக்கொண்டார். அதை பதிவுசெய்ய 10 மணிநேரம் ஆகியது.

இன்று அவரது அந்தப்பாடலைக் கேட்கும்போது அவர் எம்.கெ.டியின் புதுவடிவம் போல இருப்பதாகத்தோன்றுகிறது. அந்த பாடல் ஒரு நட்சத்திரத்தின் வருகையை அறிவித்தது. அதே படத்தில் மேலும் மூன்று பாடல்கள் டி.எம்.எஸ்ஸுக்குக் கிடைத்தன. ஆனால் டி.எம்.எஸ்ஸின் போராட்டம் ஓயவில்லை, அவருக்கு மேலும் வாய்ப்புகள் வரவில்லை. பலரிடம் முயற்சி செய்தபின்னர்தான் மந்திரி குமாரி [1950] படத்தில் 'அன்னமிட்ட வீட்டிலே' என்ற பாடலை பாடும் வாய்ப்பு கிடைத்தது. ஜி.ராமநாதன் அதன் இசையமைப்பாளார். அந்தப்பாடல் பிரபலமாகவில்லை. அவரது பேரும் படத்தில் இடம்பெறவில்லை. அதற்குப்பின்னர்தான் அந்த பிச்சைக்காரர் பாட்டு. தொடர்ந்து இரண்டுவருடம் அவருக்கு பாட்டே கிடைக்கவில்லை. 1952ல் ஜமுனாராணியுடன் சேர்ந்து இரண்டு இணைப்பாடல்களை பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது, வளையாபதி என்ற படத்தில். அதன்பின்னரும் ஒன்றும் நடக்கவில்லை.

அப்போது சென்னை, தமிழ் சினிமாவின் மையமகா மாறிவிட்டிருந்தது. பிற ஊர்களில் இருந்த ஸ்டுடியோக்கள் முக்கியத்துவமிழந்தன. ஏ.எம்.ராஜாவும் கண்டசாலாவும் பிரபலமான பாடகர்களாக உருவெடுத்தார்கள். கைவசம் மிகக்கொஞ்சம் பணத்தை வைத்துக்கொண்டு டி.எம்.எஸ் சென்னைக்குக் கிளம்பிச்சென்றார். படநிறுவனங்கள் தோறும் சென்று வாய்ப்புக்காக கெஞ்சினார். எவருமே அவரில் ஆர்வம் காட்டவில்லை. கோவை, சேலம் ஸ்டுடியோக்களில் ஏழு பாடல்களைப் பாடியிருந்ததெல்லாம் சென்னையில் வேலைக்கு ஆகவில்லை. கைப்பணம் கரைந்தது, ஒருநாளைக்கு ஒருவேளை உணவுக்கே வழியில்லாத நிலை வந்தது. மதுரைக்கே திரும்பிவிடலம் என்று முடிவெடுத்தார் டி.எம்.எஸ்.

இருந்தாலும் மனம் கேட்காமல் அப்போது எச்.எம்.வி நிறுவனத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிய கே.வி.மகாதேவனிடம் சென்று கண்ணீருடன் வாய்ப்பு கேட்டு மன்றாடினார். மகாதேவனுக்கு பிடித்தமான பாடல்கள் சிலவற்றை அவருக்குப் பாடிக்காட்டி வாய்ப்பு கேட்டார். மகாதேவன் அந்த இளம்பாடகரின் திறமையை உடனே ஊகித்துக்கொண்டு அப்போதே இரண்டு பக்திப்பாடல்களுக்கு டி.எம்.எஸ்ஸை முடிவுசெய்து உடனேயே இப்பாடல்களுக்கான ஊதியத்தையும் வாங்கிக்கொடுத்தார். ஏ.வி.எம் படநிறுவனத்துக்குப்போய் வாய்ப்புகேட்குமாறு அறிவுரையும் சொன்னார்.

மறுநாளே டி.எம்.எஸ் ஏ.வி.எம் நிறுவனத்துக்குச் சென்று அவர்களின் ஆஸ்தான இசையமைப்பாளார் சுதர்சனம் அவர்களைக் கண்டு வாய்ப்பு கோரினார். சுதர்சனம் அவரை ஏ.வி.எம்மின் உரிமையாளர் மெய்யப்பச் செட்டியாரிடம் அழைத்துச்சென்றார். டி.எம்.எஸ் ஒரு கீர்த்தனையை எல்லாவிதமான சங்கதிகளுடனும் பாடினார். செட்டியார் எந்த எதிர்வினையையும் காட்டவில்லை. மாறாக அவர் டி.எம்.எஸ்ஸிடம் ஒரு நகைச்சுவைப்பாடலை பாடும்படி கேட்டார். இதயம் வலிக்க டி.எம்.எஸ் 'நல்ல கழுதை' என்ற வேடிக்கைப் பாடலை பாடிக்காட்டினார்.

அது பலன் தந்தது. செல்லப்பிள்ளை என்ற படத்தில் அதேபோன்ற இரு வேடிக்கைப் பாடல்களைப் பாடும் வாய்ப்பு டி.எம்.எஸ்ஸுக்குக் கிடைத்தது. நடுவே கே.வி.மகாதேவன் அவரைக்கூப்பிட்டு கூண்டுக்கிளி படத்துக்குப் கூட்டுக்குரல் பாடும்படி சொன்னார். அதன் பாடலாசிரியரான தஞ்சை ராமையா தாஸ் டி.எம்.எஸ்ஸின் குரலையும் பாணியையும் ரசித்து அவருக்கு ஒரு தனிக்குரல் பாட்டைக் கொடுக்கும்படி மகாதேவனிடம் சொன்னார். அப்படித்தான் டி.எம்.எஸ் அந்தபப்டத்தில் 'கொஞ்சும் கிளியான பெண்ணை' என்ற பாடலைப் பாடும் வாய்ப்பைப்பெற்றார். எம்ஜிஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளியில் உள்ள இப்பாடலில், தீவிர உணர்ச்சிகளை உருவாக்கும் டி.எம்.எஸ்ஸின் தனித்துவம் மிக்க குரலை நாம் இப்போதும் கவனிக்கலாம்.

ஒருநாள் அவர் கோடம்பாக்கம் வழியாக நடந்துசென்றுகொண்டிருந்தபோது ஒரு கார் வந்து அவரை மடக்கியது. அதிலிருந்த பாடலாசிரியர் மருதகாசி அவரைத்தேடி வந்திருந்தார். சிவாஜி கணேசன் நடிக்க தூக்குதூக்கி என்ற படத்தை அப்போது தயாரித்துக்கொண்டிருந்த அருணா பிலிம்ஸ் என்ற நிறுவனத்துக்கு அவர் டி.எம்.எஸ்ஸை அழைத்துக்கொண்டு சென்றார். ஜி.ராமநாதன் இசையமைத்த அப்படத்தில் எட்டுபாடல்கள் இருந்தன.

அன்றைய நட்சத்திரப்பாடகரான திருச்சி லோகநாதன் அந்தப்பாடல்களைப் பாடுவதாக இருந்தது. அதில் எட்டு பாட்டுகள் இருந்தமையால் மொத்தமாக ஒரு குறைந்த தொகைக்கு சம்மதிக்கும்படி தயாரிப்பாளர்கள் லோகநாதனைக் கேட்டார்கள். அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே இன்னொரு பாடகரை பாடவைக்கலாமென்ற முடிவை தயாரிப்பாளர்கள் எடுத்திருந்தார்கள். கடும்பொருளாதார நெருக்கடியுடன் வாய்ப்புக்காக அலைந்துகொண்டிருந்த டி.எம்.எஸ் அந்தவாய்ப்பை ஆவலுடன் பற்றிக்கொண்டார்.
ஆனால் அங்கேயும் போராட்டம் முடியவில்லை. பராசக்தியின் புகழில் திளைத்துக்கொண்டிருந்த சிவாஜிகணேசன் அந்தப்படத்தில் தனக்காகப் பாடிய சி.எஸ்..ஜெயராமனின் குரலே தனக்குப் பொருத்தமானது என்னும் எண்ணம் கொண்டிருந்தார். ஆகவே தூக்குதூக்கியிலும் சி.எஸ்.ஜெயராமனே பாடட்டும் என்று அவர் நினைத்தார். டி.எம்.எஸ்ஸின் திறமையை முன்னரே அறிந்திருந்த ஜி.ராமநாதன் டி.எம்.எஸ்ஸுக்காக வாதாடினார்.

படத்தின் பெரும்பாலான பாட்டுகள் நாட்டுப்புற இசையின் சாயலுடன் இருப்பதனால் டி.எம்.எஸ் பாடினால்தான் நன்றாக இருக்குமென்று வாதாடினார். ஆனால் சிவாஜி ஜெயராமனுக்காக வற்புறுத்தினார். டி.எம்.எஸ் மனம் சோர்ந்துபோனார். 'ஒரு மூணு பாட்டை மட்டும் கொடுங்க. பாடிக்காட்டறேன். நல்லா இல்லேன்னா நான் திரும்பி ஊருக்கே போயிடறேன்'' என்று அவர் அவர்களிடம் சொன்னார்.

''சுந்தரி சௌந்தரி நிரந்தரியே' 'ஏறாத மலைதனிலே' 'பெண்களை நம்பாதே' ஆகிய மூன்றுபாடல்களும் பதிவுசெய்யப்பட்டன. அதைக்கேட்டபின் சிவாஜி டி.எம்.எஸ்ஸிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ''நீங்க பாடுறீங்கன்னு சொன்னப்பா இன்னும் ஒருத்தர் பாடுறார்னுதான் நெனைச்சேன். இந்த அளவுக்கு நான் எதிர்பார்க்கவேயில்லை. மிச்சபாட்டுகளையும் நீங்களே பாடிடுங்க''. 1954ல் வந்த தூக்குதூக்கி படத்தின் பாட்டுகள் டி.எம்.எஸ்ஸின் இசைவாழ்க்கையை புகழ் நோக்கிக் கொண்டுசென்றன. சிவாஜியின் திரைக்குரலாக டி.எம்.எஸ் மாறினார். அவரது குரலும் உச்சரிப்பும் பாடல் பாணியும் தமிழகமெங்கும் பேசப்பட்டன.

அப்போது கோவை பக்ஷிராஜா படநிறுவனம் எம்.ஜி.ஆரை வைத்து மலைக்கள்ளன் படத்தை எடுத்துவந்தது. கூண்டுக்கிளி பாட்டுகளைக் கேட்டபோதே டி.எம்.எஸ் தான் தனக்கு பாடவேண்டும் என்று சொன்னார் எம்.ஜி.ஆர். பக்ஷிராஜா நிறுவனம் டி.எம்.எஸ்ஸுக்கு முதல்வகுப்பு ரயில்டிக்கெட் எடுத்து அனுப்பியது. அவரை ஒரு மகாராஜா போல வரவேற்று கொண்டுசென்றது. அதே பக்ஷிராஜாவில் டி.எம்.எஸ் எத்தனையோ முறை பரிதாபமாகச் சென்று நின்று வாய்ப்புக்காகக் கெஞ்சி அவமானப்பட்டிருக்கிறார். மலைக்கள்ளனுக்குப் பின்னர் எம்.ஜி.ஆருக்கும் நிரந்தரமான பாடும்குரலாக டி.எம்.எஸ் மாறினார்.

டி.எம்.எஸ்ஸின் வருகையுடன் தமிழ் பின்னணிப்பாடல்கள் நிரந்தரமான மாற்றத்தை அடைந்தன. மரபார்ந்த இசையானாலும் நாட்டுப்புர இசையானாலும் மேலையிசையானாலும் எந்தப்பாடலிலும் அவர் உணர்ச்சிகளை வெளிப்படையாக உருவாக்குவார். அந்தக்காலப் பாடல்களில் உணர்ச்சிகரமான நாடகத்தன்மையை தன் குரல்நடிப்புவழியாக உருவாக்கியவர் டி.எம்.எஸ். மெல்லிசை மெட்டுகள், சமூகப்பாடல்கள், மரபிசைப்பாடல்கள் எல்லாமே அவருக்குப் பொருத்தமானவைதான். ''எனக்குக் கெடைச்ச எல்லா பாட்டுகளையும் கடவுளைக்கும்பிடுற மாதிரி பூரணமான பக்தியோடத்தான் பாடியிருக்கேன்''. தன் பாடல்களில் சிலசமயம் அவர் மிகையாக நடித்தார், சிலசமயம் அடக்கி வாசித்தார். எல்லாம் அந்தந்த நடிகர்களின் நடிப்பையும் அந்தபப்டத்தின் தேவையையும் பொறுத்ததுதான்.

அவரது பல்லாயிரம் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தமான பல உள்ளன. 'நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே, முத்துக்களோ கண்கள், கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா, என்னை யாரென்று எண்ணி எண்ணி, மாதவிப்பொன் மயிலாள், சொல்லடி அபிராமி, பூ மாலையில் ஓர் மல்லிகை, தொட்டால் பூ மலரும், பாட்டும் நானே பாவமும் நானே, இசைகேட்டால் புவி அசைந்தாடும், முல்லைமலர் மேலே, ஓராயிரம் பார்வையிலே,
மாசிலா நிலவே நம், யாருக்காக, அன்பே வா, ஏன் பிறந்தாய் மகனே, வசந்த முல்லை போலே, யாரடீ நீ மோகினீ, பார் மகளே பார், முத்தைத்தரு பத்தி திருநகை, மெல்ல மெல்ல அருகில் வந்து, நான் ஏன் பிறந்தேன், மலர்களைப்போல் தங்கை, யார் அந்த நிலவு... இந்தப்பட்டியலை நான் நிறுத்தவே முடியாது.

எழுபதுகளின் நடுவிலேயே டி.எம்.எஸ் ஸின் உச்சகாலகட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. குறிப்பாக இளையராஜாவின் வருகையுடன். 'அந்தப்புரத்தில் ஒரு மகாராணி', 'நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு', 'அம்மா நீ சுமந்த பிள்ளை', 'சிந்து நதிக்கரையோரம்' போல சில வெற்றிப் பாடல்களை அவர்கள் இருவரும் சேர்ந்து கொடுத்திருந்தாலும்கூட அவர்களின் இணைப்பு நீடிக்கவில்லை. அவர்களுக்குள் கடுமையான மனஸ்தாபங்களும் முறிவுகளும் உருவானதாகச் சொல்லபப்டுகிறது. இளையராஜாவின் காலம் ஆரம்பித்தபோது டி.எம்.எஸின் காலம் முடிவுக்கு வந்தது. மேலும் உருவாகிவந்த புதிய நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்களின் நடிப்புக்கு அவரது குரல் பொருந்திப்போகவில்லையாம். அவ்வப்போது சில பொதுவான பாட்டுகளை மட்டுமே பாடிவந்த டி.எம்.எஸ். மெல்ல மெல்ல விலக்கப்பட்டார். டி.எம்.எஸ்ஸின் கடைசிக்காலத்துப் பாட்டுகள் ஒரு சுய அங்கதத்தன்மையுடன் அமைந்திருப்பது தற்செயல்தான். 'நான் ஒரு ராசியில்லா ராஜா', 'என் கதை முடியும் நேரமிது'.... கடந்த 20 வருடங்களாக அவர் சொல்லும்படியாக எந்த ஒரு திரைபபடல்களையும் பதிவுசெய்யவில்லை.

டி.எம்.எஸ்ஸின் பாடல்கள் மேல் பலவகையான விமரிசனங்களை எத்தனையோ வருடங்களாகக் கேட்டுவருகிறேன். எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற இசையமைப்பாளர்கள் சொல்லித்தருவதுபோல பாடல்களைப் பாட டி.எம்.எஸ்ஸால் முடிந்ததில்லை என்பது அதில் ஒன்று. எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்களை நூறு சதவீதம் அப்படியே பாட எந்த பாடகர்களாலும் முடிந்ததில்லை என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். டி.எம்.எஸ் அந்தப்பாடல்களை தனக்கேயுரிய கவனத்தைக் கவரும் பாணியில் பாடினார் என்று நினைக்கிறேன். அவரது மரபிசைப்பாடல்கள் பிழைகள் கொண்டவை என்பது இன்னொரு குற்றச்சாட்டு. ''நான் சங்கீதத்தோடயே பிறந்தவன். சின்னவயசிலேயே பாட ஆரம்பிச்சிட்டேன். கர்நாடக சங்கீதத்திலே எனக்கு அஸ்திவாரம் இருக்கு. அது எனக்கு சினிமாவிலே பாடுறதுக்கு உதவியா இருக்கு'' என்றார் டி.எம்.எஸ். அது செவ்வியலிசையா இல்லையா, அவரது பாடும் முறை ரசிகர்களை கவரும்படியாக இருந்தது என்பதே உண்மை. ஒரே ஒரு வருடம் தான் அவர் கர்நாடக இசை பயின்றார் என்பதையும் கவனிக்கவேண்டும்.

அவரது பாடல்கள், எம்.ஜி.ஆர் பாடல்கள் என்றும் சிவாஜி பாடல்கள் என்றும் சொல்லப்படுவதைப்பற்றிக் கேட்டபோது டி.எம்.எஸ் சொன்னார் ''தம்பீ நான் பொழைக்கிறதுக்காக பாட வந்தவன். அதை முழுசா அர்ப்பணம் பண்ணி செஞ்சேன். ஒரு ஹீரோவுக்காகப் பாடுறப்ப நான் பல மணிநேரம் உக்காந்து அவரோட பேச்சு, உச்சரிப்பு, ஸ்டைல் எல்லாத்தையும் கவனிச்சுகிடுவேன். பாடுறப்ப அந்த ஹீரோவை மாதிரி குரலிலே நடிச்சுப்பாடுவேன். அதனாலேதான் என் பாட்டுகளை எம்ஜிஆர் பாட்டுன்னும் சிவாஜி பாட்டுன்னும் சொல்றாங்க. தப்பில்லை'' டி.எம்.எஸ்ஸின் இந்த தனித்தன்மையால்தான் எளிய ரசிகர்கள் அந்த நடிகர்களே பாடுவதாக எண்ணி மயங்கினார்கள்.

சிலருக்கு டி.எம்.எஸ்ஸின் பாட்டு என்பது குரல் வித்தையும், குரல்போலிசெய்தலும் மட்டும்தான் என்னும் எண்ணமிருக்கிறது. ஆனால் என்னைப்பொறுத்தவரை டி.எம்.எஸ் அவரது குரலை எந்த நடிகருக்காகவும் முழுமையாக மாற்றிக்கொண்டதாக தெரியவில்லை. எந்த நடிகருக்காக அவர் பாடினாலும் அது எப்போதுமே டி.எம்.எஸ் பாடல்தான். மூக்கு, நாக்கு, தொண்டை போன்றவற்றைப் பயன்படுத்தி அவர் தன் குரலின் தொனியை மட்டும் கொஞ்சம் மாற்றிக்கொண்டார். தன்னுடைய குரலை, ஒரு நடிகருக்கு அடிவயிற்றில் இருந்தும், இன்னொருவருக்கு நெஞ்சில் இருந்தும், இன்னொருவருக்கு தொண்டையில் இருந்தும் கொண்டுவருவதாக டி.எம்.எஸ் சொல்வதை நான் எப்போதுமே ஏற்றுக்கொண்டவன் அல்ல. குரல் நுரையீரலின் காற்று தொண்டைவழியாக வெளிவருவதன்மூலம் உருவாவது மட்டுமே.

ஆனால் அது எனக்கு ஒரு பெரிய விஷயமல்ல. காரணம் டி.எம்.எஸ் பாடிய பெரும்பாலான படங்களை நான் பார்த்ததே கிடையாது. அதனால் அவரது குரல் நடிகர்களுக்கு பொருத்தமானதாக இருக்கிறதா என்பதெல்லாம் எனக்கு முக்கியமும் அல்ல. அதையெல்லாம் பார்க்காமல்தான் நான் அவரது பாட்டுகளை ரசித்துக்கொண்டிருந்தேன். பிறகு தொலைக்காட்சியில் அப்பாடல்களின் காட்சிகளைப்பார்த்தபோது அவற்றில் பல எனக்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்தன. என் மனதில் அப்பாடல்கள் மிக மேலான காட்சிகளை உருவாக்கியிருந்தன. திரையிசை என்பது திரையின் பகுதி என்றாலும் திரையின் காட்சிகளின் உதவியே இல்லாமல் தனித்து நிற்கக்கூடிய ஒரு இசை வடிவம் என்பதுதான் எப்போதுமே என் எண்ணம்.

என்னைப்பொறுத்தவரை டி.எம்.எஸ் பாடல்களின் மிகமுக்கியமான இயல்பென்னவென்றால் அவற்றில் உணர்ச்சிகள் சீராகவும் தெளிவாகவும் வெளிப்பட்டிருக்கும் விதம்தான். மிகையான உணர்ச்சிகள் என்றால் அந்த மிகை பாடல் முழுக்க சீராக பரவியிருக்கும். மென்மையான உணர்ச்சிகள் என்றால் பாட்டு முழுக்கவே அந்த அடக்கம் தென்படும். ஒரு பாடகராக அவர் என்றுமே அப்பாடலின் தேவைக்குக் குறைவாகவோ கூடுதலாகவோ உணர்ச்சிகளைக் கொடுத்ததில்லை.

டி.எம்.எஸ் நெடுநாட்களாகவே கிட்டத்தட்ட மறக்கபப்ட்ட நிலையில் சென்னையில் வாழ்ந்து வருகிறார். 2002ல் அவர் தமிழ்நாடு இயலிசை நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கபப்ட்ட செய்தி வந்தது. அதன்பின் 2003 ஜூன் 22 அன்று அவர் அமிலத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி வந்தது. கடும் மன அழுத்ததால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சட்டென்று அம்முயற்சியில் ஈடுபட்டார் என்று சொல்லப்பட்டது. அவரது குடும்பம் அச்செய்தியை மறுத்தது. அவர் இருமல் மருந்து என்று எண்ணித்தான் அமிலத்தை குடித்தார் என விளக்கம் அளிக்கபபட்டது.

அதன் பின் டி.எம்.எஸ் தொலைகாட்சியில், சந்தேகத்துக்குரிய மருத்துவர்கள், காம ஊக்கத்துக்கான மருந்துகளை பற்றி பேசும் விளம்பர நிகழ்ச்சிகளில் வந்து அமர்ந்து அவர்களை பாராட்டிப்பேசுவதையெல்லாம் காண நேர்ந்தது. அவர் பழைய புகழ்வெளிச்சத்துக்காக ஏங்குகிறார் எனப் பட்டது. அந்த ஏக்கமும் துக்கமும் கசப்பும் அவரது பேச்சுகளில் வெளிப்பட்டது. தன் அந்திம காலத்தில் ஒரு பெரும் கலைஞன் அவ்வாறு கீழிறங்கியதைக் கண்டு நான் மிக மனம் வருந்தினேன்.

''நான் சிங்கம்போல பாடுறவன் தம்பீ'' என்பார் டி.எம்.எஸ். இதை எழுதும்போது யூ ட்யூபில் (You tube) டி.எம்.எஸ் உச்ச ஸ்தாயியில் 'தெய்வம் இருப்பது எங்கே' என்று பாட முயல்வதை பார்த்துக்கொண்டிருக்கிறேன். எந்த சுவரத்தையும் அவரால் சீராகப் பாட முடியவில்லை. அந்த ஏமாற்றம் அவரது முகத்தில் தெரிகிறது. அந்த உண்மையை மனம் நொந்து அவர் ஏற்றுக்கொள்கிறார். ''எனக்கு குரல் இப்பவும் இருக்கு... பாடுறதுக்கான ஆசை இருக்கு. எண்ணம் இருக்கிறது ஆனா உடம்பிலே அதுக்கான சக்தி இல்லை. வயசாயிடுச்சு...''

விடாப்பிடியாக அந்த உச்சக்குரல் பாடலின் ஒருவரியையாவது ஒழுங்காகப்பாடிவிடுவதற்கு முயற்சி செய்கிரார் டி.எம்.எஸ். மூச்சுவாங்கி முகம் சிவந்து கண்கலங்குகிறார். அந்த வீட்டுக்குள் யாரெல்லாமோ உரத்த குரலில் பேசிக்கோண்டே இருக்கிரார்கள். யாருமே அவரை கவனிப்பதாக தெரியவில்லை. புகழிலும் திறனிலும் அதி உச்சத்தில் இருந்த ஒரு நட்சத்திரப்பாடகர் மூப்பினால் தன் கலையை இழந்து ஏமாற்றத்தின் அடித்தட்டில் தத்தளிப்பதை எவருமே பொருட்படுத்தவில்லை. என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. கண்களை மூடினால் அண்ணாச்சி, டென்னிஸ், மணி என முகங்கள் மிதந்து வந்துகொண்டே இருக்கிறது. டி.எம்.எஸ் பாடல்களில் இருந்து தங்கள் வாழ்க்கையின் நம்பிக்கையை பெற்றுக் கொண்டவர்களின் முகங்கள்!

தமிழில்: ஜெயமோகன்

No comments: