Sunday, March 31, 2013

தோழர் சீனிவாசனுக்கு எம் அஞ்சலி.



தோழர் சீனிவாசன்

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் இன்று 5.5.2012, சனிக்கிழமை காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 61.

எழுபது களின் பிற்பகுதியிலிருந்தே அவர் நக்சல்பாரி புரட்சிகர அரசியலின் ஆதரவாளராக இருந்து, பின்னர் அமைப்பு நடவடிக்கைகளில் தன்னை இணைத்துக் கொண்டார். அமைப்பு நடவடிக்கைகளிலும், புரட்சிகர அரசியலின் மீதும் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக, அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வில் விடுபட்டு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையாக அமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். மகஇக மாநிலப் பொருளாளராகப் பணியாற்றியது மட்டுமின்றி, பல்வேறு போராட்டங்களிலும் முன்னணிப்பாத்திரம் ஆற்றி, பல முறை சிறை சென்றிருக்கிறார்.
பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளத் தயங்காமை, அர்ப்பணிப்பு உணர்வு, உழைப்பு ஆகியவை அவர் வெளிப்படுத்திய சிறந்த பண்புகள். 60 வயதை நெருங்கிக் கொண்டிருந்த நிலையிலும், அவரிடமிருந்த ஒரு இளைஞனுக்குரிய சுறுசுறுப்புடனும், உற்சாகமும் எள்ளளவும் குன்றவில்லை.

கடந்த ஓராண்டுக்கு முன்னர் தான், அவரை கணையப் புற்றுநோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இது ஆட்கொல்லி நோய் என்று மருத்துவர்கள் வெளிப்படையாக தெரிவித்துவிட்ட பின்னரும், கடும் வலியால் வேதனைப்படும் நிலையிலும் கலக்கமோ அச்சமோ சிறிதுமின்றி அமைப்பு நிகழ்ச்சிகள், போராட்டங்கள் பற்றி கேட்டறிதல், நமது பத்திரிகைகளைப் படித்தல், தன்னை சந்திக்க வருகின்ற தோழர்களுடன் மகிழ்ச்சியுடன் உரையாடுதல் என உறுதியையைம் உற்சாகத்தையும் தோழர் வெளிப்படுத்தி வந்தார்.

இன்று காலை அவரது வாழ்க்கை முடிவுற்றது. ஒரு விபத்தைப் போல புற்று நோய் அவரைத் தாக்கியிருக்காத பட்சத்தில், தன் வாழ்நாள் முழுவதும் தன்னை அமைப்புப் பணியில் அவர் ஈடுபடுத்திக் கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக புரட்சிகர அரசியலில் தோளோடு தோள் நின்று ஓய்வின்றி உழைத்த தோழர் சீனிவாசனுக்கு, கனத்த இதயத்துடனும் கண்ணீருடனும் விடைகொடுக்கிறோம். தோழர் சீனிவாசனுக்கு எம் சிவப்பஞ்சலி.

அவரது உடல் சென்னை சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில்
இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலம் மே 6 ஞாயிறு காலை 8 மணிக்கு புறப்படும்.
தொடர்புக்கு: செல்பேசி: 99411 75876


தகவல்: மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

No comments: