Wednesday, April 03, 2013

மெளனக்கடலில் ஒரு கல் -ஆனந்தவிகடன்


-டி.எல்.சஞ்சீவிகுமார்-


ஒரு படைப்பாளியின் பார்வையில்... ஒரு சாமானியனின் பார்வையில்... ஓர் இயலாமைவாதியின் பார்வையில்... ஈழ மக்களின் வலியை, தனுஷ்கோடி மீனவனின் துயரத்தை ஆவணப்பட மாக்கி இருக்கிறார் இயக்குநர் லீனா மணிமேலை. 



ஈழப் போரின் இறுதியில் உயிருக்குப் பயந்து தமிழகத்துக்கு அகதிகளாகத் தப்பி வரும் ஈழத் தமிழர்கள் ஒரு பக்கம், இந்தியாவிலேயே இருந்தும்கூட உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத மீனவத் தமிழர்கள் இன்னொரு பக்கம் என இரு நிலப்பரப்பு மக்களின் வாழ்வும் வலி யும்தான் கதை. ஈழத் தமிழனின் ரத்தமும் தனுஷ் கோடி மீனவனின் ரத்தமும் ஒன்றாகக் கலந்து நீலம் மறைந்து நிறம் மாறும் வங்காள விரிகுடா தான்... 'செங்கடல்’!

படப்பிடிப்புக்கு அனுமதி மறுப்பு, சென்சார் பிரச்னை என பல பிரச்னைகளைத் தாண்டி மேல் முறையீட்டு ஆணையத்தின் தலையீட்டால், 'பொது இடங்களில் திரையிடலாம்’ என்று அனுமதி வாங்கி வெற்றிபெற்றிருக்கிறார் இயக்குநர் லீனா மணிமேகலை.


'இரு மொழி என்றால், ஒரு நாடு; ஒரு மொழி என்றால், இரு நாடு’ என்று திரையில் ஒளிரும் ஒரு வாசகமே ஈழப் பிரச்னையின் மொத்த வடிவத்தையும் சொல்லிவிடுகிறது. தனுஷ்கோடி கரையில் ஒதுங்கும் இரண்டு மீனவர்களின் உடல்கள். ''முருகா! தினமும் பொண்டாட்டி புள்ளகளைப் பார்க்குறோமோ இல்லியோ... பொணத்தப் பார்க்குறோம்!'' என்று ஒப்பாரிக்கு நடுவே மரணத்தை இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள் மீனவர்கள். பிணங்களைப் புதைப்பதற்கு முன் ஜெபிக்கிறார் பாதிரியார் ஒருவர். அவருக்கு 150 ரூபாய் கொடுக்கிறார் இறந்த மீனவரின் உறவினர். ''கம்மியாக் குடுக்குற... கோவப்படப் போறாரு'' என்று ஒருவர் சொல்ல, ''அதான் அடிக்கடி வர்றார்ல'' என்கிறார் உறவினர். இப்படிப் படம் முழுக்க வரும் நுட்பமான வசனங்கள் பிரச்னையின் தீவிரத்தை, மீனவ மக்களின் மனநிலையைத் துல்லியமாக நம்முன் கிடத்துகிறது.

பச்சை மீனைத் தின்னச் சொல்லி தமிழக மீனவர்களை நடுக்கடலில் இலங்கை ராணுவத்தினர் சித்ரவதை செய்துகொண்டிருக்க, அகதிப் பெண்களிடம் இந்திய ராணுவத்தினர் செய்யும் கெடுபிடிகள் மற்றும் பாலியல் தொந்தரவுகளை மிக தைரியமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.


உச்சகட்டப் போரின்போது அகதியாக வந்து இறங்கும் ஒரு ஈழத் தமிழரிடம் பத்திரிகையாளர் ஒருவர் விசாரிக்கிறார். ''தம்பி, இலங்கை ரசாயனக் குண்டெல்லாம் வெச்சிருக்காங்கன்னு நீங்க நம்புறீங்களா?'' அதற்கு அகதியின் பதில்... ''நீங்க கொடுத்திருந்தா, அவங்க வெச்சிருப்பாங்க!''
இந்தியக் கடற்படை வீரர் இந்தியில் அகதிகளைக் கோபமாக விசாரிக்கிறார். அதைப் பார்த்துவிட்டு, ''சிங்களம் படிச்சு முடிச்சாச்சு... இனி இந்தியும் படிக்கோணும்போல'' என்று சலித்துக்கொள்கிறார் இன்னோர் அகதி. இப்படி அவ்வப்போது கதாபாத்திரங்களின் கிண்டல் பேச்சோடு, யதார்த்தத்தை, வலி நிறைந்த வாழ்க்கையைக் கடந்துசெல்கின்றன காட்சிகள்.
இறுதிப் போரின்போது இலங்கையில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் பிணங்கள் கொத்துக்கொத்தாக தனுஷ்கோடி கடற்கரையில் ஒதுங்குகின்றன. அவை பொதுமக்களுடையதா, விடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்தவர்களுடையதா என்று தெரியவில்லை. இவற்றைப் பார்வையிடும் தமிழக போலீஸார் ஃபார்மாலிட்டி தலைவலிகளைத் தவிர்க்க, பிணங்களை மொத்தமாகக் குழி தோண்டிப் புதைக்கிறார்கள். ''போஸ்ட்மார்ட்டமா... அதெல்லாம் வேணாம். பாம்பன் பாலத்துக்கு அங்கிட்டு ஒரு சட்டம், இங்கிட்டு ஒரு சட்டம்'' என்று அலுத்துக்கொள்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி. புதைக்கும் மீனவர்களோ, ''மீன் பிடிக்கிற காலம் போய் பொணம் பொதைக்கிற காலாமால்ல ஆகிப்போச்சு!'' என்று அங்கலாய்த்துக்கொள்கிறார்கள்.

இப்படி அதிர்ச்சியும் நெகிழ்ச்சியுமாக நகரும் கதை அந்த மக்களுக்கு எதுவும் செய்ய முடியா மல் வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பப் படும் லீனாவின் கண்ணீரோடு நிறைவடைகிறது. லீனாவுடன் பேசினேன்.

''படத்தில் நிறையக் காட்சிகளை ரகசியமாகவே படம் பிடித்தேன். படத்தில் நான் காட்டியிருப்பது 200 சதவிகிதம் உண்மை. உண்மையில் எந்த ஸ்கிரிப்ட்டும் தயாரிக்காமலேயே தனுஷ்கோடியில் தங்கியிருந்து, அவர்களின் மொத்த வாழ்வையும் பதிவுசெய்து, பிறகு திரைக்கதை எழுதி, அங்கு வாழும் மீனவ மக்களையும் மண்டபம் அகதி மக்களையும் இயல்பாக நடிக்கவைத்தே செங்கடலை உருவாக்கி னேன். படத்தில் கருணாநிதி, ஜெயலலிதாவை விமர்சித்து நிறைய வசனங்கள் வரும். அதனால், இங்கே திரையிட அனுமதி கிடைக்கவில்லை. ஆனாலும் மலையாளம், மாண்டரின், பிரெஞ்சு, ஜப்பான், கொரிய மொழிகளில் சப் டைட்டிலோடு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் பெருமையை 'செங்கடல்’ பெற்றது. இது கருத்து சுதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றி. அடுத்த இரண்டு மாதங்கள் முழுக்க ஜூரிச், நார்வே, ஹாலந்து, டென்மார்க், ஸ்வீடன், பாரீஸ் எனப் பல நாடுகளில் உள்ள மக்களுக்கு இந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்ட இருக்கிறோம். இன்னும் இதைப் பார்க்க விரும்பும் மக்களுக்காக 'நேரடிப் பார்வையாளர் பங்கேற்புத் திட்டம்’ என்று ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். இதன் மூலம் இணையத்தில் பணம் செலுத்திப் படம் பார்க்கலாம். அல்லது டி.வி.டி. வாங்கிக்கொள்ளலாம். இந்தப் பணத்தைப் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்குத் தர இருக்கிறேன். மீனவர் பிரச்னை தீரும் வரை நான் செங்கடலைச் சாட்சியாக வைத்துக்கொண்டு இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கு எதிராகப் பேசிக்கொண்டே இருப்பேன். ஏனென்றால், மௌனத்தைவிட அதிகாரத்தைப் பலப்படுத்துவது வேறெதுவும் இல்லை. அந்தக் கொடூர மௌனத்தில் நான் எறிந்திருக்கும் ஒரு கல், இந்த 'செங்கடல்’!'' 


நன்றி: ஆனந்த விகடன்-

No comments: