Tuesday, January 03, 2012

சிக்மன் பிரட்டும் கார்ல் மார்க்சும் : தனி மனித மாற்றத்திலிருந்து சமூக மாற்றத்தை நோக்கி..

-மீராபாரதி-

இந்த தலைப்பில் இக் கட்டுரையை – சிறு குறிப்பு எனக் குறிப்பதே பொருத்தமானது – எழுதுவதற்கு முதல் “சிக்மன் பிரட்டும் கார்ல் மார்க்சும்” என கூகுள் இணையத்தளத்தில் தமிழில் தேடினேன். துரதிர்ஸ்டவசமாக ஒன்றும் இருக்கவில்லை. இதன் அர்த்தம் இவர்கள் இருவரையும் இணைத்து தமிழில் ஆய்வு ஒன்றும் நடைபெறவில்லை என்பதாக கருதலாம். ஆனால் இக் குறிப்பிட்ட தேடலை மட்டும் கொண்டு அவ்வாறான ஒரு முடிவுக்கு வருவது அபத்தமானது. நிச்சயமாக யாராவது எழுதியிருப்பார்கள். ஏனனில் இவர்களது பெயரை ஆங்கிலத்தில் எழுதி தேடிய பொழுது பல ஆய்வுகள் நடைபெற்றதை அறிய முடிந்தது.. 80களின் கடைசியில் யாழிலில் இருந்தபோது, கார்ல் மார்க்ஸை ஆர்வமாக ஆனால் மேலோட்டமாக நூனிப் புல் மேய்ந்தேன். இதற்கு குறிப்பிட்ட சிலரின் வழிகாட்டல்களும் இருந்தன. ஆனால் நமது அக்கறை எல்லாம் நடைமுறை செயற்பாடுகளில் இருந்ததனால் இவ்வாறான வாசிப்புகளில் அக்கறை செலுத்தவில்லை. (செயற்பாடுகளில் என்னத்தை செய்து கிழித்தோம் என்பது கேள்விக்குறியே?) மீண்டும் 90களின் ஆரம்பத்தில் எதிர்கால புரட்சியின் கனவை நினைவில் கொண்டு இவ்வாறான புத்தகங்களை கொழும்பில் இருக்கும் பொழுது வாங்கி அழகுபார்த்ததுதான் மிச்சம். ஆனாலும் புலம் பெயரும் பொழுதும் இந்தப் புத்தகங்களை மட்டும் எடுத்துக் கொண்டு வந்தது ஒரே ;ஒரு நம்பிக்கையில் தான். அது, மீண்டும் நாட்டிற்கு சென்று புரட்சிகர செயற்பாட்டில் ஈடுபடுவோம் என்பதே. அதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததாக 90களின் கடைசியில் நம்பி செயற்பட்டுக்கொண்ருந்தபோது, ஒரு புறம் அந்த நம்பிக்கை சிதைவுற்று சென்றது. ஆனால் மறுபுறம் இந்த சிதைவுகளுக்கான காரணங்களை எனக்குப் புரிகின்ற வகையில் (மிகச் சரியாக?) விளக்குகின்ற புதிய வகை சிந்தனை என்னுள் உள்வாங்கப்பட்டதனால் அடிப்படை சிந்தனை மாற்றம் ஏற்பட்டது. இதன் விளைவாக, தியானம் தொடர்பான, மிகவும் குறிப்பாக சொன்னால் ஒசோவின் எழுத்துக்களை தவிர்த்து, எல்லாவிதமான வாசிப்புக்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். இலங்கையிலிருந்து கொண்டு வந்த புத்தகங்கள் அணைத்தையும் கூட கை(கழுவி) விட்டுவிட்டேன். சில கால இடைவெளியின் பின் மீண்டும் வாசிக்க ஆரம்பிக்கின்றேன். இந்த இடைவெளில் பல மாற்றங்கள் நடைபெற்றது மட்டுமல்ல பல தலைப்புகளில் பல படைப்புகள் வெளியாகிவிட்டன. குறிப்பாக இணையத்தளங்களில் பல காரசாரமான விவாதங்கள் நடைபெற்றதை, நடைபெற்று வருவதை அறியக் கூடியதாக இருக்கின்றது. ஆகவே நிச்சயமாக மார்க்ஸையும் பிரட்டையும் இணைத்தும் ஒப்பிட்டும் பல ஆய்வுகள் விவாதங்கள் தமிழில் வந்திருக்கலாம். அவ்வாறு வந்திருப்பின் அதை என்னுடன் பகிர்ந்து கொள்ளும்படியும் இக் குறிப்பு அதிக பிரசங்கித்தனமாகவும் ஆழமற்ற பார்வையையும் கொண்டிருந்தால்; ஒதுக்கிவிடுங்கள்;.

இக் கட்டுரைக்கான தலைப்பை இப்பொழுது தெரிவு செய்தமைக்கான காரணம், சமூக மாற்றத்திற்கான பாதையில் தனிமனித மாற்றத்தையும் பிரக்ஞையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவதற்காகவே. மேலும் இது ஆழமான விரிவான ஆய்வல்ல. மாறாக ஒரு நூலிலும் இன்னுமொரு ஆய்வுக் கட்டுரையிலுமிருந்த இவ்வாறான ஒரு ஒப்பிட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறு குறிப்பு மட்டுமே இது..
கார்ல் மார்கஸையும் சிக்மன் பிரட்டையும் ஒப்பிடுவதும் இணைத்து ஆய்வு செய்வதும் வரலாற்றில் தவிர்க்கமுடியாத வகையில் முக்கியமானது என்கின்றனர். இருவரது தத்துவங்களினதும் ஆய்வுகளினதும் அடிப்படை நோக்கங்கள் மனித நல்வாழ்விற்கான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதே. அதாவது மார்க்ஸ் சமூக தளத்திலும், பிரட் தனிமனி தளத்திலும் முன்னேற்றகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கோட்பாடுகளையும் அதற்கான வழிமுறைகளையும் முன்மொழிவுகளையும் உருவாக்கினர். இந்த முன்னேற்றகரமான மாற்றமானது மனிதர்களின் பிரக்ஞையான முயற்சியினுடாக சமூக தளத்தில் நடைபெறுகின்ற தவிர்க்க முடியாத இயக்கியல் செயற்பாடு என்கின்றனர் மார்க்சிய மூலவர்கள். பிரட்டைப் பொருத்தவரை இந்த முன்னேற்றமானது தனிப்பட்ட ;மனிதர் தனக்குள் பிரக்ஞைபூர்வமான நடைமுறைப்படுத்தவேண்டிய அவசியமான முயற்சியாகும். இதை விரிவாக விளங்கிக் கொள்வதற்கு அவர்களது அடிப்படைத் தத்துவத்துவங்களை சுருக்கமாக ஒப்பிட்டுப்; பார்ப்பது நல்லது.
மார்க்ஸியமும் உளவியலும் சமூகத்தையும் தனிமனிதரையும் புரிந்து கொள்வதிலும் அதனுள் இருக்கின்ற முரண்பாடுகளையும் மற்றும் அவற்றை மாற்றுவதிலும் ஒப்பிட்டளவில் ஒரே வகையான பார்வையையே கொண்டிருக்கின்றனர். இதன் அர்த்தம் மார்க்சியர்களும் உளவியலாளர்களும் அனைத்திலும் உடன்பட்டு ஒருவருடன் ஒருவர் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றார்கள் என்பதல்ல. இவர்களும்; தமது புரிதல்களின் அடிப்படையில் ஒருவர் மீது ஒருவர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அவை முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டும் வந்திருக்கின்றன. இந்த இரு தத்துவங்களும் அடிப்படையில் எதிர் எதிர் முனைகளில் கூட இருக்கின்றன எனலாம். ஆனால் இவர்கள் ஒரு விடயத்தில் உடன்படுகின்றனர். அதாவது சமூக முரண்பாடுகள் மனிதர்களில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தி அவர்களை மனநோயாளியாக்கியிருக்கின்றது. ஒருபுறம் வர்க்க, இன, சாதி, மத, பால் அடிப்படையிலான முரண்பாடுகளும் அடக்குமுறைகளும்  சமூகத்தை ஆரோக்கியமற்ற ஒரு நோய்யுற்ற சமூகமாக உருவாக்கியுள்ளது. இந்த நோயுற்ற சமூகமானது மனிதர்களையும் மனநோயுற்றதாக மாற்றியுள்ளது. மறுபுறம் இந்த மனநோயுற்ற மனிதர்கள்தான் மீண்டும் இந்த சமூகத்தை மாற்றியமைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் தாம் விரும்புகின்ற நோக்கத்தை அவர்களால் அடைய முடிவதில்லை. இதற்கு காரணம் என்ன? இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டே நாம் நமக்கான தத்துவத்தை கோட்பாட்டை உருவாக்கி நடைமுறை செயற்பாட்டிற்கான வழிகளைக் கண்டடைய வேண்டும்.
கடந்த நூற்றாண்டு முழுவதும் தத்துவத்திலும் கோட்பாட்டிலும் நடைமுறையிலும் ஆதிக்கம் செய்த ஒரே கருத்தியல் மார்க்சியம் என்றால் மிகையல்ல. இன்று மார்சியம் தோற்றுவிட்டதான தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு முதலாளித்துவ ஊடகங்கள் முயற்சிக்கின்றன. உண்மையிலையே ;தோற்றுப்போனது மார்க்சிய அடிப்படையிலான நடைமுறைக் கான முன்மொழிவும் அதனடிப்படையிலான செயற்பாடுகளுமே என்றால் தவறல்ல. மார்க்சியம் ஒரு தத்துவம் கோட்பாடு என்றளவில் தோற்கவில்லை என்றால் மிகையல்ல. ஏனனில் இந்த தத்துவத்திற்கும் அதன் நோக்கங்களுக்கு அடிப்படையாக இருந்த, இருக்கின்ற சமூக காரணங்களில் இன்றுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அப்படியே தொடர்கின்றன. ஆகவேதான் தத்துவவியிலாக உருவாகிய மார்க்சியம் வெகுவிரைவில் வரலாறு தொடர்பான ஒரு தத்துவமாக, ஒரு பொருளாதரா கோட்பாடாக, ஒரு அரசியல் விஞ்ஞானமாக மட்டுமல்ல ஒரு வாழ்க்கை முறையாகவும் மாறியது என்கின்றனர். அதாவது மார்ச்சியமானது தவிர்க்க முடியாதவகையில் மனித வாழ்வின் சகல அம்சங்களினதும் தளங்களிலும் ஒரு பகுதியாக இன்று இருக்கின்றது. ஆனால் மார்க்கிசயத்தை நடைமுறையில் பயன்படுத்தியோர் அதை முழுமையான தத்துவமாக சகல சமூக மனித பிரச்சனைகளுக்கும் தீர்வை முன்வைக்கின்ற சர்வரோக நிவாரணியாகவே பின்பற்றினர். பின்பற்றுகின்றனர். மார்க்ஸ் மனிதர்களின் விடுதலைக்கு தேவையான மிகவும் உயர்ந்த ஒரு கோட்பாட்டை  உருவாக்கி விட்டு சென்றுள்ளார் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. அதற்காக மார்க்ஸிலும் அவரது மார்க்ஸிய தத்துவத்திலும் இருக்கின்ற போதமைகளை, குறைப்பாடுகளை, தவறுகளை கண்டுகொள்ளாமல் விடுவது நாம் தொடர்ச்சியாக தவறிழைக்கவே வழி செய்யும். இதேபோல் மார்க்சின் பின் உருவான பிரட்டின் உளவியல் தத்துவமனாது தனி மனித முரண்பாடுகளை புரிந்து கொள்ளவும் தீர்க்கவும் முக்கியமானது. ஆனால் இதுவும் அனைத்துக்கும் முழுமையான ஒரு தீர்வல்ல.
சமூக மேற்கட்டுமானமான கலாசாரமானது அதன் வர்க்க உறவுகள் மற்றும் பொருளாதார காரணிகள் என்பவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகின்றது என்கின்றார் மார்க்ஸ். இதன் ஊடாக ஆதிகார வர்க்கமானது தனது நலன் சார்ந்த கருத்தாதிக்கத்தை ஒரு சமூக கருத்தாக்கமாக நிலைநாட்டுவதனுடாக தனது சுரண்டலை நடைமுறைப்படுத்தும் நோக்கத்தை இலகுவாக நிறைவேற்றிக்கொள்கின்றது. ஆனால் இந்த கருத்தாதிக்கத்திற்கு உட்பட்ட அடக்கப்பட்ட வர்க்கத்தினர், மனிதர்கள், தாம் சுதந்திரமாக செயற்படவும் சிந்திக்கவும் உடையவர்கள் என பிரக்ஞையின்மையாக நம்புகின்றனர். உண்மையில் அவ்வாறு சுதந்திரமானவர்களாக அவர்கள் இல்லை என்பதே யதார்த்தம். இதனை விளக்குவதற்கு ஹெகலின் தத்துவத்திலிருந்தே பெறப்பட்ட இயங்கியல் முறைமையை பயன்படுத்தினார் மார்க்ஸ். இந்த முறைமையானது முரண்பட்ட கோட்பாடுகளை ஆய்வு செய்து அவற்றை உயர்ந்த நோக்கமொன்றிக்காக இணைப்பதனுடாக முழுமையான மாற்றம் ஒன்றை அடைவதற்கான ஒரு பொதுவான கோட்பாடு ஒன்றை கண்டுபிடிப்பதாகும். இவ்வாறான ஒரு முறைமையை ஹெகல் சக்திவாய்ந்த இலட்சியபூர்வமான தத்துவம் ஒன்றை உருவாக்கவே பயன்படுத்தினார். ஆனால் மார்க்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தைப் புரிந்துகொள்வதற்குப் பயன்டுத்தினார். இதனுடாக தத்துவ வரலாறு என்பது வர்க்க போராட்டத்தின் அடிப்படையில் விளங்கப்படுத்தக் கூடியது என்றார். அதாவது, சமூகத்தை ஆதிக்கம் செய்கின்ற தத்துவ கருத்தாதிக்கதைதை புரிந்து கொள்ளவதனுடாக வரலாற்றில் இடம் பெற்று வந்த, வருகின்ற வார்க்க போராட்டதை புரிந்து கொள்ளலாம் என்கின்றார்.
இதேபோல் பிரட் மனிதர்களின் அடிப்படை உளவியல் (பாலியல்) சக்திகளை பிரதானமாக முக்கியத்துவப்படுத்தி தனது ஆய்வை மேற்கொண்டார். மனிதர்களது மேலோட்டமான பிரக்ஞையான வாழ்வு என்பது அவர்களுக்குள் நடைபெறுகின்ற பிரக்ஞையின்மை மற்றும் முரண்பட்ட உளவியல் சக்திகளின் இயக்கத்தினால் உருவாக்கப்படுகின்றது என்கின்றார். ஆகவேதான் மனிதர்களது பிரக்ஞைபூர்வமான அல்லது பகுத்தறிவான சிந்தனைகளும் செயற்பாடுகளும் கூட சிக்கலான பிரக்ஞையின்மையால் தீர்மானிக்கப்படுகின்றன. ஆனால் மனிதர்கள் இதை அறியாதவர்களாகவே இருக்கின்றனர். மாறாக தாம் சுதத்திரமாக சிந்திக்கவும் செயற்படவும் முடிந்தவர்கள்  என மனிதர்கள் பொதுவாக நம்புகின்றனர் என பிரட்டும் கூறுகின்றார். உண்மையில் அவ்வாறு இல்லை என்பதனை விளக்குவதற்கும் அதனை மாற்றுவதற்குமே உளவியலின் புதிய துறையான மனோதத்துவவியலை உருவாக்கினார். இதனுடாக மனிதர்களின் செயற்பாடுகள், சிந்தனைகள், கனவுகளை புரிந்துகொள்வதன் மூலம் அவர்களுக்குள் நடைபெறுகின்ற முரண்பட்ட இயக்கத்தையும் அது மனிதர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் புரிந்துகொள்ளலாம் என்கின்றார். இதனை மார்கசிய சிந்தனையின் அடிப்படையிலும் புரிந்து கொள்ளலாம். அதாவது ஒவ்வவொரு மனிதர்களுக்குள்ளும் ஒரு சமூகம் செயற்படுகின்றது. அதாவது மனிதர் ஒருவரின் மனதின் தன்முனைப்பு, பிரக்ஞை, பிரக்ஞையின்மை என ஒவ்வொரு பகுதிகளும் அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு படைகள் போல மனிதர்களுக்குள் இயங்குகின்றன எனலாம்.
மேற்குறிப்பிட்டவாறு வர்க்க அடிப்படையில் சமூகத்திலும்; உளவியல் அடிப்படைகளில் தனி மனிதர்களுக்குள்ளும் மற்றும் அவர்களைச் சுற்றி சமூக அளவிலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட பல்வேறு கட்டமைப்புகளும், கருத்தாக்கங்களும், கட்டுப்பாடுகளும் மனிதர்களது சிந்தனைகளை செயற்பாடுகளை கட்டுப்படுத்துகின்றது என மார்சும் பிரட்டும் கூறுகின்றனர். இது மனிதர்களை அவர்களிடமிருந்தே அந்தியப்படுத்தவே உதவிபுரிகின்றது. அதாவது மனிதர்கள் தம்மிடமிருந்தே அந்நியமாக இருக்கின்றர் என்பதை ஹெகலின் அந்நியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் விளக்குகின்றார் மார்க்ஸ்.
மார்க்ஸ் இந்த அந்நியமாதலை கோட்பாட்டை வர்க்கப் பார்வையில் மேலும் விரிவாக்கினார். அதாவது தத்துவங்களிலும் மதங்களிலும் மட்டுமல்ல மனிதர்களின்; இவ்வாறான அந்நியமாதல் இருக்கின்றது. இவற்றைவிட அரசியல், சமூக, பொருளாதரா தளங்கிளிலும் மனிதர்களின் அந்நியமாதல் இருக்கின்றது என்கின்றார். வர்க்க பிரிவினைகளின் அடிப்படையில் ஆதிகாரத்தில் இருக்கின்ற வர்க்கப் பிரிவினர் பிற வர்க்கத்தினரை அடக்கியும் சுரண்டுவதாலும், அடக்கப்படுகின்ற மனிதர்கள் தாம் உற்பத்தி செய்கின்ற பொருள்களிலிருந்தும் அதன் இலாபங்களிலிருந்தும் அந்நியமாக இருக்கின்றார்கள். இதேபோல் ஒவ்வொரு மனிதர்களுக்குள் பல்வேறுவகையான உளவியல் மனப் பாதுகாப்பு கவசங்கள் இருக்கின்றன. இவை மனிதர்கள் தமது வாழ்வை இயல்பாக வாழ்வதற்கு தடையாகவும் சமூகத்திற்கு ஏற்றவாறு வாழ்வதற்கும் பல வகையான அக அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் பயன்படுத்தி வழிகாட்டுகின்றது. இவ்வாறு, மனிதர்களுக்குள் நடைபெறுகின்ற அக அடக்குமுறைகளை அவர்களது பகுத்தறிவால் மனமானது நியாயப்படுத்தியும் விடுகின்றமை துர்ப்பாக்கியமானது. இவ்வாறன அக உளவியல் சக்திகளின் முரண்பாடுகளின் விளைவால் மனிதர்கள் தமக்குள்ளும், தம்மிலிருந்து அந்நியப்பட்டே இருக்கின்றனர். அதாவது ;பொதுவாக மனிதர்கள் சமூக மற்றும் தனிப்பட்ட வாழ்விலும் முழுமையாக ஒன்றினைந்து வாழாது பிளவு பட்டும் அந்நியமாகவுமே இருக்கின்றனர். அதாவது தம்மிடமிருக்கின்ற ஒரு பகுதியை வெளியானதாக்கி அதை வெளியிலிருக்கின்ற ஒரு உண்மையாக கருதுகின்றனர். இதன் வெளிப்பாடாகத் தான் தன்னை;போல் தோற்றமுள்ள ஆனால்; மிகவும் சக்திவாய்ந்த கடவுளை ;உருவாக்கினார்கள் என்ற கருத்தாக்கமும் முன்வைக்கப்படுகின்றது. இதன் விளைவாக இவ்வாறான சக்தியானது தன்னுள் இருக்கின்றது என்பதை மனிதர்கள் நம்பவுதற்கு மறுகின்றனர்.

மனிதர்களை அடக்குவதற்கும், சுரண்டுவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் அவர்களை அவர்களிடமிருந்தே அந்தியப்படுத்தி வைத்திருப்பதற்கும் ஆதிகார வர்க்கமானது பல தளங்களில் பலவகையான வழிமுறைகளைக் கையாள்கின்றது. ஒரு புறம் அரசியல் கட்டமைப்புகளையும் நிறுவனங்களையும் உருவாக்கி அமுல்படுத்துகின்றது. இத்துடன் அதிகார வர்க்கத்தினர் இவ்வாறான கட்டமைப்புகளை நியாயப்படுத்துகின்ற தமது கருத்தாதிக்கத்தை தத்துவங்கள், தார்மீக அறங்கள், மற்றும் மதங்கள் என்பவற்றினுடாகவும் கட்டமைகின்றனர். ஆகவேதான் இவையும் இவற்றினடிப்படையிலும் உருவாக்கப்பட்ட நீதியும் சட்ட முறைமைகளும் அதிகாரமற்ற வர்க்கத்தினரை தொடர்ந்தும்; அடக்குவதற்கும் சுரண்டுவதற்குமே துணைபோவதுடன் அதற்காகவே பயன்படுத்தவும் படுகின்றது.. இதேபோல் தனி மனிதர்களின் உளவியல் சக்திகளையும் அதனடிப்படையிலான இயல்பான, இயற்கையான செயற்பாடுகளை பண்பாடுகள் மற்றும் கலாசராங்களின் அடிப்படையில் கட்டுப்படுத்துவதற்கும் அடக்குவதற்கும் மேற்குறிப்பிட்ட நிறுவனங்களும் அதன் கருத்தாதிக்கங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இக் கருத்தாதிக்கங்கள் பாரம்பரிய தத்துவவியலாளர்களால் தொடர்ச்சியாக வரையறுக்கப்பட்டும் அவை நிரந்தரமானவையும் முழுமையானவையும் என நியாயப்படுத்தப்பட்டும் வருகின்றது. ஆனால் இவ்வாறன அதிகார வர்க்கத்தின் நீதியும் அறமும் நிரந்தரமான முழுமையான ஒரு வரையறையல்ல. மாறாக இவை சார்பு நிலையான ஒன்று என்பது வரலாற்று பொருள்முதல் வாத்தின் அடிப்படையிலும் வர்க்க போராட்டத்தின் வரலாற்றின் அடிப்படையிலும் தெளிவானது என்கின்றார் மார்க்ஸ்.
சமூக கட்டுப்பாடுகளுடன் உடன்பட முடியாதவர்கள் அல்லது முரண்படுகின்றவர்கள் தமது பிரக்ஞையுடன் அல்லது பகுத்தறிவுடன் சிந்தித்து மீறுகின்றவர்களை குற்றம் சுமத்தி தண்டனை வழங்குகின்றது. அது மட்டுமல்லாமல் மாபெரும் தவறு செய்து விட்டதான குற்ற உணர்ச்சியையும் உருவாக்கி சில நேரங்களில் மனநோயாளர்களாகவே அடையாளப்படுத்திவிடுகின்றது இந்த சமூக கட்டமைப்புகளும் அதன் கருத்தாதிக்கங்களும் ஊடகங்களும். மேலும் மனிதர்கள் இவ்வாறான சமூக கட்டமைப்புகளை இல்லாது ஒழிக்க பிரக்ஞையுடன்(?) எழுச்சி கொள்ளும் காலங்களில் எல்லாம் போர் என்ற மாய வலைக்குள் மனிதர்களை சிக்கவைத்துவிடுகின்றனர். அதனால்தான்; போர் என்பது சமூகத்தில் ஏற்படுகின்ற புரட்சிகர மாற்றங்களை திசைதிருப்புதை நோக்கமாக கொண்டதும் அடக்கப்பட்ட மனிதர்களை ஏமாற்றுகின்றதுமான ஒரு மயாமான கருவி என்கின்றார் மார்க்ஸ்.
இவ்வாறான சமூக அடிப்படையில் மனிதர்கள் அந்நியமாகி இருப்பதை வர்க்கமற்ற ஒரு சமூகமே இல்லாமல் செய்யும் என்றார் மார்க்ஸ். இந்தடிப்படையில்தான் அவரது பிரபல்யாமான வாசகத்தை முன்வைத்தார். இதுவரைவயில் தத்துவமானது உலகத்தைப் பற்றி விளங்கப்படுத்தியது. ஆனால் உண்மையான பிரச்சனை அதை மாற்றுவதில் தான் இருக்கின்றது என்றார். இதனால்தான் அவரது தத்துவமானது செயற்பாட்டிலிருந்து பிரிக்க முடியாததாக இருக்கின்றது. இவ்வாறன செயற்பாடு என்பது மனிதர்களின் பிரக்ஞைபூர்வமான ஒரு முயற்சியே என்றார். இதேபோல் தனி மனிதர்களுக்குள்; அகவயமாக நடைபெறுகின்ற அந்நியமாதலை பிரக்ஞையுடன் செயற்படுகின்ற முழுமையான ஒரு மனிதரே இல்லாமல் செய்யலாம். அதாவது பிரக்ஞை உள்ள மனிதராக ஒவ்வொருவரும் மாற்றமடைவதனுடாகவே, வளர்ச்சி பெறுவதனுடாகவே இதனை சாத்தியமாக்கலாம் என்கின்றார் பிரட். இதற்கான மனோதத்துவ வழிமுறையை பிரட் உருவாக்கினார். இதன்; மூலம் மனிதர்களது பிரக்ஞையை வளர்த்து அவர்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதே அவரது நோக்கம். இவ்வாறு பிரக்ஞையை மனிதர்களில் உருவாக்குவதன் மூலம்  அவர்களை அக முரண்பாடற்ற முழுமையான மனிதராக உருவாக்கலாம் என்கின்றார். அதாவது மார்க்சும் பிரட்டும் ஒரு விடயத்தில் ஒன்றுபடுகின்றனர். அதாவது பிரக்ஞை உள்ள மனிதர்கள் அல்லது மனிதர்களின் பிரக்ஞைபூர்வமான செயற்பாடுதான் மாற்றத்தை மனிதர்களிலும் சமூகத்திலும் உருவாக்கும் என்பதே அது. ஆனால் அவர்கள் பிரக்ஞை தொடர்பான ஆய்வை விரிவாகவும் ஆழமாகவும செய்யவில்லை எனலாம்.
இவர்கள் இருவரும் மனிதர்கள் பிரக்ஞையுடன் இருக்கவேண்டிய அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பாக மிகவும் வலியுறுத்துகின்றனர். ஆகவேதான் இவர்களது தவறுகளுக்கும் குறைபாடுகளுக்கும் அப்பால் இவர்கள் கூறியதை நாம் எந்தளவு புரிந்து கொண்டோம், கொள்கின்றோம் என்பது கேள்விக்குறியே. ஏனனில் மார்க்ஸ் குறிப்பிடுவது போன்று மனிதர்களின் எண்ணங்கள் பார்வைகள் எல்லாம் அவரவரது வர்க்க சமூகத்தால் கட்டமைக்கப்பட்டது என்கின்றார். ஆகவே இவ்வாறான மனிதர்களின் பார்வைகளுக்கு அவரது வர்க்கம் சார்ந்த பொருளாதார காரணங்கள் அடிப்படையாக இருக்கின்றன. இதேபோல் பிரட்டும் அவர் பின் வந்த உளவியாளர்களும் மனித சிந்தனை அல்லது எண்ணங்கள் என்பன மனிதர்களது உளவியல் தேவைகளினாலும் அதன் முரண்பாடுகளினாலும் பிரக்ஞையின்மையாக உருவாகின்றவை. இவை குறிப்பிட்ட மனிதரின் எண்ணங்கள் மட்டுமல்ல. மாறாக அம் மனிதரினதும் அனுபத்தினதும்; அவரது சமூகத்தின் கடந்த கால வரலாற்றினதும் அடிப்படைகளில்; பிரக்ஞையின்மையாக உருவாகின்ற கூட்டு எண்ணங்கள் என்கின்றனர்.  ஆகவேதான் நமது பிரக்ஞையின்மை;யான செயற்பாடுகளில், நடத்தைகளில் நமது வர்க்க, சாதிய, மத, பால் என்பவற்றின் தாக்கம் நம்மையறியாமலே அதிகமாக இருக்கின்றது. ஆனால் நாம் இவ்வாறான பாதிப்புகளின்; முக்கியத்துவத்தை எந்தளவு புரிந்து கொண்டோம் என்பது சந்தேகமானதே. இதற்கு அவசியமானது மனிதர்கள்; பிரக்ஞையுடன் வாழ்வது என்றால் மிகையல்ல. அதாவது தனிமனித மாற்றம் என்பது சமூக மாற்றத்திற்கு சமாந்தரமாக நடைபெறவேண்டு தவிர்க்க முடியாத அவசியமான ஒரு செயற்பாடு ஆகும்.
பிரட்டின் காலத்தில் மனித பிரக்ஞை தொடர்பாக அக்கறையாக இருந்து பல்வேறு பரிசோதனைகள் மூலம் ஆய்வு செய்த குர்ட்ஜிப் (George Gurdjieff) முக்கியமானவர். இவரின் முக்கியத்துவத்தை உணர்ந்த மேற்குலகின் புலமைசார் துறையினர் பலர் இவரது பரிசோதனை ஆய்வுகளில் பங்கு பற்றியிருக்கின்றனர். ஆனால் சமூக மற்றும் தனிமனித மாற்றத்திற்கான பாதையில் இவரின் கருத்துகள் இன்றும் பரவலாக உள்வாங்கப்படாமல் இருக்கின்றமை துர்ப்பாக்கியமே. அதேவேளை மேற்கைப் போல் அல்லாது இந்தியா, சீனா, ஐப்பான் போன்ற நாடுகளில் மட்டுமல்ல சில மத்திய கிழக்கு நாடுகளில் கூட பிரக்ஞை தொர்பான சுய பரிசோதனைகளின் அடிப்படையில் விரிவான ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன எனக் குறிப்பிட்டப்படுகின்றது. இதை நாம் அறிவதன் மூலமாகவே நமது பிரக்ஞையை வளர்ப்பதற்கு நாம் எவ்வாறு முயற்சிக்கலாம் என்பதை நாம் அறியலாம். இதனை நடைமுறையில் செய்வதற்கு சமூகத்தை மாற்றுவதில் அக்கறையுடன் இருக்கின்ற ஒவ்வொரு மனிதர்களும் முன்வரவேண்டும்.

நன்றி: மீராபாரதி

No comments: