Thursday, January 19, 2012

ஸ்ரீ லங்கா அரசியலில் சாதி , இனம் , மொழி , மதம் என்பனவற்றின் தாக்கம்

- விக்டர் ஐவன்-

இந்தக் கட்டுரை இன நெருக்கடி மற்றும் அவை சுட்டிக்காட்டும் அவற்றின் உள்ளார்ந்த குறைபாடுகள் என்பனவற்றின் பாரம்பரிய விளக்கங்களின் போதாமைகளை ஆராயும் கருத்தில் எழுதப்படுகிறது.

இந்த பிரச்சினையை இன நெருக்கடிக்கான ஒரு சிகிச்சையாகக் கருதுவதில் தவறேதுமில்லை. இன்னும் எனது கருத்தில் இதை மோதலை அடிப்படையாகக் கொண்ட பெரும்பான்மை சிங்கள சமூகத்துக்கும் மற்றும் ஏனைய சிறுபான்மை இனங்களான தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களிடையே நிலவும் இன வேறுபாடுகளின் அடிப்படையில் மட்டும் சிகிச்சிப்பதற்காக பயன்படுகிறது எனக் கருதுவது தவறு. வேறு விதமாகக் கூறினால், நெருக்கடி நிலைக் காட்சிகள் இன வரிகளுக்கு அப்பால் நீளும் பல்வேறு முகங்களை தழுவியிருக்கிறது.


இந்த பாரம்பரிய விளக்கமானது அதன் சொந்த வரம்புகளைக் கொண்டிருப்பதோடு, அதன்படி அது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்களிடையே ஏற்படும் இனக்கலவரத்தின் ஒரு விளைவாகவும் இருக்கிறது. சாதி அமைப்பை அடிப்படையாகக் கொண்ட சமூகப் பிரிவுகள் மற்றும் பல்வேறு மதக் குழுவினர் ஆகியோரிடையே நிலவும் மறைமுகமான மோதல்களை அது கண்காணிக்கத் தவறியுள்ளது. இதன் விளைவாக இந்த நெருக்கடியின் மத – சமூகப் பரிமாணங்கள் ஒன்றில் புறக்கணிக்கப்பட்டதாக அல்லது விலக்கப்பட்டதாக உள்ளன, மற்றும் இந்த விடயம் இன வேறுபாடுகள் என்கிற பதத்தினால் மட்டுமே வரையறுக்கப்பட்டு வருகின்றது.

எனது கருத்தின்படி இனம், சாதி, மற்றும் மதம் என்பன உருவாக்கும் மூன்று முக்கிய கூறுகள் இனப்பிரச்சினை என்கிற உள்ளார்ந்த சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. இவை பிரிக்க முடியாதபடி ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன.இந்தச் சூழ்நிலையில் இன நெருக்கடியை அதன் சரியான கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வதோடு, வேறு வேறு சமூகங்களிடையே நிலவும் , இனம், சாதி, மற்றும் மதம் என்பனவற்றின் வேறுபாடுகளை இன வேறுபாட்டின் காரணமாக முளைவிடும் மோதலுக்கு சற்றுக் குறைவானது என்று கருதாமல் இவையாவற்றையும் உள்ளடக்கிய தனியான ஒரு பிரச்சினையாகவே கருதவேண்டும்.

இந்தக் காரணிகள் ஒன்றோடொன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இன நெருக்கடியின் வேர்கள் இந்தக் காரணிகளுக்குள் ஆழமாக இறங்கியுள்ளன. எனவே இதற்கு நீடித்த நிலையான தீர்வு ஒன்றைக் காணவேண்டுமாயின் இனப்பிரச்சினையானது அனைத்துக் கோணங்களிலும் உணரப்பட்டதாகவும் மற்றும் புரிந்து கொள்ளப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.

பிரச்சினையை துண்டு துண்டாகப் பகுப்பாய்வு செய்வது, யதார்த்தமானதும் மற்றும் நடைமுறைக்கு ஏற்றதுமான தீர்வுகளை ஏற்றுக் கொள்வதற்கு வழிவகுக்காது.

பெரும்பான்மை சிங்களவருக்கும் மற்றும் சிறுபான்மை இனக் குழுவினருக்கும் இடையேயுள்ள இனவேறுபாடுகள் காரணமாக வெளிப்படும் இன நெருக்கடி வரையறை செய்யும் பாரம்பரிய விளக்கத்தை, இனக் கற்கைகளுக்கான நிலையம்,சமூக விஞ்ஞான சங்கம், மற்றும் மார்கா நிறுவனம் போன்ற பல்வேறு நிறுவனங்கள் வெளிப்படையாக உருவாக்கியுள்ளன

.தமிழ் அரசியற் கட்சிகளால் 1977ல் நிறுவப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, 1977ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்கள் இலட்சியமான தமிழீழம் என்பதற்கான ஆணையைப் பெறுவதற்காக எழுப்பிய கோரிக்கையானது, ஈழத்தை அடைவதற்காக ஆயுதப்போராட்டத்தை உறுதிப்படுத்தும் பல்வேறு அமைப்புக்களை தோற்றுவித்ததோடு, 1983ம் ஆண்டின் கறுப்பு ஜூலை போன்ற மோசமான சம்பவங்களை தோற்றுவித்து, சாதி மற்றும் மத வேறுபாடுகள் போன்ற அடிப்படைக் காரணிகளைப் புறந்தள்ளி இனக் காரணிக்கு மட்டும் பிரதானமான முக்கியத்துவத்துவம் கற்பிக்கும் நிலையை ஏற்படுத்தின.

இந்தத் திருப்பம் சாதி மற்றும் மத காரணிகளை, பிரதானமற்ற, முக்கியத்துவமற்ற, மற்றும் தொடர்பற்ற பின்னணிக்குத் தள்ளிவிட்டது. இந்தப் போக்கின் மாறுபடாத விளைவாக இனவேறுபாடுகள் மட்டும்தான் இனநெருக்கடிக்கான ஒரேயோரு காரணி என்கிற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது.

வருந்தத் தக்க கறுப்பு ஜூலையில் நடைபெற்ற பிரியமற்ற நிகழ்வுகளின் விளைவாக பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ந்தார்கள், இதன் காரணமாக இனப்பிரச்சினையில் சர்வதேசக் கவனம் ஈர்க்கப்பட்டது. இதைத்தவிர இனமோதலானது ஒரு இலாபமீட்டும் தொழிற்சாலையாக மாறி பெருமளவு வெளிநாட்டு நாணயத்தை பெற்றுக் கொடுத்தது. இறுதியில் இது இந்த விடயத்தைப் பல வித ஆராய்ச்சி வேலைகளை செய்யத்தூண்டும் பிரபலமான நாகரிக அமைப்பாக மாற்றியதுடன், இன நெருக்கடியைப்பற்றி பல பகுப்பாய்வுகள், விளக்கங்கள், பரிந்துரைகள், மற்றும் பரந்த பல்வேறு தீர்வுகளை உருவாக்கும் ஒரு நிறைவுள்ள இலக்கியமாகவும் மாற்றியமைத்தது.

இந்த பிரபலமான கற்கைப் போக்கை எதிர்கொள்ள, சாதி மற்றும் மதம் போன்ற காரணிகள் முற்றாகப் புறக்கணிக்கப் பட்டதுடன், மற்றும் இந்த நெருக்கடியானது சிங்களவர் மற்றும் தமிழர் ஆகியோருக்கு இடையில் உள்ள தனியான இனப் பிரச்சினையாகவும் மற்றும் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனங்களிடையே உள்ள மோதலாகவும் வரையறை செய்யப்பட்டது.

இந்தப் பிரச்சினையை கல்வி சம்பந்தமாகக் கையாளும் புத்திஜீவிகள் மற்றும் அறிஞர்கள் முற்றாகக் புறக்கணித்த அல்லது கவனிக்காமல் தவிர்த்த குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் உள்ளன.

அவை பின்வருமாறு: அவர்கள் பிரபாகரன் தலைமையில் வடக்கில் உருவான கிளர்ச்சி பற்றிய தங்கள் சொந்த விளக்கத்தை மட்டும் வழங்கினார்களே தவிர, றோகண விஜேவீர தலைமையில் தென்பகுதியில் ஏற்பட்ட கிளர்ச்சி சம்பந்தமாக யதார்த்த Rohanapraba1பகுப்பாய்வினை செய்யத் தவறியதோடு, மற்றும் அதற்கு வழிவகுத்த உண்மையான காரணத்தை விளக்கவும் தவறியுள்ளார்கள். அவர்களைப் பொறுத்தவரை வடக்கில் முளைத்த தமிழ் வன்முறை இயக்கங்கள் யாவும் இன நெருக்கடியின் விளைவினால் உருவானவை என்பதே ஆனால் சிங்களத் தென்பகுதியில் ஏற்பட்ட ஜேவிபி யின் எழுச்சிக்கான சரியான காரணத்தை பற்றிப் பிடிக்கத் தவறியதோடு, அவாகளின் விளக்கங்களில் அவர்கள் அதை முற்றாகப் புறக்கணித்தும் உள்ளார்கள்.

எல்.ரீ.ரீ.ஈயின் தோற்றத்துக்கு முன்பு வடக்கின் பாரம்பரிய அரசியற் கட்சியானது வெள்ளாள சாதியினரின் ஆதிக்கத்திலேயே இருந்தது. இன்னும் போராளிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறையான அரசியற் போராட்டத்தில் அதற்கு ஒரு இடம் கிடைக்கவில்லை .உண்மையில் புலிகளின் தோற்றம் பற்றி பகுப்பாய்வு மேற்கொண்ட புத்திஜீவிகள் அதில் சாதிக் காரணி வகித்த பங்கினைப் பற்றி தங்கள் கவனத்தை திருப்பத் தவறிவிட்டார்கள்.

விஜேவீர மற்றும் பிரபாகரன் ஆகிய இருவருமே அவர்களின் அந்தந்த சமூகங்களின் பாரம்பரிய சாதிப் படிநிலையில் குறைந்த தரத்திற்கே சொந்தமாக இருந்தனர். சிங்கள சாதி அமைப்பின் முக்கியத்துவ வரிசையில் கொவிகம சாதி முன்னிலை வகித்த அதேவேளை தமிழர் சாதி அமைப்பில் வெள்ளாள சாதியானது மேம்பட்ட சாதியாகத் திகழ்ந்தது.

விஜேவீர மற்றும் பிரபாகரன் ஆகிய இருவருமே இடைப்பட்ட சாதி வரிசையை சேர்ந்தவர்களாகவே இருந்தனர். விஜேவீர கராவ சாதியினையும் மற்றும் பிரபாகரன் கரையார் சாதியையும் சேர்ந்தவர்கள், இவை சாதிப் படிநிலைகளில் ஒரு இடைப்பட்ட நிலையையே கொண்டிருந்தன. இங்கு குறிப்பிடுவதற்கு சுவராஸ்யமான ஒரு விடயம், விஜேவீரவின் ஜேவிபி யிலும் மற்றும் பிரபாகரனின் எல்.ரீ.ரீ.ஈ யிலும் உள்ள மத்திய குழுவில் அங்கத்தவர்களாக இருந்தவர்கள் குறைந்த சாதியைச் சேர்ந்தவர்களே, இந்தக் குணவியல்பு பாரம்பரிய அரசியற் கட்சிகளான ஐதேக, ஸ்ரீலசுக, தமிழ் காங்கிரஸ், மற்றும் தமிழரசுக் கட்சி ஆகியவற்றில் காணப்படவில்லை.

ஜேவிபி மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யினரின் காலாட்படைகள் பெருமளவில் சிங்கள மற்றும் தமிழ் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகளின் பிரதிநிதிகளையே கொண்டிருந்தன .இன நெருக்கடி பற்றி ஆராய்ச்சி செய்த புத்திஜீவிகள் தங்கள் ஆராய்ச்சிப் பணிகளில் இந்தக் காரணிபற்றி அதிக சிரத்தை மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

Ramanathanபொன்னம்பலம் அருணாசலம் தேசிய காங்கிரசில் இருந்து கட்சி மாறிய பின்னரே பாராம்பரிய தமிழ் தலைவர்கள் இரண்டு வேறு வேறு திசைகளில் நகரத் தொடங்கினர். ஆரம்பத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர்கள் 1920 ம் ஆண்டின் மறுசீரமைப்பின் கீழ் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு நகரத்தில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய பொன்னம்பலம் அருணாசலத்தை அனுமதிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தனர், மற்றும் பின்னர் அவர்கள் ஜேம்ஸ் பீரிசிற்கு சாதகமாகத் திரும்பியதால் முன்னவர் தேசிய காங்கிரசினைக் கைவிட நேர்ந்தது. அவர் தேசிய காங்கிரசில் இருந்து ஏன் கட்சி மாறினார் என்பதற்கான பிரதான காரணம் இதுதான். இந்த சம்பவத்தை நெருக்கமாக ஆராய்ந்தால் இனக் காரணி அல்ல ஆனால் சாதிக் காரணியே இதில் செல்வாக்கு செலுத்தியிருந்தது என்கிற உண்மை வெளிப்படும்.

”நவீன இலங்கையில் உள்ள சாதி” என்கிற தலைப்பில் பிரைஸ் ரியான் எழுதியுள்ள புத்தகம் 19ம் நூற்றாண்டிலிருந்து கிட்டத்தட்ட 1925ம் ஆண்டுவரை நாட்டில் எழுந்த பிரிவினைவாத முரண்பாடுகள் யாவும் வித்தியாசமான இனக் குழுக்களை விட வித்தியாசமான சாதிக் குழுக்களின் இடையேதான் எழுந்துள்ளன என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஜி.ஏ. தர்மரத்ன வெளியிட்ட “கரா – கொவி போட்டி” என்கிற கையேட்டில் 1890ம் ஆண்டுகளில் உள்ள சாதிப்பாகுபாட்டின் மீதான சமயவாதத்துறையின் தோற்றம் என்பது பற்றி எழுத்து வடிவிலான ஒரு அமைப்பினைக் காணலாம். ஆசிரியர் 12 செப்டம்பர் 1885ம் ஆண்டளவில் மாத்தறையில் பொன்னம்பலம் அருணாசலம் அவர்களினால் கூறப்பட்டதாகத் தெரிவிக்கும் ஒரு அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் பொன்னம்பலம் அருணாசலம் சிங்கள சாதிப் படிநிலையிலுள்ள கொவிகம சாதியின் மேன்மை மற்றும் முக்கியத்துவம் பற்றிப் புகழ்ந்து ஒரு கருத்தைக் கூறியுள்ளார். இந்த தெளிவான ஆதாரம் தெரிவிப்பது பொன்னம்பலம் அருணாசலம் கூட அந்த நேரத்தில் சிங்களவரிடையே நிலவிய சாதி முரண்பாடுகளில் ஈடுபட்டிருந்தார் என்பதனையே.

அதன்பின் டிசம்பர் 1911ல், சட்டசபையில் கல்விமான்களாகிய இலங்கையருக்கான வெற்றிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட தேர்தல்களில், தற்போதைய பாராளுமன்றத்தின் முன்னோடிகளான செல்வந்த கொவி கம சிங்களவர்கள், பொன்னம்பலம் அருணாசலத்தின் சகோதரரான பொன்னம்பலம் இராமநாதனை செல்வந்த கராவ இனத்தவர் நிறுத்திய வேட்பாளரை தோற்கடிப்பதற்காகப் பயன்படுத்திக் கொண்டனர்.

அந்த நேரத்தில் வாக்குரிமை படித்த பணக்காரர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப் பட்டிருந்தது. கராவ சாதியினரின் வேட்பாளரான கலாநிதி. மார்க்கஸ் பெர்னாண்டோவை தோற்கடிப்பது சாத்தியமற்றது என்பதை உணர்ந்த சிங்கள கொவி கம சாதியினர், கொவி கம சாதி வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவதற்கு அப்போது இந்தியாவில் ஓய்விலிருந்த பொன்னம்பலம் இராமநாதனை வரவழைக்கத் தீர்மானித்தார்கள்.

சகல தமிழர்களும் ஒட்டு மொத்;தமாக பொன்னம்பலம் இராமநாதனுக்கு வாக்களித்த அதேவேளை சிங்கள கொவிகம வாக்காளர்களும் அவருக்கு வாக்களித்ததைத் தொடர்ந்து பொன்னம்பலம் இராமநாதன் கலாநிதி. மார்க்கஸ் பெர்னாண்டோவை வெகு சுலபமாக வெற்றி கொண்டார். சாதி மோதல்கள் அதன் உச்சக் கட்டத்தை எட்டிய ஒரு நிகழ்ச்சியை இது குறிக்கிறது
 நன்றி: வீரகேசரி

No comments: