Thursday, January 05, 2012

கசகறணம் பற்றி

நாவல் உரை  -மு.நித்தியானந்தன்-


கசகறணம் என்கின்ற இந்தப்படைப்பு இந்தமொழியைத் தவிர வேறு எந்தமொழியிலும் கூறப்பட்டிருக்கக் கூடாது. இந்நாவலின் மொழியே இந்நாவலின் வெற்றிக்கான முதற்காரணம்.

‘நீங்கள் உயிர்வாழ்வதென்பது உங்களின் உரிமையல்ல. அது உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற சலுகை மட்டுமே’ மேற்படி வசனமானது இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் சொன்னதாக ராஜினி திராணகம தனது நூலில் குறிப்பிட்டது.

மூன்று தசாப்தங்களாக நடந்து கொண்டிருந்த போரியல் வாழ்வின்போது விடுதலைப் புலிகளோ மற்றைய இயக்கங்களோ இலங்கை இராணுவமோ இந்திய இராணுவமோ யாராக இருப்பினும் தங்களின் சுய நலனுக்காக பந்தாடப்பட்டதில் சிதிலமடைந்து சின்னாபின்னமாகிப்போன மக்களுடையதும் மண்ணுடையதும் பதிவுதான் விமல்குழந்தைவேல் படைத்திருக்கின்ற கசகறணம் என்கின்ற நாவல்.


ஹீரோயிஸம் அற்ற சாமானிய மக்களையும் அவர்கள் தம்வாழ்வுதனையும் மிகமிக எளியமுறையில் சொல்லப்பட்டிருக்கும் இந்நாவலின் கதைக்களம் அக்கரைப்பற்று சந்தையே. இது இதுவரை ஈழத்து இலக்கியங்களில் வந்திராத புதுமை. வாங்குவோர் விற்போர் என்ற நிலைகளுக்கு அப்பால் ஒரு குடும்பம்போல் கூடிப்பிரியும் சந்தை மாந்தர்களும் அதிசய மாந்தர்களாகவே தென்படுகின்றார்கள். தலைமுடி வெட்டும் நாவிதனின் சம்பளத்தை தன் சேனைப்பயிர் விளைபொருட்களாகக் கொடுத்து தீர்க்கும் சந்தை நடைமுறை வாழ்வை அறியும்போது எந்த சமூக ஆய்வாளனாலும் பார்க்கமுடியாத ஒரு நுண்ணிய பார்வையில் ஆசிரியர் அச்சந்தையை அவதானித்திருக்கின்ற விதம் என்னை ஆச்சரியப்படுத்துகின்றது.
நேசமும் அன்பும் பாசமும் கலந்த இச்சந்தையின் இயல்புநிலையை சித்திரிக்கின்றபோது முஸ்லீம்களும் தமிழர்களும் சேர்ந்துவாழவேண்டுமென்ற ஆசையையே ஆசிரியர் இந்நாவல் வாயிலாக சொல்லுகின்றார். சொன்னவிதத்தில் திரிப்போ திணிப்போ இல்லாதவாறு மிகமிக இயல்பாகவே சொல்லியிருக்கின்றார்.

ஈழத்திலிருந்து இதுவரை வந்த நாவல்களுக்குள்ளிருந்து அறுபது அல்லது எழுபது நூல்களையே நாவல் என்ற கட்டுக்குள் அடக்க நேரிடுகின்றது.
ஈழத்திலிருந்து வந்த முதல்மூன்று நாவல்களில் ஒன்றுகூட வடக்கிலிருந்து வெளிவரவில்லை. அந்த மூன்றுமே கிழக்கிலிருந்துதான் வந்தது என்பதே ஆச்சரியமான உண்மை. அத்தகைய தோற்றுவாயின் தொடர்ச்சியாகவே விமல் குழந்தைவேலின் நாவல் அமைந்திருக்கின்றது.
ஏகபிரதிநிதித்துவம் என்பது அரசியலில் மட்டுமல்ல இலக்கியத்திலும் உண்டு. எழுத்துமொழி உயர்ந்தமொழி. பேச்சுமொழி என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபாடானது. அதில் இழிசாதி மொழியும் உண்டு. அதனை இலக்கியத்தில் அங்கீகரிக்கமுடியாதென்று சொன்னவர்கள் வேறுயாருமல்ல. இலக்கிய மேட்டுக்குடியினரே.

பிரதேசமொழியை தீண்டத்தகாத மொழியென்று இவர்கள் சொல்வதற்கான முக்கியகாரணம்: தீண்டத்தகாதவர்களென இவர்களால் நினைக்கப்பட்ட டானியலுக்கும் டொமினிக் ஜீவாவுக்கும் கிடைத்த இலக்கிய அங்கீகாரத்தை ஏற்றுக்கொள்ளமுடியாத மனநிலையே. அதன் தொடர்ச்சியுயே கசகறணம் மொழிக்கும் கிடைத்திருக்கின்றது. கசகறணம் என்கின்ற இந்தப்படைப்பு இந்தமொழியைத் தவிர வேறு எந்தமொழியிலும் கூறப்பட்டிருக்கக் கூடாது. இந்நாவலின் மொழியே இந்நாவலின் வெற்றிக்கான முதற்காரணம்.
பச்சை என்று நினைத்து காட்டுக்குள் செல்லும் நம்கண்ணில் ஆயிரம்பச்சைகள் தெரிவதுபோல் இலக்கியத்துக்குள்ளும் பல பிராந்திய மொழிகள் மறைந்து கிடக்கும்.

ஞாம் சென்று வருகின்றோம்’ என்ற சொற்பதம் மேட்டுக்குடியிலிருந்து தொடங்கி நான் போய் வருகிறேன்’ என்று மருவி பேய்த்து வாறன்’ என்று சேரிக்குள் வந்திருக்கின்றபோதிலும் அச்சொற்பதம் கொண்டுள்ள கருத்து ஒன்றுதான். ஆக மொழியெல்லாமே ஒன்றுதான். அது சொல்லப்படுகின்றவர்களாலும் சொல்லுகின்ற இடத்திலுமே வேறுபடுகின்றது.

பிராந்தியச் சொல்மொழிதான் உயிர்ப்பான சொல்மொழி அவைகளை அழித்து விடாமல் பாதுகாக்க வேண்டியது எழுத்தாளனுடைய கடமை. அந்தக் கடமையை விமல் ஓரளவு செய்திருக்கின்றார்.
இலக்கிய விழுமியங்களுக்கு மிகமிக நெருக்கமாக இருப்பது மட்டக்களப்பு மொழியே என்பது ஆய்வாளரின் கணிப்பு. அதிலும் கிழக்கு மாகாண பிராந்திய சொல்வழக்குகள் மிகவும் பழமையான செழுமையானவைகள். அவைகளை இந்த தமிழ் சமூகத்துக்கு தந்தமைக்காக நாம் விமலுக்கு நன்றி கூறவேண்டும். ஆக கசகறணத்தின் மொழியை நாம் அவ்வளவு எளிதில் விலக்கி விடமுடியாது. அப்படி நினைத்தால் அது காழ்ப்புணர்ச்சியின் வெப்பிசார விம்பலாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
நாவலில் விமலின் பாத்திரங்கள் அற்புதமாக சொல்லப்பட்டிருக்கின்றது. உயிர்மாந்தர்கள் மட்டுமன்றி சந்தை, சேனை, மரம், செடி, பயிர்த்தாவரங்கள், ஆடு, மாடு, கோழி, குருவிகளைக்கூட பாத்திரங்களாக மாற்றிய புதினமிது. சந்தைக்குள் கடை வைத்திருந்த ஒருவராலோ, காலாகாலத்து கமக்காரன் ஒருவனாலோ மட்டும்தான் இப்படிப் படிமங்களைக் காட்டமுடியும். அதிலும் அழகியல் என்பது ஆச்சரியப்படுத்துகின்றது. வெள்ளும்மா என்கின்ற பெண்பற்றிய விபரணத்தை வாசிக்கும் ஒரு ஓவியக்கலைஞன் வெள்ளும்மாவையே அச்சு அசலாக வரைய முடியுமென்ற ஐயப்பாடின்மையை அந்த அழகியல் விபரணம் அழகாகச் சொல்லுகின்றது.
சந்தையும் அதன் எரிப்பும் அதன் பின்பான மைலிப்பெத்தாவின் உணர்வும் துடிப்பும் பதைப்பும் மேலைத்தேய இலக்கியங்களிலும் உலக சினிமாக்களிலுமே காணக்கூடிய ஒன்று. இத்தன்மை நாவலின் பல இடங்களில் பரவிக்கிடக்கின்றது.

வாசகனின் அன்றாட தினசரி வாழ்வோட்டத்தை ஓரிருநாட்களுக்கேனும் திசைதிருப்புகின்றது கசகரண வாசிப்பு, மைலிப்பெத்தாவின் போராட்டமும் துன்பமும் துயரமும் என்னை மிகவும் பாதித்துவிட்டது. குலத்தழகி, வெள்ளும்மா, மலர், குஞ்சரக்கா போன்ற பாத்திரங்கள் மூலமாக ஆசிரியர் பெண்ணாகவே மாறிநிற்பது தற்கால இலக்கியங்களில் காணக்கிடைக்காத ஒன்று.

ஒரு சந்தையை மையப்படுத்தி கிழக்கு மக்களின் மொழியில் அவர்களின் வாழ்வியலை துல்லியமாக சொன்ன இந்நாவல் கடந்த முப்பது வருடங்களில் வெளியான ஈழத்துப் படைப்புக்களுக்கு முத்தாய்ப்பாய் அமைந்திருக்கின்றது.

கசகறணம் என்கின்ற இத்தலைப்புடன் பலருக்கும் பல கேள்விகளும் விமர்சனங்களும் எழுகின்றபோதிலும் வாசிப்பின் பின்பாய் சிந்திக்கும் வேளையில் இக்கதைக்கு இத்தiகூலப்பைவிட வேறொரு தலைப்பிட்டிருப்பின் அது பொருந்தாத்தன்மை கொண்டிருக்குமென்பதே என் கணிப்பு. புத்தகத்தின் விற்பனை வருவாய் பற்றிச் சிந்தியாமல் இத்தலைப்பிட்ட துணிவுக்கு விமலை பாராட்டியேயாக வேண்டும்.
முடிவாக கடந்த நூற்றாண்டின் கடைசியிலும் இந்த நூற்றாண்டின் இதுவரைக்கும் வந்த ஈழத்து நாவல்களில் கசகறணம் முதன்மையான நாவல் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

(22-10-2011, நாவல் உரை
அரங்கில் மு.நித்தியானந்தன் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி)

No comments: