Wednesday, March 03, 2010


கறுப்பாகிக் கிடந்த ஈழமண்ணில்எழுந்து பழுத்து வீழ்ந்த விதை!
அமரர்
சின்னத்தம்பி செல்லையா

1932
-2007
-கரவைதாசன்-

யாழ்ப்பாணத்து நிலவுடைமைச் சமூகத்தின் முரண்பாடுகளை விளங்கிக்கொண்டு, அச்சமூகத்தில் அசைவியகத்தினை ஏற்படுத்திய கருத்துப் பொறிகளில் மார்க்சிய வழியில் 1950ம் ஆண்டு காலப்பகுதிகளில் தோன்றிய அமைப்பாளர்கள், மாதிரி உருவை வடிவமைத்தவர்கள், மார்க்கத்தினை கண்டறிந்தவர்கள், வாழ்ந்து பணி செய்த தோழர்கள் வரிசையில் இந்த ஆண்டில், முதலில் அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபையைச் சேர்ந்த மா.செல்லத்தம்பி அவர்களை இழந்து தவித்து நின்றபோது மகாசபையைச் சேர்ந்த இன்னொரு தோழர் துன்னாலையைச் சேர்ந்த தலைவர் செல்லையாவையும் இழந்துவிட்டோம் என்ற செய்தி வந்து சேர்ந்தது.

தோழர் செல்லையா அவர்கள் அமரத்துவம் அடைந்துவிட்டார். அவர் நிகழ்வுகளை புனைவின்றி பதிவு செய்வதினூடே ஐம்பதுகளில் அடக்கு முறைக்கெதிராக கிளர்ந்தெழுந்த ஒரு சமூகத்தின் வரலாற்றினையும் பதிவு செய்யும் வாய்ப்பு கிட்டுவதை உணர்கிறேன். அன்று ஈழத்திலே ஒரே மொழியைப் பேசி ஒரே பிரதேசத்தில் ஒரே மாதிரியான வாழ்வை வாழ முடியாமற் தடுத்து, நாகரிகமற்ற முறையில் எங்கள் மண்ணின் மைந்தர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டபோது, கிளர்ந்தெழுந்த வரலாற்றினை பதிவு செய்யும் முயற்சியாகவும் இதனைக் கொள்ளலாம். எனில் எனக்கு எட்டியவரை கிடைத்த தகவல்களின் வழி நான் வாழ்ந்த கிராமத்தில் வாழ்ந்த இவரோடொத்த தோழர்களையும் இவர்களது செயற்பாடுகளையும் ஆவணப்படுத்த நினைக்கிறேன்.

அமரர் சின்னத்தம்பி செல்லையா அவர்கள் ஈழத்தின் வடமராட்சிப் பகுதியில் துன்னாலை மேற்கில் 22-04-1932ல் சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் இளைய மகனாகப் பிறந்தார். யாழ் /ஞானசாரியார் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய இவர் தொடர்ந்து அரசினரால் நடத்தப்பட்ட பாடசாலை, நெல்லியடி மத்தியமகாவித்தியாலயத்தில் ஆங்கில மொழிமூலம் தனது இடைநிலைக் கல்வியினை கற்று தேறினார். தனது ஊரைச் சேர்ந்த பூங்கிளி என்ற பெண்ணை வாழ்க்கைத் துணையாகச் சேர்ந்து ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்று ஐவரையும் ஆசிரியைகளாக உருவாக்கியுள்ளார்கள்.

அமரர் அவர்கள் இடைநிலைக் கல்வியினை கற்று தேறிய காலத்திலேயே வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையில் கணக்காளராக வேலைக்கமர்த்தப்பட்டார். சமூகச் சீர்திருத்த எண்ணமும் அடக்குமுறைக்கெதிரான போராட்டச் சிந்தனையும் இவரை கம்யூனிசக் கட்சியிலும் அதனைத் தொடர்ந்து எம்.சி.சுப்பிரமணியம் அவர்களை தலைமையாகக் கொண்ட சிறுபான்மைத் தமிழர் மகாசபையிலும் இணைந்து செயற்பட வைத்தது. வடமராட்சியில் மகாசபையின் கிளையினை அமைத்து செயற்பட்ட தோழர்கள் அமரர்கள் ..செல்லத்துரை, கவிஞர் பசுபதி, மு.செல்வபாக்கியம், கிருஸ்ணபிள்ளை, ஜீ.ஜீ.மகாலிங்கம், முருகேசு, மா.செல்லத்தம்பி, .குலேந்திரம், .சின்னத்தம்பி, .வன்னியசிங்கம், வீ.எஸ்.சிவபாதம், .தங்கமணி, மற்றும் இரகுநாதன், தெணியான், .இராசரத்தினம் ஆகியோருடன் இணைந்து முன்னணியில் நின்று செயற்பட்டார். மகாசபையின் பொதுக் காரியதரிசியாக சட்டத்தரணி பீ.ஜே. அன்ரனி அவர்கள் இருந்து உழைத்துக் கொண்டிருந்தபோது அமரர் அவர்கள் நிர்வாகக் காரியதரிசியாக இருந்து செயற்பட்டார். அப்போது உத்தியோகமா? சமூகப்பணியா? எனக் கேள்வி எழுந்தபோது உத்தியோகத்தினை விட்டு வந்து சமூகப்பணியிலே முழுவதுமாக ஈடுபட்டார்.

இப்டியாக இவர் மட்டுமன்றி எம்.சி.சுப்பிரமணியம் எலிபன்ட் கவுசில் பார்த்த உத்தியோகத்தை துறந்தார். கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த .தங்கமணி அவர்கள் பொலிஸ் உத்தியோகத்தினை துறந்துவிட்டு இவர்களுடன் சமூகப்பணியில் சேர்ந்து செயற்பட்டார். அது போலவே கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த வீ.எஸ்.சிவபாதம், .சிவகுரு இருவரும் கூட தாங்கள் அக்குறனையில் வகித்து வந்த பண்டகசாலைப் பொறுப்பாளர் உத்தியோகங்களை விட்டு வந்து (இப்படிப் பலர்) சமூக மாற்றத்திற்காக எழிச்சியுடன் ஈடுபட்டு உழைத்தார்கள்.
அமரர் அவர்கள் 1956ல் பொன்.கந்தையா அவர்களின் தேர்தல் வெற்றிக்காக கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரக் கூட்டங்களில் ஈடுபட்டார். சிறந்த பேச்சாளரான இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் கனல் பறக்க அரசியல் மேடைகளில் பேசிவந்தார். இவர் போன்ற தோழர்களின் தொடர்ச்சியான உழைப்பு வடக்கு கிழக்கிலிருந்து பாராளுமன்றத்திற்கு கம்யூனிஸ் கட்சியிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட ஒரே ஒரு பராளுமன்ற உறுப்பினர் தோழர். பொன்.கந்தையா அவர்கள்தான் என்ற வரலாற்றினை உருவாக்கியது.


இதே1956ல் பிற்றர் கெனமன் வடமராட்சிக்கு வருகை தந்து மாலிசந்தியில் பிரமாண்டமான கூட்டமொன்று நடைபெற்றது. அதனையொட்டி வடமராட்சியில் சைக்கிள் ஊர்வலம் ஒன்றும் நடைபெற்றது அதில் பீற்றர் கெனமனும் பங்குபற்றினார். வடமராட்சியின் முன்னணித் தோழர்களுடன் அமரர் தலைவர் செல்லையா அவர்களும் இரண்டிலும் கலந்து கொண்டார். அச்சைக்கிள் ஊர்வலத்தில் பெண்களும் கலந்துகொண்டிருந்தனர். கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த வீ.எஸ்.சிவபாதம் அவர்களின் சகோதரி லட்சுமி அவர்களும் அவ்வூர்வலத்தில் சேர்ந்திருந்தார். அப்போது வீ.எஸ்.சிவபாதம் அவர்கள் s.s.c படித்துக் கொண்டிருந்த மாணவன். இவர் அடுத்த நாள் பாடசாலைக்கு போகும் வழியில், வட்டவிதானை என அழைக்கப்படும் சாதி வெறியர்களுடைய சண்டியன் சித்தன் என்பவன் (அக்காலங்களில் வட்டவிதானை என அழைக்கப்படும் அரச அதிகாரமற்ற உயர்சாதி கட்டப் பஞ்சாயத்துக்காரர்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும் இருந்திருக்கிறார்கள்.) வீ.எஸ்.சிவபாதம் அவர்களை வழிமறித்து அவரிடம் அவரது சகோதரியை மிக அவதூறாகப் பேசி அவரை துவரந்தடியால் தாக்கியும் உள்ளார். பதிலுக்கு வீ.எஸ்.சிவபாதம் அவர்கள் அவர் பென்சில் சீவுவதற்காக வைத்திருந்த பேனாக் கத்தியால் சித்தனை தாக்கியுள்ளார். இச்சம்வமானது அன்று சாதி அதிகாரச் சண்டித்தனத்தினை உசுப்பிய சம்பவமாக அமைந்திருந்தது. அன்று மாலை சிவபாதம் அவர்களுடைய வீடு தீக்கிரை ஆக்கப்பட்டது. சேதியறிந்து எம்.சி அவர்களுடன் அமரர் செல்லையா அவர்களும் அவ்விடம் வந்து தோழைமையுடன் அவர்களுடன் சேர்ந்து எதிர் நடவடிக்கைகளில் செயற்பட்டுள்ளார். கன்பொல்லையின் எல்லையை அண்டி இடைக்குறிச்சியில் வாழ்ந்து வந்த வீ.எஸ்.சிவபாதம் அவர்களது பெற்றோர், குடும்பமாக பாதுகாப்புக் கருதி கன்பொல்லையின் மையப் பகுதிக்கு அவரது பெரிய தகப்பனாரின் காணிக்கு இடம் பெயர்ந்தார்கள். இப்படி பாதுகாப்புக் கருதி இடம் பெயர்ந்த ஒரு சம்பவம் சங்கானை நிச்சாமம் கிராமத்தில் தோழர் மான் நா. முத்தையா அவர்களுக்கும் நேர்ந்தது.


ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் பருத்தித்துறைதொகுதி எம்.பியாக இருந்தபோது, சோல்பரி கொமிசன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தது. அப்போது சாதிக் கலவரங்களினால் பாதிக்கப்பட்ட கிராமங்களை கொமிசனரை அழைத்துச் சென்று காட்டுவதென சிறுபான்மைத்தமிழர் மகாசபை முடிவெடுத்திருந்தது. ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. இருந்தபோதும் சோல்பரி கொமிசனரை இரகசியமாக அழைத்து வந்து கன்பொல்லைக் கிராமத்தில் எரிந்த வீடுகளை புகைந்துகொண்டிருக்கும் நிலையில் காட்டியுள்ளார்கள். இதற்குப் பின்னணியில் கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த ஆசையண்ண என அழைக்கபடும் தோழர் இராசையா அவர்களும், டி.ஜேம்ஸ், வி.டி.கணபதிப்பிள்ளை, எம்.சி.சுப்பிரமணியம் இருந்தார்கள். கூடவே தலைவர் செல்லையாவும் கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த இன்னொரு சமசமாசித்தோழர் பைரவன்.மாசிலாமணி அவர்களும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. வீடு திரும்பும் வழியில் நெல்லியடிச்சந்தியில் வைத்து வி.டி.கணபதிப்பிள்ளை, எம்.சி.சுப்பிரமணியம், டி.ஜேம்ஸ் ஆகிய மூவரும் சாதிவெறியர்களால் நையப்புடைகப்பட்டார்கள் என்பது பல இடங்களில் பதிவாகியுள்ளது.

பொன்.கந்தையா அவர்களின் காலத்தில் அவர் கல்வி அமைச்சர் டபிள்யு. தகாநாயக்க அவர்களின் உதவியுடன் சிறுபான்மைத்தமிழர் மகாசபையின் அனுசரனையுடன் தமிழ்ப் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல பாடசாலைகளை உருவாக்கினார். கூடவே உள்ளுராட்சிசபைகளின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவிற்காகப் பாடுபட்டடார். உள்ளுராட்ச்சி சபைகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அப்போது நெல்லியடி பட்டினசபைத் தேர்தலில் கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த தோழர்..சிவகுரு தொடர்ந்து இரண்டு தடவையாக வேட்பாளராக நிறுத்தப்பட்டு நட்சத்திரச் சின்னத்தில் போட்டியிட்டார். முதற் தடவை 22வாக்குகள் வித்தியாசத்திலும் இரண்டாவது தடவை பத்திற்குட்டபட்ட வாக்குகள் வித்தியாசத்திலும் அவர் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. அப்போதெல்லாம் அத்தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அமரர் செல்லையா அவர்கள் கலந்து கொண்டு தோழர் .சிவகுரு அவர்களுக்கு ஆதரவு தேடி பேசி வந்துள்ளார். (பின்பொருதடவை கன்பொல்லையைச் சேர்ந்த தோழர்.ஆண்டி.சுந்தரம் அவர்களும் நெல்லியடி பட்டினசபைத் தேர்தலில் போட்டியிட்டார்). சமகாலத்தில் சங்கானைப் பட்டினசபையில் போட்டியிட்ட மான் நா.முத்தையா, பி.நாகலிங்கம், வி.வைரமுத்து, .பசுபதி, வல்வெட்டித்துறை பட்டினசபையில் போட்டியிட்ட தோழர்.திருப்பதி, சுன்னாகம் பட்டினசபையில் போட்டியிட்ட செனட்டர் நாகலிங்கம் ஆகியோர் வெற்றிபெற்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
எம்.சி.அவர்களின் வலுமிக்க தோழராக அமரர் செல்லையா அவர்கள் விளங்கினார். மகாசபையின் வாலிப முன்னணியில் வடமராட்சியில் ஆசிரியர் ஜி.ஜி.மகாலிங்கம் அவர்களுடன் சேர்ந்து தலைமை தாங்கி முனைப்புடன் செயற்பட்டார். அந்நாட்களில் வடமராட்சிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஏற்படுத்தப்பட்ட எழுச்சி மிக்க சயிக்கிள் ஊர்வலத்தினை ஒழுங்கு செய்து தலைமை தாங்கி நடத்திச் சென்றார். இவ் ஊர்வலத்தில் யாழ் அணி, கரவெட்டி கிழக்கு அணி, பருத்தித்துறைஅணி, துன்னாலைஅணி;, மட்டுவில்அணி, மானிப்பாய்அணி, காங்கேசன்துறை அணி, தீவு அணி, இமையாணன் அணி, கம்பர்மலை அணி, என நூற்றுக்கணக்கான அணியினருடன் கன்பொல்லைஅணியும் ஆசிரியர் .இராசரத்தினம் அவர்களின் முனைப்பில் அணிவகித்து நின்றது. அந்நாட்களின் வரலாறு. இச்சயிக்கிள் ஊர்வலம் சிறப்புற நடந்தேறியமைக்காக அமரர் செல்லையா அவர்கள் அவ்வேளை பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டார்.


1966
மாசி மாதம் 14ந் திகதி கன்பொல்லைக் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கல்வி கற்பதை முன் வைத்து ஓர் பாடசாலை (யா/சிறீநாரதவித்தியாலயம்) .இராசரத்தினம் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. அப்பாடசாலையை நிறுவுவதற்கு நிலத்திற்கு சொந்தமானவர்கள் நிலத்தினை வழங்கி ஒத்துழைத்தபோது ஒருவர் மட்டும் மறுத்து குழப்பம் விளைவித்தார். அவ் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் தலைவர் செல்லையா அவர்களும் கலந்திருந்தார். எப்பொழுதும் பிரச்சினைகள் வரும்போது அதற்கு முகம் கொடுக்கும் அமரர் அவர்கள் குளப்பம் விளைவித்தவரை அணுகி சமாதானம் பேசியுள்ளார். விடயம் முற்றி விவகாரமாகி கைகலப்பு அளவிற்கு போனபோது கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த கட்டுரையாளரின் தந்தை மு.தவராசா (தவம்)அவர்கள் இடையில் தலையிடவே பொலீஸ் வந்து அமரர் செல்லையா அவர்களையும் தவம் அவர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்திருந்தது. மறுநாள் எம்.சி.அவர்களும், .தங்கமணி அவர்களும் பொலிஸ் நிலையம் சென்று .தங்கமணிஅவர்கள் பிணைக்கையெழுத்திட்டு இருவரையும் அழைத்து வந்தார். பின்பு அரசு இப்பாடசாலையை பொறுப்பேற்றபோது இப்பாடசாலைக் ஊடாக பன்னிரண்டு சிறுபான்மைத்தமிழர்களுக்கு ஆசிரிய நியமனம் கிடைத்தது. இன்று பத்தாம் வகுப்புவரை இங்கே மாணவர்கள் கல்வி கற்றுவருகிறார்கள்.
கன்பொல்லைக் கிராமமக்கள் தொடர்ச்சியாக சாதியப்போராட்டத்தினை நடத்திவந்தபோது ஒரு கம்யூனிஸ்ட் என்ற வகையிலும் அனைத்திலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபையின் முன்னணி உறுப்பினர் என்ற வகையிலும் தோழைமையோடு அவர்களுடன் அமரர் செல்லையா அவர்கள் இணைந்து செயற்பட்டு வந்துள்ளார்.



தொடர்ச்சியாக சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமைஒழிப்பு வெகுசன இயக்கம் முன்னெடுத்த தேனீர்க்கடைப் பிரவேசம், ஆலயப்பிரவேசம் என பஞ்சமர்களின் சமத்துவத்திற்கான அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். ஒரு சமயம் மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் பிரவேசத்தின்போது மண்டையில் பலமாக அடிப்பட்டார். இவரது கிராமத்தினை அண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள வல்லிபுரக்கோவில் பிரவேசத்தின்போது எம்.சியும், அமரர் அவர்களும், தவயோகம், மற்றும் துன்னாலையை சேர்ந்த .வு.டீ செல்லையா, அரசடி குழந்தையப்பா, .இராசரத்தினம் மற்றும் தானும் முன்வரிசையில் கோவிலுக்குள் சென்றபோது எங்களின் வீட்டு அர்ச்சனைத் தட்டைத்தான் எம்.சி அவர்கள் வாங்கி முதல் முதலாக அர்ச்சனை செய்வித்தார் என எனது தந்தையார் மு.தவராசா சொல்லி மகிழ்வார். அங்கு கோயில் உள் மண்டபத்தில் துவக்குகள் சாத்தி வைக்கப்பட்டிருந்தை தாங்கள் கண்டதாகவும் கோயில் மணியம் வே..வல்லிபுரமும் சில அடியாட்களும் இரண்டாம் மண்டபத்தில் நின்றதாகவும், எம்.சி யின் ஏற்பாட்டில் பொலிசும் ஆமியும் பந்தோபஸ்திற்கு வந்து நின்றதாகவும். இருந்தபோதும் தாங்களும் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்குள் ஆயுதங்களை கொண்டு போன அதே பாணியில் பொங்கல்ப் பானைக்குள் கைக்குண்டுகளை கொண்டுபோனதாகவும் ஆமி நின்றபடியால் எந்தவித அசம்பாவிதமுமின்றி ஆலயப் பிரவேசம் நடந்ததாகவும் அவர் கூறினார்.
எம்.சி அவர்கள் நியமன எம்பியாக இருந்தபோது அமரர் அவர்கள் சிபார்சு செய்து தனது கிராமத்தில் ஆட்டுப்பட்டிக் குறிச்சியில் சாதிமான் அருமைத்துரை என்பவனுக்கு சொந்தமாயிருந்த எழுபத்தைந்து பரப்பு காணியினை அரசினால் சுவீகரித்து அங்கு வாழ்ந்த பஞ்சமர்களுக்கு உரிமையாக்கினார். சாதியச் சண்டையில் ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த தன் கிராமத்தினைச் சேர்ந்த மாம்பழன், சீனியன் சகோதரர்களை பிரதம மந்திரி சிறீமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை வாங்கிக் கொடுத்தார். மேற்கொண்ட காரியங்களுக்காக இவரது உயிருக்கு அச்சுறுத்தல் வந்தபோதும் அதனை துச்சமாக மதித்து எம்.சிக்கூடாக இவற்றை செய்து முடித்தார்.


அமரர் அவர்களின் தொடர்ச்சியான பணிகளினூடே சிறுபான்மைத்தமிழர் மகாசபையின் நிர்வாகக் காரியதரிசியாகவும், கட்டைவேலி நெல்லியடி..நோ.கூ.சங்க பணிப்பாளர்சபைத் தலைவராகவும், கட்டைவேலி. உடுப்பிட்டி. தெங்குப்பனம்பொருள். உற்பத்தி விற்பனவு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவும், பனை அபிவிருத்தி பணிப்பாளர்சபை பணிப்பாளராகவும், கடற்தொழில்அமைச்சின் பணிப்பாளர்சபை உறுப்பினராகவும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் உத்தியோகப்பற்றற்ற மேற்பார்வையாளராவும், சமாதான நீதிவானகவும் பயணித்துள்ளார்.
இவர் போன்ற சமூக விடுதலைப் போராளிகளின் இரத்தம், வியர்வை, சிறைவதைக் கொடுமை இவற்றினூடேதான் இன்றைய ஈழத்தில் வாழும் பஞ்சம இளம் சந்ததி இன்றுவரையுள்ள சமத்துவத்தினை அனுபவிகின்றது. இப்போராளிகள் கருப்பாகிக் கிடந்த ஈழமண்ணில் எழுந்து பழுத்து வீழ்ந்தாலும், எல்லாம் விலகிப்போச்சு என்ற வெறும் தோற்றப்பாடு இருக்கும் வரை, என்றும் புதிய விதைகளே!

தகவல்: க.இராசரத்தினம், மு.தவராசா(தவம்)
துணைநூல்கள்: சி.கா.செந்திவேல், „இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள்“,
போ.சிறீபவன்,“நந்தா விளக்கு“


இக் கட்டுரை முதலில் „உயிர்மெய்“ (இதழ் 4, ஐப்பசி-மார்கழி 2007) வெளியாகியுள்ளது.


No comments: