Monday, March 29, 2010

என் கொத்து ரொட்டி ஆசை


என் கொத்து ரொட்டி ஆசையும் நோர்வேஜியர்களிடம் கேட்ட மன்னிப்பும்
-
என் .சரவணன் -
நேற்று ஒஸ்லோவிலுள்ள தமிழ் உணவுக்கடையொன்றில் நண்பர் ஒருவருடன்சந்திப்பொன்றை செய்யவேண்டியிருந்தது. உரையாடலை ரோல்ஸ் உடன் தேனீர்அருந்திக்கொண்டே செய்தோம். கடையைவிட்டு புறப்படுகையில்கொத்துரொட்டி அறிவித்தலை பார்த்துவிட்டேன். கொத்து ரொட்டி சாப்பிட்டுநீண்ட நாட்களாகிவிட்டது. சாப்பிட ஆசையாக இருந்தது. இரவு உணவுக்குவாங்கிச்செல்லலாமே என நினைத்துக்கொண்டு 65 குரோணர்களுக்கு கொத்துரொட்டியை வாங்கிவிட்டேன். அவர் ரெஜிபோம் பெட்டியொன்றில் போட்டு ஒருபையில் தந்தார்.


5 நிமிட நடையில் ஒஸ்லோ மத்திய பஸ் நிலையத்திற்குச் சென்று பஸ்ஸில் ஏறும் வரைக்கும் ஒன்றும் பிரச்சினையில்லை. வழமையாக நான் தெரிவு செய்யும் நடுப்பகுதி ஆசனமொன்றில் அமர்ந்தது தான் தாமதம் கொத்துரொட்டியின் மணம் பரவ ஆரம்பத்திருந்தது. இவ்வகையான மணம் எப்படிப்பட்ட வெறுப்பினை வெளிநாட்டவர்களுக்கு கொடுக்கும் என்பதை நான் அறிவேன்.


பயணிகள் அதிகரிக்கத் தொடங்கினர். உள்ளுக்குள் நுழைந்த சில வினாடிகளில் அவர்கள் மூக்கை சரிசெய்துகொண்டு ஆசனங்களில் அமர்ந்தனர். சிலர் எங்கிருந்து இந்த மணம் வருகிறது எனத் தேடினர்.


எனக்கு இருப்புகொள்ளவில்லை. மணம் அதிகம் வெளியேறாமல் இருக்க எனது பையை இருக சுற்றி மூடினேன். கையில் இருந்த சில சஞ்சிகைகளை எடுத்து மேலே வைத்து பொத்திக்கொள்ள முயற்சித்தும் தோற்றுப்போனேன்.
பஸ் பயனித்துக்கொணடிருந்தது. ஒவ்வொரு தரிப்புகளிலும் நிறுத்தியபோது திறந்த கதவுகள் சிறிது காற்றை உள்ளே இழுத்துக்கொண்டது. உள்ளே இருந்த மணம் ஓரளவு வெளியேற சிறிய சந்தர்ப்பம் கிடைத்தது. ஏறிய சிலர் எனது ஆசனத்தைக் கடந்து போனார்கள். அருகிலுள்ள ஆசனம் வெறுமையாகவே இருந்தது. பஸ்ஸில் இருந்தவர்கள் இருமத் தொடங்கினார்கள். இருமுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது. நான் எனது ஆசனத்தில் சிலைபோல செய்வதறியாது தர்மசங்கடத்துடன் இருந்தேன்.


10 நிமிடத்திற்குப் பின், பஸ்ஸை விட்டு இறங்கி அடுத்த பஸ்ஸில் பிரயாணம் செய்தால் என்ன எனத் தோன்றியது. குறைந்தபட்சம் இதிலிருந்து நிம்மதியாக பயணிப்பார்கள் என்று தோன்றியது. ஒவ்வொரு தரிப்பிலும் பயணிகள் அதிகரித்துக்கொண்டிருந்தார்கள். சரி... இன்னும் ஓரு 10 நிமிடம் தானே... சமாளிக்கப்பார்ப்போம் என்று முடிவெடுத்தேன். ஆனாலும் என்னை முழுமையாக சமாதானப்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஒரு நடுத்தர வயதுடைய பெண் பின் ஆசனத்திலிருந்து என்னை கடந்து சென்று பஸ்ஸின் முன் பகுதிக்குச் சென்று ஒரு ஆசனத்தைக் கண்டுபிடித்து அமர்ந்துகொண்டார். தொடர்ந்து சில இருமல் சத்தம் கேட்டபடி இருந்தது. மூக்கை சரிசெய்பவர்களையும் சாடையாக கவனித்துக்கொண்டேன். இன்னுமொரு முதிர்ந்த பெண் ஒருவர் என்னைக் கடந்து முன் பகுதியில் இன்னொரு ஆசனத்தில் அமர்ந்துகொண்டார்.


என் ஆசனம் தொடர்ந்தும் வெறுமையாகவே இருந்தது.


ஒரு பஸ் தரிப்பில் ஏறிய ஒரு இளம் மாணவி 3 பைகளுடன் என் அருகில் வந்து அமர்ந்தார். "ஐயோ.... ஏம்மா வேற இட் கெடக்கலியா..." என்றிருந்தது. அந்த மாணவியும் ஒரு சில வினாடிகளில் மூக்கை சரி செய்தகொண்டதில் எனக்கு எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை.


என்னுடைய இடம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆசனத்தை விட்டு எழும்பிய நான். ஒரு கையை மேற்பிடியில் பிடித்துக்கொண்டு மறு கையில் கொத்துரொட்டி பையை பிடித்துக்கொண்டு நோர்வேஜியர்களை நோக்கிக் கதைக்கத் தொடங்கினேன்.


"...என் கையில் இருப்பது உணவுதான். ஒரு இந்தியவகை உணவு. இதன் மணம் இவ்வளவு அசெளகரியங்களை உங்களுக்கு கொடுக்கும் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இனி இந்த காரியத்தை இன்னொருமுறை செய்யமாட்டேன். அசெளகரியத்துக்கு தயவுசெய்து மன்னியுங்கள்...." என்றேன். பஸ்ஸில் இருந்தவர்களில் சிலர் பரிதாபமாகப் பார்த்தார்கள்... சிலர் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். என் தரிப்பிடம் வந்ததும் வேகமாக இறங்கி வீட்டை நோக்கி நடந்தேன்...


இரவு 10 மணியாகியும் மேசையின் மீதிருந்த கொத்துரொட்டியில் கைவைக்கவில்லை. இலங்கையில் இருக்கும் அம்மாவை தொலைபேசியில் அழைத்து ஏற்பட்ட கஸ்டத்தை பகிர்ந்து கொண்டதன் பின்னர் தான், கிடைத்த ஆறுதலில் கொத்துரொட்டி பொதியை திறந்தேன்.

கொத்துரொட்டி உண்மையில் நன்றாகத் தான் இருந்தது.

No comments: